The talent of Drona | Adi Parva - Section 133 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 69)
பதிவின் சுருக்கம் : இளவரசர்கள் விளையாடிக் கொண்டிருக்கிம்போது கிணற்றில் விழுந்த பந்து; இளவரசர்களுக்கு அறிமுகமான துரோணர் தனது திறமையைக் காட்டியது; துரோணரை அறிந்து கொண்ட பீஷ்மர்; துரோணரைக் குறித்து அவரிடம் விசாரித்த பீஷ்மர்; தன் வரலாற்றைச் சொன்ன துரோணர்; துரோணரை இளவரசர்களின் ஆசானாக நியமித்த பீஷ்மர்...
Adi Parva-133_Mahabharata In Tamil |
துரோணர் இப்படியே தனிமையில் தலைமறைவாகக் கிருபரின் இல்லத்தில் வசித்து வரும்போது, ஒரு நாள், அந்த வீர இளவரசர்கள் ஒன்றுசேர்ந்து, ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியே வந்தனர்.(3) நகரத்தைவிட்டு வெளியே வந்து, ஒரு பந்தை வைத்து விளையாடிக் கொண்டும், மகிழ்ச்சியான இதயத்துடன் உலவிக் கொண்டும் இருந்தனர். அப்போது ஒரு சம்பவம் நடந்தது. அந்த இளவரசர்கள் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பந்து, ஒரு கிணற்றுக்குள் விழுந்தது.(4) அந்த இளவரசர்கள் தங்களால் இயன்றவரை பந்தை கிணற்றிலிருந்து மீட்க முயற்சித்தனர். ஆனால் அந்த இளவரசர்களின் முயற்சிகளெல்லாம் பலனற்றுப் போயின.(5) அவர்கள் பந்தை எப்படி மீட்பது என்பதை அறியாமல் வெட்கத்துடன் ஒருவர் கண்களை மற்றவர் பார்த்துக் கவலையோடிருந்தனர்.(6)
சரியாக அத்தருணத்தில் அவர்களின் அருகே, வறுமையால் தளர்ச்சியுற்று, மெலிந்து, அக்னிஹோத்ரம் செய்வதால் மேனி காய்ந்து, தனது அன்றாடச் சடங்குகளையும் வழிபாடுகளையும் முடித்து வந்திருந்த, கறுத்த நிறம் கொண்ட முதுமையான ஒரு பிராமணரைக் கண்டனர்.(7) வெற்றியில் நம்பிக்கையிழந்திருந்த அந்த இளவரசர்கள், அந்தச் சிறப்புமிகுந்த பிராமணரைக் கண்டதும், உடனடியாக அவரைச் சூழ்ந்து கொண்டனர்.(8) நம்பிக்கையிழந்த அந்த இளவரசர்களைக் கண்ட துரோணர் (அவரே அந்தப் பிராமணர்; வேறு யாரும் அல்லர்), தனது திறமையை நினைத்துப் பார்த்து புன்னகைத்து அவர்களிடம்,(9) "உங்கள் க்ஷத்திரிய பலத்திற்கு இது அவமானம். உங்கள் ஆயுத நிபுணத்துவத்திற்கு இது அவமானம்! நீங்கள் பாரதக் குலத்தில் பிறந்தவர்களாயிற்றே! உங்களால் ஏன் அந்தப் பந்தை மீட்க முடியவில்லை?(10) இன்று எனக்கு இரவு உணவைத் தர நீங்கள் வாக்களித்தால், நான் இந்தப் புற்குச்சிகளினால் பந்தையும், நான் கீழே தூக்கி எறிந்து தொலையப்போகும் இந்த மோதிரத்தையும் வெளியே எடுக்கிறேன்" என்றார்.(11)
இப்படிச் சொன்னவரான எதிரிகளை ஒடுக்கும் துரோணர், தனது மோதிரத்தை எடுத்து அந்தக் காய்ந்த {நீரில்லாத} கிணற்றுக்குள் தூக்கி எறிந்தார். அப்போது, குந்தியின் மகனான யுதிஷ்டிரன் துரோணரிடம்,(12) “ஓ! பிராமணரே (நீர் அற்பப் பொருளைக் கேட்கிறீர்) கிருபரின் அனுமதியுடன், எங்களிடம் இருந்து உமது காலத்திற்கும் நீர் கேட்பதை {உணவை} அடைவீராக" என்றான்.(13) இதைக்கேட்ட துரோணர் பாரத இளவரசர்களைக் கண்டு புன்னகைத்து, "இந்த எனது கையில் நிறைந்திருக்கும் புற்களை {ஈக்குகளை}, எனது மந்திரங்களின் மூலம் ஆயுதங்களின் தன்மையை அடையச் செய்யப் போகிறேன். மற்ற எந்த ஆயுதங்களுக்கும் இல்லாத தகுதியை இந்தப் புற்கள் பெறப்போவதைப் பார்ப்பீராக.(14) நான் இந்தப் புற்குச்சிகளில் ஒன்றைக் கொண்டு பந்தைத் துளைக்கப் போகிறேன். அதன்பின் அந்தக் குச்சியை மற்றொரு குச்சியால் துளைத்து, மூன்றாவது குச்சியால் இரண்டாம் குச்சியைத் துளைப்பேன். இவ்வாறே ஒரு சங்கிலியை உருவாக்கி, பந்தை வெளியே கொண்டு வரப் போகிறேன்" என்றார்".(15)
Drona _Adi Parva-Section 133_Mahabharata In Tamil |
இப்படி இளவரசர்களால் கேட்கப்பட்ட துரோணர், "நீங்கள் பீஷ்மரிடம் சென்று என்னைப் பற்றியும் {எனது உருவத்தைப் பற்றியும்}, எனது திறமை பற்றியும் விவரியுங்கள். அந்தப் பெரும் பலம் வாய்ந்தவர் என்னை அடையாளம் தெரிந்து கொள்வார்" என்றார்.(22)
அதற்கு அந்த இளவரசர்கள், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி பீஷ்மரிடம் சென்று அந்த பிராமணருடைய பேச்சின் கருப்பொருளையும், அவரது இயல்புக்குமிக்க நடத்தையையும் விவரித்தனர்.(23) இளவரசர்களிடம் இருந்து அனைத்தையும் கேட்டறிந்த பீஷ்மர், அந்தப் பிராமணர் துரோணரைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை அறிந்து, இந்த இளவரசர்களுக்கு அவரே சிறந்த ஆசானாக இருக்க முடியும் என்பதையும் நினைத்து,(24) நேரடியாகச் சென்று வரவேற்று, அவரை அரண்மனைக்கு அழைத்து வந்தார். ஆயுதங்களைப் பயன்படுத்துபவர்களில் முதன்மையான அந்த பீஷ்மர், அவர் ஹஸ்தினாபுரத்திற்கு வந்த காரணத்தைச் சாதுர்யமாகக் கேட்டார்.(25)
துரோணர் நடந்தது அனைத்தையும் நடந்தபடியே சொன்னார், "ஐயா, கடந்த காலத்தில் நான் பெரும் முனிவர் அக்னிவேசரிடம் ஆயுதங்களைப் பெறவும், ஆயுத அறிவியலைக் கற்கவும் விரும்பிச் சென்றேன்.(26) எனது குருவுக்கான சேவைக்காக என்னை அர்ப்பணித்து, அவருடன் பல வருடங்கள், தலையில் முடிந்த கூந்தலுடன் {ஜடா முடியுடன்} பிரம்மச்சாரியாக வாழ்ந்தேன்.