The wrath of Janamejaya! | Adi Parva - Section 50 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 38)
பதிவின் சுருக்கம் : அமைச்சர்கள் நடந்ததைக் கூறினர்; தக்ஷகன் கசியபர் உரையாடல் தெரிந்த விதம்; தக்ஷகனைப் பழிதீர்க்க முடிவு செய்த ஜனமேஜயன் ...
சௌதி தொடர்ந்தார், "அமைச்சர்கள் சொன்னார்கள், "அந்த மன்னர் மன்னன் {பரீக்ஷித்}, பசியாலும், முயற்சியாலும் களைத்துப் போய், அந்த முனிவரின் {சமீகரின்} தோள்களில் பாம்பைக் கிடத்திவிட்டு தனது தலைநகருக்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} திரும்பி வந்துவிட்டான்.(1) அந்த முனிவருக்குப் {முனிவர் சமீகருக்கு}, பசுவிடம் பிறந்த ஒரு பிள்ளை இருந்தான். அவன் பெயர் சிருங்கி. அவன் {சிருங்கி} தனது பெரும் வீரம், சக்தி மற்றும் பெரும் கோபத்துக்காகப் பெரிதும் அறியப்பட்டு இருந்தான்.(2) (தினமும்) தனது குருவிடம்[1] சென்று, அவரை வழிபட்டு வரும் வழக்கம் அவனிடம் {சிருங்கியிடம்} இருந்தது. அந்தக் குருவின் உத்தரவின் பேரில் சிருங்கி தனது வீட்டுக்குத் திரும்பி வருகையில்,(3) தனது நண்பனின் மூலம், உன் தந்தையினால் அவன் தந்தைக்கு நேர்ந்த அவமானத்தைக் கேட்டறிந்தான். ஓ மன்னர்களில் புலியே {ஜனமேஜயனே}, தன் தந்தை {முனிவர் சமீகர்} எக்குற்றமும் செய்யாதிருப்பினும், உயிரற்ற பாம்பைச் சுமந்து ஒரு சிலையைப் போல அசைவற்றவராக அமர்ந்திருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டான்.(4,5)
ஓ மன்னா {ஜனமேஜயா}, உனது தந்தையால் {பரீக்ஷித்தால்} அவமதிக்கப்பட்ட அந்த முனிவர் {சமீகர்} கடும் தவங்களை நோற்பவர். முனிவர்களில் முதன்மையானவர். தனது உணர்ச்சிகளை அடக்கி வாழ்பவர். சுத்தமானவர். அற்புதமான செயல்கள் செய்து கொண்டிருப்பவர். தவத் துறவுகளால் அவரது {முனிவர் சமீகரது} ஆன்மா ஞானஒளி பெற்றிருந்தது. அவரது உறுப்புகளும், அதன் செயல்களும் அவரது முழுக் கட்டுப்பாட்டிற்குள் இருந்தன. அவரது செயல்களும், பேச்சும் எப்போதும் அருமையாகவே இருக்கும். அவர் {முனிவர் சமீகர்} பேராசைகள் அற்று மனநிறைவுடன் இருந்தார். அவர் பொறாமையற்றும், எந்த விதத்திலும் கருமித்தனமற்றும் இருந்தார். அவர் அனைத்து உயிர்களுக்கும் அதன் துயரங்களில் அடைக்கலம் கொடுப்பவர். அந்த முதிர்ந்தவர் மௌன விரதம் இருப்பது வழக்கம். உனது தந்தையால் {பரீக்ஷித்தால்} அவமதிக்கப்பட்ட அந்த முனிவர் {சமீகர்} அப்படிப்பட்டவர். அந்த முனிவரின் மகன் {சிருங்கி} பெரும் கோபம் கொண்டு உனது தந்தையை {பரீக்ஷித்தைச்} சபித்தான்.(6-8) வயதில் இளையவனாக இருந்தாலும், அந்தச் சக்திவாய்ந்தவன் தவ மகிமையில் முதிர்ந்தவனாக இருந்தான். அவன் {சிருங்கி} கோபம் கொண்டு வேகமாக நீரைத் தொட்டு, தவசக்தியினால் ஒளிர்ந்து கொண்டு உன் தந்தையைக் குறித்து இந்த வார்த்தைகளை உதிர்த்தான்.(9) அவன், "எனது ஆன்மீக பலத்தைப் {தவத்தின் சக்தியைப்} பார்! எனது இந்த வார்த்தைகளால் தூண்டப்பட்டுப் பலமான சக்தியும், கொடிய விஷமும் கொண்ட தக்ஷகன் {பாம்பு}, எந்தத் தவறும் செய்யாத என் தந்தை {முனிவர் சமீகர்} மீது இந்தப் பாம்பைக் கிடத்திய தீயவனை, இன்னும் ஏழு இரவுகளுக்குள் தன் விஷத்தால் எரிப்பான்" என்று {சிருங்கி} சபித்துவிட்டு, தனது தந்தை {முனிவர் சமீகர்} எங்கிருந்தாரோ அங்குச் சென்றான்.(10-12)
