Sacrifices and penances! | Shanti-Parva-Section-79 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 79)
பதிவின் சுருக்கம் : ரித்விக்குகளின் நடத்தை மற்றும் பண்புககளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; வேள்விகளைக் குறித்தும், தவங்களைக் குறித்தும் சொன்னது; தவத்தின் மேன்மை...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, நம் வேள்விகளில் புரோகிதர்களாக {ரித்விக்குகளாக} நியமிக்கப்படும் மனிதர்களின் நடத்தையும், செயல்பாடுகளும் எவ்வாறு இருக்க வேண்டும்? ஓ! மன்னா {பீஷ்மரே}, அவர்கள் எப்படிப்பட்ட மனிதர்களாக இருக்க வேண்டும்? ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "{சாமவேதமான} சாமங்கள் உள்ளிட்ட சந்தங்களையும், சுருதிகளில் சொல்லப்பட்டுள்ள சடங்குகள் அனைத்தையும் அறிந்தோரும், மன்னனின் செழிப்புக்கு வழிவகுக்கும் அறச்செயல்கள் அனைத்தையும் செய்யத்தக்கவர்களுமான பிராமணர்களே புரோகிதர்களாக {ரித்விக்குகளாகத்} தகுந்தவர்கள் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(2) அவர்கள் அர்ப்பணிப்புடன் கூடிய மாறா பற்றுறுதியுடன் கூடியவர்களாகவும், மன்னர்களிடம் ஏற்படைய வகையில் பேசுபவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் நட்புடனும், அனைவரிடமும் சம பார்வையுடனும் இருக்க வேண்டும்.(3) அவர்கள் கொடூரமற்றவர்களாகவும், பேச்சில் உண்மை நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அநியாய வட்டிக்கு விடுபவர்களாக அவர்கள் ஒருபோதும் இருக்கக்கூடாது. அவர்கள் எப்போதும் எளிமையானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருக்க வேண்டும்.(4) அமைதி நிறைந்த தன்மை, போலித்தன்மையின்மை, அடக்கம், ஈகைத்தன்மை, தற்கட்டுப்பாடு, நிறைவுடைமை, புத்திக்கூர்மை, உண்மை, நோன்பு நோற்றல், அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழையாமை, காமம் மற்றும் தீய நோக்கம் இல்லாமை, மூன்று சிறந்த குணங்களுடைமை,(5) பொறாமையின்மை, அறிவுடைமை ஆகியவற்றைக் கொண்ட ஒருவன் பிரம்மனின் ஆசனத்திற்கே {பிரம்மனின் பதவிக்கே, அதாவது வேள்விகளின் ரித்விக்காகத்} தகுந்தவனாவான்" என்றார்.(6)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "வேள்விகளில் தக்ஷிணைக்கொடையைக் குறித்து வேத உரைகள் இருக்கின்றன. எனினும், எவ்வளவு கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து எந்த விதியும் இல்லை.(7) செல்வத்தைப் பிரித்துக் கொடுத்தல் தொடர்புடைய நோக்கங்களில் இருந்து (தக்ஷிணைக் கொடை) இவ்விதி பிறக்கவில்லை. கொடுக்க வேண்டிய விளைவால் எழுந்த இவ்விதியின் ஆணை திறனில்லாதவர்களின் வழக்குகளில் பயங்கரமானதாக இருக்கிறது. அந்த ஆணை வேள்வி செய்பவனின் தகுதியைக் காண்பதில்லை[1].(8) ஒரு மனிதன் அர்ப்பணிப்புடன் ஒரு வேள்வியைச் செய்ய வேண்டும் என்ற இந்தத் திறன்தேர்வானது {விதியானது} வேதங்களில் இருக்கிறது. ஆனால், வேள்வியானது பொய்மையினால் கறைபடியும்போது, அர்ப்பணிப்பினால் என்ன செய்ய முடியும்?"[2] என்று கேட்டான்.