(27) அந்த நேரத்தில், அதே காரணத்திற்காகப் பாஞ்சால இளவரசனான, பலம்வாய்ந்த யக்ஞசேனனும் {துருபதனும்} வந்து, அந்த ஆசிரமத்திலேயே தங்கினான்.(28) அவன் எனது நன்மையில் எப்போதும் விருப்பம் கொண்டு எனக்கு நண்பனானான். எனக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. நாங்கள் இருவரும் பற்பல வருடங்களுக்கு ஒன்றாக வாழ்ந்தோம்.(29) ஓ! குரு குலத்தவரே {பீஷ்மரே}, நாங்கள் சிறு வயது முதல் ஒன்றாகவே கல்வி பயின்று வந்தோம். அந்தக் காலத்தில் அவன் எப்போதும் என்னிடம் இனிமையாகவே பேசுவான்.(30)
ஓ! பீஷ்மரே, அவன் என்னை மனநிறைவு கொள்ளச் செய்வதற்காக, “ஓ! துரோணா, எனது சிறப்புமிக்கத் தந்தைக்கு {பிருஷதருக்கு} நானே விருப்பமான மகனாவேன்.(31) அந்த மன்னர் என்னைப் பாஞ்சாலர்களின் ஏகாதிபதியாக நியமிக்கும்போது, அந்த நாடு உனதாகும். ஓ! நண்பா, இது சத்தியம்.(32) எனது நிலப்பகுதி, செல்வம், மகிழ்ச்சி என அனைத்தும் உனக்காகவே இருக்கும்" என்று சொன்னான். இறுதியாக நாங்கள் பிரிய வேண்டிய காலமும் வந்தது. கல்வி நிறைவு பெற்று, அவன் அவனது நாட்டுக்குத் திரும்ப அடியெடுத்து வைத்தான். அப்போது நான் அவனுக்கு எனது வாழ்த்துகளைச் சொன்னேன்.(33) உண்மையில், அவன் சொன்ன வார்த்தைகளையும் நான் எப்போதும் நினைவில் வைத்திருந்தேன்.
சில காலத்திற்குப் பிறகு, எனது தந்தையின் உத்தரவின் பேரிலும், பிள்ளைப்பேறில் எனக்கிருந்த விருப்பம் கொடுத்த மயக்கத்திலும், கடும் நோன்புகள் நோற்பவளும், பெரும் புத்திக்கூர்மையைக் கொடையாகக் கொண்டவளும், எந்நேரமும் அக்னிஹோத்ரமும், மற்ற வேள்விகளும் செய்பவளும், கடும் தவமிருப்பவளும், குறுகிய கூந்தல் கொண்டவளுமான கிருபியை மணந்தேன். அந்தக் கௌதமி {கிருபி}, குறித்த காலத்தில், சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் கூடியவனும், பெரும் வீரனுமான அஸ்வத்தாமன் என்ற மகனை ஈன்றெடுத்தாள்.(34-36) என்னைப் பெற்ற போது எனது தந்தை எப்படி மகிழ்ந்தாரோ அப்படியே நான் அஸ்வத்தாமனைப் பெற்ற போது மகிழ்ந்தேன். ஒரு நாள், ஒரு செல்வந்தனின் மகன் பால் குடிப்பதைக் கண்ட அஸ்வத்தாமன் அழ ஆரம்பித்தான். அதைக் கண்ட எனக்குத் திசை குறித்த அறிவு மங்கிப் போனது. திசைகளை மறந்து நின்றேன். சில பசுக்களை வைத்திருப்பவரிடம் ஒரு பசுவைக் கேட்கத் துணியாமல், பல பசுக்களை வைத்திருப்பவரிடம் ஒரு பசுவைப் பெற எண்ணி, நாடு விட்டு நாடு திரிந்தேன்.(37-39) ஆனால் நான் ஒரு கறவைப் பசுவையும் அடையாததால் எனது அலைச்சல் பலனற்றதானது. எனது காரியத்தில் தோற்றுப் போய்த் திரும்பி வந்தேன்.
