The son of Justice entered the Capital! | Shanti-Parva-Section-37 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 37)
பதிவின் சுருக்கம் : மன்னனின் கடமைகள் மற்றும் அறநெறி குறித்துப் பீஷ்மர் விளக்குவார் எனச் சொன்ன வியாசர்; நாடாளச் சொல்லி மீண்டும் யுதிஷ்டிரனிடம் வற்புறுத்திய கிருஷ்ணன்; வியாசர் மற்றும் கிருஷ்ணனின் சொற்களைக் கேட்டு மனத்தில் அமைதியை அடைந்த யுதிஷ்டிரன், தலைநகரான ஹஸ்தினாபுரத்திற்கள் தன் பரிவாரங்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நுழைந்தது ...
யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "ஓ! புனிதமான பெருந்தவசியே, மன்னர்களின் கடமைகள் மற்றும் நால்வகையினரின் கடமைகள் அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்.(1) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, துயர் நிறைந்த காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறையையும், அறநெறியின் பாதையில் பயணித்து நான் எவ்வாறு உலகை அடக்க முடியும் என்பதையும் நான் கேட்க விரும்புகிறேன்.(2) பாவக்கழிப்பு {பரிகாரங்கள்}, உண்ணாநோன்புகள் நோற்பது, ஆகியவற்றைக் குறித்ததும், பெரும் ஆவலைத் தூண்டவல்லதுமான இந்த உரை என்னை மகிழ்ச்சியில் நிறைக்கிறது.(3) அறப்பயிற்சியும், மன்னர்களுக்கான கடமைகளையாற்றுவதும் எப்போதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருக்கின்றன. இவ்விரண்டையும் இணங்கச் செய்யும் நினைப்பே என் மனத்தை அடிக்கடி திகைக்கச் செய்கிறது" என்றான்.(4)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அப்போது வேதங்களை அறிந்தோரில் முதன்மையானவரான வியாசர், பழமையானவரும், அனைத்தையும் அறிந்தவருமான நாரதரின் மீது தன் கண்களைச் செலுத்தியவாறே {யுதிஷ்டிரனிடம்},(5) "ஓ! மன்னா, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டோனே, கடமைகளையும், அறநெறியையும் குறித்து முழுமையாக நீ கேட்கவிரும்பினால் குருக்களின் பாட்டனான கிழவர் பீஷ்மரிடம் கேட்பாயாக.(6) கடமைகள் அனைத்தையும் அறிந்தவரும், உலகளாவிய அறிவைக் கொண்டவருமான பாகீரதியின் {கங்கையின்} மைந்தர், கடமைகள் குறித்து நீ இதயத்தில் கொண்டிருக்கும் கடினமான ஐயங்கள் அனைத்தையும் போக்குவார்.(7) மூவழிகளில் செல்லும் தெய்வீக ஆறானவளும், நுண்ணறிவு கொண்டவளுமான அந்தத் தேவியே {கங்கையே} அவரை ஈன்றெடுத்தாள். இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் அனைவரையும் அவர் {பீஷ்மர்} தன் கண்களால் கண்டவராவார்.(8) அவர், பிருஹஸ்பதியைத் தலைமையாகக் கொண்ட தெய்வீக முனிவர்களைத் தன் கடமையுணர்வு மிக்கத் தொண்டுகளால் நிறைவு செய்து, மன்னர்களின் கடமைகள் குறித்த அறிவை அடைந்தார்.(9) குருக்களில் முதன்மையான அவர் {பீஷ்மர்}, உசனஸும் {அசுரகுரு சுக்கிரரும்}, மறுபிறப்பாளரான தேவர்களின் ஆசானும் {பிருஹஸ்பதியும்} அறிந்த அறிவியல் மற்றும் அதன் பொருள் விளக்கங்களின் அறிவை அடைந்தவராவார்.(10) அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர், கடும் நோன்புகள் நோற்று, வசிஷ்டர் மற்றும் பிருகு குலத்தின் சியவனர் ஆகியோரிடம் இருந்து வேதங்கள் அனைத்தையும், அவற்றின் அங்கங்களையும் குறித்த அறிவை அடைந்தார்.(11)
பெரும்பாட்டனின் {பிரம்மனின்} மூத்த மகனும், சுடர்மிக்கக் காந்தி கொண்டவரும், ஆன்ம மற்றும் மனோ அறிவியல் குறித்த உண்மைகளை அறிந்தவருமான சனத்குமாரரிடம் அவர் {பீஷ்மர்} பழங்காலத்தில் கல்வி பயின்றார்.(12) யதிகளின் {துறவிகளின்} கடமைகளைக் குறித்து மார்க்கண்டேயரின் உதடுகள் மூலமாகவே முற்றிலுமாக அறிந்தார். அந்த மனிதர்களில் காளை, ராமர் {பரசுராமர்} மற்றும் சக்ரன் {இந்திரன்} ஆகியோரிடம் இருந்து ஆயுதங்கள் அனைத்தையும் அடைந்தார்.(13) மனிதர்களுக்கு மத்தியில் பிறந்தவராக இருப்பினும், மரணம் இன்னும் அவரது கட்டுக்குள்ளேயே இருக்கிறது. பிள்ளையற்றவராக இருப்பினும், மறுமையில் அவருக்குப் பல அருளுலகங்கள் காத்திருக்கின்றன என்று நாங்கள் கேள்விப்படுகிறோம்.(14) பெரும் தகுதி படைத்த மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களே அவரது ஆலோசகர்களாக எப்போதும் இருந்துள்ளனர். அவர் அறியாதது என்று {இனி} அறியப்பட வேண்டும் என்றும் இங்குப் பொருளேதும் இல்லை.(15) கடமைகள் அனைத்தையும் உணர்ந்தவரும், அறநெறியின் நுண்ணிய உண்மைகள் அனைத்தையும் அறிந்தவருமான அவரே {பீஷ்மரே} உன்னிடம் கடமை மற்றும் அறநெறி குறித்து உரையாற்றுவார். அவர் {பீஷ்மர்} தனது உயிர்மூச்சைக் கைவிடுமுன் அவரிடம் செல்வாயாக" என்றார் {வியாசர்}.(16) அவரால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், பேரறிஞனுமான உயர் ஆன்ம குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, நாநயமிக்கவர்களில் முதன்மையானவரும், சத்தியவதியின் மகனுமான வியாசரிடம் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்.(17)
யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "அருவருப்பை ஏற்படுத்தக் கூடியதும், பெரியதுமான உறவினர்கள் படுகொலையைச் செய்து, அனைத்திற்கு எதிரான குற்றவாளியாகவும், பூமியை அழித்தவனாகவும் நான் இருக்கிறேன்.(18) நேர்மையாகப் போரிட்ட போர்வீரரான பீஷ்மரை, வஞ்சகத்தின் உதவியால் கொன்ற பிறகு, (கடமைகள் மற்றும் அறநெறி குறித்த) கேள்விகளைக் கேட்பதற்காக என்னால் அவரை எவ்வாறு அணுக முடியும்?" என்று கேட்டான்.(19)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "வலிய கரங்களைக் கொண்ட யது குலத்தின் உயர் ஆன்மத் தலைவன் {கிருஷ்ணன்}, நால்வகையினர் அனைவரும் {நான்கு வர்ணங்களும்} நன்மை அடையும் விருப்பத்தால் உந்தப்பட்டு, மீண்டும் அந்த மன்னர்களில் முதன்மையானவனிடம் {யுதிஷ்டிரனிடம்} (பின் வரும் வார்த்தைகளைப்) பேசினான்.(20)
வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, "துயரத்தில் இத்தகு பிடிவாதம் செய்வது உமக்குத் தகாது. ஓ! மன்னர்களில் சிறந்தவரே, புனிதமான வியாசர் சொன்னதைச் செய்வீராக.(21) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, பிராமணர்களும், பெரும் சக்தி கொண்ட உமது இந்தச் சகோதரர்களும், கோடையின் முடிவில் மேகங்களின் தேவனை வேண்டும் மனிதர்களைப் போல உம்மை வேண்டி உம்முன்னால் நிற்கின்றனர்.