Time ocean! | Shanti-Parva-Section-28 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 28)
பதிவின் சுருக்கம் : ஞானியான அஸ்மருக்கும், மன்னன் ஜனகனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன வியாசர்; மனத்தின் வீண் செருக்கு, வளமை, வறுமை, மனக்கவலைக்கான காரணம், முதுமை, மரணம், காலத்தின் போக்கு ஆகியவற்றைக் குறித்து ஜனகனிடம் உரையாடிய அஸ்மர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு வியாசர், தன் உறவினர்களின் படுகொலையின் நிமித்தமாகக் கவலையில் எரிந்து, தன் உயிர் மூச்சை விடத் தீர்மானித்திருந்த பாண்டுவின் மூத்த மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} துயரை அகற்ற முயன்றார்.(1)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மனிதர்களில் புலியே, இது தொடர்பாகப் பழங்கதையில் அஸ்மரின் உரையாடல் என்ற பெயரில் ஓர் உரையாடல் தென்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா அதைக் கேட்பாயாக.(2) ஓ! மன்னா, விதேஹர்களின் ஆட்சியாளனான ஜனகன், கவலையாலும், துயராலும் நிறைந்து, தன் ஐயங்களைத் தீர்க்க அஸ்மர் என்ற பெயருடைய ஒரு பிராமண ஞானியிடம் கேள்விகள் கேட்டான்.(3)
ஜனகன் {அஸ்மரிடம்}, "உறவினர்களையும், செல்வத்தையும் அடையும்போதும், அவை அழிவடையும்போதும், தன் நலத்தை விரும்பும் ஒரு மனிதன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?" என்று கேட்டான்.(4)
அஸ்மர் {ஜனகனிடம்}, "ஒரு மனிதனின் உடல் உண்டான பிறகு, இன்பங்களும், துன்பங்களும் அதைப் பற்றுகின்றன.(5) இவற்றில் ஏதாவதொன்று அம்மனிதனைப் பற்றும் வாய்ப்பு இருந்தாலும், அவனை எது பற்றுகிறதோ, ஒன்று திரண்டிருக்கும் மேகங்களை விரட்டும் காற்றைப் போல அதுவே விரைவாக அம்மனிதனிடம் உள்ள அறிவைக் களவாடிவிடும்.(6) (வளமையான காலங்களில்) ஒரு மனிதன், "நான் உயர்பிறப்பாளன் {நற்பிறவி கொண்டவன்}", "நான் விரும்புவதை என்னால் செய்ய முடியும்", "நான் சாதாரண மனிதன் கிடையாது" என்பது போலச் சிந்திக்கிறான். அவனது மனமானது வீண் செருக்கான இம்மூன்றில் ஊறுகிறது. {இவ்வாறு மூன்று வகைகளில் வீண்செருக்கு கொள்கிறது}.(7) பூமி சார்ந்த இன்பங்கள் அனைத்திற்கும் அடிமையாகும் அவன், தன் முன்னோர்களால் சேமிக்கப்பட்ட செல்வத்தை வீணாக்கத் தொடங்குகிறான். காலப்போக்கில் வறிய நிலையை அடையும் அவன், பிறருக்குச் சொந்தமானவற்றை அபகரிப்பதை மெச்சத்தகுந்ததாகவே கருதுகிறான்.(8) ஒரு மன்னன், சட்டங்களையும், விதிகளையும் மீறி அடுத்தவர் பொருளைக் களவாடும் அந்தத் தீயவனை, மானைத் தன் கணைகளால் துளைக்கும் வேடனைப் போலத் தண்டிக்கிறான்.(9) அத்தகு மனிதர்கள், (வழக்கமாக மனிதர்கள் வாழும்) நூறு வருடங்களை அடையாமலே, இருபது, அல்லது முப்பது வயதிற்கு மேல் வாழாமல் போகிறார்கள் {அதற்குள் இறந்து விடுகிறார்கள்}.(10) அனைத்து உயிரினங்களின் நடத்தையையும் கவனமாகக் காணும் ஒரு மன்னன், தன் நுண்ணறிவைப் பயன்படுத்தி, தன் குடிமக்களின் பெருந்துயரங்களைத் தணிக்கத் தகுந்த தீர்வுகளைச் செய்ய வேண்டும்.(11)
மனக் கவலை அனைத்திற்கும், மனத்தின் மயக்கம் மற்றும் துயரடைதல் ஆகிய இரண்டும் காரணங்களாகின்றன. மூன்றாவதாக வேறேதும் காரணமில்லை.(12) பல்வேறு வகைத் துயரங்களும், பூமி சார்ந்த இன்பங்களில் மனிதன் கொள்ளும் பற்றிலிருந்தே எழுகின்றன.(13) முதுமை, மரணம் ஆகியன இரண்டு ஓநாய்களைப் போல, பலமான, அல்லது பலமற்ற, குட்டையான, அல்லது நெடிய உயிரினங்கள் அனைத்தையும் விழுங்குகின்றன.(14) எந்த மனிதனாலும், ஏன் கடலை கச்சையாக அணிந்த மொத்த பூமியையும் அடக்கியாண்டவனாலும் கூட முதுமை மற்றும் மரணத்தில் இருந்து தப்ப முடியாது.(15) உயிரினங்களுக்கு ஏற்படும் இன்பமோ, துன்பமோ எந்தவித எழுச்சியும், தளர்ச்சியும் கொள்ளாமல் அனுபவிக்கப்படவோ, தாங்கிக் கொள்ளவோ படவேண்டும். அவற்றில் இருந்து தப்பும் வழிமுறை ஏதும் இல்லை.(16) ஓ! மன்னா {ஜனகனே}, வாழ்வின் தீமைகள் இளமையிலோ, நடு வயதிலோ, முதுமையிலோ ஒருவனை வந்தடைகின்றன. ஆசைப்பட்டவற்றை (அருள்களை) அடையமுடியவில்லையெனினும், இவற்றை ஒருபோதும் தவிர்க்க முடியாது[1].(17)
[1] முதுமை மற்றும் இறப்பில் இருந்து விடுபடுவது மனிதனின் பேராசையானாலும், அதுவே பூமியில் அவனது பங்காக ஆகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஏற்புடையவற்றின் இல்லாமையும், ஏற்பில்லாதவற்றின் இருப்பும், நன்மையும், தீமையும், அருளும், துயரும் விதியையே பின்பற்றி வருகின்றன.(18) அதேபோல, உயிரினங்களின் பிறப்பும், அவற்றின் இறப்பும், ஈட்டலும், இழப்பும் ஆகிய அனைத்தும் முன்பே தீர்மானிக்கப்பட்டவையாகும்.(19) மணம், நிறம், சுவை, தீண்டல் ஆகியன இயல்பாக எழுவதைப் போலவே, இன்பமும், துன்பமும், ஏற்கனவே விதிக்கப்பட்டவற்றில் இருந்து எழுகின்றன.(20) இருக்கைகள், படுக்கைகள், வாகனங்கள், செழிப்பு, பானம், உணவு ஆகியன காலப்போக்கில் உயிரினங்களை அணுகுகின்றன[2].(21) மருத்துவர்களும் நோய்வாய்ப்படுகிறார்கள். பலமானவர்களும் பலமிழக்கிறார்கள். செழிப்பை அனுபவிப்போர், அவை அனைத்தையும் இழந்து, வறுமையை அடைகிறார்கள்.(22) உயர்ந்த பிறப்பு {நற்குடி பிறப்பு}, உடல் நலம், அழகு, செழிப்பு, இன்ப நுகர் பொருட்கள் ஆகியன அனைத்தும் விதியின் மூலமே பெறப்படுகின்றன.(23) வறியோர் விரும்பவில்லையெனினும் பல பிள்ளைகளைப் பெறுகிறார்கள். செல்வந்தர்கள் பிள்ளை இல்லாமலும் இருக்கிறார்கள். விதியின் போக்கு ஆச்சரியம் நிறைந்ததாகும்.(24)
[2] "காலப்போக்கில் தோன்றவும், மறையவும் செய்கின்றன" என இங்கே விளக்குகிறார் கங்குலி.
நோய், நெருப்பு, ஆயுதங்கள், பசி, நஞ்சு, காய்ச்சல், மரணம், உயர்ந்த இடங்களில் இருந்து வீழ்தல் போன்றவற்றால் உண்டாகும் தீமைகள், பிறப்பை அடையும் விதியின்படியே ஒரு மனிதனை அடைகின்றன. பாவம் செய்யாத சிலர் பல்வேறு தீமைகளில் துன்புறும்போது, பாவிகளோ துயரின் சுமையைத் தாங்காமல் இருக்கும் நிலை இவ்வுலகில் காணப்படுகிறது.(25,26) செல்வத்தில் இன்புறும் சிலர் இளமையில் அழிகின்றனர்; சில வறிவர்கள், முதுமையின் சுமையைத் தாங்கிக் கொண்டு நூறு வருடங்களுக்குத் தங்கள் இருப்பை நீட்டிக்கின்றனர்.(27) இழிந்த குலத்தில் பிறந்த ஒருவன் நீண்ட வாழ்நாளோடு இருக்கிறான், அதே வேளையில் உன்னதக் குலத்தில் பிறந்தவன் ஒரு பூச்சியைப் போல விரைவில் அழிந்து போகிறான்.(28) இவ்வுலகில், செல்வச்சூழலில் இருக்கும் மனிதர்களுக்குப் பசிப்பதில்லை, அதே வேளையில் வறியவர்களோ மரத்துண்டுகளையும் செரிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.(29)
தீய ஆன்மா கொண்ட மனிதன், விதியால் உந்தப்பட்டுத் தன் நிலையில் நிறைவில்லாமல், "நான் இதைச் செய்கிறேன்" என்று சொல்லி, எந்தப் பாவத்தை இழைத்தாலும், அது தனது நன்மைக்கானதே என்று கருதுகிறான்.(30) வேட்டை, பகடை, பெண்கள், மது, பூசல்கள் ஆகியன ஞானியரால் நிந்திக்கப்படுகின்றன. எனினும், சாத்திரங்களில் பரந்த அறிவைக் கொண்ட பல மனிதர்கள் கூட, அவற்றுக்கு அடிமையாக இருப்பது காணப்படுகிறது.(31) உயிரினங்கள் பொருட்களை ஆசைப்பட்டாலும், படாவிட்டாலும் காலத்தின் போக்கில் அவை அவற்றை அடைகின்றன. வேறு எந்தத் தடத்தையும் {காரணத்தையும்} காணமுடியாது.(32) காற்று, வெளி {வானம்}, நெருப்பு, நிலவு, சூரியன், பகல், இரவு (ஆகாயத்தின்) ஒளிக்கோள்கள், ஆறுகள், மலைகள் ஆகியவற்றை எவன் படைக்கிறான்? எவன் அவற்றைத் தாங்கி வருகிறான்?(33)
குளிர், வெப்பம், மழை ஆகியன காலப்போக்கின் விளைவால் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து வருகின்றன. ஓ! மனிதர்களில் காளையே {ஜனக மன்னா}, அதுபோலவே, மனித குலத்திலும் இன்பமும், துன்பமும் {மாறி மாறி} வருகின்றன.(34) முதுமையால் துன்புறும், அல்லது மரணத்தால் பற்றப்படும் மனிதனை மருந்துகளாலோ, மந்திரங்களாலோ காப்பாற்ற முடியாது.(35) பெருங்கடலில் மிதக்கும் இரு மரத்துண்டுகள் ஒன்றோடொன்று சேர்ந்து மீண்டும் (காலப்போக்கில்) பிரிவதைப் போலவே உயிரினங்களும் ஒன்றாகச் சேர்ந்து, மீண்டும் (காலம் வரும்போது) பிரிவை அடைகின்றன.(36) (செல்வச் சூழலில்) பாடல் மற்றும் ஆடல்களிலும், பெண்களின் துணையிலும் இன்புற்று இருப்பவனிடமும், பிறர் கொடுக்கும் உணவை உண்டு வாழும் ஆதரவற்ற மனிதனிடமும் {வேறுபாடின்றி} காலம் சமமாகவே {ஒரே விதத்திலேயே} செயல்படுகிறது.(37)
