Bhima's ridicule and Duryodhana's wrath | Adi Parva - Section 139 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 75)
பதிவின் சுருக்கம் : கர்ணனின் வளர்ப்புத்தந்தையான அதிரதன் அரங்கினுள் நுழைந்தது; தேரோட்டி மகனென கர்ணனைக் கேலி பேசிய பீமன்; பீமனை அதட்டிய துரியோதனன்; கர்ணனைக் கரம்பற்றி அழைத்துச் சென்ற துரியோதனன்…
Bhima's ridicule and Duryodhana's wrath | Adi Parva - Section 139 | Mahabharata In Tamil |
அந்தத் தேரோட்டியைக் கண்ட பாண்டவ பீமன், கர்ணனை தேரோட்டியின் மகனாகக் கருதி, ஏளனமாக,(5) “ஓ! தேரோட்டி மகனே, பார்த்தனின் கைகளால் மரணத்தைப் பெறும் தகுதி உனக்கில்லை. உனது குலத்துக்கு ஏற்ற வகையில் சாட்டையை {சவுக்கை} உடனே எடுத்துக் கொள்வாயாக.(5) ஓ! மனிதர்களில் தாழ்ந்தவனே, வேள்வி நெருப்பினருகில் இருக்கும் நெய்யைப் பெற ஒரு நாய்க்கு எவ்வாறு தகுதியில்லையோ, அவ்வாறே அங்கநாட்டை ஆட்சி செய்ய உனக்கும் தகுதியில்லை" என்றான்.(6)
இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன், நடுங்கும் உதடுகளுடன், பெருமூச்சுவிட்டுக்கொண்டு, வானிலிருக்கும் பகலவனைக் {சூரியனைக்} கண்டான்.(8) தாமரைக்கூட்டத்திற்கு இடையிலிருந்து மதம்பிடித்த யானை எழுவது போலத் தனது சகோதரர்களுக்கு மத்தியில் இருந்து கோபத்துடன் எழுந்த துரியோதனன்,(9) பயங்கரச் செயல்களைப் புரியும் பீமசேனனிடம், “ஓ! விருகோதரா {பீமா}, இது போன்ற வார்த்தைகளைப் பேசுவது உனக்குத் தகாது.(10) பலமே க்ஷத்திரியனுக்கு இதயப்பூர்வமான அறமாகும். பிறப்பால் தாழ்மையுற்றிருப்பினும், போர்புரியத் தகுதி வாய்ந்தவன் க்ஷத்திரியனே. தெய்வீக ஆறுகளின் தோற்றுவாயும் {பிறப்பிடமும்}, பெரும் வீரர்களின் மூலமும் {பிறப்பிடமும்}, எப்போதும் அறியப்படுவதில்லை.(11) உலகத்தையே சுட்டெரிக்கும் நெருப்பு, நீரிலிருந்தே எழுகிறது. தானவர்களைக் கொல்லும் இடி {வஜ்ரம்} ததீச முனிவரின் எலும்பால் ஆனது.(12) சிறப்பு மிகுந்த குஹதேவன் {முருகன்}, பல தேவர்களின் பகுதிகளைக் கொண்டு பிறந்ததால், அவனது மூலம் யாருக்கும் தெரியாது. சிலர் அவனை அக்னியின் மகன் என்றும், சிலர் கிருத்திகையின் மகனென்றும், சிலர் ருத்திரனின் மகன் என்றும், சிலர் கங்கையின் மகனென்றும் சொல்கின்றனர்.(13)
க்ஷத்திரியர்களாகப் பிறந்தவர்கள் பிராமணர்களாக ஆனதைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம். விஷ்வாமித்திரரும், மற்றவர்களும் (மற்ற க்ஷத்திரியர்களும்) நித்தியமான பிரம்மத்தை அடைந்துள்ளனர்.(14) ஆயுதம் தாங்கியவர்களில் முதன்மையான நமது குரு துரோணர் நீர்க்குடத்தில் பிறந்தவர், கோதம {கௌதம} குலத்தில் பிறந்த கிருபர் நாணற்கட்டிலிருந்து உதித்தவர்.(15) பாண்டவர்களே, உங்கள் பிறப்பைக் குறித்தும் நான் அறிவேன். சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் அனைத்து அதிர்ஷ்டக்குறிகளையும் கொண்டு, இயற்கைக் கவசமும், காதுகுண்டலங்களும் கொண்ட (கர்ணனைப் போன்ற) ஒரு புலியை ஒரு பெண்மானால் பெற முடியுமா?(16) இந்த இளவரசன், தனது கரத்தின் பலத்தாலும், அவன் செய்யும் அனைத்துச் செயல்களிலும் அவனது ஆணைக்குக் கீழ்ப்படிய நான் ஏற்றிருக்கும் உறுதியாலும், அவன் அங்கதேசத்தை மட்டுமல்ல, முழு உலகத்தின் மனிதர்களையும் ஆளும் தகுதி உடையவன்.(17) நான் கர்ணனுக்குச் செய்திருக்கும் இந்தக் காரியத்தைப் பொறுக்காத எவரும் இங்கே இருந்தால், அப்படிப்பட்டவன் தனது காலின் உதவியால் தேரில் ஏறி, வில்லை வளைக்கட்டும்" என்றான்”.(18)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "துரியோதனனின் பேச்சை அங்கீகரிப்பது போலப் பார்வையாளர்கள் மத்தியில் குழப்பமான முணுமுணுப்பு எழுந்தது. சரியாக அந்த நேரத்தில் கதிரவனும் மறைந்தான்.(19) அப்போது, கர்ணனின் கரங்களைப் பற்றிக் கொண்ட துரியோதனன், எண்ணற்ற விளக்குகளின் வெளிச்சத்தில் அவனை வெளியே அழைத்துச் சென்றான்.(20) ஓ! மன்னா, துரோணர், கிருபர், பீஷ்மர் ஆகியோர் புடைசூழப் பாண்டவர்களும் தங்கள் வசிப்பிடத்திற்குத் திரும்பினர்.(21)
அங்கிருந்த மக்களில் சிலர் "அர்ஜுனனே வெற்றியாளன்” என்றும், சிலர் கர்ணனே வெற்றியாளன்!" என்றும், சிலர் "துரியோதனனே வெற்றியாளன்!" என்றும் பேசிக்கொண்டு திரும்பினர்.(22) கர்ணனிடம் சில மங்கலக்குறிகளைக் கண்ட குந்தி, அவனைத் தனது மகனாக அடையாளம் கண்டுகொண்டாள். அங்கதேசத்தின் அரசுரிமையைத் தன் மகன் அடைந்ததைக் கண்டு, தாய்ப்பாசத்தால் மிகவும் மகிழ்ந்து போனாள்.(23) ஓ! ஏகாதிபதியே, கர்ணனை இவ்வழியில் அடைந்த துரியோதனன், அர்ஜுனனின் ஆயுதத்திறமை மீது கொண்டிருந்த அச்சத்திலிருந்து விடுபட்டான்.(24) ஆயுதத் திறமை கொண்ட வீரனான அந்தக் கர்ணன், தனது இனிமையான பேச்சால் துரியோதனனை மனநிறைவு கொள்ளச் செய்தான். அதேவேளையில் யுதிஷ்டிரன், கர்ணனுக்கு நிகரான போராளி இந்த உலகத்திலேயே இல்லை என்று நம்பத் தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(25)
ஆதிபர்வம் பகுதி 139ல் உள்ள சுலோகங்கள் : 25
ஆங்கிலத்தில் | In English |