[1] "இதம் சாஸ்த்ரம் பிரதிதானம் ந Idam caastram Pratidhanam na என்பது நீலகண்டரால் இவ்வாறே விளக்கப்படுகிறது. குறிப்பிட்ட தக்ஷிணையைக் கொடுக்கும் திறனில்லாதவர்களின் வழக்குகளில், வேள்வி செய்பவன் தான் கொண்டுள்ள அனைத்தையும் கொடுத்துவிட வேண்டும் என்று இருக்கிறது. ஒரு வேள்வியை நிறைவு செய்வதற்காகத் தன் செல்வமனைத்தையும் கொடுக்க எவனுக்கு மனம் வரும்? இந்த வழிகாட்டல், அல்லது ஆணையானது நிச்சயம் பயங்கரமானதே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மனிதர்களின் சக்தியைச் சிறிதும் கவனியாமல் வெளிவந்த இவ்வேத வசனத்தின் கட்டளையானது மிக்கக் கடுமையாக இருக்கிறது" என்றிருக்கிறது.[2] "உண்மையில் சொல்லப்பட்டுள்ள தக்ஷிணைகளுக்கு மாற்றைக் கண்டுபிடிப்பதில் பொய்மை இருக்கிறது. அவை உயிருடன் கூடிய ஒரு பசுவுக்குப் பதில் சமைத்த உணவு, துணிக்குப் பதில் தானியப் பருக்கை, தங்கத்திற்குப் பதில் தாமிர நாணயம் போன்றவையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "வேதங்களை அவமதிப்பதாலோ, வஞ்சகத்தாலோ, பொய்மையினாலோ எந்த மனிதனும் அருளையோ, தகுதியையோ {புண்ணியத்தையோ} அடைய முடியாது. இது மாறானது என்று ஒருபோதும் நினைக்காதே.(10) தக்ஷிணை என்பது வேள்வியின் ஓர் அங்கமாகும்; அது வேதங்களின் ஊட்டத்திற்கு வழிவகுக்கிறது. தக்ஷிணையில்லாத வேள்வியானது ஒருபோதும் முக்திக்கு வழிவகுக்காது.(11) எனினும், ஒரு பூர்ணபாத்திரத்தின்[3] உச்சவினையானது, எவ்வளவு செழிப்பான எந்தத் தக்ஷிணைக்கும் இணையானது[4]. எனவே, ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, மூன்று வகையைச் சேர்ந்தோரும் வேள்விகளைச் செய்ய வேண்டும்[5].(12) சோமமானது பிராமணர்களுக்கு மன்னனைப் போன்றது என்று வேதங்கள் தீர்மானிக்கின்றன. இருப்பினும் அவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்காக இல்லையென்றாலும், வேள்விகளைச் செய்வதற்காக அதை விற்கிறார்கள்.(13) நீதிமிக்க நடத்தை கொண்ட முனிவர்கள் அறநெறிகளின் விதிகளுக்கு ஏற்புடைய வகையில், சோமவிற்பனையின் மூலம் செய்யப்படும் வேள்வியானது, வேள்விகளை நீட்டிக்கவே உதவுகிறது என்று அறிவிக்கிறார்கள்[6].(14) மனிதன், வேள்வி, சோமம் ஆகிய இம்மூன்றும் நற்பண்புடன் இருக்க வேண்டும். தீய பண்பு கொண்ட மனிதன் இம்மைக்கானவனுமில்லை; மறுமைக்கானவனுமில்லை.(15) அதீத உடலுழைப்பால் ஈட்டப்பட்ட செல்வத்தைக் கொண்டு உயர் ஆன்ம பிராமணர்களால் செய்யப்படும் வேள்வியானது பெரும் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்குவதில்லை என்ற திறன்தேர்வையும் நாம் கேள்விப்படுகிறோம்[7].(16)
[3] 256 கைப்பிடி அரிசி {கைப்பிடி என்பது இரண்டு உள்ளங்கைகளும் நிறைந்த அளவாக இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் 256 Handfuls of rice என்றிருக்கிறது}.[4] கும்பகோணம் பதிப்பில், "பொருளில்லாத மனிதனுக்குப் பூர்ணபாத்திரமே குறைவின்றிப் போதுமான (ஆயிரத்திருநூறு பசுக்களுக்கு ஸமமான) தக்ஷிணையாகும்" என்றிருக்கிறது.