Puru took the decrepitude of Yayati! | Adi Parva - Section 84 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 20)
பதிவின் சுருக்கம் : யயாதியின் மூப்பைப் பெற்றுக் கொள்ள மறுத்த முதல் நான்கு மகன்கள்; அந்த மகன்கள் நால்வரையும் சபித்த யயாதி; முதுமையை ஏற்றுக் கொண்ட பூரு...
வைசம்பாயனர் சொன்னார், "யயாதி முதுமையால் பலவீனமடைந்து தனது தலைநகருக்குச் சென்று, தனது மூத்த மகன் யதுவை அழைத்து,(1) "அன்புக் குழந்தாய்! உசானஸ் என்று அழைக்கப்படும் காவியரின் சாபத்தால், பலவீனமடைந்து, தோல் சுருக்கம் ஏற்பட்டு, தலை மயிர் வெண்மையாகி முதுமை என்னை ஆட்கொண்டது. ஆனால், நான் இன்னும் எனது இளமையின் இனிமையில் மனநிறைவுகொள்ளவில்லை.(2) எனவே, ஓ யதுவே! எனது பலவீனத்துடன் கூடிய முதுமையை நீ ஏற்றுக் கொள்வாயாக. உனது இளமையைக் கொண்டு நான் இன்பம் அனுபவிப்பேன்.(3) ஆயிரம் வருடங்கள் கடந்ததும், உனது இளமையை உனக்குத் திருப்பி அளித்து, எனது முதுமையையும் பலவீனத்தையும் பெற்றுக் கொள்கிறேன்" என்றான்.(4)
யது, "பலவீனம் கொள்வதால் உண்பதிலும், குடிப்பதிலும் எண்ணற்றத் தொல்லைகள் இருக்கின்றன. எனவே, ஓ மன்னா, நான் உமது பலவீனத்தை ஏற்க மாட்டேன். இஃது எனது உறுதியானத் தீர்மானம்.(5) தலையில் வெண்மயிர் தாங்கி, மகிழ்ச்சியற்று, நரம்புகள் தளர்ந்து, உடலெங்கும் தோல் சுருக்கம் ஏற்பட்டு, உருக்குலைந்து, உறுப்புகளின் வலிமை குன்றி, நலிவடைந்து, எந்த வேலையையும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டு, நண்பர்களிடமும், தோழர்களிடமும் தோல்வியுற்று வாழ்வதே பலவீன நிலையாகும்.(6) எனவே, ஓ மன்னா! நான் அஃதை ஏற்க விரும்பவில்லை. ஓ மன்னா! உமக்கு நிறைய மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் உமக்கு மிகவும் அன்பானவர்கள் ஆயிற்றே. நீர் அறத்தின் கட்டளைகளை அறிந்தவர். உமது மற்ற மகன்களிடம் உமது பலவீனத்தை ஏற்கச் சொல்லுங்கள்" என்றான்.(7)
யயாதி, "ஓ மகனே! நீ எனது இதயத்திலிருந்து உற்பத்தியானாய், ஆனால் எனக்கு உனது இளமையைத் தர மறுக்கிறாய். எனவே, உனது மகன்கள் மன்னர்களாக இருக்க மாட்டார்கள்" என்று சொல்லி, அடுத்த மகனான துர்வசுவிடம்,(8) "ஓ துர்வசு! எனது பலவீனத்துடன் கூடிய முதுமையை நீ ஏற்றுக் கொள்வாயாக. உனது இளமையைக் கொண்டு நான் இன்பம் அனுபவிப்பேன்.(9) ஆயிரம் வருடங்கள் கடந்ததும், உனது இளமையைத் திருப்பி அளித்து, எனது முதுமையையும் பலவீனத்தையும் பெற்றுக் கொள்கிறேன்" என்றான்.(10)
துர்வசு, "ஓ தந்தையே! நான் பலவீனத்தை விரும்பவில்லை. அது பசி, இன்பம், பலம், அழகு, அறிவு ஆகியவற்றையும், ஏன் உயிரையே கூட ஒரு மனிதனிடம் இருந்து எடுத்துவிடுகிறது" என்றான்.(11)
