A Sudra too is competent to become a king! | Shanti-Parva-Section-78 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 78)
பதிவின் சுருக்கம் : ஆபத்துக் காலங்களில் பிராமணர்கள் செய்யக்கூடிய, செய்யகூடாத தொழில்கள்; மன்னன் பலவீனமடையும்போது, அவனுக்குப் பலத்தை அளிக்க வேண்டிய பிராமணனின் கடமை; மக்களைப் பாதுகாப்பதே முதல் கடமை, அதைச் சூத்திரன் செய்தாலும், அவன் மன்னனாகலாம் என்று யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஆபத்துக் காலங்களில் ஒரு பிராமணன் க்ஷத்திரியக் கடமைகளைப் பயின்று தன்னை ஆதரித்துக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும், எந்தக் காலத்திலாவது அவன் வைசியர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைப் பயில முடியுமா?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒரு பிராமணன் தன் வாழ்வாதாரத்தை இழந்து ஆபத்தில் வீழும்போது, க்ஷத்திரியக் கடமைகளுக்கு அவன் தகுந்தவனாக இல்லையென்றால், நிச்சயம் அவன் வைசியர்களின் நடைமுறைகளைப் பின்பற்றி, உழவு, கால்நடை வளர்த்தல் ஆகியவற்றின் மூலம் தன்னைத் தாங்கிக் கொள்ளலாம்" என்றார்.(2)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஒரு பிராமணன் வைசியக் கடமைகளைப் பின்பற்றி, சொர்க்கம் செல்லும் எதிர்பார்ப்பைத் தொலைக்காமல் அவன் என்னென்ன பொருட்களை விற்கலாம்?" என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, அனைத்துச் சூழ்நிலைகளிலும் ஒரு பிராமணன், மதுவகைகள், உப்பு, எள், பிடரி கொண்ட விலங்குகள், காளைகள், தேன், இறைச்சி மற்றும் சமைத்த உணவு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இவற்றை விற்பதால் ஒரு பிராமணன் நரகத்தில் மூழ்குவான்.(4,5) ஒரு பிராமணன் ஓர் ஆட்டை விற்பதனால், அவன் அக்னி தேவனை விற்ற பாவத்தை இழைத்தவனாகிறான்; குதிரையை விற்பதனால் சூரிய தேவனை விற்ற பாவத்தையும், சமைத்த உணவை விற்பதனால் நிலத்தை விற்ற பாவத்தையும், ஒரு பசுவை விற்பதனால் வேள்வி மற்றும் சோமச்சாற்றை விற்ற பாவத்தையும் இழைத்தவனாகிறான்.(6) சமைத்த உணவை மற்றாகக் கொடுத்து, சமைக்கப்படாத உணவை வாங்குவதை நல்லோர் மெச்சுவதில்லை. எனினும், ஓ! பாரதா, சமைத்த உணவை அடைவதற்காகச் சமைக்கப்படாத உணவை மாற்றாகக் கொடுக்கலாம்.(7) "சமைக்கப்பட்ட உன் உணவை நாங்கள் உண்கிறோம். (நாங்கள் மாற்றாகக் கொடுக்கும்) இந்தக் கச்சாப் பொருட்களை நீ சமைப்பாயாக" என்ற ஒப்பந்தத்தில் எந்தப் பாவமுமில்லை[1].(8) ஓ! யுதிஷ்டிரா, பழங்காலத்திலிருந்து அங்கீகரிக்கப்பட்ட பழக்கவழக்கங்களின்படி நடந்து கொள்ளும் மனிதர்களின் நித்திய நடைமுறைகளைக் குறித்துச் சொல்கிறேன், கேட்பாயாக.(9) "இதை நான் உனக்குக் கொடுக்கிறேன். பதிலுக்கு இந்தப் பொருளை எனக்குக் கொடுப்பாயாக" என்ற இத்தகு ஒப்பந்தத்தின் மூலம் பரிமாற்றம் செய்து கொள்வது நீதியே. எனினும் பலவந்தமாகப் பொருட்களை எடுத்துக் கொள்வது பாவம் நிறைந்ததாகும்.(10) இதுவே முனிவர்கள் மற்றும் பிறரின் பழங்காலப் பழக்கவழக்கமாகும். இது நீதியே என்பதில் ஐயமில்லை" என்றார் {பீஷ்மர்}.(11)
[1] கும்பகோணம் பதிப்பில், "பக்குவமான அன்னத்தைக் கொடுத்து அதற்கு ஈடாக அரிசியை மாற்றிக் கொள்வது நீதியன்றென்று ஸாதுக்கள் சொல்கிறார்கள். ஓ பாரத, "போஜனத்திற்கு வேண்டிப் பக்குவமான அன்னத்தை நாங்கள் புஜிக்கிறோம். இந்த அரிசியை நீங்கள் பாகஞ்செய்து கொள்ளுங்கள்" என்று ஒருவருக்கொருவர் ஸம்மதஞ்செய்து கொண்டு அரிசிக்கு ஈடாகப் பக்குவான்னத்தை மாற்றிக் கொள்வதில் சற்றும் அதர்மமில்லை" என்றிருக்கிறது.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! ஐயா, அனைத்து வகையினரும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளைக் கைவிட்டு, மன்னனுக்கு எதிராக ஆயுதம் எடுப்பார்களேயானால், மன்னனின் சக்தி குறைவை அடையும்.(12) அப்போது அம்மன்னனால் எந்த வழிமுறைகளின் மூலம் மக்களின் பாதுகாவலனாகவும், புகலிடமாகவும் ஆக முடியும்? ஓ! மன்னா, என்னிடம் விரிவாகப் பேசி இந்த என் ஐயத்தைத் தீர்ப்பீராக" என்று கேட்டான்.(13)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அத்தகு சந்தர்ப்பங்களில், பிராமணர்களின் தலைமையிலான அனைத்து வகையினரும் கொடைகள், தவங்கள், வேள்விகள், அமைதி, தற்கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் தங்கள் நன்மையை நாட வேண்டும்.(14) அவர்களில் வேத பலம் கொண்டோர் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் எழுந்து, இந்திரனுக்குப் பலமூட்டும் தேவர்களைப் போல, மன்னனின் பலத்தை (வேத சடங்குகளின் மூலம்) மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புக் கொள்ள வேண்டும்.(15) மன்னனின் சக்தி சிதைவுறும்போது பிராமணர்களே அவனது புகலிடமாகச் சொல்லப்படுகிறார்கள். ஞானம் கொண்ட மன்னன், பிராமண சக்தியின் மூலமே தன் சக்தியை மேம்படுத்த முனைய வேண்டும்.(16) வெற்றிமகுடம் சூடிய மன்னன், அமைதியை நிலைநிறுத்த முனையும்போது, அனைத்து வகையினரும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளைச் செய்ய வேண்டும்.(17) கள்வர்கள் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் உடைத்து, எங்கும் அழிவைப் பரப்பும்போது, அனைத்து வகையினரும் ஆயுதம் எடுக்க வேண்டும். ஓ! யுதிஷ்டிரா, அவ்வாறு செய்வதால் அவர்கள் எந்தப் பாவத்தையும் இழைப்பதில்லை" என்றார்.(18)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "க்ஷத்திரியர்கள் அனைவரும் பிராமணர்களுக்குப் பகைவர்களானால், அப்போது பிராமணர்களையும், வேதங்களையும் எவன் பாதுகாக்க வேண்டும்? அப்போது பிராமணர்களின் கடமையென்ன? எவன் அவர்களுடைய புகலிடமாக இருப்பான்?" என்று கேட்டான்.(19)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தவங்கள், பிரம்மச்சரியம், ஆயுதங்கள், (உடல்) வலிமை ஆகியவற்றின் மூலம், வஞ்சகத்தின் உதவியுடனோ, இல்லாமலோ க்ஷத்திரியர்கள் அடக்கப்பட வேண்டும். க்ஷத்திரியன் தவறாக நடந்து கொண்டால், அதிலும் குறிப்பாகப் பிராமணர்களிடம் தவறாக நடந்து கொண்டால், வேதங்களே அவர்களை அடக்கும். க்ஷத்திரியர்கள் பிராமணர்களிடம் இருந்து உதித்தவர்களே ஆவர்.(21) நெருப்பு நீரிலிருந்து உதிக்கிறது; க்ஷத்திரியன் பிராமணனிலிருந்தும்; இரும்பு கல்லில் இருந்தும் உண்டாகின்றன. ஆனால் இவை தங்கள் பிறப்பின் மூலத்தோடு தொடர்படுகையில் தணிவையடைகின்றன.(22) இரும்பு கல்லைத் தாக்கும்போது, அல்லது நெருப்பு நீருடன் மோதும்போது, அல்லது க்ஷத்திரியன் பிராமணனிடம் பகைமைபாராட்டும்போது, இந்த மூன்றின் பலமும் அழிவடைகிறது.(23) ஓ! யுதிஷ்டிரா, இவ்வாறு சக்தியும், வலிமையும் என்னதான் பெரியனவாகவும், தடுக்கப்பட முடியாதனவாகவும் இருப்பினும், க்ஷத்திரியர்கள் பிராமணர்களுக்கு எதிராகத் திருப்பப்படும்போது தணிவடைகின்றனர்.(24)