[5] "வேள்வி செய்பவனால் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி தக்ஷிணை கொடுக்க இயலவில்லையென்றாலும், அதற்குப் பதிலாக ஒரு பூர்ணபாத்திரத்தை அர்ப்பணிப்புடன் கொடுப்பத்தே கூடச் செழிப்பான தக்ஷிணைக்கு இணையான பலனைக் கொடுக்கவல்லதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] அஃதாவது, அதுபோன்றதொரு வேள்வியில், அது {சோம விற்பனை} எந்தத் தகுதியும் உண்டாக்காமல் இருப்பதற்குப் பதில், வேள்விகளின் காரணத்தை நீட்டிக்கும் வழிமுறையாகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், அத்தகு வேள்வியானது தகுதி நிறைந்ததாகும் {புண்ணியம் நிறைந்ததாகும்}" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸோமம் பிராம்மணர்களுக்கு அரசென்று வேதம் சொல்கிறது. அதை ஜீவனத்திற்காகவன்றி விலை செய்து தர்மப்படி கிடைத்த பொருளால் செய்யப்படும் யாகமும் தர்மமேயாகுமென்று தர்மமறிந்த பெரியோர்கள் உபதேசிக்கிறார்கள்" என்றிருக்கிறது.[7] கும்பகோணம் பதிப்பில், "புருஷனும், யாகமும், ஸோமலதையும் நீதி தவறாமல் உபயோகப்பட்டால் பயன்படும். அவ்விதமின்றிக் கபடமுதலிய குற்றமுள்ள புருஷன் தன் சரீரத்தின் ஜீவனத்தைக் கருதி அக்னியிற் செய்த யாகங்கள், அந்தப் பிராம்மணன் மஹாத்மாவாயிருந்தாலும் அவனுக்கும் பிறருக்கும் நற்பயனைக் கொடுக்கத்தக்கவையல்லவென்பது வேதத்தினால் கூறப்படுகிறது." என்றிருக்கிறது. இந்த விளக்கமே சரியாகத் தெரிகிறது.
வேள்விகளை விடத் தவங்கள் உயர்வானவை என்று வேதங்களில் ஒரு தீர்மானம் இருக்கிறது. நான் இப்போது உனக்குத் தவங்களைக் குறித்துச் சொல்லப் போகிறேன். ஓ! கல்விமானான இளவரசனே {யுதிஷ்டிரனே}, நான் சொல்வதைக் கேட்பாயாக.(17) தீங்கிழையாமை, பேச்சில் உண்மை, நல்லுணர்வு, கருணை ஆகியவையே தவங்கள் எனவும், உடல் மெலிவது தவமல்ல எனவும் ஞானிகள் கருதுகின்றனர்.(18) வேதத்தை அவமதிப்பது, சாத்திரவிதிகளுக்குக் கீழ்ப்படியாமை, நலம்சார்ந்த கட்டுப்பாடுகளை மீறல், ஆகியவை தன்னழிவை உண்டாக்குபவை.(19) ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரா}, நாளின் பத்து வேளைகளில் நெருப்பில் பத்து ஆகுதிகளை ஊற்றுவோர் விதித்தவற்றைக் கேட்பாயாக. தவமெனும் வேள்வியைச் செய்வோருக்கு, அவர்கள் பிரம்மத் திறனுடன் முயலும் யோகமே கரண்டியாகும்; அவர்களது இதயமே தெளிந்த நெய்யாகும்; உயர்ந்த அறிவே பவித்ரமாகும்[8].(20) அனைத்துவகைக் கபடங்களும் மிருத்தியுவாகும், அனைத்து வகை உண்மையும் பிரம்மம் என்றழைக்கப்படுகிறது. இதுவே ஞானத்தை உள்ளடக்கியிருக்கிறது. அமைப்பைக் கட்டுபவர்களின் வீரகாவியங்கள் இதற்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது" என்றார் {பீஷ்மர்}[9].(21)
[8] "வேள்வி நெருப்பில் தெளிந்த நெய்யைத் தெளிக்கப் பயன்படுத்தப்படும் இரு குசப் புற்களால் {வெட்டி வேரால்} ஆனதே பவித்திரமாகும்" எனக் கங்குலி விளக்குங்கிறார்.[9] கும்பகோணம் பதிப்பில், "தசஹோத்ரு என்னும் மந்திரங்களின் விதி எங்ஙனமென்பதைக் கவனித்துப்பார், "ஞானம் ஸ்ருக்கு, புத்தி நெய்” என்று கூறும் இம்மந்திரங்கள் மிகவுத்தமமான ஆத்ம ஞானத்தைப் பரிசுத்தமென்று கூறுகின்றன. ஞானத்தைப் பற்றிய விஷயம் இவ்வளவே. கபடம் யாவும் மிருத்யுவுக்கு இடமாகும். உண்மையென்பது ப்ரம்மத்தின்பதமாகும். அதிகச் சொல்லால் என்ன பயன்?" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 79ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |