Karna became the king of Anga | Adi Parva - Section 138 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 74)
பதிவின் சுருக்கம் : அரங்கில் நுழைந்த கர்ணன்; அர்ஜுனன் செய்து காட்டிய மாயாஜாலங்கள் அனைத்தையும் செய்து காட்டியது; அர்ஜுனனுடன் தனிப்போரை விரும்பிய கர்ணன்; மயங்கி விழுந்த குந்தி; ஆயத்தமான அர்ஜுனன்; கர்ணனின் குலத்தைக் கேட்ட கிருபர்; கர்ணனை அங்க மன்னனாக்கிய துரியோதனன்…
Karna became the king of Anga | Adi Parva - Section 138 | Mahabharata In Tamil |
பெரும்பலம் வாய்ந்த கரம் கொண்ட அந்த வீரன், அரங்கத்தைச் சுற்றி நோட்டம் விட்டுத் துரோணருக்கும் கிருபருக்கும் {அதிகம் மதியாதவனைப் போல} அலட்சியமாக வணக்கம் செலுத்தினான்.(6) அந்த மொத்தக்கூட்டத்தினரும் நடப்பதை அசைவில்லாமல் பார்த்து, "யார் இவன்?" என்று நினைத்து, அந்த வீரனைப் பற்றி அறிந்து கொள்ளப் பேராவல் கொண்டனர்.(7) நாவன்மை மிக்க மனிதர்களில் முதன்மையான அந்தச் சூரிய மைந்தன் {கர்ணன்}, மேகங்களைப் போன்ற ஆழமான உரத்த குரலில், அசுரரை அழிக்கும் பகனின் {இந்திரனின்} மகனும், தன்னால் அறியப்படாதவனுமான தன் தம்பியிடம்,(8) “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ செய்து காட்டியதை விஞ்சும் வகையில் நான் இந்தச் சபையின் முன் அருஞ்செயல்கள் செய்வேன். அவற்றை நீ கண்டால் வியப்பில் மலைத்துவிடுவாய்" என்றான்.(9)
ஓ! நாவன்மைமிக்கோரில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அவன் அப்படிப் பேசி முடிப்பதற்குள், பார்வையாளர்கள் அனைவரும் ஏதோ ஒரு கருவியின் துணை கொண்டு மொத்தமாக எழுப்பப்பட்டவர்கள் போல எழுந்து நின்றனர்.(10) ஓ! மனிதர்களில் புலியே, அக்கணத்தில் பீபத்சு {அர்ஜுனன்} கோபமும், நாணமும் கொண்ட போது, துரியோதனன் மகிழ்ச்சியால் நிறைந்தான்.(11) கர்ணன், துரோணரின் அனுமதியுடன், பார்த்தன் முன்பு செய்து காட்டிய அனைத்து அதிசயங்களையும் செய்து காட்டினான்.(12) ஓ! பாரதா, துரியோதனன் தனது தம்பிகளுடன் சென்று கர்ணனை மகிழ்ச்சியுடன் கட்டித் தழுவி கொண்டு அவனிடம்,(13) “ஓ! பெரும்பலம் வாய்ந்த வீரனே, நீ வரவேற்கப்படுகிறாய். நான் என் நற்பேறின் நிமித்தமாகவே உன்னை அடைந்திருக்கிறேன். ஓ! பண்பட்டவனே, நீ உன் விருப்பப்பட்ட படியே, எனக்கும், எனது அரசுக்கும் ஆணையிடுவாயாக" என்றான்.(14)
அதற்குக் கர்ணன், "நீ இப்படிச் சொன்னதே போதும், நீ கூறியவற்றை அடைந்தவனாகவே என்னை நான் கருதுகிறேன். உனது நட்பையே விரும்புகிறேன். ஓ! தலைவா {துரியோதனா}, அர்ஜுனனுடன் தனிப்போரிடுவதே எனது ஆவல்" என்றான்.(15)
துரியோதனன், "என்னுடன் சேர்ந்து வாழ்வின் நன்மைகளை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பாயாக! உனது நண்பனுக்கு நன்மை செய்வாயாக, ஓ! எதிரிகளை அடக்கி ஒடுக்குபவனே, அனைத்து எதிரிகளின் தலையிலும் உனது பாதத்தை வைப்பாயாக" என்றான்.(16)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதன்பிறகு, அர்ஜுனன், தான் அவமதிக்கப்பட்டதாகக் கருதி, தன் சகோதரர்களுக்கு {துரியோதனாதிகளுக்கு} மத்தியில் மலையென நின்ற கர்ணனிடம்,(17) "அழைக்கப்படாமல் வருபவர்களும், கேட்கப்படாமல் பேசுபவர்களும் செல்லும் பாதை {உலகம்} உன்னுடையதே. என்னால் கொல்லப்பட்ட பிறகு நீ அங்கேதான் போகப் போகிறாய்" என்றான்.(18)
கர்ணன், "இந்த அரங்கம் அனைவருக்கும் பொதுவானது, ஓ! பல்குனா {அர்ஜுனா}, இஃது உனக்கு மட்டும் சொந்தமானதல்ல. பலத்தில் மேன்மையானவர்களே மன்னர்கள். க்ஷத்திரியர்கள் பலத்தை மட்டுமே மதிப்பார்கள்.(19) வாய்ச்சண்டை எதற்கு? அது பலவீனமானவர்களின் வழியாகும். ஓ! பாரதா, குருவின் முன்னிலையில் நான் இன்று உனது தலையைக் கொய்யும் வரை உனது கணைகளால் என்னிடம் பேசுவாயாக" என்றான்”.(20)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "சகோதரர்களால் விரைவாகத் தழுவி அனுப்பப்பட்டவனும், எதிரிகளின் நகரங்களை அடக்குபவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, துரோணரின் அனுமதியுடன் போருக்கு முன்னேறினான்.(21) மறுபுறத்தில், துரியோதனனாலும், அவனது சகோதரர்களாலும் தழுவப்பட்ட கர்ணன், தனது வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு போருக்குத் தயாராக நின்றான்.(22) அப்போது, மின்னலுடன் கூடிய மேகங்களால் வானம் மூடப்பட்டது. இந்திரனின் வண்ணமயமான வில் {இந்திர தனுசு, வானவில்}, பிரகாசமான ஒளிக் கதிர்களைப் பொழிந்தது. அப்போது வரிசையாகச் சிறகு விரித்துப் பறந்து சென்ற வெண்ணாரைகளைப் பார்த்து, வானத்தை மறைத்துக் கொண்டிருந்த மேகங்கள் சிரிப்பது போல் இருந்தது.(23) இந்திரன், தன் மகன் மீது கொண்டிருந்த அன்பினால் அந்த அரங்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். சூரியனும் மேகங்களைக் கலைத்துவிட்டுத் தனது வாரிசையே பார்த்துக் கொண்டிருந்தான்.(24) பல்குனன் மேகங்களின் ஆழத்தில் {உள்ளே} மறைந்திருந்தான். கர்ணன் சூரியக் கதிர்களால் சூழப்பட்டுப் பார்வையில் தெரிந்தான்.(25)
திருதராஷ்டிரனின் மகன் {துரியோதனன்} கர்ணனுக்கு அருகிலேயே நின்றிருந்தான். பரத்வாஜர் {துரோணர்}, கிருபர் மற்றும் பீஷ்மர் ஆகியோர் பார்த்தனுக்கு அருகில் நின்றனர்.(26) அங்கே கூடியிருந்த கூட்டம் இரு பிரிவுகளாகப் பிரிந்திருந்தன. பெண் பார்வையாளர்களும் அப்படியே பிரிந்திருந்தனர். அப்போது, நடக்கும் காரியங்களின் நிலை தெரிந்த குந்திபோஜனின் மகளான {வளர்ப்பு மகளான} குந்தி இதைக் கண்டு மூர்ச்சையடைந்தாள்.(27) அனைத்துக் கடமைகளிலும் அறிவுடைய விதுரன், பெண் பணியாட்களின் துணையுடன் அங்கே வந்து, அவள் மீது சந்தனத்தையும், நீரையும் தெளித்து மூர்ச்சை தெளிவித்தார்.(28) சுயநினைவு மீண்ட குந்தி, கவசம் அணிந்த தனது இரு மகன்களையும் கண்டாள். அவளால் செய்யக்கூடியது எதுவுமில்லையாகையால் (அவர்கள் இருவரையும் காக்க வழியில்லாததால்) பயத்தால் பீடிக்கப்பட்டிருந்தாள்.(29)
