The faults of wealth! | Shanti-Parva-Section-26 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 26)
பதிவின் சுருக்கம் : தேவர்களால் பிராமணர்களாகக் கருதப்படுபவர்கள் யார்? அறவோர் யார்? சூரியனின் தென் பாதை மற்றும் வட பாதை; வடபாதையின் சிறப்பு; மனநிறைவின் உயர்வு; பிரம்மம் மற்றும் பிரம்ம நிலை; செல்வத்தின் தூண்டல்; செல்வத்தின் பயனற்ற நிலை; ஈகையறம் ஏன் கடினமானது? செல்வத்தின் களங்கங்கள் ஆகியவற்றை அர்ஜுனனுக்குச் சொல்லும் யுதிஷ்டிரன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இது தொடர்பாக உயர் ஆன்ம யுதிஷ்டிரன், அறிவு நிறைந்த வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொன்னான்:(1) {அவன்}, "ஓ! பார்த்தா {அர்ஜுனா}, செல்வத்தைவிட மேன்மையானது ஏதுமில்லை என்றும், ஓர் ஏழையால் சொர்க்கத்தையோ, மகிழ்ச்சியையோ, தனது விருப்பங்களையோ அடைய முடியாது என்றும் நீ நினைக்கிறாய்.(2) எனினும், இஃது உண்மையல்ல. வேத கல்வியின் வடிவிலான வேள்வியின் மூலமாக வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மனிதர்கள் பலர் உண்மையில் காணப்படுகிறார்கள். தவத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட பல முனிவர்கள் அழிவில்லா (அருள்) உலகங்களை அடைவதும் காணப்படுகிறது.(3) ஓ! தனஞ்சயா, முனிவர்களின் நடைமுறையை எப்போதும் நோற்று, பிரம்மச்சரியத்தைக் கைக்கொண்டு, அனைத்துக் கடமைகளை அறிவோரே தேவர்களால் பிராமணர்களாகக் கருதப்படுகிறார்கள்.(4) ஓ! தனஞ்சயா, வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருக்கும் முனிவர்களையும், உண்மை ஞானத்தை அடைவதில் அர்ப்பணிப்புடன் இருப்போரையும் உண்மையில் அறவோராக எப்போதும் நீ கருதவேண்டும்.(5)
ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உண்மை ஞானத்தை அடைவதில் அர்ப்பணிப்பு கொண்டோரைச் சார்ந்தே நமது செயல்கள் அனைத்தும் இருக்கின்றன[1]. ஓ! பலமிக்கவனே, இதுவே வைகானஸர்களின் {வானப்ரஸ்தர்களின்} கருத்து என்று நாம் அறிகிறோம்.(6) ஓ! பாரதா, அஜர்கள், பிருஸ்னிகள், ஸிகதர்கள், அருணர்கள், கேதவர்கள் ஆகியோர் அனைவரும் வேதகல்வியின் தகுதியின் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டனர்.(7) ஓ! தனஞ்சயா, வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள போர், வேத கல்வி, வேள்விகள், புலனடக்கம் போன்ற கடுமையான செயல்களைச் செய்வதால்,(8) ஒருவன் சூரியனின் தென் பாதையின் மூலமாகச் சொர்க்கத்துக்குச் செல்கிறான். (வேதத்தின் படியான) செயல்களைச் செய்வோர் அந்தப் பகுதிகளுக்கே செல்வார்கள் என்று நான் முன்பு சொல்லியிருக்கிறேன்.(9) எனினும், வடபாதையில், யோக தவங்களில் அர்ப்பணிப்புடையோர் பயணிப்பதை நீ காண்பாய். அழிவில்லாத பிரகாசமான அந்த உலகங்களுக்குச் செல்லும் அந்தப் பாதையே யோகம் செய்யும் மனிதர்களுக்குச் சொந்தமானதாகும்.(10)
[1] "உண்மை ஞானம் என்பது பிரம்மத்தைக் குறித்த அறிவாகும். அத்தகு அறிவைக் கொண்டோரின் கருத்தின்படியே நமது நடத்தை (செயல்கள்) அமைய வேண்டும் என இங்கே சொல்லப்படுகிறது" என விளக்குகிறார் கங்குலி.
