Drupada captured | Adi Parva - Section 140 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 76)
பதிவின் சுருக்கம் : துரோணருக்கு தக்ஷிணையாக துருபதனை சிறைபிடித்துவரச் சென்ற கௌரவர்கள்; கௌரவர்களை விரட்டிய பாஞ்சாலன்; கௌரவர்கள் திரும்பியதும், துருபதனைப் பிடிக்கச் சென்ற நான்கு பாண்டவர்கள்; துருபதனை உயிருடன் கைப்பற்றிய அர்ஜுனன்; துருபதனின் பாதி நாட்டை எடுத்துக் கொண்டு, மீதி நாட்டைக் கொடுத்த துரோணர்; துரோணரைக் கொல்லும் மகனைப் பெறுவதற்காக முயற்சி செய்த துருபதன்...
Drupada captured | Adi Parva - Section 140 | Mahabharata In Tamil |
துரியோதனன், கர்ணன், பெரும் பலம்வாய்ந்தவனான யுயுத்சு, துச்சாசனன், விகர்ணன், ஜலசந்தன், சுலோசனன் ஆகியோரும்,(6) பெரும் ஆற்றலைக் கொண்ட க்ஷத்திரிய இளவரசர்கள் பலரும் சேர்ந்து தாக்குதலில் முதன்மையானவனாக ஒருவருக்கொருவர் போட்டியிட்டுச் சென்றனர்.(7) முதல் தரமான தேர்களில் சென்ற அந்த இளவரசர்கள், தங்கள் குதிரைப்படையைத் தொடர்ந்து எதிரியின் தலைநகருக்குள் {காம்பில்யத்திற்குள்} நுழைந்து, அந்த நகரின் தெருக்களில் முன்னேறினர்.(8) அதே நேரத்தில், அந்தப் பாஞ்சால மன்னன் {துருபதன்}, பெரும் படையைக் கண்டும், பலத்த ஆரவாரத்தைக் கேட்டும், தனது சகோதரர்களுடன் அரண்மனையைவிட்டு வெளியே வந்தான்.(9) மன்னன் யக்ஞசேனன் {துருபதன்} நல்ல படைபலத்துடன் இருந்தாலும், போர்க்குரலை எழுப்பியபடியே தங்கள் கணைகளை மழையெனப் பொழிந்த அந்தக் குரு குலப் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டான்.(10)
எனினும், வெல்லப்பட முடியாத போர்வீரனான அந்த யக்ஞசேனன் {துருபதன்}, தனது வெண்ணிற தேரில் குரு குலத்தவரை அணுகித் தாக்கி, களத்தைச் சுற்றிலும் தனது கடும்கணைகளை மழையெனப் பொழிய ஆரம்பித்தான்.(11) அந்தப் போர் தொடங்குவதற்கு முன்னரே, தங்கள் ஆற்றலில் செருக்கு கொண்ட கௌரவ இளவரசர்களைக் கண்ட அர்ஜுனன், தனது குருவான பிராமணர்களில் சிறந்த துரோணரிடம்,(12) "இவர்கள் தங்கள் ஆற்றலைக் காட்டியபிறகு, நாங்கள் இம்முயற்சியில் இறங்குகிறோம். போரில் இவர்களில் எவராலும் பாஞ்சால மன்னனை அணுக முடியாது" என்றான்.(13) தனது சகோதரர்களால் சூழப்பட்டிருந்த பாவங்களற்ற குந்தியின் மகன் {அர்ஜுனன்}, இப்படிச் சொல்லிவிட்டு, நகரத்திற்கு வெளியே ஒரு மைல் தொலைவில் காத்திருந்தான்.(14) அதே நேரத்தில் துருபதன் கௌரவப் படையைக் கண்டு, அவர்களிடம் விரைந்து, சுற்றிலும் கொடும் கணைகளை மழையெனப் பொழிந்து, குரு படையணிகளைப் பயங்கரமாகப் பீடித்தான்.(15)
போர்க்களத்தில் பெரும் நளினத்தோடு அவன் {துருபதன்} நகர்ந்தான். எந்த ஆதரவுமின்றித் தனித் தேரில் அவன் போரிட்டாலும், கௌரவர்களுக்குப் பல துருபதர்கள் அவர்களை எதிர்த்து நிற்பது போலத் தோன்றிற்று.(16) பாஞ்சாலர்களின் வீடுகளிலிருந்து சங்கு, பேரிகை, துந்துபியின் அச்சமூட்டும் ஒலிகள் கேட்கும் வரை, அந்த ஏகாதிபதியின் கடுமையான கணைகள் அனைத்துப் பக்கங்களிலும் பாய்ந்தன. அந்தப் பெரும்பலம் வாய்ந்த பாஞ்சாலன் சிங்க முழக்கம் செய்தான். அவனது வில்லின் நாணொலி வானுலகையே அடைவது போலக் கேட்டது.(17,18) பாஞ்சாலர்களுடைய வில்லின் நாணொலி ஏற்படுத்திய பெருமுழக்கம் வானத்தையே பிளப்பதைப் போலத் தெரிந்தது. அப்போது, துரியோதனன், விகர்ணன், சுபாஹூ, தீர்க்கலோசனன்,(19) துச்சாசனன் ஆகியோர் கடும் கோபம் கொண்டு, தங்கள் எதிரியின் மீது கணைகளை மழையெனப் பொழிந்தனர். ஆனால், போரில் வெல்லப்பட முடியாத அந்தப் பெரும் வில்லாளியான பிருஷதனின் மகன் {துருபதன்}, எதிரிகளின் கணைகளால் துளைக்கப்பட்டாலும்,(20) ஓ! பாரதா {ஜனமேஜயா}, எதிரிப்படையணிகளைப் பெரும் வலிமையுடன் துன்புறுத்தினான்.
நெருப்புச் சக்கரம் போல அந்தக் களத்தில் சுழன்ற துருபதன், தனது கணைகளால் துரியோதனன், விகர்ணன் மற்றும் பலம்வாய்ந்த கர்ணனையும் மற்றும் பல வீர இளவரசர்களையும், எண்ணற்ற வீரர்களையும், அடித்து, அவர்களின் போர்த் தாகத்தைத் தணித்தான்.(21-22) பிறகு அந்நாட்டுக் குடிமக்கள் அனைவரும், மேகமானது பூமியின் மீது தனது மழைத்துளிகளைப் பொழிவது போலக் கௌரவர்கள் மீது பல்வேறு ஏவுகணைகளைப் பொழிந்தனர்.(23)இளைஞர்களும், முதியவர்களும் களத்திற்குள் நுழைந்து கௌரவர்களைப் பெரும்பலத்துடன் தாக்கினர்.(24) பிறகு, ஓ! பாரதா, போர் தங்களுக்கெதிராக உக்கிரமடைவதைக் கண்டக் கௌரவர்கள், போர் செய்வதை விடுத்துப் பாண்டவர்களை நோக்கி ஓடினர். பாண்டவர்கள், தோற்றவர்களின் பயங்கரமான கதறல்களைக் கேட்டு,(25) துரோணரை வணங்கி, தங்கள் தேர்களில் ஏறினர். அர்ஜுனன் அவசரமாய் யுதிஷ்டிரனை அழைத்துப் போரில் அவன் ஈடுபட வேண்டாம் என்று சொல்லித் தடுத்துவிட்டு, விரைவாக முன்னேறினான். அவன் தனது தேர்ச்சக்கரங்களுக்குக் காவலாய் மாத்ரியின் மகன்களை (நகுலன், சகாதேவன் ஆகியோரை) நியமித்தான். போரில் எப்போதும் முன்னணியில் நின்று போரிடும் பீமசேனன் அந்தப் படைகளுக்கு முன்பாகக் கையில் கதையுடன் ஓடினான்.(26,27)
தனது சகோதரர்களுடன் சென்ற அந்தப் பாவங்களற்ற அர்ஜுனன், எதிரிகளின் முழக்கத்தைக் கண்டு, அவர்களை நோக்கி முன்னேறி, அந்த முழுக்களத்தையே தன் தேர்ச்சக்கரங்களின் ஒலியால் நிரப்பினான்.(28) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான பீமன், மகரம் ஒன்று கடலுக்குள் நுழைவதைப் போல, கையில் கதாயுதத்துடன் பாஞ்சாலர்களின் படைக்குள் புகுந்து, புயலால் கலங்கிய சமுத்திரமெனக் கூச்சலிட்டு, இரண்டாவது எமனாகக் காட்சியளித்தான். கையில் கதையுடனிருந்த பீமன், எதிரிகளின் யானைப்படையை நோக்கி முன்னேறினான். போர்த்திறன் வாய்ந்த அர்ஜுனன், தனது கரத்தின் பலத்தால் அந்த எதிரிப் படையைத் தீவிரமாகத் தாக்கிய அதே நேரத்தில், பீமன், பெரும் எமனைப் போலத் தனது கதையைக் கொண்டு யானைகளைக் கொல்லத் தொடங்கினான்.(29-31) பீமன், மலையை நிகர்த்த அந்தப் பெரும் விலங்குகளைக் கதையால் அடித்து, அவற்றின் தலைகளைச் சிதறடித்தான். இரத்த ஊற்றில் நனைந்த அவை, இடியால் தகர்ந்த மலைப்பாறைகள் போலத் தரையில் விழுந்தன.(32) பாண்டவர்கள், ஆயிரக்கணக்கான யானைகளையும், குதிரைகளையும், ரதங்களையும் தரையில் விழ வைத்தனர். பல காலாட்படை வீரர்களையும், பல தேர் வீரர்களையும் கொன்றனர்.(33) உண்மையாக, கானகத்தில் ஒரு மேய்ப்பன் ஒரு தடியை வைத்துக் கொண்டு எண்ணிலடங்கா மாடுகளை எளிதாக ஓட்டுவதுபோல, விருகோதரனும் {பீமனும்}, எதிரிகளின் பல தேர்களையும், யானைகளையும் ஓட்டிச்சென்றான்.(34) அதேநேரத்தில் பரத்வாஜரின் மகனுக்கு {துரோணருக்கு} நன்மையை விரும்பிய பல்குனன் {அர்ஜுனன்}, பிருஷதனின் மகனை {துருபதனை} கணை மழையால் தீவிரமாகத் தாக்கி, அவன் அமர்ந்திருந்த யானையிலிருந்து அவனை விழவைத்தான்.(35)
ஓ! ஏகாதிபதியே, யுகத்தின் முடிவில் அனைத்தையும் எரிக்கும் கடும் நெருப்பைப் போல இருந்த அர்ஜுனன், குதிரைகளையும், தேர்களையும், யானைகளையும் ஆயிரக்கணக்கில் தரையில் வீழ்த்தினான்.(36) பாண்டவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும், பல்வேறு வகையான ஆயுதங்களின் மழையால் அவனை எதிர்கொண்டனர்.(37)
அவர்கள் பெருங்குரலெழுப்பி அர்ஜுனனுடன் மூர்க்கமாகப் போரிட்டனர். பார்வைக்கு அந்தப் போர் கடுமையானதாகவும் பயங்கரமானதாகவும் தெரிந்தது. எதிரிகளின் குரலைக்கேட்ட இந்திரனின் மகன் {அர்ஜுனன்} பெரும் கோபம் கொண்டு,(38) எதிரிகள் மீது தனது அடர்த்தியான கணைகளை மழையெனப் பொழிந்து, புத்துயிரூட்டப்பட்ட பலத்துடன் கடுமையாகப் போரிட்டான்.(39) அவன் கணைகளைத் தொடர்ந்து செலுத்திக் கொண்டே இருந்ததால், அந்த நேரத்தில் அர்ஜுனனைக் கண்டவர்கள், கணையை அவன் நாணில் பூட்டுவதற்கும், அதைத் தொடுப்பதற்கும் உள்ள இடைவெளியைக் காணவில்லை.(40) அங்கே எழுந்த குரல்கள் பேரொலி கொண்டவையாக இருந்தன. சில குரல்கள் உற்சாக அங்கீகரிப்பாகவும் இருந்தன. அப்போது, பாஞ்சால மன்னன் தனது தளபதி சத்தியஜித்துடன், அர்ஜுனனை நோக்கி, சம்பராசுரன் {சம்பரன்} தேவர்த்தலைவனை நோக்கி வருவது போல வந்தான். அர்ஜுனன் அந்தப் பாஞ்சால மன்னனைத் தனது கணை மழையால் மறைத்தான்.(41,42)
அப்போது பாஞ்சாலர்களின் அணியில், தலைமை யானையை எதிர்த்து வரும் சிங்கத்தைக் கண்ட மற்ற யானைகளின் பிளிறல் போல ஒரு பயம் கலந்த கூச்சல் எழுந்தது.(43) பாஞ்சால மன்னனைச் சிறைப்பிடிக்க வரும் அர்ஜுனனைக்கண்ட பெரும் வீரம் கொண்ட சத்யஜித், அவனை நெருங்கிச் சென்று தாக்கினான்.(44) இந்திரனையும், அசுரன் விரோசனனின் மகனையும் {பலிச் சக்கரவர்த்தியையும்} ஒத்திருந்த அந்த இரு வீரர்களும் போருக்காக ஒருவரையொருவர் விரைவாக அணுகி ஒருவர் படையை மற்றவர் கலங்கடித்தனர்.(45) பிறகு அர்ஜுனன் பெரும் பலத்துடன் ஆற்றல்வாய்ந்த பத்து கணைகளால் சத்தியஜித்தைத் துளைத்தான். இதைக்கண்ட பார்வையாளர்கள் ஆச்சரியமடைந்தனர்.(46) ஆனால் சத்தியஜித்தோ, நேரத்தை வீணடிக்காமல் நூறு கணைகளால் அர்ஜுனனைக் கடுமையாகத் தாக்கினான். பிறகு நகர்வதில் நளினமும், வேகமும் கொண்ட, அந்தப் பெரும் தேர்வீரனான அர்ஜுனன், இப்படிக் கணைகளின் மழையால் மறைக்கப்பட்ட போது, தனது கணைகளின் பலமும், வேகமும் கூடுவதற்காகத் தனது வில்லின் நாணை உருவித் தேய்த்தான். அப்போது எதிரியின் வில்லை இரண்டாகப் பிளந்த அர்ஜுனன், பாஞ்சால மன்னனை நோக்கி விரைந்தான்.(47,48) ஆனால் சத்தியஜித் இன்னும் விரைவாக மேலும் கடுமையான வில்லை எடுத்து, பார்த்தனையும் {அர்ஜுனனையும்}, அவனது தேரையும், அவனது தேரோட்டியையும், குதிரைகளையும் தனது கணைகளால் துளைத்தான்.(49)
இப்படிப் பாஞ்சால வீரனால் போரில் கடுமையாகத் தாக்கப்பட்டவனும், எதிரிகளை மன்னிக்காதவனுமான அர்ஜுனன், அவனை {சத்தியஜித்தை} விரைவாகக் கொல்ல விரும்பி, எண்ணற்ற கணைகளால் எதிரியின் குதிரையையும், கொடியையும், வில்லையும், வில்லைப் பிடித்த (இடது) கையையும், தேரோட்டியையும், தேரின் பின் இருந்த பணியாளையும் துளைத்தான். தனது விற்கள் தொடர்ந்து இரண்டாகப் பிளக்கப்படுவதையும்,(50,51) குதிரைகள் கொல்லப்படுவதையும் கண்ட சத்தியஜித், போரை நிறுத்தித் திரும்பினான். தனது தளபதி தாக்குதலில் இருந்து பின்வாங்கியதைக் கண்ட பாஞ்சால மன்னன் {துருபதன்}, அந்தப் பாண்டவ இளவரசன் {அர்ஜுனன்} மீது, தானே கணைகளின் மழையைப் பொழியத் தொடங்கினான். பிறகு, வெற்றியால் அலங்கரிக்கப்பட்ட வீரர்களில் முதன்மையான அந்த அர்ஜுனன், கடுமையாகப் போரிடத் தொடங்கி,(52,53) எதிரியின் வில்லை இரண்டாகப் பிளந்து, அவனது கொடிக்கம்பத்தை வீழ்த்தி, அவனது குதிரைகளையும், தேரோட்டியையும் ஐந்து கணைகளால் துளைத்தான்.