அவனது தந்தையைச் சந்தித்து, தனது சாபத்தைப் பற்றிச் சொன்னான். அந்த முனிவர்களில் புலியானவர் {முனிவர் சமீகர்}, இனிமையான குணமும், அனைத்து அறங்களும் கொண்டவனும், இனிமையானவனுமான தனது சீடன் கௌர்முகனை உனது தந்தையிடம் {பரீக்ஷித்திடம்} அனுப்பினார். அவன் {சமீகரின் சீடன் கௌர்முகன்} (சபைக்கு வந்த பிறகு) வந்து சிறிது ஓய்வெடுத்த பின், மன்னனிடம் {பரீக்ஷித்திடம்} அனைத்தையும் தன் குருவின் {சமீகர்} வார்த்தைகளிலேயே தெரிவித்தான்.(13,14) "எனது மகனால் {சிருங்கியால்} நீ சபிக்கப்பட்டிருக்கிறாய், ஓ மன்னா, தக்ஷகன் {பாம்பு} தனது விஷத்தால் உன்னை எரிக்கப்போகிறான். ஓ மன்னா, கவனமாக இருப்பாயாக" {என்றான் கௌர்முகன்}.(15) ஓ ஜனமேஜயா, அந்தப் பயங்கரமான வார்த்தைகளைக் கேட்ட உனது தந்தை {பரீக்ஷித்} பலம்வாய்ந்த தக்ஷகனுக்கு எதிராக அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டான்.(16)
ஏழாவது நாள் வந்த போது, கசியபர் என்ற பிராமண முனிவர், ஏகாதிபதியை {பரீக்ஷித்தைச்} சந்திக்க விருப்பம் கொண்டார்.(17) ஆனால் அந்தப் பாம்பு தக்ஷகன், கசியபரைச் சந்தித்தான்.. அந்தப் பாம்புகளின் இளவரசன் {தக்ஷகன்} கசியபரிடம் நேரத்தைக் கடத்தாமல் பேசினான். "எங்கே இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்? எக்காரியத்திற்காக நீர் போகிறீர்?" என்று கேட்டான்.(18) கசியபர், "ஓ பிராமணரே, நான் குரு பரம்பரையின் சிறந்த மன்னன் பரீக்ஷித் எங்கிருக்கிறானோ அங்குச் செல்கிறேன். அவன் தக்ஷகனின் விஷத்தால் இன்று எரியப் போகிறான்.(19) அவனைக் குணப்படுத்தவே நான் விரைவாகச் செல்கிறேன். உண்மையில் என்னால் பாதுகாக்கப்படும் போது அந்தப் பாம்பால் அவனைக் {பரீக்ஷித்தைக்} கடித்துக் கொல்ல முடியாது" என்றார்.(20)
தக்ஷகன், "நானே தக்ஷகன். என்னால் கடிபட இருக்கும் அந்த மன்னனை எதற்காகக் காக்கப் போகிறீர்? ஓ பிராமணரே {கசியபரே}, என்னால் கடிக்கப்படும் அந்த ஏகாதிபதியை {பரீக்ஷித்தை} பிழைக்க வைக்க உம்மால் ஆகாது. எனது விஷத்தின் அற்புத பலத்தைப் பாரும்" என்று சொல்லி, அங்கே இருந்த கானக மன்னனைக் (ஆல மரத்தைக்) கடித்தான்.(21-22) அந்த ஆலமரம் பாம்பால் {தக்ஷகனால்} கடிபட்ட உடன் சாம்பலாக ஆனது. ஆனால் ஓ மன்னா {ஜனமேஜயா}, கசியபர் அதை உயிர்ப்பித்தார்.(23) அப்போது தக்ஷகன், "உமது விருப்பத்தைச் சொல்லும்" என்று கேட்டு அவரது {ஆசையைத்} தூண்டினான். இப்படிக் கேட்கப்பட்ட கசியபரும் தக்ஷகனிடம்,(24) "செல்வத்தில் விருப்பம் கொண்டே நான் அங்குச் செல்கிறேன்" என்றார். அந்த உயர்ஆன்ம கசியபரிடம் தக்ஷகன் மென்மையான வார்த்தைகளால்,(25) "ஓ பாவமற்றவரே {கசியபரே}, நீர் அந்த ஏகாதிபதியிடம் {பரீக்ஷித்திடம்} இருந்து எதிர்பார்த்ததை விட அதிகச் செல்வத்தை என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டு, வந்த வழியே திரும்பிச் செல்லும்" என்றான் {தக்ஷகன்}.(26) இதைக் கேட்ட, அந்த மனிதர்களில் முதன்மையான கசியபர், அவனிடமிருந்து தான் விரும்பிய அளவு செல்வத்தைப் பெற்றுக் கொண்டு, தான் வந்த வழியே சென்றார்.(27)