இவை இரண்டிலும், வட பாதையே புராணங்களை அறிந்தோரால் மெச்சப்படுகிறது. மனநிறைவின் மூலமே ஒருவர் சொர்க்கத்தை அடைகிறான் என்பதை நீ அறிய வேண்டும். மனநிறைவிலிருந்தே பேரின்பம் உதிக்கிறது.(11) மனநிறைவைவிட உயர்ந்தது ஏதுமில்லை. கோபம் மற்றும் இன்பத்தைக் கட்டுப்படுத்திய ஒரு யோகிக்கு, மனநிறைவே உயர்ந்த புகழும், வெற்றியுமாகும்.(12) இது தொடர்பாக யயாதியின் பழைய உரையாடல் ஒன்று சொல்லப்படுகிறது. இந்த உரையைக் கேட்கும் ஒருவன், தன் அவையங்கள் அனைத்தையும் உள்ளிழுத்துக் கொள்ளும் ஓர் ஆமையைப் போலத் தன் விருப்பங்கள் அனைத்தையும் உள்ளிழுத்துக் கொள்வான்.(13) ஒருவன் எதனிடமும், எதனாலும் அச்சமடையாதபோதும், ஒருவன் எந்த ஆசையும், வெறுப்பும் கொள்ளாதபோதும், அவன் பிரம்ம நிலையை அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(14) ஒருவன் எந்த உயிரினத்திற்கும் செயலாலோ, சிந்தையாலோ, சொல்லாலோ தீங்கிழையாதிருக்கும்போது, அவன் பிரம்மத்தை அடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.(15)
ஒருவன் செருக்கையும், மடமையையும் கட்டுப்படுத்தி, பற்றுகள் அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டால், ஒளிபொருந்திய ஆன்மா கொண்ட அந்தப் பக்திமான், தனி இருப்பை அழித்த நிலையான முக்தியை அடையத் தகுந்தவனாகிறான்.(16) ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, இப்போது நான் உனக்குச் சொல்லப் போவதை, குவிந்த கவனத்துடன் கேட்பாயாக. சிலர் அறத்தையும், சிலர் நன்னடத்தையையும், சிலர் செல்வத்தையும் விரும்புகின்றனர்.(17) ஒருவன் (அறத்தை அடையும் வழிமுறையாக) செல்வத்தை விரும்பலாம். எனினும், அத்தகு விருப்பத்தையும் கைவிடுவதே அவனுக்குச் சிறந்ததாகும்[2]. செல்வத்துடன் பல களங்கங்கள் இணைந்திருக்கின்றன, அதன் விளைவாக அந்தச் செல்வத்தால் செய்யப்படும் அறச்செயல்களிலும் அவை இணைந்தேயிருக்கின்றன.(18) இதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். இதை நீயும் காண்பதே உனக்குத் தகும். செல்வத்தை விரும்பும் ஒருவன், எந்த வழிமுறையிலேனும் கைவிட வேண்டியவற்றைக் கைவிடுவதற்கு மிகவும் கடினமானதாகக் காண்கிறான்.(19) வளங்களுக்கு மத்தியில் இருப்போர் நற்செயல் செய்வது அரிதே. பிறருக்குத் தீங்கிழைக்காமல் செல்வத்தை ஒருபோதும் அடைய முடியாது என்றும், அஃதை ஈட்டுபோது, அஃது எண்ணற்ற தொல்லைகளையே கொண்டு வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.(20)
[2] "இங்கே கவிஞன் சொல்ல விழைவதென்னவெனில்: வேள்விகளைச் செய்வதைவிட, வேள்விகள் செய்வதற்கான வழிமுறையாகச் செல்வத்தை விரும்புபவதைவிட, செல்வத்தை விரும்பாமல் இருப்பதே சிறந்தது. ஓர் ஏழையானவன், வழக்கமான வழிமுறைகளின் மூலம் அடையப்பட்ட செல்வத்தைக் கொண்டு வேள்விகளைச் செய்வதைவிட, அதைச் செய்யாமல் இருப்பதே சிறந்தது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பாவங்களுக்கு வருந்தும் அச்சத்தைச் சிறிதளவும் கொள்ளாத குறுகிய இதயம் படைத்தவன், சிறு செல்வத்திலும் மயக்கமுற்று, தன் செயல்களின் மூலம் பிராமணனைக் கொன்ற பாவத்தை {பிரம்மஹத்தியை} இழைக்கிறோம் என்பதையும் முற்றிலும் அறியாமல் பிறருக்குத் தீங்கிழைக்கும் செயல்களைச் செய்கிறான்.