பிராமணர்களின் சக்தி மென்மையடையும்போதும், க்ஷத்திரிய சக்தி பலவீனமடையும்போதும், மனிதர்கள் அனைவரும் பிராமணர்களிடம் தவறாக நடந்து கொள்ளும்போதும்,(25) பிராமணர்களையும், அறநெறியையும், தங்களையும் காப்பாற்றிக் கொள்ளப் பெரும் மனோ பலத்துடன், நீதியின் பாதையில் செல்ல விரும்பும் எவர்கள், மரணம் குறித்த அச்சமனைத்தையும் விடுகிறார்களோ, அவர்கள் மறுமையில் உயர்ந்த அருள் உலகங்களை வெல்வார்கள். பிராமணர்களின் நிமித்தமான அனைத்து மனிதர்களும் ஆயுதமெடுக்க வேண்டும்.(26,27) துணிவுமிக்க எவர்கள் பிராமணர்களுக்காகப் போராடுகிறார்களோ, அவர்கள், வேதங்களை எப்போதும் கவனமாகக் கற்றவர்கள், கடுந்தவங்களைச் செய்தவர்கள், நோன்பிருந்து தங்கள் உடல்களைச் சுடர்மிக்க நெருப்பில் விட்டவர்கள் ஆகியோருக்காகச் சொர்க்கத்தில் ஒதுக்கப்பட்ட புகழுலகங்களை அடைவார்கள்.(28) மற்ற மூன்று வகையினருக்காக ஆயுதம் ஏந்தும் பிராமணன் பாவமிழைத்தவனாக மாட்டான். அத்தகு சூழ்நிலையில் உயிரை விடுவதை விட உயர்ந்த கடமையேதும் இல்லை என்று மக்கள் சொல்கின்றனர்.(29)
பிராமணர்களின் எதிரிகளைத் தண்டிக்க முயன்று, இவ்வாறு தங்கள் உயிரை விடுபவர்கள் அருளப்பட்டிருப்பாராக. நான் அவர்களை வணங்குகிறேன். அவர்களுக்கான உலகத்தை நாம் அடைவோமாக. அந்த வீரர்கள் பிரம்ம லோகத்தை அடைவார்கள் என்று மனுவே சொல்கிறார்.(30) குதிரை வேள்வியில் இறுதி நீராடலைச் செய்து தங்கள் பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடையும் மனிதர்களைப் போலவே, தீய மனிதரோடு போராடுகையில் ஆயுத முனைகளில் இறப்பவர்களும் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடைகிறார்கள்.(31) இடத்திற்கும், காலத்திற்கும் தக்கபடி, நீதி அநீதியாகவும், அநீதி நீதியாகவும் மாறுகின்றன. (மனித செயல்பாட்டின் தன்மைகளைத் தீர்மானிப்பதில்) இடத்திற்கும், காலத்திற்கும் இத்தகு சக்தி இருக்கிறது.(32) மனிதநேயத்திற்கு நட்பாக இருப்பவர்கள், கொடூரச் செயல்களைச் செய்திருந்தாலும் உயர்ந்த சொர்க்கத்தை அடைந்திருக்கிறார்கள். நீதிமிக்க க்ஷத்திரியர்கள், பாவம் நிறைந்த செயல்களைச் செய்தாலும் அருளப்பட்ட முடிவுகளை அடைந்திருக்கிறார்கள்[2].(33) தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, பிற வகையினரை அவர்களது கடமைகளைச் செய்ய வைக்க, கள்வர்களைத் தண்டிக்க என்ற இந்த மூன்று சந்தர்ப்பங்களில் ஆயுதங்களை எடுப்பதால் ஒரு பிராமணன் எந்தப் பாவத்தையும் இழைப்பதில்லை" என்றார் {பீஷ்மர்}.(34)
