Charvaka! | Shanti-Parva-Section-38 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 38)
பதிவின் சுருக்கம் : திரௌபதியைப் புகழ்ந்த மகளிர்; அரண்மனையை அடைந்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனைப் புகழ்ந்த குடிமக்கள்; ஆசி வழங்கிய பிராமணர்கள்; பிராமணனாக வேடம் பூண்டு வந்த ராட்சசன்; யுதிஷ்டிரனை நிந்தித்த சார்வாகன்; அவனைப் பணிந்து வணங்கிய யுதிஷ்டிரன்; சார்வாகனின் பேச்சை மறுத்து, தங்கள் குரலொலியாலேயே சார்வாகனைக் கொன்ற பிராமணர்கள்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பார்த்தர்கள் நகருக்குள் நுழைந்த நேரத்தில், அக்காட்சியைக் காண ஆயிரக்கணக்கான குடிமக்கள் வெளியே வந்தனர்.(1) ஒவ்வொரு கனமும் பெருகும் கூட்டத்தைக் கொண்டவையும், நன்கு அலங்கரிக்கப்பட்டவையான சதுக்கங்களும், வீதிகளும், நிலவின் எழுச்சியில் பெருகும் பெருங்கடலைப் போல அழகாகத் தெரிந்தன.(2) ஓ! பாரதா {ஜனமேஜயா}, வீதியோரங்களில் நின்றவையும், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவையும், மகளிர் நிறைந்தவையுமான பெரும் மாளிகைகள், இந்தப் பெரும் கூட்டத்தால் நடுங்குவதாகத் தெரிந்தன.(3) அவர்கள் {அந்தப் பெண்கள்} பணிவான அடக்கமான வார்த்தைகளில் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் மற்றும் மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுல, சகாதேவன்} ஆகியோரைப் புகழ்ந்தனர்.(4)
அவர்கள், "ஓ! அருளப்பட்ட பாஞ்சால இளவரசியே {திரௌபதியே}, (ஏழு) முனிவர்களின் அருகில் இருக்கும் கௌதமியைப் போலவே இந்த மனிதர்களில் முதன்மையானோருக்குப் பணிவிடை செய்யும் நீ அனைத்துப் புகழுக்கும் தகுந்தவளாவாய்.(5) ஓ! மங்கையே {திரௌபதியே}, உன் செயல்களும், நோன்புகளும் உனக்கு அவற்றின் கனிகளைப் பெற்றுத் தந்தன" என்றனர். ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வகையிலேயே இளவரசியான கிருஷ்ணையை {திரௌபதியை} அந்தப் பெண்கள் புகழ்ந்தனர்.(6)
ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்தப் புகழ்ச்சிகள், ஒருவருடனொருவர் பேசும் அவர்களது பேச்சுகள், (மனிதர்களால் உண்டான) மகிழ்ச்சிக் கூச்சல் ஆகியவற்றின் விளைவால் அந்நகரமே பேராரவாரத்தால் நிறைந்தது.(7) தனக்குத் தகுந்த நடத்தையுடன் வீதிகளின் ஊடாகக் கடந்து சென்ற யுதிஷ்டிரன், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட (குருக்களின்) அழகிய அரண்மனைக்குள் நுழைந்தான்.(8) நகரத்தையும், மாகாணங்களையும் சார்ந்த மக்கள் அந்த அரண்மனையை அணுகி, காதுகளுக்கு ஏற்புடுயை பேச்சுகளைப் பேசினர்.(9)
அவர்கள், "ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, ஓ! எதிரிகளைக் கொல்பவனே, நற்பேற்றாலேயே நீ உன் எதிரிகளை வென்றாய். நற்பேற்றாலே அறம் மற்றும் ஆற்றலின் மூலம் உன் நாட்டை நீ மீட்டாய்.(10) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, (சொர்க்கவாசிகளைக்) காக்கும் இந்திரனைப் போல உன் குடிமக்களை அறம்சார்ந்து பாதுகாத்து, நூறு ஆண்டுகளுக்கு எங்கள் ஏகாதிபதியாக இருப்பாயாக" என்றனர்.(11)
அரண்மனை வாயிலில் இவ்வாறு அருள்நிறைந்த பேச்சுகளால் புகழப்பட்டும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பிராமணர்களின் ஆசிகளை ஏற்றுக் கொண்டும்,(12) வெற்றியாலும், தன் மக்களின் ஆசிகளாலும் அருளப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, இந்திரனின் மாளிகைக்கு ஒப்பான அந்த அரண்மனைக்குள் நுழைந்து, தன் தேரில் இருந்து இறங்கினான்.(13) அருளப்பட்டவனான யுதிஷ்டிரன், அறைகளுக்குள் நுழைந்து, வீட்டில் இருந்த தேவர்களை அணுகி, ரத்தினங்களாலும், நறுமணப்பொருட்களாலும், மலர் மாலைகளாலும் அவர்களை வழிபட்டான்.(14) பெரும் புகழையும், செழிப்பையும் கொண்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, மீண்டும் வெளியே வந்து, (அவனுக்கு ஆசி கூறுவதற்காகத்) தங்கள் கரங்களில் மங்கலப் பொருட்களுடன் காத்திருக்கும் பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்களைக் கண்டான்.(15) ஆசி கூற விரும்பி அவ்வாறு சூழ்ந்திருந்த பிராமணர்களுடன் பார்ப்பதற்கு அந்த மன்னவன், நட்சத்திரங்களுக்கு மத்தியில் உள்ள களங்கமில்லா நிலவைப் போல அழகாகத் தெரிந்தன்.(16)
தனது புரோகிதர் தௌமியர், தன் பெரியப்பன் {திருதராஷ்டிரன்} ஆகியோரின் துணையுடன் இருந்த குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பிராமணர்களுக்கு இனிப்பு, ரத்தினங்கள், அபரிமிதமான தங்கம், பசுக்கள், ஆடைகள் மற்றும் அவர்களில் ஒவ்வொருவரும் விரும்பிய பல்வேறு பொருட்கள் ஆகியவற்றை முறையான சடங்குகளுடன் (கொடையாகக்) கொடுத்தான்.(17,18) அப்போது, ஓ! பாரதா {ஜனமேஜயா}, மொத்த ஆகாயத்தையும் நிறைக்கும்படி, "இஃது அருளப்பட்ட தினம்" என்ற உரத்த கூச்சல் எழுந்தது. காதுக்கு இனிமையான அந்தப் புனிதமான ஒலி (பாண்டவர்களின்) நண்பர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் மிகுந்த மனநிறைவைத் தந்தது.(19) அன்னங்களின் கூட்டம் வெளியிடும் ஒலியைப் போலக் கல்விமான்களான அந்தப் பிராமணர்கள் வெளியிட்ட ஒலியானது உரக்கவும், தெளிவாகவும் இருந்ததை மன்னன் {யுதிஷ்டிரன்} கேட்டான். வேதங்களை நன்கறிந்த மனிதர்களின் முக்கியத்துவம் வாய்ந்தவையும் இனிமையானவையுமான அந்த வார்த்தைகளை மன்னன் கேட்டான்.(20) அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, வெற்றியின் குறியீடாகப் பேரிகை முழக்கங்களும், சங்குகளின் இனிய ஒலியும் எழுந்தன.(21)
சிறிது நேரம் கழித்துப் பிராமணர்கள் அமைதியடைந்தபோது, சார்வாகன்[1] என்ற பெயருடைய ராட்சசன், பிராமண வேடத்தில் வந்து மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} பேசினான்.(22) துரியோதனனின் நண்பனான அவன், துறவியின் ஆடையில் அங்கே நின்று கொண்டிருந்தான். ஜபமாலைகளுடனும்[2], தலையில் குடுமியுடனும், கையில் திரி தண்டத்துடனும் கூடிய அவன், தவங்களுக்கும், நோன்புகளுக்கும் தங்களை அர்ப்பணித்தவர்களும், (மன்னனுக்கு) ஆசி கூற வந்தவர்களுமான அந்த ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கு மத்தியில் அச்சமில்லாமல் செருக்குடன் நின்று கொண்டிருந்தான்.(23,24) உயர் ஆன்ம பாண்டவர்களுக்குத் தீமையை விரும்பிய அந்தப் பொல்லாத்தீயவன், அந்தப் பிராமணர்களுடன் ஆலோசிக்காமலேயே மன்னனிடம் இந்த வார்த்தைகளைப் பேசினான்.(25)
[1] சல்லிய பர்வம் பகுதி 64ல் http://mahabharatham.arasan.info/2017/09/Mahabharatha-Shalya-Parva-Section-64.html இந்தச் சார்வாகனைக் குறித்துத் துரியோதனன் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறான்.[2] கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் ஜபமாலை என்றே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "ஸாங்க்யம் என்பதைவிட்டு, "ஸாக்ஷம்" எனக் கொண்டால் ஜபமாலை" என்ற பொருள் வரும் என அடிக்குறிப்பில் இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவன் ஒரு சாங்கியனாக இருந்தான்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இஃது ஒரு தனிப்பட்ட சாங்கியத் துறவியைக் குறிக்கிறது. இதைச் சாங்கியக் கொள்கையுடன் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது" என்றிருக்கிறது.
சார்வாகன் {யுதிஷ்டிரனிடம்}, "இந்தப் பிராமணர்கள் அனைவரும் என்னைத் தங்கள் பேச்சாளனாக நியமித்து, ʻதீய மன்னனான உனக்கு ஐயோ. நீ உறவினர்களைக் கொன்றவனாவாய்.(26) ஓ! குந்தியின் மகனே, உன் குலத்தையே இவ்வாறு அழித்துவிட்டு நீ என்ன ஈட்டிவிடப் போகிறாய்? பெரியோரையும், ஆசானையும் கொன்ற நீ உன் உயிரை விடுவதே முறையாகும்’ என்று சொல்கின்றனர்" என்றான்.(27) அந்தத் தீய ராட்சசனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பிராமணர்கள் மிகவும் கலக்கமடைந்தனர். அந்தப் பேச்சால் குட்டுபட்ட அவர்கள் உரத்த ஆரவாரம் செய்தனர்.(28) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் யுதிஷ்டிரனுடன் கூடிய அவர்கள், கவலையாலும், வெட்கத்தாலும் பேச்சற்றவர்களானார்கள்.(29)
யுதிஷ்டிரன் {ராட்சசன் சார்வாகனிடம்}, "நான் உம்மை வணங்கி, பணிந்து, வேண்டி கேட்டுக் கொள்கிறேன். என்னிடம் நிறைவு கொள்வீராக. என்னை நிந்தனை செய்வது உமக்குத் தகாது. நான் விரைவில் என் உயிரை விடுவேன்" என்றான்"[3].(30)
[3] "இங்கே சொல்லப்பட்டிருக்கும் பிரத்யசன்னவியசனினம் Pratyasanna-vyasaninam என்பது நீலகண்டரால் ʻதுயர் நிறைந்த என் தம்பிகளின் அருகில் நான் நிற்கிறேன். இவர்களுக்காகவே நான் அரசுரிமையை ஏற்கிறேன்’ என்று யுதிஷ்டிரன் சொன்னதாக விளக்கப்படுகிறது. இஃது உண்மையில் மிக அழகாகவே இருக்கிறது. இருப்பினும் வெளிப்படையான பொருள், ʻநான் என் உயிரை விடப் போகிறேன்’ என்பதே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இந்த சுலோகம் மேற்கண்டவாறே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் "ஓ, பெரியோர்களே! நீங்கள், மிகவும் நமஸ்கரித்து யாசிக்கும் என்னை அனுக்ரஹிக்க வேண்டும். கிட்டின பந்துக்களின் துன்பம் பொறாமல் ராஜ்யத்திற்கு வந்த என்னைத் திக்காரஞ்செய்யாமலிருக்க நீங்கள் தயை செய்ய வேண்டும்" என்று யுதிஷ்டிரன் கேட்பதாக இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நான் உம்மை வணங்குகிறேன். எனக்கு உமது கருணையைக் காட்டுவீராக. நீர் என்னைக் கடிந்துரைக்கலாகாது. பேரழிவின் துயரிலிருந்து இப்போதுதான் நான் மீண்டிருக்கிறேன்" என்று யுதிஷ்டிரன் சொல்வதாக இருக்கிறது.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா {ஜனமேஜயா}, அப்போது அந்தப் பிராமணர்கள் அனைவரும், "இவை எங்களுடைய வார்த்தைகளல்ல. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, செழிப்பு உனதாகட்டும்" என்றனர்.(31) வேதங்களை அறிந்தோரும், தவங்களால் அறிவு தெளிவடைந்தோருமான அந்த உயர் ஆன்ம மனிதர்கள், இவ்வாறு பேசியவனின் {ராட்சசன் சார்வாகனனின்} வேடத்தைத் தங்கள் ஆன்மப் பார்வையின் மூலம் ஊடுருவினர்.(32) பிறகு அவர்கள், "இவன் துரியோதனனின் நண்பனான ராட்சசன் சார்வாகனாவான்[4]. அறத்துறவியின் ஆடையை அணிந்து கொண்டு, தன் நண்பன் துரியோதனனின் நன்மைக்காக இவ்வாறு முயற்சிக்கிறான். ஓ! அற ஆன்மாவே, நாங்கள் இவ்வகையில் ஏதும் பேசவில்லை. இந்த உன் கவலை அகலட்டும். உன் தம்பிமாருடன் கூடிய நீ செழிப்பை அடைவாயாக" என்றனர்"[5].(34)
[4] கும்பகோணம் பதிப்பில் அதிகத் தகவலாக, "ஓ ராஜரே இவன் துர்யோதனனுக்குத் தோழனென்று பிரஸித்தனான பிரம்மராக்ஷஸன்" என்றிருக்கிறது.[5] கும்பகோணம் பதிப்பில், அந்தப் பிராமணர்களின் பேச்சு முழுமையாகப் பின்வருமாறு "ஓ ராஜரே, இவன் எங்களுடன் சேர்ந்த பிராம்மணனேயல்லன். இவன் எவனோ வேறே ஒருவன்’ என்று சொல்லிவிட்டு, மிக்கதவங்களால் பரிசுத்திபெற்றவர்களும், வேதமறிந்தவர்களுமான அம்மஹாத்மாக்கள் ஞானக்கண்ணால் அவனை இன்னானென்று தெரிந்து கொண்டு, ‘ஓ ராஜரே இவன் துர்யோதனனுக்குத் தோழனென்று பிரஸித்தனான பிரம்மராக்ஷஸன். அந்தத் துரியோதனனுக்கு நன்மையைச் செய்ய விரும்பி இவன் ஸந்யாஸி உருவங்கொண்டு வந்து நிற்கிறான். இந்த வார்த்தைகளை நாங்கள் சொல்லவில்லை. ஓ தர்ம்புத்தியுள்ளவரே, நீர் இவ்வித பயத்தை அடைய வேண்டாம். தம்பிகளுடன் கூட உமக்கு க்ஷேமம் உண்டாக வேண்டுகிறோம்" என்று சொன்னார்கள்" என இருக்கிறது.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அப்போது சினத்தால் உணர்விழந்தவர்களான அந்தப் பிராமணர்கள் "ஹும்" என்ற ஒலியை வெளியிட்டனர். பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடைந்தவர்களான அவர்கள், பாவம் நிறைந்த அந்த ராட்சசனை நிந்தித்து, (அந்தத் தங்கள் ஒலியாலேயே) அவனை அங்கேயே கொன்றனர்[6].(35) பிரம்மத்தை ஓதுபவர்களான அவர்களின் சக்தியால் எரிக்கப்பட்ட சார்வாகன், குருத்துகளுடன் {தளிர்களுடன்} கூடிய மரமானது இந்திரனின் வஜ்ரத்தால் {இடியால்} வெடிப்பதைப் போல உயிரை இழந்து கீழே விழுந்தான்.(36) அந்தப் பிராமணர்கள், முறையாக வழிபடப்பட்டு, தங்கள் ஆசிகளால் மன்னனை மகிழ்வித்த பிறகு அங்கிருந்து சென்றனர். தன் நண்பர்களுடன் கூடிய பாண்டுவின் அரசமகனும் {யுதிஷ்டிரனும்}, பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(37)
[6] கும்பகோணம் பதிப்பில், "அந்தப் பிராம்மணர்களுடைய தேஜஸால் கொளுத்தப்பட்டு அந்த ராக்ஷஸன் இடிவிழுந்த தளிருள்ள மரம்போலக் கீழே விழுந்தான்" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 38ல் உள்ள சுலோகங்கள் : 37
ஆங்கிலத்தில் | In English |