யயாதி அவனிடம், "நீ எனது இதயத்திலிருந்து உற்பத்தியானாய், ஆனால் எனக்கு உனது இளமையைத் தர மறுக்கிறாய். எனவே, உனது குலம் அருகிப் போகும்.(12) இழிந்தவனான நீ, அரச இரத்தம் கொண்ட மங்கையரிடம் பிள்ளைகளைப் பெறும் தாழ்ந்த குருதியுடையவர்களுக்கு மத்தியில் இருப்பாயாக. தூய்மையற்ற நீதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுபவர்களும், இறைச்சியில் வாழ்பவர்களும், குறுகிய புத்தி கொண்டவர்களும், தங்களுக்கு மேலானாவர்களுடைய மனைவியரை அடையத் தயங்காதவர்களும், பறவைகள் மற்றும் விலங்குகளின் நடைமுறைகளைக் கொண்டவர்களும், பாவிகளும், ஆரியரல்லாதவர்களும் {உன்னதர் அல்லாதவர்கான} ஆன மனிதர்களின் மன்னனாவாய்" என்றான்[1].(13-15)
வைசம்பாயனர் சொன்னார், "யயாதி, தனது மகன் துர்வசுவை இப்படிச் சபித்துவிட்டு, சர்மிஷ்டையின் மகன் திருஹ்யுவிடம்,(16) "ஓ திருஹ்யு! நிறத்தையும், அழகையும் அழிக்கும் எனது பலவீனத்தை ஆயிரம் வருடங்களுக்கு ஏற்றுக் கொண்டு, உனது இளமையை எனக்குத் தா.(17) ஆயிரம் வருடங்கள் கடந்ததும், உனது இளமையைத் திருப்பிக் கொடுத்து எனது பலவீனத்தையும் முதுமையையும் ஏற்றுக் கொள்கிறேன்" என்றான்.(18)
அதற்குத் திரஹ்யு, "ஓ மன்னா! பலவீனமடைந்தவன் யானைகளில் செல்வதையும், தேர்களில் செல்வதையும், குதிரைகளில் செல்வதையும், பெண்களையும் அனுபவிக்க முடியாது. அவனது குரல் கூடக் கரகரப்பாகிவிடும். எனவே, நான் உமது பலவீனத்தை ஏற்க விரும்பவில்லை" என்றான்.(19)
யயாதி, "நீ எனது இதயத்திலிருந்து உற்பத்தியானாய், ஆனால் நீ எனக்கு உனது இளமையைத் தர மறுக்கிறாய். எனவே, உனக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் விருப்பம் எதுவோ அது நிறைவேறாது.(20) குதிரைகளும், தேர்களும், யானைகளும், நல்ல வாகனங்களும், கழுதைகளும், காளைகளும், பல்லக்குகளும் செல்வதற்கான சாலைகளே இல்லாத, தெப்பங்களிலும், ஓடங்களிலும் மட்டுமே செல்லக்கூடிய களிமண்ணால் நிறைந்த தேசத்திற்கு பெயரளவுக்கே நீ மன்னனாக இருப்பாய்" என்று சபித்தான்.(21,22)
அடுத்தவனான அனுவிடம் யயாதி, "ஓ அனுவே! எனது பலவீனத்தையும், முதுமையையும் ஏற்றுக் கொள்வாயாக. நான் உனது இளமையைக் கொண்டு ஆயிரம் வருடங்களுக்கு இன்பங்களை அனுபவிக்கிறேன்" என்றான்.(23)
அதற்கு அனு, "பலவீனமானவர்கள் குழந்தைகளைப் போல உண்டு எப்போதும் அசுத்தமாக இருப்பர். அவர்களால் வேள்வித்தீயில் நெய்யைக் கூட ஊற்றமுடியாது. எனவே, நான் உமது முதுமையை ஏற்க விரும்பவில்லை" என்றான்.(24)
யயாதி அவனிடம், "நீ எனது இதயத்திலிருந்து உற்பத்தியானாய், ஆனால் எனக்கு உனது இளமையைத் தர மறுக்கிறாய். நீ பலவீனத்தில் பெரும் குறைகளைக் கண்டுபிடிக்கிறாய். எனவே, பலவீனம் உன்னை வந்தடையட்டும்.(25) ஓ அனுவே! உனது சந்ததியினரும் இளமையை அடையும் போது மரணத்தை அடைவர். நீ நெருப்பின் முன்பு அமர்ந்து வேள்விகளைச் செய்ய முடியாது" என்று சபித்தான்.(26)