இரு வீரர்களும் கரங்களில் வில் வைத்திருப்பதைக் கண்டவரும், அனைத்துக் கடமைகளை அறிந்தவரும், நேருக்கு நேராக இருவர் போரிடும் முறைகளையும் நன்கறிந்தவருமான சரத்வானின் மகன் {கிருபர்}, கர்ணனிடம்,(30) "குந்தியின் இளைய மகனான இந்தப் பாண்டவன், கௌரவக் குலத்தைச் சார்ந்தவன். அவன் உன்னுடன் தனியாகப் போர் புரிவான்.(31) ஆனால், ஓ! பெரும்பலம்வாய்ந்த கரம் கொண்டவனே, நீயும் உனது குலத்தைக் கூற வேண்டும். உனது தந்தை, தாய் மற்றும் எந்த அரசு வழியை அலங்கரிப்பவன் நீ என்பது போன்றவற்றைக் கூற வேண்டும்.(32) இதையெல்லாம் அறிந்த பிறகே, பார்த்தன் {அர்ஜுனன்} உன்னுடன் போரிடுவான், இல்லையென்றால் போரிடமாட்டான். மன்னர்களின் மைந்தர்கள், புகழற்ற குலத்தில் பிறந்த மனிதர்களுடன் நேருக்கு நேர் தனியாகப் போரிட மாட்டார்கள்" என்றார்”.(33)
Karna became the king of Anga | Adi Parva - Section 138 | Mahabharata In Tamil |
அப்போது துரியோதனன், “ஓ! குருவே, அரசகுல ரத்தம் கொண்டவர்கள், வீரர்கள் மற்றும் படைகளுக்குத் தலைமையான படைவீரர்கள் ஆகிய மூன்று வகை மனிதர்கள் அரசுரிமை கோரலாம் என்று சாத்திரங்கள் சொல்கின்றன.(35) பல்குனன் {அர்ஜுனன்} அரசனாக இல்லாத ஒருவனிடம் போர் புரிய விரும்பவில்லை என்றால், நான் கர்ணனை அங்க தேசத்தின் மன்னனாக்குகிறேன்" என்றான்”.(36)
வைசம்பாயனர் சொன்னார், "அந்நொடியிலேயே, தங்க ஆசனத்தில் அமர்த்தப்பட்டு, உலர்ந்த நெல், மலர்கள், நீர், தங்கம் ஆகியவற்றைக் குடங்களில் கொண்டு, மந்திரங்கள் அறிந்த பிராமணர்களால் கர்ணன் அங்க நாட்டு மன்னனாக நிறுவப்பட்டான். அவன் தலைக்கு மேல் அரச குடை பிடிக்கப்பட்டது. அந்தச் சந்தேகமில்லாத வீரனுக்குச் சுற்றி நின்று சாமரம் வீசப்பட்டது.(37,38)
மகிழ்ச்சி நிறைந்த அந்த மன்னன் {கர்ணன்} கௌரவத் துரியோதனனிடம், “ஓ! ஏகாதிபதிகளில் புலியே, நாட்டைப் பரிசாகக் கொடுக்கும் உனக்கு, அதற்குச் சமமாக நான் என்ன கொடுக்கப்போகிறேன்?(39) ஓ! மன்னா, நீ சொல்வது அனைத்தையும் நான் செய்வேன்" என்றான்.
சுயோதனன் {துரியோதனன்} அவனிடம் {கர்ணனிடம்}, "நான் உனது நட்பையே விரும்புகிறேன்" என்றான்.(40)
அதற்குக் கர்ணன், "அப்படியே ஆகட்டும்" என்றான். அவ்விருவரும் மகிழ்ச்சியால் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டு பெரு மகிழ்ச்சி கொண்டனர்” {என்றார் வைசம்பாயனர்}.(41)
ஆதிபர்வம் பகுதி 138ல் உள்ள சுலோகங்கள் : 41
ஆங்கிலத்தில் | In English |