கசியபர் திரும்பிச் சென்றதும், தக்ஷகன் மாற்றுருவம் கொண்டு, தனது மாளிகையில் மிகுந்த எச்சரிக்கையுடன் தங்கியிருந்த, மன்னர்களில் முதன்மையானவனும், அறவழி நடப்பவனுமான உனது தந்தையின் {பரீக்ஷித்தின்} மேல் தனது விஷ நெருப்பைச் செலுத்தினான். அதன் பிறகு ஓ மனிதர்களில் புலியே {ஜனமேஜயனே}, நீ (அரியணையில்) அமர்த்தப்பட்டாய்.(28,29) ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, கொடூரமானதாக இருந்தாலும், நாங்கள் கண்டதையும், கேட்டதையும் முழுவிவரத்தையும் உரைத்துவிட்டோம்.(30 மன்னனான உனது தந்தையின் {பரீக்ஷித்தின்} கவலையையும், உதங்க முனிவரின் அவமதிப்பையும் முழுவதும் கேட்டு, செய்யவேண்டியதை நீயே தேர்வு செய்து கொள்வாயாக" என்றனர்."(31)
சௌதி தொடர்ந்தார், "எதிரிகளை அடக்கும் மன்னன் ஜனமேஜயன், தனது அமைச்சர்கள் அனைவருடன் பேசினான்.(32) அவன், "ஆலமரம், தக்ஷகனால் சாம்பலானதையும், அது பிறகு அற்புதமான முறையில் கசியபரால் உயிர்ப்பிக்கப்பட்டதையும் எப்போது நீங்கள் அறிந்தீர்கள்? எனது தந்தை {பரீக்ஷித்} தக்ஷகன் தீண்டி இறந்திருந்தாலும், கசியபரின் மந்திரங்களால் அவரை நிச்சயம் பிழைக்க வைத்திருக்க முடியும்.(33,34) அந்தப் பாம்புகளில் இழிந்தவன் {தக்ஷகன்}, அந்தப் பாவ ஆன்மா, தன்னால் கடிபட்ட மன்னன், கசியபரால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தால் தன் விஷம் செயலிழக்க வைக்கப்பட்டதைக் குறித்து உலகம் தன்னைக் கேலி செய்து எள்ளி நகையாடும் என்று தன் மனதில் எண்ணியிருக்கிறான். நிச்சயமாக அந்த எண்ணம் இருந்ததால்தான், அவன் {தக்ஷகன்} கசியபரை சமாதானப் படுத்தியிருக்கிறான்.(35,36) அவனைத் {தக்ஷகனைத்} தண்டிக்க நான் ஒரு வழியைத் திட்டமிட்டிருக்கிறேன். அந்தக் கானகத்தில் தனிமையில் தக்ஷகனும் கசியபரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதை நீங்கள் பார்த்தபடியே அல்லது கேட்டபடியே எனக்குச் சொல்லுங்கள். அதை அறிந்த பிறகு, பாம்பினத்தையே ஒழிக்க ஒரு திட்டம் செய்கிறேன்" என்றான் {ஜனமேஜயன்}.(37,38)
அமைச்சர்கள், "ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, அந்த பிராமணர்களில் முதன்மையானவரும் {கசியபரும்}, பாம்புகளின் இளவரசனும் கானகத்தில் சந்தித்துக் கொண்டதைப் பற்றி முன்பு எங்களுக்குக் கூறியவனைப் பற்றிக் கேட்பாயாக.(39) ஓ ஏகாதிபதியே, {அந்த ஆலமரத்தின்} காய்ந்த கிளைகளை உடைத்து, அவற்றை வேள்விக்கான விறகாக்கும் எண்ணத்துடன் ஒரு மனிதன் அம்மரத்தின் மேல் ஏறியிருந்தான்.(40)
அவன் அந்தப் பாம்பாலோ {தக்ஷகனாலோ} அல்லது அந்த பிராமணராலோ கவனிக்கப்படவில்லை. ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த மனிதனும் அந்த மரத்தோடு சாம்பலானான்.(41) ஓ மன்னர்மன்னா, அந்த மரம் பிராமணரின் {கசியபரின்} சக்தியால் உயிர்மீட்கப்பட்ட போது, உடன் சேர்ந்து இவனும் மீண்டான். ஒரு பிராமணரின் வேலைக்காரனான அவன், எங்களிடம் வந்து,(42) தக்ஷகனுக்கும், பிராமணருக்கும் {கசியபருக்கும்} இடையில் நடந்த உரையாடலை முழுமையாகச் சொன்னான். ஓ மன்னா {ஜனமேஜயா} நாங்கள் பார்த்தவாறும், கேட்டவாறும் அனைத்தையும் இப்போது சொல்லிவிட்டோம். இதைக் கேட்ட நீ, ஓ மன்னர்களில் புலியே {ஜனமேஜயனே}, என்ன நடக்க வேண்டும் என்று உத்தரவிடுவாயாக" என்றனர் {அமைச்சர்கள்}."(43)
சௌதி தொடர்ந்தார், "மன்னன் ஜனமேஜயன், தனது அமைச்சர்களின் வார்த்தைகளைக் கேட்டதும் மிகுந்த துயர் கொண்டு அழத் தொடங்கினான். அந்த ஏகாதிபதி தனது கைகளைப் பிசைந்தான்.(44) அந்தத் தாமரைக் கண்கொண்ட மன்னன் {ஜனமேஜயன்} பெரும் சூடான நெடும் மூச்சுகளை விட்டபடியே, கண்களில் நீர்ச் சிந்தி, உரக்கக் கதறினான்.(45) மிகுந்த துக்கம் கொண்டு, சாரை சாரையாகக் கண்ணீர் சிந்தி, நீரைத் தொட்ட அந்த ஏகாதிபதி {ஜனமேஜயன்}, மனத்தில் ஏதோ திட்டம் போடுபவனைப் போலச் சிறிது நேரம் சிந்தித்து விட்டு தனது அமைச்சர்களிடம் இந்த வார்த்தைகளைக் கூறினான்.(46)
அவன் {ஜனமேஜயன்}, "எனது தந்தையின் {பரீக்ஷித்தின்} விண்ணேகுதலை உங்கள் மூலம் அறிந்தேன்.(47) என் உறுதியான முடிவை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். எனது தந்தையை {பரீக்ஷித்தைக்} கொன்ற தீயவனான தக்ஷகனைப் பழிவாங்கக் காலம் தாழ்த்தக்கூடாது என்று நான் எண்ணுகிறேன். எனது தந்தையை எரித்த அவன், சிருங்கியை வெறும் இரண்டாவது காரணமாக்கினான்.(48,49) ஆழ்ந்த வெறுப்பாலேயே அவன் {தக்ஷகன்} கசியபரைத் திரும்பிப் போகச் செய்தான். அந்த பிராமணர் {கசியபர்} வந்திருந்தால் எனது தந்தை {பரீக்ஷித்} நிச்சயம் பிழைத்திருப்பார்.(50) கசியபரின் கருணையாலும், அமைச்சர்களின் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளாலும் எனது தந்தை பிழைத்திருந்தால் அவன் எதை இழந்திருப்பான்?(51) எனது கோபத்தின் விளைவுகளைப் பற்றிய அறியாமையால், எனது தந்தையை உயிர்ப்பிக்கும் ஆவலுடன் வந்த, அந்த பிராமணர்களில் சிறந்த கசியபரைத் {நேரடியாகத்} தோற்கடிக்க முடியாமல் தடுத்து நிறுத்தினான்.(52) மன்னனை உயிர்ப்பிக்கக் கூடாது என்று அந்த பிராமணருக்குச் செல்வத்தைக் கொடுத்த அந்தப் பாவியான தக்ஷகனின் பகைமை மிகப்பெரியதாகும்.(53) என்னையும், உதங்க முனிவரையும், உங்கள் எல்லோரையும் மனநிறைவு கொள்ளச் செய்ய, எனது தந்தையின் {பரீக்ஷித்தின்} எதிரியை நானே இப்போது பழி வாங்கப் போகிறேன்" என்றான் {ஜனமேஜயன்}."(54)
[1] பிரம்மனிடம் சென்று என்று கும்பகோணம் பதிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் | In English |