இறுதியாக யயாதி, தனது இளைய மகன் பூருவிடம் சென்று, "ஓ பூரு! நீ எனது இளைய மகனாவாய்! ஆனால் நீ எல்லோருக்கும் முதல்வனாவாய்! உசானஸ் என்று அழைக்கப்படும் காவியரின் {சுக்ரனின்} சாபத்தால் பலவீனம், தோல் சுருக்கம், வெண் முடி ஆகியன என்னை ஆட்கொண்டன. இருப்பினும் எனது இளமையை நான் முழுமையாக அனுபவிக்கவில்லையே. ஆகவே, ஓ பூரு, எனது பலவீனத்தையும், முதுமையையும் ஏற்றுக் கொள்! உனது இந்த இளமையைக் கொண்டு நான் சில வருடங்களுக்கு இன்பத்தை அனுபவித்துக் கொள்கிறேன்.(27,28) ஆயிரம் வருடங்கள் கடந்ததும், நான் உனது இளமையை உனக்குத் திருப்பித் தந்து, எனது முதுமையை ஏற்றுக் கொள்கிறேன்" என்றான்."(29)
வைசம்பாயனர் சொன்னார், "இப்படி மன்னனால் கேட்கப்பட்ட பூரு பணிவுடன், "ஓ ஏகாதிபதியே! நீர் சொல்வதை நான் செய்கிறேன். ஓ மன்னா, உமது பலவீனத்தையும், முதுமையையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.(30) எனது இளமையை ஏற்றுக் கொண்டு வாழ்வின் இனிமையை அனுபவித்துக் கொள்வீராக.(31) உமது கட்டளைப்படி பலவீனத்தாலும், முதுமையாலும் ஆட்கொள்ளப்பட்டு, எனது இளமையை உமக்குக் கொடுத்து நான் வாழ்ந்து வருகிறேன்" என்றான்.(32)
யயாதி, "ஓ பூரு! உன்னிடம் நான் மனநிறைவு கொண்டேன். அப்படி நிறைவடைந்ததால் சொல்கிறேன். உனது அரசாங்கத்தில் வாழும் மக்கள் அவர்கள் விருப்பங்கள் முழுவதும் ஈடேறி மகிழ்ச்சியாக இருப்பர்" என்றான்.(33)
இப்படிச் சொன்ன அந்தப் பெரும் துறவி யயாதி, காவியரை {சுக்ராச்சாரியரை} நினைத்துத் தனது பலவீனத்தையும், முதுமையையும் அந்த உயர் ஆன்மாவான பூருவுக்கு அளித்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(34)

[1] கும்பகோணம் பதிப்பில், "துர்வஸுவே! என் ஹ்ருதயத்திலிருந்து பிறந்த நீ உன் வயஸை எனக்குக் கொடாமையால் உன் ஸந்ததி நாசத்தையடையும். மூடனே! ஆசாரங்களிலும், தர்மங்களிலும் வ்யவஸ்தை தப்பினவர்களும், சாஸ்திரத்துக்கு மாறான நடையுள்ளவர்களும், மாம்ஸம் தின்பவர்களும், எல்லா வருணங்களுக்கும் தாழ்ந்தவர்களும், குருபத்தினிகளிடம் சேருகிறவர்களும், திர்யக்ஜாதியின் நடையுள்ளவர்களும், மிருகத்தன்மையுள்ளவர்களும், பாபிஷ்டர்களுமாகிய மிலேச்சர்களுக்கு நீ ராஜாவாவாய்" என்றிருக்கிறது.
வைசம்பாயனர் சொன்னார், "யயாதி, தனது மகன் துர்வசுவை இப்படிச் சபித்துவிட்டு, சர்மிஷ்டையின் மகன் திருஹ்யுவிடம்,(16) "ஓ திருஹ்யு! நிறத்தையும், அழகையும் அழிக்கும் எனது பலவீனத்தை ஆயிரம் வருடங்களுக்கு ஏற்றுக் கொண்டு, உனது இளமையை எனக்குத் தா.(17) ஆயிரம் வருடங்கள் கடந்ததும், உனது இளமையைத் திருப்பிக் கொடுத்து எனது பலவீனத்தையும் முதுமையையும் ஏற்றுக் கொள்கிறேன்" என்றான்.(18)
அதற்குத் திரஹ்யு, "ஓ மன்னா! பலவீனமடைந்தவன் யானைகளில் செல்வதையும், தேர்களில் செல்வதையும், குதிரைகளில் செல்வதையும், பெண்களையும் அனுபவிக்க முடியாது. அவனது குரல் கூடக் கரகரப்பாகிவிடும். எனவே, நான் உமது பலவீனத்தை ஏற்க விரும்பவில்லை" என்றான்.(19)
