The Son who obeys the father, shall be his heir! | Adi Parva - Section 85 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 21)
பதிவின் சுருக்கம் : பூருவிடம் இருந்து மீண்டும் முதுமையைப் பெற்றுக் கொண்ட யயாதி; பூருவை அரியணையில் அமர்த்த விரும்பிய யயாதி; பூருவின் பட்டமேற்பை ஏற்றுக் கொண்ட பிராமணர்களும் பிற வர்ணத்தாரும்...
வைசம்பாயனர் சொன்னார், "அந்தச் சிறந்த ஏகாதிபதியான நகுஷ மைந்தன் யயாதி, பூருவின் இளமையைப் பெற்றுக் கொண்டு, பெரும் மனநிறைவு கொண்டான். அதன்பிறகு அவன் தனது சக்திக்கு உட்பட்ட இன்பங்களைக் காலத்திற்குத் தகுந்தவாறு அனுபவித்தான்.(1) எனவே, அவன் பெரும் இன்பத்தைப் பெற்றான். ஓ மன்னா {ஜனமேஜயா}! அறத்திற்கெதிரான எந்தச் செயலையும் அவன் செய்யவில்லை.(2) தேவர்களை வேள்விகளாலும், பித்ருக்களை தனது சிரார்தங்களாலும் மகிழ்வித்தான். ஏழ்மையானவர்களுக்கு உணவு கொடுத்து மகிழ்வித்தான், வைசியர்களைக் காத்து மகிழ்வித்தான், சூத்திரர்களை அன்பால் மகிழ்வித்தான். எல்லாக் குற்றவாளிகளுக்கும் தகுந்த தண்டனைகளைக் கொடுத்தான்.(3,4) யயாதி, குடிமக்களின் எல்லாப் பகுதிகளையும் மனநிறைவு கொள்ளச் செய்து அவர்களைக் காத்து மற்றுமொரு இந்திரனைப் போல இருந்தான்.(5)
சிங்கத்தின் வீரத்தைக் கொண்ட அந்த ஏகாதிபதி, தனது இளமையைக் கொண்டு தனது கட்டுக்குள் இருக்கும் எல்லா இன்பங்களையும் அனுபவித்தான், அறம் சார்ந்து எல்லையற்ற மகிழ்வை அடைந்தான்.(6) தனது விருப்பத்துக்குட்பட்ட அனைத்தையும் அவன் அனுபவித்தான். அவன் எப்போது தனது ஆயிரம் வருட நிறைவு வரப்போகிறது என்று நினைத்தானோ அப்போதே துன்பப்பட்டான்.(7) காலத்தின் மர்மங்களை அறிந்த அந்த மன்னன், தகுந்த காலங்களையும், கஷ்தங்களையும்[1] கவனித்து வைத்து,(8) சில நேரங்களில் (தேவ நடனமாது) விஸ்வாசியுடன் இந்திரனின் அழகிய நந்தவனத்திலும், சில நேரங்களில் அளகையிலும் (குபேரனின் நகரத்திலும்), சில நேரங்களில் வடக்கே இருக்கும் மேரு மலையின் உச்சியிலும் விளையாடினான்.(9)
அந்த அறம் சார்ந்த மன்னன் எப்போது ஆயிரம் வருடங்கள் நிறைந்தது என்று நினைத்தானோ அப்போது பூருவை வரவழைத்து அவனிடம்,(10) "ஓ எதிரிகளை அடக்குபவனே! ஓ மகனே! உனது இளமையைக் கொண்டு, எனது சக்திக்குட்பட்டு, வாழ்வின் இன்பங்களை அதனதன் காலத்தில் எனது முழு விருப்பம் ஈடேற அனுபவித்தேன்.(11) இருப்பினும், நம் விருப்பங்கள் எப்போதும் அதை அனுபவித்துவிடுவதனால் நிறைவடைவதில்லை. ஆனால், அதை அனுபவிப்பதனால், நெருப்பில் நெய் ஊற்றப்பட்டால் வளர்வது போலவே அதுவும் வளர்கிறது.(12) ஒரு தனி மனிதன் நெல், கோதுமை, வெள்ளி, தங்கம், ரத்தினங்கள், விலங்குகள், பெண்கள் என அனைத்தும் கொண்ட இந்த முழு உலகத்துக்கே தனித் தலைவனாக இருந்தாலும், அவன் மனநிறைவு கொள்ள மாட்டான். எனவே, இன்பதாகம் என்பது கைவிடப்பட வேண்டியது.(13) உண்மையான மகிழ்ச்சி என்பது, எவரொருவர் இந்த உலகப்பொருட்களின் மீதிருக்கும் தாகத்தைக் கைவிடுகிறார்களோ அவர்களுக்கே கிடைக்கும். அந்தத் தாகம் என்பதைத் தீயவர்களாலும், பாவிகளாலும் கைவிட முடியாது. நாம் வாழ்வில் தோல்வியுறும்போதும் அந்தத் தாகம் தோல்வியுறுவதில்லை. அந்தத் தாகம் என்பது மனிதனின் மரணத்திற்கான நோயாகும்.(14) இந்த ஆயிரம் வருடமும் எனது இதயம் எனது விருப்பங்களை நிறைவேற்றுவதிலேயே நிலைத்திருந்தது. இருப்பினும், அவற்றின் மீது எனக்கிருந்த தாகம், ஒவ்வொரு நாளும் அதிகரித்தே வந்தது.(15) எனவே, வருங்காலங்களில் கானகத்திற்குச் சென்று அங்கு இருக்கும் மானின் மருட்சியுடன் அமைதியாக உலகப் பொருட்களின் மீது எனது இதயத்தைச் செலுத்தாமல் பிரம்மனின் மீது செலுத்தி அந்தத் தாகத்தைக் கைவிடப்போகிறேன்.(16) ஓ பூரு! உன்னிடம் நான் பெரும் மனநிறைவுகொண்டேன்! வளமை உனதாகட்டும்! இந்த உனது இளமையைத் திரும்பப் பெற்றுக் கொள்! எனது அரசாங்கத்தையும் பெற்றுக் கொள்வாயாக. நிச்சயமாக நீயே எனக்குப் பெரும் சேவையைச் செய்த எனது மகனாவாய்" என்றான்.(17)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு, நகுஷ மைந்தனான யயாதி, தனது பலவீனத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டான். அவனது மகன் பூரு தனது இளமையைத் திரும்பப் பெற்றுக் கொண்டான்.(18) யயாதி தனது இளைய மகனான பூருவை அரியணையில் அமர்த்த விருப்பங்கொண்டான். ஆனால் பிராமணர்களைத் தலைமையாகக் கொண்ட நான்கு வகையினரும் {வர்ணத்தாரும்} மன்னனிடம்,(19) "ஓ மன்னா! தேவயானியின் மூலம் உனக்குப் பிறந்த மூத்த மகனும், பெரும் சுக்ரனின் பேரனுமான யது இருக்கும்போது, நீர் எப்படி உமது அரசாங்கத்தைப் பூருவுக்குக் கொடுப்பீர்?(20) நிச்சயமாக யதுவே உமது மூத்த மைந்தன்; அவனுக்குப் பிறகு துர்வசுவும், அதற்குப் பிறகு சர்மிஷ்டைக்குப் பிறந்த மைந்தர்கள் திருஹ்யுவும், அனுவும் இருக்கிறார்கள். அதன்பிறகே பூரு வருகிறான்.(21) மூத்தவர்கள் இருக்கும்போது இளையவன் எப்படி அரியணைக்கு அருகதையாவான்? இதை நாங்கள் உமக்குச் சொல்லிக் கொள்கிறோம். நீர் தர்மம் எதுவோ அதைச் செய்யும்" என்றனர்.(22)
யயாதி, "பிராமணர்களை முதன்மையாகக் கொண்ட நால்வகை மக்களே! நான் என் அரசாங்கத்தை எனது மூத்த மகன் யதுவுக்கு ஏன் கொடுக்கக்கூடாது என்பதைக் கேட்பீராக.(23) தன் தந்தைக்குக் கீழ்ப்படியாதவன் மகனாகமாட்டான் என்பது ஞானமுள்ளோர் வாக்கு.(24) தனது பெற்றோர்கள் சொல்வதை ஏற்று நடந்து, அவர்களின் நன்மையில் ஆர்வம் கொண்டு, அவர்களால் எல்லா வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களே சிறந்த மைந்தர்களாவர்.(25) யதுவாலும், ஏன் துர்வசுவாலும் நான் அலட்சியம் செய்யப்பட்டேன். திருஹ்யு மற்றும் அனுவாலும் நான் அலட்சியமே செய்யப்பட்டேன்.(26) பூரு ஒருவனே எனது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தான். அவனாலேயே நான் பெரிதும் மதிக்கப்பட்டேன். எனவே, அனைவருக்கும் இளையவனே எனது வாரிசாவான். அவன் எனது பலவீனத்தை ஏற்றுக் கொண்டான்.(27) நிச்சயமாகப் பூருவே எனது நண்பனாவான். என்னால் பெரிதும் ஏற்றுக் கொள்ளும் செயலை அவன் செய்தான். எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் எனது மகனே எனக்கு அடுத்த மன்னனாகி, இந்த முழு உலகத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வருவான் என்பது கவியின் மகனான சுக்ரனின் கட்டளையும் ஆகும்.(28) எனவே, நான் உங்களை வேண்டிக் கொள்வதெல்லாம், பூரு இந்த அரியணையை அலங்கரிக்கட்டும் என்பதுதான்" என்றான்.(29)
அதன் பிறகு அந்த மக்கள், "அஃது உண்மைதான். ஓ மன்னா! பெற்றோரின் நன்மையில் விருப்பம் உள்ள மகனே, அவன் இளையவனாக இருந்தாலும் வளமாக இருக்க அருகதையுள்ளவன்.(30) எனவே, உமக்கு நன்மையைச் செய்த பூரு உமது முடியைத் தாங்கத் தகுதி வாய்ந்தவனே. சுக்ரனே இக்காரியத்தில் கட்டளையிட்டிருப்பதால், நாங்கள் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை" என்றனர்."(31)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "மக்களால் இப்படிச் சொல்லப்பட்ட நகுஷ மைந்தன் {யயாதி}, அரியணையில் பூருவை அமர்த்தினான்.(32) உரிய சடங்குகளுடன் அரசாங்கத்தைப் பூருவுக்கு அளித்த அந்த ஏகாதிபதி, தனது தலைநகரை விட்டு பிராமணர்களுடனும், துறவிகளுடனும் கானகமேகினான்.(33) யதுவின் மைந்தர்கள் யாதவர்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்கள்; துர்வசுவின் மைந்தர்கள் யவனர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்; திருஹ்யுவின் மைந்தர்கள் போஜர்கள் என்று அழைக்கப்பட்டார்கள், அனுவின் மைந்தர்கள் மிலேச்சர்களாக இருந்தார்கள்.(34) பூருவின் வம்சம், பௌரவர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}! நீ அந்த வழியிலேயே (பௌரவர்கள்) ஆயிரம் வருடங்கள் உனது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்து அரசாளப் பிறந்திருக்கிறாய்" என்றார்.(35)

[1] கஷ்தம் என்பது கண் சிமிட்டுவதற்கு ஆகக்கூடிய நேரமாகும். 13 கஷ்தங்கள் = 1 காலம், 30 காலங்கள் = 1 முகூர்த்தம். கண்சிமிட்டுவதற்கு ஆகும் காலத்தை இந்து புராணங்கள் நிமிஷங்கள் என்றன. இஷ்வாகுவின் மகன் நிமி ஆவான். அவன் வசிஷ்டரின் கட்டளையை மீறி தகாத இடத்தில் யாகம் செய்ததால் தேகமின்றிப் போகச் சபிக்கப்பட்டான். அவன் இருக்க இடம் கேட்டபொழுது கண் இமையை இடமாக அளித்தார் வசிஷ்டர். அதனால் கண் சிமிட்டும் ஆகும் காலம் அந்த காலத்தில் நிமிஷம் ஆனது. மேற்கத்திய காலக்கணிப்பில் நிமிடம் வேறு விதமாக அளக்கப்படுகிறது. இந்த நிமி ஆகிய விதேகன் உண்டாக்கிய தேசமே விதேக தேசம். அவன் வழி வந்தவர்களே ஜனகர்கள்.கண்சிமிட்டும் நேரம் - 1 நிமிஷம்(106.7 மில்லி செகண்ட்) ; 30 நிமிஷம் - 1 காஷ்டை (3.2 செகண்டுகள்); 30 காஷ்டை - 1 காலம் (1.6 மினிட்டுகள்); 30 காலங்கள் - 1 முகூர்த்தம் (48 மினிட்டுகள்)
அந்த அறம் சார்ந்த மன்னன் எப்போது ஆயிரம் வருடங்கள் நிறைந்தது என்று நினைத்தானோ அப்போது பூருவை வரவழைத்து அவனிடம்,(10) "ஓ எதிரிகளை அடக்குபவனே! ஓ மகனே! உனது இளமையைக் கொண்டு, எனது சக்திக்குட்பட்டு, வாழ்வின் இன்பங்களை அதனதன் காலத்தில் எனது முழு விருப்பம் ஈடேற அனுபவித்தேன்.(11) இருப்பினும், நம் விருப்பங்கள் எப்போதும் அதை அனுபவித்துவிடுவதனால் நிறைவடைவதில்லை. ஆனால், அதை அனுபவிப்பதனால், நெருப்பில் நெய் ஊற்றப்பட்டால் வளர்வது போலவே அதுவும் வளர்கிறது.(12) ஒரு தனி மனிதன் நெல், கோதுமை, வெள்ளி, தங்கம், ரத்தினங்கள், விலங்குகள், பெண்கள் என அனைத்தும் கொண்ட இந்த முழு உலகத்துக்கே தனித் தலைவனாக இருந்தாலும், அவன் மனநிறைவு கொள்ள மாட்டான். எனவே, இன்பதாகம் என்பது கைவிடப்பட வேண்டியது.(13) உண்மையான மகிழ்ச்சி என்பது, எவரொருவர் இந்த உலகப்பொருட்களின் மீதிருக்கும் தாகத்தைக் கைவிடுகிறார்களோ அவர்களுக்கே கிடைக்கும். அந்தத் தாகம் என்பதைத் தீயவர்களாலும், பாவிகளாலும் கைவிட முடியாது. நாம் வாழ்வில் தோல்வியுறும்போதும் அந்தத் தாகம் தோல்வியுறுவதில்லை. அந்தத் தாகம் என்பது மனிதனின் மரணத்திற்கான நோயாகும்.(14) இந்த ஆயிரம் வருடமும் எனது இதயம் எனது விருப்பங்களை நிறைவேற்றுவதிலேயே நிலைத்திருந்தது. இருப்பினும், அவற்றின் மீது எனக்கிருந்த தாகம், ஒவ்வொரு நாளும் அதிகரித்தே வந்தது.(15) எனவே, வருங்காலங்களில் கானகத்திற்குச் சென்று அங்கு இருக்கும் மானின் மருட்சியுடன் அமைதியாக உலகப் பொருட்களின் மீது எனது இதயத்தைச் செலுத்தாமல் பிரம்மனின் மீது செலுத்தி அந்தத் தாகத்தைக் கைவிடப்போகிறேன்.(16) ஓ பூரு! உன்னிடம் நான் பெரும் மனநிறைவுகொண்டேன்! வளமை உனதாகட்டும்! இந்த உனது இளமையைத் திரும்பப் பெற்றுக் கொள்! எனது அரசாங்கத்தையும் பெற்றுக் கொள்வாயாக. நிச்சயமாக நீயே எனக்குப் பெரும் சேவையைச் செய்த எனது மகனாவாய்" என்றான்.(17)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு, நகுஷ மைந்தனான யயாதி, தனது பலவீனத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டான். அவனது மகன் பூரு தனது இளமையைத் திரும்பப் பெற்றுக் கொண்டான்.(18) யயாதி தனது இளைய மகனான பூருவை அரியணையில் அமர்த்த விருப்பங்கொண்டான். ஆனால் பிராமணர்களைத் தலைமையாகக் கொண்ட நான்கு வகையினரும் {வர்ணத்தாரும்} மன்னனிடம்,(19) "ஓ மன்னா! தேவயானியின் மூலம் உனக்குப் பிறந்த மூத்த மகனும், பெரும் சுக்ரனின் பேரனுமான யது இருக்கும்போது, நீர் எப்படி உமது அரசாங்கத்தைப் பூருவுக்குக் கொடுப்பீர்?(20) நிச்சயமாக யதுவே உமது மூத்த மைந்தன்; அவனுக்குப் பிறகு துர்வசுவும், அதற்குப் பிறகு சர்மிஷ்டைக்குப் பிறந்த மைந்தர்கள் திருஹ்யுவும், அனுவும் இருக்கிறார்கள். அதன்பிறகே பூரு வருகிறான்.(21) மூத்தவர்கள் இருக்கும்போது இளையவன் எப்படி அரியணைக்கு அருகதையாவான்? இதை நாங்கள் உமக்குச் சொல்லிக் கொள்கிறோம். நீர் தர்மம் எதுவோ அதைச் செய்யும்" என்றனர்.(22)
யயாதி, "பிராமணர்களை முதன்மையாகக் கொண்ட நால்வகை மக்களே! நான் என் அரசாங்கத்தை எனது மூத்த மகன் யதுவுக்கு ஏன் கொடுக்கக்கூடாது என்பதைக் கேட்பீராக.(23) தன் தந்தைக்குக் கீழ்ப்படியாதவன் மகனாகமாட்டான் என்பது ஞானமுள்ளோர் வாக்கு.(24) தனது பெற்றோர்கள் சொல்வதை ஏற்று நடந்து, அவர்களின் நன்மையில் ஆர்வம் கொண்டு, அவர்களால் எல்லா வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களே சிறந்த மைந்தர்களாவர்.(25) யதுவாலும், ஏன் துர்வசுவாலும் நான் அலட்சியம் செய்யப்பட்டேன். திருஹ்யு மற்றும் அனுவாலும் நான் அலட்சியமே செய்யப்பட்டேன்.(26) பூரு ஒருவனே எனது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தான். அவனாலேயே நான் பெரிதும் மதிக்கப்பட்டேன். எனவே, அனைவருக்கும் இளையவனே எனது வாரிசாவான். அவன் எனது பலவீனத்தை ஏற்றுக் கொண்டான்.(27) நிச்சயமாகப் பூருவே எனது நண்பனாவான். என்னால் பெரிதும் ஏற்றுக் கொள்ளும் செயலை அவன் செய்தான். எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் எனது மகனே எனக்கு அடுத்த மன்னனாகி, இந்த முழு உலகத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வருவான் என்பது கவியின் மகனான சுக்ரனின் கட்டளையும் ஆகும்.(28) எனவே, நான் உங்களை வேண்டிக் கொள்வதெல்லாம், பூரு இந்த அரியணையை அலங்கரிக்கட்டும் என்பதுதான்" என்றான்.(29)
அதன் பிறகு அந்த மக்கள், "அஃது உண்மைதான். ஓ மன்னா! பெற்றோரின் நன்மையில் விருப்பம் உள்ள மகனே, அவன் இளையவனாக இருந்தாலும் வளமாக இருக்க அருகதையுள்ளவன்.(30) எனவே, உமக்கு நன்மையைச் செய்த பூரு உமது முடியைத் தாங்கத் தகுதி வாய்ந்தவனே. சுக்ரனே இக்காரியத்தில் கட்டளையிட்டிருப்பதால், நாங்கள் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை" என்றனர்."(31)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "மக்களால் இப்படிச் சொல்லப்பட்ட நகுஷ மைந்தன் {யயாதி}, அரியணையில் பூருவை அமர்த்தினான்.(32) உரிய சடங்குகளுடன் அரசாங்கத்தைப் பூருவுக்கு அளித்த அந்த ஏகாதிபதி, தனது தலைநகரை விட்டு பிராமணர்களுடனும், துறவிகளுடனும் கானகமேகினான்.(33) யதுவின் மைந்தர்கள் யாதவர்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்கள்; துர்வசுவின் மைந்தர்கள் யவனர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்; திருஹ்யுவின் மைந்தர்கள் போஜர்கள் என்று அழைக்கப்பட்டார்கள், அனுவின் மைந்தர்கள் மிலேச்சர்களாக இருந்தார்கள்.(34) பூருவின் வம்சம், பௌரவர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}! நீ அந்த வழியிலேயே (பௌரவர்கள்) ஆயிரம் வருடங்கள் உனது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்து அரசாளப் பிறந்திருக்கிறாய்" என்றார்.(35)
ஆங்கிலத்தில் | In English |