(22) ஓ! மன்னா, {போருக்குத்} திரண்ட மன்னர்களில் கொல்லப்படாமல் எஞ்சியோர் மற்றும் குருஜாங்கல நாட்டின் நால்வகை மக்கள் அனைவரும் இங்கே இருக்கின்றனர்.(23) ஓ! எதிரிகளை எரிப்பவரே, ஓ! எதிரிகளைக் கொல்பவரே, இந்த உயர் ஆன்ம பிராமணர்களுக்கு ஏற்புடையதைச் செய்வதற்காகவும், அளவிலா சக்தி கொண்ட மதிப்பிற்குரிய பெரியவர் வியாசரின் ஆணைக்குக் கீழ்ப்படிந்தும்,(24) உமது நலன்விரும்பிகளான எங்களின், மற்றும் திரௌபதியின் வேண்டுகோளின்படியும், எங்களுக்கு ஏற்புடையவற்றையும், உலகத்திற்கு நன்மையளிப்பனவற்றையும் செய்வீராக" என்றான் {கிருஷ்ணன்}.(25)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனான அந்த உயர் ஆன்ம மன்னன் (யுதிஷ்டிரன்), கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மொத்த உலகத்தின் நன்மைக்காகத் தன் இருக்கையில் இருந்து எழுந்தான்.(26) பெரும்புகழைக் கொண்டவனும், மனிதர்களில் புலியுமான அந்த யுதிஷ்டிரன், கிருஷ்ணனாலும், தீவில் பிறந்தவராலும் (வியாசராலும்), தேவஸ்தானர், ஜிஷ்ணு {அர்ஜுனன்} ஆகியோராலும், இன்னும் பலராலும் வேண்டிக் கொள்ளப்பட்டதால், தன் துயரையும், கவலையையும் கைவிட்டான்.(27,28) வழக்கமாக மனிதர்கள் அனைவராலும் கேட்கப்படுவதும், அனைவரும் கேட்கத்தகுந்ததுமான சுருதிகளின் தீர்மானங்களையும், அந்தத் தீர்மானங்களின் விளக்கங்கள் குறித்த அறிவியலையும் முழுமையாக அறிந்தவனான பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மனோ அமைதியை அடைந்து, அடுத்து என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானித்தான்.(29) நட்சத்திரங்களால் சூழப்பட்ட நிலவைப் போல, அவர்களால் சூழப்பட்டிருந்த மன்னன், வரிசையின் தலைமையில் திருதராஷ்டிரனை முன்னிட்டு, நகருக்குள் நுழைவதற்காகப் புறப்பட்டான்.(30)
கடமைகள் அனைத்தையும் அறிந்தவனும், குந்தியின் மகனுமான யுதிஷ்டிரன், நகருக்குள் நுழைய விரும்பி, தேவர்களுக்கும், ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கும் தன் வழிபாட்டைக் காணிக்கையாக்கினான்.(31) பிறகு அவன் {யுதிஷ்டிரன்}, மங்கலக் குறிகளைக் கொண்டவையும், வெள்ளை நிறத்திலானவையுமான பதினாறு இளங்காளைகள் பூட்டப்பட்டதும், வெள்ளை விரிப்புகளாலும், மான் தோல்களாலும் மறைக்கப்பட்டதும், வேத மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்டதுமான ஒரு புதிய தேரில் ஏறினான். பாணர்களாலும், வந்திகளாலும் துதிக்கப்பட்ட அந்த மன்னன், அமுத வாகனத்தைச் செலுத்தும் சோமனைப் {இந்திரனைப்} போல அந்தத் தேரில் ஏறினான்.(32,33) பயங்கர ஆற்றலைக் கொண்டவனும், அவனது தம்பியுமான பீமன், கடிவாளங்களை ஏந்தினான். அர்ஜுனன், பெரும் பிரகாசம் கொண்ட வெண்குடையை அவனது தலைக்கு மேல் ஏந்தினான்.(34) தேரில் இருந்த அந்த வெண்குடையானது, ஆகாயத்தில் நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட வெண்மேகத்தைப் போல அழகானதாக இருந்தது.(35) மாத்ரியின் வீர மகன்களான நகுலன், சகாதேவன் ஆகியோர் இருவரும், நிலவின் கதிர்களைப் போல வெண்மையானவையும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான வெண்சாமரங்கள் இரண்டால் மன்னனுக்கு விசிறி விட்டனர்.(36) ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த ஐந்து சகோதரர்களும் (ஒவ்வொருவரின் உடல் தொகுப்பிலும் நுழைந்திருக்கும்) ஐம்பூதங்களைப் போலத் தெரிந்தனர்.(37)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, மனோவேகம் கொண்ட குதிரைகள் பூட்டப்பட்ட மற்றொரு வெண்தேரைச் செலுத்தி வந்த யுயுத்சு, பாண்டுவின் மூத்த மகனுக்குப் {யுதிஷ்டிரனுக்குப்} பின்னால் தொடர்ந்து சென்றான்.(38) சாத்யகியுடன் கூடிய கிருஷ்ணன், சைவியம், சுக்ரீவம் ஆகியவை பூட்டப்பட்ட தன்னுடைய பிரகாசமான தேரில் குருக்களைப் பின்தொடர்ந்து சென்றான்.(39) ஓ! பாரதா {ஜனமேஜயா}, பிருதையுடைய {குந்தியுடைய} மகனின் பெரியப்பன் {திருதராஷ்டிரன்}, மனிதர்களின் தோள்களில் சுமக்கப்படும் பல்லக்கில் வரிசையின் தலைமையிலும், காந்தாரியின் துணையுடனும் சென்று கொண்டிருந்தான்.(40) குரு அரச குடும்பத்தின் பிற பெண்கள், குந்தி, கிருஷ்ணை {திரௌபதி} ஆகியோர் அனைவரும், விதுரனின் தலைமையிலான சிறந்த வாகனங்களில் சென்றனர்.(41) பெரும் எண்ணிக்கையிலான தேர்களும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட யானைகளும், காலாட்படை வீரர்களும், குதிரைகளும் பின்னால் தொடர்ந்து சென்றன.(42) பாணர்களும், வந்திகளும் இனிய குரலில் மன்னனின் புகழைப் பாடிக் கொண்டிருக்க, அவன் {மன்னன்}, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரை {ஹஸ்தினாபுரத்தை} நோக்கிச் சென்றான்.(43)
ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {ஜனமேஜயா}, பூமியில் இதுவரை எப்போதும் காணப்படாததைப் போல மன்னன் யுதிஷ்டிரனின் பயணம் மிக அழகானதாக இருந்தது. உடல்நலமிக்க, உற்சாகமான மனிதர்கள் கூட்டம், எண்ணற்ற குரல்களில் பாடிக் கொண்டிருப்பது அங்கே கேட்கப்பட்டது.(44) பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்} முன்னேறிச் செல்கையில், நகரமும், அதன் தெருக்களும், (மன்னனைக் கௌரவிப்பதற்காக வெளியே வந்திருந்த) மகிழ்ச்சியான குடிமக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(45) மன்னன் கடந்து சென்ற இடங்கள் வெண்ணிறத்திலான அழகிய மலர்த்தோரணங்களாலும், எண்ணற்ற கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நகரத்தின் வீதிகள் நறுமணப் பொருட்களால் மணமூட்டப்பட்டிருந்தன.(46) அரண்மனையைச் சுற்றிலும் நறுமணப்பொடிகளும், மலர்களும், நறுமணம் வீசும் செடிகளும் நிறைந்திருந்தன; மலர்மாலைகளும், தோரணங்களும் தொங்கிக் கொண்டிருந்தன.(47) ஒவ்வொரு வீட்டின் வாசலிலும், விளிம்பு வரை நீர் நிறைந்த புதிய உலோகக் கலசங்கள் வைக்கப்பட்டிருந்தன. குறிப்பிட்ட இடங்களில் நல்ல நிறம் கொண்ட அழகிய கன்னிகையர் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.(48) நண்பர்களுடன் கூடியவனும், இனிய சொற்களால் புகழப்படுபவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்த நகரவாயிலுக்குள் நுழைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(49)
சாந்திபர்வம் பகுதி – 37ல் உள்ள சுலோகங்கள் : 49
ஆங்கிலத்தில் | In English |