(21) அடைவதற்கரிதான செல்வத்தை அடைந்த ஒருவன், அதில் ஒரு பகுதியைத் தனது பணியாட்களுக்குக் கொடுக்கும்போது, கொள்ளையர்களால் களவாடப்படுபவன் உணர்வதற்கு இணையான துன்பத்தை அடைகிறான். மறுபுறம், ஒருவன் தன் செல்வத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பானானால், அவன் மக்களின் கண்டனத்தையே தன் பங்காகக் கொள்கிறான்.(22) எனினும், செல்வமில்லாத ஒருவனோ, ஒரு போதும் நிந்தனைக்கான பொருளாவதில்லை. பற்றுகள் அனைத்திலிருந்தும் விலகிய ஒருவன், பிச்சையெடுத்து அடையும் சிறிதளவைக் கொண்டு தன் உயிரைத் தாங்கிக் கொண்டு அனைத்து வகையிலும் அவன் மகிழ்ச்சியை அடைகிறான். செல்வத்தை அடைவதாலோ எவராலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.(23) பழங்காலச் சாத்திரங்களை அறிந்தோரால் இது தொடர்பாக வேள்விகளுக்குச் சம்பந்தமான குறிப்பிட்ட வரிகள் சொல்லப்படுகின்றன.(24) செல்வமானது படைப்பாளனால் வேள்விகளின் நிமித்தமாகப் படைக்கப்பட்டது, அந்தச் செல்வத்தைக் காக்கவும், வேள்விகளைச் செய்வதற்காகவும் தான் மனிதன் படைக்கப்பட்டான். இதன் காரணமாகச் செல்வமனைத்தும் வேள்விகளுக்கே செலவிடப்பட வேண்டும். ஒருவனுடைய இன்ப நிறைவுக்கான ஆசைக்காக அது செலவிடப்படுவது முறையாகாது.(25)
அவ்வாறெனில், படைப்பாளன் வேள்வியின் நிமித்தமாகவே மனிதர்களுக்குச் செல்வத்தைக் கொடுக்கிறான். ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, செல்வந்தர்கள் அனைவரிலும் நீயே முதன்மையானவன் என்பதை நீ அறிவாயாக.(26) செல்வமானது, இப்பூமியில் உள்ள யாருக்கும் சொந்தமானதல்ல என்று இதன் காரணமாகவே ஞானியர் சொல்கின்றனர். ஒருவன் அதைக் கொண்டு வேள்விகளைச் செய்து, நம்பிக்கை மிகுந்த இதயத்துடன் அதைக் கொடையாக அளிக்க வேண்டும்.(27) ஒருவன் தான் அடைந்ததை (தானமாகச்) செலவிடவேண்டுமேயொழிய, வீணாக்கவோ, தன் இன்ப நுகர்ச்சிக்காகவோ செலவிடக்கூடாது. எதில் செலவிட வேண்டும் என்ற இத்தகு முறையான பொருட்கள் இருக்கும்போது, செல்வத்தைக் குவிப்பதில் என்ன பயன் இருக்கிறது?(28) தங்கள் வகைக்கான கடமைகளில் இருந்து தவறிய மனிதர்களுக்கு, (செல்வத்தைக்) கொடையளிக்கும் சிறுமதியாளர்கள், அதன் பிறகு நூறாண்டுகள், கழிவுகளிலும் புழுதியிலும் உழல வேண்டியிருக்கும்.(29) மனிதர்கள், தகுந்தவர்களையும், தகாதவர்களையும் பகுத்தறியும் இயலாமையினாலேயே, தகாதவர்களுக்குக் கொடுத்துத் தகுந்தவர்களுக்குக் கொடுக்காமல் இருக்கிறார்கள். இதன் காரணமாக ஈகை எனும் அறமே கூடப் பயில்வதற்கு மிகக் கடினமானதாகிறது.(30) செல்வம் அடையப்பட்டாலும், தகாதவனுக்குக் கொடையளிப்பது, தகுந்தவருக்குக் கொடாமலிருப்பது ஆகிய இந்த இரு களங்கங்களைக் கொண்டதாகவே அஃது இருக்கிறது" என்றான் {யுதிஷ்டிரன்}[3].(31)
[3] சாந்திபர்வத்தின் இந்த 26ம் பகுதி முழுவதும் அதிகப் பாடம் என்று கும்பகோணம் பதிப்பில் சொல்லப்படுகிறது. சென்ற அத்தியாயத்திற்கும், இந்த அத்தியாயத்திற்கும் ஒரு தொடர்ச்சி இல்லாதிருப்பதை உணர முடிகிறது. ஆயினும் இதில் சொல்லப்பட்டுள்ள நீதிகள் முக்கியமானவையே.
சாந்திபர்வம் பகுதி – 26ல் உள்ள சுலோகங்கள் : 31
ஆங்கிலத்தில் | In English |