I will meet my death! | Shanti-Parva-Section-27 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 27)
பதிவின் சுருக்கம் : அபிமன்யு, பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோரின் படுகொலைகளுக்காக வருந்திய யுதிஷ்டிரன்; திரௌபதியின் துயருக்காக வருந்தியது; அனைத்துக்கும் காரணமான தான் இருந்த இடத்திலேயே அமர்ந்து, உணவில்லாமல் சாகப் போவதாகச் சொன்னது; அது நடக்காது என்று சொல்லி, சோம்பலை அகற்றிச் செயல்படுமாறு யுதிஷ்டிரனைத் தூண்டிய வியாசர்...
யுதிஷ்டிரன், "இளம் வயதிலேயே அபிமன்யுவும், திரௌபதி, திருஷ்டத்யும்னன், விராடர், மன்னர் துருபதர்,(1) அனைத்துக் கடமைகளையும் அறிந்த திருஷ்டத்யும்னன், அரசன் திருஷ்டகேது, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பிற மன்னர்கள் ஆகியோருடைய மகன்களும் போரில் வீழ்ந்த துயரமானது,(2) உறவினர்களைக் கொன்றவனும், இழிந்தவனுமான என்னைவிட்டு அகலவில்லை. உண்மையில், நான் நாட்டின் மீது இயல்பற்ற பேராசை கொண்டவனும், என் சொந்த குலத்தையே அழித்தவனுமாவேன்.(3)
எவருடைய மார்பிலும், அங்கங்களிலும் உருண்டு விளையாடினேனோ, ஐயோ, அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, அரசுரிமையின் மீது நான் கொண்ட ஆசையினால் போரில் என்னால் கொல்லப்பட்டார்.(4) மனிதர்களில் சிங்கமான எங்கள் பாட்டன் {பீஷ்மர்}, சிகண்டியால் தாக்கப்பட்டு, சக்தியில் வஜ்ரத்துக்கு ஒப்பான பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளின் விளைவால் நடுங்கிச் சுழன்று கொண்டிருப்பதையும், நெடும் வடிவம் கொண்ட அவரது அங்கங்கள் முழுவதும் சுடர்மிக்கக் கணைகளால் துளைக்கப்பட்டிருப்பதையும், அந்த முதிர்ந்த சிங்கம் பலவீனமடைவதையும் நான் கண்டபோது, ஆழமான வலியை என் இதயம் உணர்ந்தது.(5,6) பகைவரின் தேர்களைப் பீடிப்பவரான அவர் {பீஷ்மர்}, கிழக்கு நோக்கித் திரும்பி தன் வாகனத்தின் தட்டில் பலமற்று ஒரு மலைச்சிகரத்தைப் போல வீழ்ந்தபோது, என் புலன்கள் திகைப்படைந்தன.(7)
{மன்னன்} குருவால் புனிதமடைந்த களத்தில் {குருக்ஷேத்திரத்தில்}, பிருகு குலத்தின் ராமரை {பரசுராமரை} எதிர்த்து, கையில் வில் மற்றும் கணையுடன், பல நாட்கள் கடும்போரிட்டவர் எவரோ அந்தக் குரு குலக் கொழுந்து {பீஷ்மர்},(8) மணப்பெண்களின் நிமித்தமாகத் தனித்தேரில் வாரணாசிக்குச் சென்று, அங்கே திரண்டிருந்த உலகின் க்ஷத்திரியர்களைப் போருக்கு அறைகூவி அழைத்தவர் எவரோ அந்தக் கங்கையின் மைந்தர், (9) தடுக்கப்பட முடியாதவரும், மன்னர்களில் முதன்மையானவருமான உக்ராயுதரை தன் ஆயுதங்களில் சக்தியால் எரித்தவர் எவரோ, ஐயோ, அந்த வீரரைப் போரில் நான் கொல்லச் செய்தேன்.(10) பாஞ்சால இளவரசன் சிகண்டியே தன்னை அழிக்கப் போகிறவன் என்பதை நன்றாக அறிந்தும், அந்த வீரர் தன் கணைகளால் அவ்விளவரசனைக் கொல்லவில்லை. ஐயோ, அத்தகு மகத்தான போர்வீரர் அர்ஜுனனால் கொல்லப்பட்டார்.(11) ஓ! தவசிகளில் சிறந்தவரே {வியாசரே}, குருதியில் மறைக்கப்பட்டுப் பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கும் பாட்டனை நான் கண்ட போது, கடும் நோயானது எனது இதயத்தைப் பீடித்தது.(12) நாங்கள் பிள்ளைகளாய் இருந்தபோது எங்களைப் பாதுகாத்து வளர்த்தவர் எவரோ, ஐயோ அவர், நாட்டின் மீது பேராசை கொண்டவனும், மதிப்பு மிக்கப் பெரியோரைக் கொன்றவனும், முற்றான மூடனும், பாவியுமான என்னால், சில நாட்களே நீடிக்கபோகும் அரசுரிமைக்காகக் கொல்லப்பட்டார்.(13)
எங்கள் ஆசானும், பெரும் வில்லாளியும், மன்னர்கள் அனைவராலும் புகழப்படுபவருமான துரோணரை நான் அணுகி, அவரது மகனைக் {அஸ்வத்தாமனைக்} குறித்துப் போலியாகப் பேசினேன் {பொய்யுரைத்தேன்}.(14) நான் செய்த அச்செயலின் நினைவு என் அங்கமனைத்தையும் எரிக்கிறது. ஆசான் {துரோணர்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, என் மகன் உயிருடன் இருக்கிறானா என்று உண்மையைச் சொல்வாயாக" என்று என்னிடம் கேட்டார்.(15) அந்தப் பிராமணர் {துரோணர்}, உண்மையை எதிர்பார்த்தே, பிறர் அனைவரையும் விட்டுவட்டு என்னிடம் கேட்டார். யானை என்ற சொல்லை அமைதியாக {ஒலி குறைவாகச்} சொல்லி நான் அவரிடம் போலியாக {பொய் நடத்தை} நடந்து கொண்டேன்.(16) நாட்டின் மீது அதிகப் பேராசை கொண்டவனும், மதிப்புமிக்க என் பெரியோர்களைக் கொன்றவனும், பாவம் நிறைந்தவனுமான நான், உண்மையில் அஸ்வத்தாமன் என்ற பெயர் கொண்ட யானை கொல்லப்பட்டிருக்கையில், (நான் அணிந்திருந்ததாக நம்பப்பட்ட) உண்மையெனும் ஆடையைத் தூக்கி வீசிவிட்டு, அஸ்வத்தாமனே கொல்லப்பட்டான் என்று என் ஆசானிடம் சொன்னேன். போரில் இவ்வாறே நான் என் ஆசானிடம் நடந்து கொண்டேன்.(17)
இத்தகு இகழச்சியானச் செயல்களைச் செய்த நான், (மறுமையில்) எந்த உலகங்களை அடைவேன்? போரில் பின்வாங்காதவரும், பயங்கரமான போர்வீரருமான என் அண்ணன் கர்ணரையும் நான் போரில் கொல்லச் செய்தேன். என்னை விட இங்கே வேறு எந்தப் பாவி இருக்கிறான்?(18) மலைகளில் பிறந்த சிங்கத்திற்கு ஒப்பானவனும், இளம் வயதினனுமான அபிமன்யுவை துரோணரால் பாதுகாக்கப்பட்ட {பத்ம} வியூகத்திற்குள் ஊடுருவும்படி பேராசையின் காரணமாகவே சொன்னேன்.(19) நான் கருவைக் கொன்ற குற்றவாளியைப் போன்றவனாவேன். நான் பாவம் நிறைந்தவனாக இருப்பதாலேயே, அர்ஜுனன், அல்லது தாமரை கண்களைக் கொண்ட கிருஷ்ணன் ஆகியோரின் முகங்களை அப்போதிலிருந்தே என்னால் {நேராகப்} பார்க்க முடியவில்லை.(20)
ஐந்து மலைகளை இழந்த பூமியைப் போல, தன் ஐந்து மகன்களை இழந்த திரௌபதிக்காகவும் நான் துயரமடைகிறேன். நான் ஒரு பெரும் குற்றவாளி, பெரும் பாவி மற்றும் இந்தப் பூமியை அழித்தவனுமாவேன். இப்போது நான் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் இருந்து எழாமல், (பட்டினி கிடந்து) என் உடலை பலவீனமடையச் செய்து நான் சாகப் போகிறேன்.(22) என் ஆசானைக் கொன்றவனான என்னைப் பிராய நோன்பு நோற்று அமர்ந்திருக்கும் ஒருவனாக அறிவீராக. குலத்தை அழித்தவனான நான், எந்த வகை உயிரினமாகவும் மீண்டும் பிறக்காதிருக்க இதைச் செய்தே ஆக வேண்டும்[1].(23) ஓ! பெரும் தவசியே {வியாசரே}, உணவு மற்றும் நீர் அனைத்தையும் கைவிட்டு, இவ்விடத்தில் இருந்து நகராமல் பெரும் அன்புக்குரிய என் உயிர்மூச்சை நான் வற்றச் செய்யப் போகிறேன்.(24) இதற்கு எனக்கு அனுமதியளித்து, நீங்கள் விரும்பும் இடத்திற்குச் செல்ல வேண்டுமென நான் உம்மைப் பணிவுடன் வேண்டுகிறேன். அனைவரும் எனக்கு அனுமதியளிப்பீராக. நான் இந்த என் உடலை விடப் போகிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}".(25)
[1] "அடுத்தப் பிறவியில் இழிந்த விலங்காகப் பிறக்காமல், மனிதர்களுக்கு மத்தியில் பிறப்பை அடைவதற்காக இத்தகு கடும் நோன்மை நான் நோற்கவே வேண்டும் என்பதே இவ்வரியின் பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பெரியோர்களைக் கொலை செய்த நான் மறுபிறவிகளிலாவது இங்ஙனம் குல பாதகனாகாதிருக்க வேண்டி இப்படிப் பிராயோபவேசம் அடைந்திருக்கிறேனுன்று தெரிந்துகொள்ளுங்கள்" என்றிருக்கிறது.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "தவசிகளில் சிறந்தவரான வியாசர், தன் உறவுகளின் நிமித்தமான கவலையில் திகைத்து இத்தகு வார்த்தைகளைச் சொல்லும் அந்தப் பிருதையின் மகனை {யுதிஷ்டிரனைத்} தடுக்கும் வகையில், "இது நடக்காது" என்று முதலில் சொல்லிவிட்டுப் பின்வருமாறு பேசினார்.(26)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி, இத்தகு கடுந்துயரில் ஈடுபடுவது உனக்குத் தகாது. நான் ஏற்கனவே சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். ஓ! பலமிக்கவனே, இவையனைத்தும் விதியே.(27) பிறக்கும் உயிரினங்கள் அனைத்தும், (பல்வேறு பொருட்கள் மற்றும் சக்திகளின்) ஒருங்கிணைப்பையே முதலில் வெளிக்காட்டுகின்றன என்பதில் ஐயமில்லை. எனினும், இறுதியில் அழிவே அவற்றுக்கு நேர்கிறது. நீரில் உள்ள குமிழிகளைப் போல அவை எழுந்து மறைகின்றன.(28) ஒன்றாகத் திரளும் பொருட்கள் அனைத்தும் நொறுங்கி விழும் என்பதும், எழும் அனைத்துப் பொருட்களும் விழ வேண்டும் என்பது நிச்சயமானதாகும். கூட்டம் இறுதியில் அழிவடையும், பிறப்பும் இறப்பிலேயே முடிவடையும்.(29) தற்காலிகமாக ஏற்கத்தக்கதாக இருப்பினும் சோம்பல், பேரிடரில் முடிகிறது, தற்காலிக வலியைக் கொண்டதாகினும் திறனுடன் கூடிய முயற்சியானது மகிழ்ச்சியிலேயே முடிகிறது. வளம், செழிப்பு, பணிவு, மனநிறைவு மற்றும் புகழ் ஆகியன முயற்சி மற்றும் திறனிலேயே வசிக்கின்றவே ஒழிய சோம்பலில் அல்ல.(30)
நண்பர்கள் மகிழ்ச்சி அளிக்கவும், எதிரிகள் பேரிடரால் பீடிக்கவும் தகுந்தோரல்ல. அதேபோல், ஞானம் செல்வத்தைக் கொண்டு வராது, செல்வமும் மகிழ்ச்சியைக் கொண்டுவராது.(31) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, செயலில் ஈடுபடுவதற்காகவே நீ படைப்பாளனால் உண்டாக்கப்பட்டிருக்கிறாய். செயலில் இருந்தே வெற்றி எழுகிறது. ஓ! மன்னா, செயலைத் தவிர்க்க நீ தகுந்தவனல்ல" என்றார் {வியாசர்}".(32)
சாந்திபர்வம் பகுதி – 27ல் உள்ள சுலோகங்கள் : 32
ஆங்கிலத்தில் | In English |