தாய் என்றும், தந்தை, மகன் மற்றும் மனைவி என்றும் இவ்வுலகில் ஆயிரம் உறவுகள் சொல்லப்படுகின்றன. எனினும் உண்மையில், அவர்கள் யாருடையவர்கள்? நாமும் யாருடையவர்கள்?(38) எவரும் எவருக்கும் சொந்தமாகவோ, எவரும் வேறு எவருக்கும் சொந்தமாகவோ முடியாது. மனைவியர், சொந்தங்கள், மற்றும் நலன்விரும்பிகளோடு நாம் இணைவது, சாலையோர விடுதியில் பயணிகளைச் சந்திப்பதைப் போன்றதாகும்.(39) "நான் எங்கிருக்கிறேன்?", "நான் எங்குச் செல்லப்போகிறேன்?", "நான் யார்?", "நான் எவ்வாறு இங்கே வந்தேன்?", "எதற்காக, யாருக்காக நான் வருந்த வேண்டும்?" என்பது போன்ற கேள்விகளைச் சிந்திக்கும் ஒருவன் அமைதியை அடைகிறான்.(40) வாழ்வும், அதன் சுற்றுச்சூழலும் ஒரு சக்கரத்தைப் போலத் தொடர்ந்து சுழல்கின்றன, அன்புக்குரியோரின் தோழமை தோன்றி மறையக்கூடியது {சிறிது காலம் நீடிக்கக்கூடியதே}. சகோதரன், தாயார், தந்தையார், நண்பன் ஆகியோர் விடுதியில் உள்ள பயணிகளைப் போன்றோராவர்.(41) {எனவே, அவர்களின் இழப்புக்காக வருந்துவதில் எந்தப் பயனும் இல்லை}.
ஞானம் கொண்ட மனிதர்கள், காணப்படாத அடுத்த உலகத்தைத் தங்கள் ஊன்கண்களாலேயே காண்கிறார்கள். அறிவை விரும்பும் ஒருவன், சாத்திரங்களை அலட்சியம் செய்யாமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.(42) அறிவைக் கொண்ட ஒருவன், பித்ருக்கள், தேவர்கள் ஆகியோர் சம்பந்தமாக விதிக்கப்பட்டிருக்கும் சடங்குகளைச் செய்து, அறக்கடமைகள் அனைத்தையும் பயின்று, வேள்விகளைச் செய்து, அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை நீதியுடன் பின்தொடர வேண்டும்.(43) ஐயோ, பெரும் ஆழம் கொண்டதும், முதுமை மற்றும் மரணம் என்றழைக்கப்படும் பெரும் முதலைகள் நிறைந்ததுமான காலமெனும் பெருங்கடலில் இவ்வுலகம் மூழ்கிக் கொண்டிருக்கிறது என்பதை எவரும் புரிந்து கொள்வதில்லை.(44)
மருத்துவ அறிவியலைக் கவனமாகக் கற்றிருந்தாலும் பல மருத்துவர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் நோயினால் பீடிக்கப்படுவது காணப்படுகிறது.(45) பெருங்கடலானது கரைகளைக் கடக்க முடியாததைப் போலவே, கசப்பானவையும், பிசுபிசுப்பவையுமான பல்வேறு வகை மருந்துகளை உட்கொண்டாலும் இவர்கள் மரணத்தை விஞ்சுவதில் வெல்வதில்லை.(46) வேதியியலை நன்கறிந்த மனிதர்கள், நியாயமாக {விதிதவறாமல்} வழங்கப்படும் வேதியியல் சேர்மங்களைத்[3] தாக்குப் பிடிக்கமுடியாமல் யானைகளால் முறிக்கப்படும் மரங்களைப் போல முதுமையால் நொறுங்கி வீழ்வதும் காணப்படுகிறது.(47) அதேபோலவே, வேத கல்வியில் அர்ப்பணிப்பு மிக்கோரும், தவத்தகுதி கொண்டவர்களுமான மனிதர்களும் கூட, ஈகை பயின்று, அடிக்கடி வேள்விகளைச் செய்தாலும் முதுமை மற்றும் மரணத்தில் இருந்து தப்புவதில் வெல்வதில்லை.(48) பிறப்பை அடைந்திருக்கும் அனைத்து உயிரினங்களைப் பொறுத்தவரையில், ஒரு முறை கடந்து போகும் வருடங்களோ, மாதங்களோ, அரைத்திங்களோ {பக்ஷங்களோ}, பகல்களோ, இரவுகளோ மறுபடி திரும்புவதில்லை.(49) நிலையில்லாத இருப்பைக் கொண்ட மனிதன், விரும்பினாலும், விருப்பாவிட்டாலும், அனைத்து உயிரினங்களாலும் நடக்கப்படும் தவரிக்கப்பட முடியாத, அகன்ற பாதையை அடைய காலப்போக்கால் பலவந்தமாக இழுக்கப்படுகிறான்[4].(50)
[3] கும்பகோணம் பதிப்பில், "சிலர் ரஸாயனமென்னும் மருந்தைத் தெரிந்து கொண்டு அதை விதிதவறாமல் உபயோகித்தும் யானைகள் தமக்கு மேலான யானைகளாலடிக்கப்படுவது போலக் கிழத்தனத்தால் அடிக்கப்படுகிறார்கள்" என்றிருக்கிறது. மேலும் இதன் அடிக்குறிப்பாக, "வியாதியையும், கிழத்தனத்தையும் விலக்கி ஆயுளை நிலைக்கச் செய்வது ரஸாயனத்தின் குணம்" என்று விளக்கப்பட்டிருக்கிறது.[4] "தவிர்க்க முடியாத அகன்ற பாதையானது வாழ்வெனும் பாதையாகும். இங்குச் சொல்லப்படுவது யாதெனில், உயிரினங்கள் அனைத்தும் பிறப்புக்கு {இறப்புக்கும்} கட்டுப்பட்டவையே என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உடலானது உயிரினங்களில் இருந்து உதிக்கிறதோ, உயிரினங்கள் உடலில் இருந்து உதிக்கின்றனவோ, மனைவியர் மற்றும் பிற நண்பர்களுடனான ஒருவனின் உறவு விடுதியில் உள்ள பயணிகளைப் போன்றதே ஆகும்[5].(51) எவனாலும் எவனுடனும் நீடித்த தோழமையைப் பெற முடியாது. எவனாலும் தன் சொந்த உடலுடனேயே அத்தகு தோழமையைக் கொள்ள முடியாது. அவ்வாறிருக்கையில் வேறு எவரிடும் எவ்வாறு அவன் தோழமையை {உறவை} அடைவான்?(52) ஓ! மன்னா {ஜனகா}, இன்று உன் தந்தை எங்கே? உன் பாட்டன்கள் எங்கே? ஓ! பாவமற்றவனே, நீ இன்று அவர்களைக் காணவில்லை, அவர்களும் உன்னைக் காணவில்லை.(53) எந்த மனிதனாலும் சொர்க்கத்தையோ, நரகத்தையோ பார்க்க முடியாது. எனினும், சாத்திரங்களே அறவோரின் கண்களாகும். ஓ! மன்னா, சாத்திரங்களின் படி உன் நடத்தையை அமைத்துக் கொள்வாயாக.(54)
[5] "முதல் வரி இவ்வுடல் உயிரில் இருந்து தனித்திருக்கிறதா, அல்லது உயிரினங்கள் உடலில் இருந்து தனித்து இருக்கின்றனவா என்ற சச்சரவுக்குரிய கேள்வியைக் குறிக்கிறது. இஃது இந்து தத்துவஞானிகளிடையே மிகுந்த சச்சரவுக்குரியதாய் இருக்கிறது. மொத்த உடலானது கரையக்கூடும், ஆனால் (நுண்ணியத் தனிமங்களால் அமைந்த) லிங்க சரீரமானது பிறவியில்லா ஆன்மாவாகவே நீடிக்கிறது என்பதே பலரால் ஏற்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஒருவன் தூய்மையான இதயத்துடன் முதலில் பிரம்மச்சரிய நோன்பை நோற்று, பிறகு பிள்ளைகளைப் பெற்று, பிறகு பித்ருக்கள், தேவர்கள் மற்றும் மனிதர்களுக்குத் தான் பட்ட கடனைச் செலுத்துவதற்காக வேள்விகளைச் செய்ய வேண்டும்.(55) முதலில் ஒருவன், பிரம்மச்சரிய நோன்பை நோற்று, வேள்விகளைச் செய்து, பிள்ளைகளைப் பெறுவதில் ஈடுபட்டு, அறிவையே கண்களாகக் கொண்டு, இதயத் துயரம் அனைத்தையும் கைவிட்டு, சொர்க்கத்திலும், இவ்வுலகத்திலும், தன் சொந்த ஆன்மாவிலும் கவனம் செலுத்த வேண்டும்[6].(56) சொர்க்கம், பூமி ஆகியவற்றை நியாயமாக அடைய அறம்பயில முனைந்து, சாத்திரங்களில் (மன்னனின் பங்காக) விதிக்கப்பட்ட உலகப் பொருட்களை மட்டுமே எடுத்துக் கொள்ளும் மன்னன், அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் மற்றும் உலகங்கள் அனைத்தின் மத்தியிலும் பரவும் புகழை வெல்கிறான்" என்றார் {அஸ்மர்}.(57)
[6] "இங்கே சொல்லப்படும் பரம் Param என்பதைப் பரமாத்மா என்று நீலகண்டர் விளக்குகிறார். கவனம் செலுத்த வேண்டும் என்பது அடைய முயற்சித்து இன்புற வேண்டும் என்ற பொருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தெளிந்த அறிவைக் கொண்ட விதேஹர்களின் ஆட்சியாளன் {மன்னன் ஜனகன்}, அறிவு நிறைந்த இந்த வார்த்தைகளைக் கேட்டு, துயரில் இருந்து விடுபட்டு, அஸ்மரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு தன் வசிப்பிடத்தை நோக்கிச் சென்றான்.(58) ஓ! மங்கா புகழ் கொண்டவனே {யுதிஷ்டிரனே}, உன் துயரங்களைக் கைவிட்டு எழுவாயாக. நீ சக்ரனுக்கே {இந்திரனுக்கே} இணையானவனாவாய். உன் ஆன்மாவில் இன்புற்றிருப்பாயாக. க்ஷத்திரியக் கடமைகளின் நடைமுறையின்படியே இந்தப் பூமி உன்னால் வெல்லப்பட்டது. ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, அதை அனுபவிப்பாயாக. என் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதே" என்றார் {வியாசர்}".(59)
சாந்திபர்வம் பகுதி – 28ல் உள்ள சுலோகங்கள் : 59
ஆங்கிலத்தில் | In English |