[2] "பாம்பு வேள்வியையும், ராட்சச வேள்வியையும் செய்திருந்தாலும், உதங்கர் மற்றும் பராசரர் போன்ற மனிதர்கள் சொர்க்கத்தை அடையாமலில்லை. அதே போலத் தங்கள் எதிரி நாடுகளின் மீது படையெடுத்து ஆயிரக்கணக்கான மனிதர்களையும், விலங்குகளையும் கொல்லும் க்ஷத்திரிய மன்னர்கள் நீதிமிக்கவர்களாகக் கருதப்பட்டு, இறுதியாகச் சொர்க்கத்தை அடைகின்றனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "கள்வர்கள் தலைதூக்கி, குழப்பத்தின் விளைவால் வகை {வர்ணக்} கலப்பு தொடங்கி, க்ஷத்திரியர்களும் பலவீனமடைந்திருந்தால், ஒரு க்ஷத்திரியனைத் தவிர வேறு ஒரு பலமிக்க மனிதன், மக்களைக் காப்பதற்காக அந்தக் கள்வர்களை அடக்க முனைந்தால்[3],(35) ஓ! மன்னர்களில் சிறந்தவரே {பீஷ்மரே}, உண்மையில் அந்தப் பலமிக்க மனிதன், பிராமணனாகவோ, வைசியனாகவோ, சூத்திரனாகவோ இருந்தால், மேலும் அவன் நீதியுடன் செங்கோல் தரித்து மக்களைப் பாதுகாப்பதில் வென்றால், அவனது செயல் நியாயமானதாகக் கொள்ளப்படுமா? அல்லது, அந்தக் கடமையை நிறைவேற்றியதற்காக விதிமுறைகளால் அவன் அடக்கப்படுவானா? க்ஷத்திரியர்கள் இழிவடையும்போது, பிற வகையினர் ஆயுதமெடுக்க வேண்டும் என்றே {எனக்குத்} தோன்றுகிறது" என்று சொன்னான்[4].(37)
[3] "இங்கே சொல்லப்படும் க்ஷத்திரர்தே Kshatrarthe என்பதன் பொருள் குடிமக்களைப் பாதுகாப்பதாகும், அந்நியன் Anya என்பவன் க்ஷத்திரியனல்லதாவன், அபிபாவேத் Abhibhavet என்பது "அடக்குவது" என்ற பொருளைக் கொண்டதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] கும்பகோணம் பதிப்பில், "ராஜஸ்ரேஷ்டரே, பலமான திருட்டுப் பயமும், ஜாதிகளுக்குக் கலப்பும் உண்டாகும்பொழுது பிரஜைகளை ரக்ஷிக்கும் விஷயத்தில் எல்லா ஜாதிகளும் மிகவும் மூடமாயிருக்கும்பொழுதும், க்ஷத்திரியனல்லாத பலசாலியான பிராம்மணனாவது, வைசியனாவது, சூத்திரனாவது திருடர்களை அடக்கித் தர்மப்படி தண்டஞ்செலுத்தி ப்ரஜைகளை ரக்ஷிப்பனாகில் அவன் ராஜகாரியத்தைச் செய்யத்தக்கவனாவானா? ஆகானா? அவன் உலகங்களுக்கு எஜமானனாயிருக்கத்தக்கவனா? அல்லனா? க்ஷத்திரியனல்லாதவன் ஆயுதமெடுப்பது கூடாதா?" என்றிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அவன் சூத்திரனாகவோ, வேறு வகையைச் சார்ந்தவனாகவோ இருப்பினும், தெப்பமில்லா ஓடையில் தெப்பமாகவும், கடப்பதற்கு எந்த வழிமுறையும் இல்லாத இடத்தில் கடக்கும் வழிமுறையாகவும் உள்ள அவன், நிச்சயம் அனைத்து வழியிலும் மதிக்கப்படத் தகுந்தவனே.(38) ஓ! மன்னா, ஆதரவற்ற மனிதனும், ஒடுக்கப்பட்டவனும், கள்வர்களால் பீடிக்கப்பட்டவனும் எவனை நம்பி மகிழ்ச்சியாக வாழ்கிறார்களோ, அந்த மனிதன், ஒரு சொந்தக்காரனைப் போலவே அனைவராலும் அன்புடன் வழிபடத்தகுந்தவனாவான். ஓ! குருகுலத்தவனே, பிறரின் அச்சத்தை விலக்குபவன் எவனோ, அவன் எப்போதும் மதிப்புக்குத் தகுந்தவனே ஆவான்.(39,40) சுமைகளைத் தாங்காத காளைகள், அல்லது, பால் கறக்காத பசுக்கள், அல்லது வெறுமையாய் {மலடாய்} இருக்கும் மனைவி ஆகியவற்றால் யாது பயன்? அதே போலவே, பாதுகாப்பை வழங்க முடியாத ஒரு மன்னனால் யாது பயன்?(41) வேத அறிவில்லா பிராமணனும், பாதுகாப்பை வழங்க முடியாத மன்னனும், மரத்தால் செய்யப்பட்ட யானையையோ, தோலால் செய்யப்பட்ட மானையோ, செல்வமற்ற மனிதனையோ, அலியையோ, களர் நிலத்தையோ போன்றவர்களே. அவர்கள் இருவரும் மழைபொழியா மேகத்தைப் போன்றவர்களே.(42,43) எப்போதும் நல்லோரைப் பாதுகாத்து, தீயோரை அடக்கும் எந்த மனிதனும், மன்னனாகவும், உலகை ஆளவும் தகுந்தவனே" என்றார் {பீஷ்மர்}.(44)
சாந்திபர்வம் பகுதி – 78ல் உள்ள சுலோகங்கள் : 44
ஆங்கிலத்தில் | In English |