அப்போது எனது மகனின் நண்பர்கள் அவனுக்கு நீரில் அரிசி மாவைக் கலந்து கொடுத்தனர்.(40) அதைக் குடித்த எனது அப்பாவி மகன், தான் பால் குடித்துவிட்டதாக ஏமாந்து, "நான் பால் குடித்துவிட்டேன், நான் பால் குடித்துவிட்டேன்!" என்று சந்தோஷக் கூத்தாடினான்.(41) அவனது எளிமையைக் கண்டு புன்னகைக்கும் விளையாட்டுத் தோழர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியில் கூத்தாடும் அவனைக் கண்டு நாம் மிகவும் வருந்தினேன்.(42) "செல்வமீட்ட முயலாமல் வறியவனாக இருக்கும் துரோணனுக்கு ஐயோ. அவன் பிள்ளையோ பாலின் மேல் ஆசையினால் கரைத்த மாவைக் குடித்துவிட்டு, நானும் பால் குடித்தேனென ஆனந்தக் கூத்தாடுகிறான்" என்ற கேலிப்பேச்சுகளைக் கேட்டு நான் அமைதியாக இருந்தேன்.(43,44)
என்னையே கடிந்து கொண்ட நான், என் மனதுக்குள், "பிராமணர்களால் கைவிடப்பட்டு இகழப்பட்டாலும், செல்வத்தின் மீது கொண்ட விருப்பத்தால், நான் எவருக்கும் அடிமையாக மாட்டேன். அது எப்போதும் பாவகரமானது என்ற ஒரு தீர்மானத்திற்கு வந்து, ஓ! பீஷ்மரே, எனது பழைய நண்பனிடம் சென்றேன். அந்தச் சோமகர்களின் மன்னனிடம் {துருபதனிடம்}, எனது அன்பு மகனையும், மனைவியையும் அழைத்துச் சென்றேன்.(45-47) அவன் ஆட்சியில் அமர்த்தப்பட்டான் என்பதையறிந்தேன். அப்போது நான், என்னை நற்பேறு பெற்றவனாக எண்ணி மகிழ்ந்தேன்.(48)
அதே மகிழ்ச்சியுடன், அரியணையில் அமர்ந்திருந்த எனது நண்பனிடம் சென்று, “ஓ! மனிதர்களில் புலியே, என்னை உனது நண்பனாக அறிந்து கொள்வாயாக!" என்று சொல்லி, அவனை ஒரு நண்பன் எப்படி நம்பிக்கையுடன் அணுகுவானோ அப்படி அணுகினேன். ஆனால் துருபதன், என்னைக் காட்டுமிராண்டியாக நினைத்துக் கைவிட்டு, எள்ளி நகையாடினான்.
அவன் என்னிடம்,(49,50) "இப்படித் திடீரென்று என்னை நீர் அணுகுவதால், உமது புத்திக்கூர்மை உயர்ந்த வகையென கிஞ்சிற்றும் எனக்குத் தோன்றவில்லை.(51) ஓ! மங்கிய அறிவைக் கொண்டவரே, பெரும் மன்னர்களால் உம்மைப் போன்ற இத்தகு அதிர்ஷ்டமற்ற மனிதரிடம் நட்பு கொள்ள முடியாது.(52) இணையான சூழ்நிலை இருந்தபோது நமக்கிடையில் நட்பு இருந்தது. ஆனால் அனைத்தையும் வலுவிழக்கச் செய்யும் காலம், நட்பையும் வலுவிழக்கச் செய்யும் என்பதை அறிந்து கொள்வீராக.(53) நட்பானது எந்த மனிதனின் இதயத்திலும் தேயாமல் இருக்காது. காலம் அஃதை அரிக்கும், கோபமோ அஃதை அழித்துவிடும்.(54)
எனவே தேய்ந்து போன அந்த நட்புடன் மீண்டும் ஒட்ட நினைக்காதீர். இனியும் அது போல நினைக்காதீர். ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, உம்முடனான எனது நட்பு ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக ஆனது.(55) ஏழைகளால் செல்வந்தர்களுடன் நண்பனாக இருக்க முடியாது; கல்வியற்றவனால் ஒரு கல்விமானோடு நண்பனாக இருக்க முடியாது; ஒரு கோழையால் துணிச்சல் மிக்க (வீரர்களுடன்) நண்பனாக இருக்க முடியாது. பிறகு எப்படி நீர் நமது பழைய நட்பைத் தொட நினைக்கிறீர்.(56) செல்வத்திலும், ஆற்றலிலும் இணையானவர்களாக இருக்கும் இருவருக்கு மத்தியிலேயே நட்போ, பகையோ இருக்க முடியும். ஏழையும், செல்வந்தனும், ஒருவருக்கொருவர் நண்பர்களாகவோ, பகைவர்களாகவோ இருக்க முடியாது.(57)
அசுத்தமான பிறவிகள் சுத்தமான பிறவிகளுக்கு நண்பனாக இருக்க முடியாது. தேர்வீரனாக இல்லாதவன், அப்படி இருப்பவனுக்கு {தேர்வீரனுக்கு} நண்பனாக முடியாது. மன்னனா இல்லாத ஒருவனால் ஒரு மன்னனின் நண்பனாக இருக்க முடியாது.(58) நான் உமக்கு நாட்டைக் கொடுக்கிறேன் என்று எப்போதாவது சொன்னது போலக் கூட எனக்கு நினைவில்லை. ஆனால், ஓ! பிராமணரே, இப்போது என்னால் ஓர் இரவுக்கான உணவும், தங்கும் இடத்தையும் மட்டுமே உமக்குத் தர முடியும்" என்றான்.(59)
இப்படி அவனால் சொல்லப்பட்ட பிறகு, தாமதமில்லாமல் செய்யக்கூடிய ஒரு காரியத்தை என் மனத்தில் நிச்சயித்துக் கொண்ட நான், எனது மனைவியுடன் அவனருகில் இருந்து வேகமாக வந்துவிட்டேன்.(60) ஓ! பீஷ்மரே, இப்படித் துருபதனால் அவமதிக்கப்பட்ட நான், மிகுந்த கோபம் கொண்டேன். இப்போது நான் குரு குலத்தவரிடம், புத்திக்கூர்மையுள்ள, எளிதாகக் கற்றுக்கொள்ளக்கூடிய திறன்கொண்ட சீடர்களை விரும்பி எதிர்பார்த்து வந்திருக்கிறேன்.(61) நான் உமது விருப்பங்களை நிறைவேற்ற ஹஸ்தினாபுரம் வந்திருக்கிறேன். இப்போது, நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வீராக" என்று கேட்டார் {துரோணர்}".(62)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பரத்வாஜரின் மகனால் இப்படிச் சொல்லப்பட்ட பீஷ்மர் அவரிடம்,(63) "உமது வில்லில் நாணைத் தளத்துவீராக. ஓ! பிராமணரே! குரு {கௌரவ} இளவரசர்களை ஆயுதச் சாதனை செய்யக் கற்பிப்பீராக. குருக்களால் வழிபடப்பட்டு, உமது வசிப்பிடத்தை உமக்கு நிறைவான வகையில் அனைத்து வசதிகளாலும் நிரப்பி இதயத்தில் மகிழ்வீராக.(64) ஓ! பிராமணரே! குரு குலத்தவர் கொண்டிருக்கும் அனைத்துச் செல்வத்திற்கும், அரசுக்கும், நாட்டுக்கும் நீரே உண்மையான தலைவராவீர். (இன்றிலிருந்து) குரு குலத்தவர் உம்மவரே.(65) இஃது ஏற்கனவே சாதிக்கப்பட்டுவிட்டதாக உமது இதயத்தில் குறித்துக் கொள்ளும். ஓ! பிராமணரே! எங்கள் நற்பேறின் கனியாக உம்மை இப்போது நாங்கள் பெறுகிறோம். உண்மையில், உமது வருகையால் எங்களுக்குச் செய்திருக்கும் உதவியானது மிகப் பெரியதே " என்றார்.(66)
ஆதிபர்வம் பகுதி 133ல் உள்ள சுலோகங்கள் : 66
ஆங்கிலத்தில் | In English |