யயாதி, "நீ எனது இதயத்திலிருந்து உற்பத்தியானாய், ஆனால் நீ எனக்கு உனது இளமையைத் தர மறுக்கிறாய். எனவே, உனக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் விருப்பம் எதுவோ அது நிறைவேறாது.(20) குதிரைகளும், தேர்களும், யானைகளும், நல்ல வாகனங்களும், கழுதைகளும், காளைகளும், பல்லக்குகளும் செல்வதற்கான சாலைகளே இல்லாத, தெப்பங்களிலும், ஓடங்களிலும் மட்டுமே செல்லக்கூடிய களிமண்ணால் நிறைந்த தேசத்திற்கு பெயரளவுக்கே நீ மன்னனாக இருப்பாய்" என்று சபித்தான்.(21,22)
அடுத்தவனான அனுவிடம் யயாதி, "ஓ அனுவே! எனது பலவீனத்தையும், முதுமையையும் ஏற்றுக் கொள்வாயாக. நான் உனது இளமையைக் கொண்டு ஆயிரம் வருடங்களுக்கு இன்பங்களை அனுபவிக்கிறேன்" என்றான்.(23)
அதற்கு அனு, "பலவீனமானவர்கள் குழந்தைகளைப் போல உண்டு எப்போதும் அசுத்தமாக இருப்பர். அவர்களால் வேள்வித்தீயில் நெய்யைக் கூட ஊற்றமுடியாது. எனவே, நான் உமது முதுமையை ஏற்க விரும்பவில்லை" என்றான்.(24)
யயாதி அவனிடம், "நீ எனது இதயத்திலிருந்து உற்பத்தியானாய், ஆனால் எனக்கு உனது இளமையைத் தர மறுக்கிறாய். நீ பலவீனத்தில் பெரும் குறைகளைக் கண்டுபிடிக்கிறாய். எனவே, பலவீனம் உன்னை வந்தடையட்டும்.(25) ஓ அனுவே! உனது சந்ததியினரும் இளமையை அடையும் போது மரணத்தை அடைவர். நீ நெருப்பின் முன்பு அமர்ந்து வேள்விகளைச் செய்ய முடியாது" என்று சபித்தான்.(26)
இறுதியாக யயாதி, தனது இளைய மகன் பூருவிடம் சென்று, "ஓ பூரு! நீ எனது இளைய மகனாவாய்! ஆனால் நீ எல்லோருக்கும் முதல்வனாவாய்! உசானஸ் என்று அழைக்கப்படும் காவியரின் {சுக்ரனின்} சாபத்தால் பலவீனம், தோல் சுருக்கம், வெண் முடி ஆகியன என்னை ஆட்கொண்டன. இருப்பினும் எனது இளமையை நான் முழுமையாக அனுபவிக்கவில்லையே. ஆகவே, ஓ பூரு, எனது பலவீனத்தையும், முதுமையையும் ஏற்றுக் கொள்! உனது இந்த இளமையைக் கொண்டு நான் சில வருடங்களுக்கு இன்பத்தை அனுபவித்துக் கொள்கிறேன்.(27,28) ஆயிரம் வருடங்கள் கடந்ததும், நான் உனது இளமையை உனக்குத் திருப்பித் தந்து, எனது முதுமையை ஏற்றுக் கொள்கிறேன்" என்றான்."(29)
வைசம்பாயனர் சொன்னார், "இப்படி மன்னனால் கேட்கப்பட்ட பூரு பணிவுடன், "ஓ ஏகாதிபதியே! நீர் சொல்வதை நான் செய்கிறேன். ஓ மன்னா, உமது பலவீனத்தையும், முதுமையையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.(30) எனது இளமையை ஏற்றுக் கொண்டு வாழ்வின் இனிமையை அனுபவித்துக் கொள்வீராக.(31) உமது கட்டளைப்படி பலவீனத்தாலும், முதுமையாலும் ஆட்கொள்ளப்பட்டு, எனது இளமையை உமக்குக் கொடுத்து நான் வாழ்ந்து வருகிறேன்" என்றான்.(32)
யயாதி, "ஓ பூரு! உன்னிடம் நான் மனநிறைவு கொண்டேன். அப்படி நிறைவடைந்ததால் சொல்கிறேன். உனது அரசாங்கத்தில் வாழும் மக்கள் அவர்கள் விருப்பங்கள் முழுவதும் ஈடேறி மகிழ்ச்சியாக இருப்பர்" என்றான்.(33)
இப்படிச் சொன்ன அந்தப் பெரும் துறவி யயாதி, காவியரை {சுக்ராச்சாரியரை} நினைத்துத் தனது பலவீனத்தையும், முதுமையையும் அந்த உயர் ஆன்மாவான பூருவுக்கு அளித்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(34)
ஆங்கிலத்தில் | In English |