Jaratkaru married she serpent! | Adi Parva - Section 15 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 3)
பதிவின் சுருக்கம் : பாம்புகளின் தாய் கத்ரு அளித்த சாபத்தில் இருந்து விடுபடவே வாசுகி தனது தங்கையை ஜரத்காருவுக்குத் திருமணம் செய்து கொடுத்தான் எனச் சௌதி சொல்லும் பீடிகை; ஆஸ்திகரின் வரலாறு சுருக்கமாக...
பாம்பு வேள்வி |
சௌதி சொன்னார், "பிரம்மத்தை அறிந்த மனிதர்களில் முதன்மையானவர்களே, முன்பொரு சமயம் பாம்புகளின் தாய் {கத்ரு}, "காற்றைத் தேரோட்டியாகக் கொண்டவன் (அக்னி), ஜனமேஜயன் வேள்வியில் உங்களைச் சுட்டெரிப்பான்" என அந்தப் பாம்புகளைச் சபித்தாள்.(1) அந்தச் சாபத்தைச் சமன்செய்யவே {சாபத்தின் கொடுமையைத் தணிக்கவே} அந்தப் பாம்புகளின் தலைவன் {வாசுகி}, உயர்ந்த நோன்புகளை நோற்ற அந்த உயரான்ம முனிவருக்குத் {ஜரத்காருக்குத்} தனது தங்கையைக் {ஜரத்காருவை மணமுடித்து} கொடுத்தான்.(2) அந்த முனிவரும் {ஜரத்காருவும்} (சாத்திரங்களில்) சொல்லப்பட்டிருக்கும் முறையான சடங்குகளுடன் அவளை மணமுடித்தார். அவர்களுக்கு மகனாக உயரான்ம ஆஸ்தீகர் பிறந்தார்.(3) வேதங்களிலும் அதன் கிளைகளிலும் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்த அந்தப் புகழ்பெற்ற முனிவர் {ஆஸ்தீகர்} அனைத்திலும் சமமான கண்ணோட்டம் கொண்டவராக, தனது பெற்றோர் இருவரின் அச்சத்தையும் போக்கினார்.(4)
வெகு காலத்திற்குப் பிறகு, பாண்டவ வழியில் வந்த ஒரு மன்னன் {ஜனமேஜயன்} ஒரு பெரிய வேள்வியை நடத்தினான்.(5) அந்த {நாக} வேள்வி பாம்புகளின் அழிவிற்காக நடத்தப்பட்ட போது ஆஸ்தீகர், தனது சகோதரர்களும், தாய்வழி மாமன்களுமான அந்தப் பாம்புகளையும் மற்ற பாம்புகளையும் (நெருப்பு மரணத்திலிருந்து) காப்பாற்றினார். {ஜரத்காரு} தான் பிள்ளைப்பேறு பெற்றதால் அவரது மூதாதையர்களையும் விடுவித்தார்.(6,7) ஓ பிராமணரே {சௌனகரே}, {ஜரத்காரு} தனது கடுமையான விரதங்களாலும், தவத்தாலும், ஆழ்ந்த வேத கல்வியினாலும், தனது கடன்கள் அனைத்திலுமிருந்து விடுபட்டார். வேள்விகளால் தேவர்களை மனநிறைவு கொள்ளச் செய்து, பிரம்மச்சரியத்தால் முனிவர்களை மனநிறைவு கொள்ளச் செய்து, பிள்ளைப்பேறு பெற்றதால் தனது மூதாதையர்களையும் {யாயாவரர்களையும்} மனநிறைவு கொள்ளச் செய்தார்.(8,9)
இப்படியாகக் கடுமையான நோன்புகளை நோற்றவரான ஜரத்காரு, தனது மூதாதையர்களின் {யாயாவரர்களின்} தளையை விடுவித்து அவர்களுக்குத் தான் பட்டிருந்த பெருங்கடனைத் தீர்த்தார்.(10) இப்படிச் சிறந்த அறத்தைப் புரிந்த ஜரத்காரு, தனது மைந்தன் ஆஸ்தீகரை {சந்ததிக்காக} விட்டு பல வருடங்கள் கழித்து மேலுலகம் சென்றார். இதுவே ஆஸ்திகரின் கதை [1]; நான் உள்ளபடியே சொல்லிவிட்டேன். ஓ பிருகு குலத்தின் புலியே {சௌனகரே}, இன்னும் வேறு என்ன நான் சொல்ல வேண்டும்" {என்றார் சௌதி}.(11)
[1] ஜரத்காருவின் கதை இங்கே {ஆதிபர்வத்தின் பகுதிகள் 13 முதல் 15 வரை} சுருக்கமாகச் சொல்லப்பட்டிருந்தாலும், ஆதிபர்வத்தின் பகுதிகள் 45 முதல் 48 வரை விரிவாக மீண்டும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆங்கிலத்தில் | In English |