(54) பிறகு தனது வில்லை ஒரு புறமாகத் தூக்கியெறிந்த அர்ஜுனன், அம்பறாத்தூணியை எடுத்து, அதிலிருந்த முனை அகன்ற கொடுவாளை எடுத்து, உரக்க முழங்கி,(55) திடீரெனத் தனது தேரில் இருந்து எதிரியின் தேருக்குக் குதித்தான். அங்கே அச்சமற்று நின்று, கடலின் நீரைக் கலங்கடித்து, பெரும்பாம்பைப் பிடிக்கும் கருடனைப் போல, துருபதனைச் சிறைப் பிடித்தான். இந்தக் காட்சியைக் கண்ட பாஞ்சாலப் படையினர் பல திசைகளிலும் தப்பி ஓடினர்.(56,57) பிறகு இருதரப்பு படைகளுக்கெதிரேயும் தனது கரத்தின் பெரும்பலத்தை வெளிப்படுத்தி அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, உரத்த சிங்க முழக்கம் செய்து, பாஞ்சாலர்களிடமிருந்து வெளியே வந்தான்.(58) அவன் (சிறைபிடிக்கப்பட்டவனுடன்) திரும்பி வருவதைக் கண்ட இளவரசர்கள் துருபதனின் தலைநகரை நிர்மூலமாக்கத் தொடங்கினர்.(59)
அவர்களிடம் அர்ஜுனன், "ஏகாதிபதிகளில் சிறந்த இந்தத் துருபதர், குரு குல வீரர்களின் உறவினனாவார். எனவே, ஓ! பீமரே, அவரது வீரர்களைக் கொல்லாதீர். நமது குருவுக்கான காணிக்கையை மட்டும் நாம் கொடுப்போம்" என்றான்".(60)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ! மன்னா, இப்படி அர்ஜுனனால் தடுக்கப்பட்ட பீமசேனன், தனது போர்ப்பயிற்சியில் {இந்தப் போரினால்} நிறைவடையவில்லை என்றாலும், எவரையும் கொல்லாமல் திரும்பினான்.(61) ஓ! பாரதக் குலத்தில் காளையே {ஜனமேஜயா}, பிறகு அந்த இளவரசர்கள் சிறைபட்ட துருபதனை அவனது நண்பர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் அழைத்துச் சென்று, துரோணரிடம் ஒப்படைத்தனர்.(62) அவமதிக்கப்பட்டு, செல்வம் பறிக்கப்பட்டு, முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட துருபதனைக் கண்ட துரோணர், அந்த ஏகாதிபதியுடனான பழைய பகையை நினைத்து, அவனிடம்,(63) "உன் அரசும், உனது தலைநகரமும் என்னால் நிர்மூலமாக்கப்பட்டன. ஆனால் உன் உயிர் உன் எதிரியை நம்பி இப்போது இருந்தாலும், அதற்காக நீ அஞ்சாதே. இப்போது நீ (என்னுடனான) உனது நட்பை மீட்டுயிர்ப்பிக்க விரும்புகிறாயா?" என்று கேட்டார்.(64) இதைச் சொல்லிச் சிறிது புன்னகைத்து மறுபடியும், "வீர மன்னா! உனது உயிருக்கு அஞ்சாதே! பிராமணர்களாகிய நாங்கள் எப்போதும் மன்னிப்பவர்களே.(65) ஓ! க்ஷத்திரியக் காளையே {துருபதா}, குழந்தைப் பருவத்திலிருந்து உன்னுடன் ஆசிரமத்தில் விளையாடியதால், நான் உன்னிடம் கொண்ட பாசமும், அன்பும் வளர்ந்தே வந்திருக்கிறது.(66) எனவே, ஓ! மன்னா, நான் உனது நட்பை மறுபடியும் கேட்கிறேன். உனக்கு ஒரு வரமாக, (முன்பு உனதாக இருந்த) பாதி நாட்டைக் கொடுக்கிறேன்.(67) மன்னன் அல்லாதவன் ஒரு மன்னனுக்கு நண்பனாக இருக்க முடியாது என்று நீ முன்பு சொன்னாய். ஓ! யக்ஞசேனா {துருபதா}, அதனாலேயே நான் உன் நாட்டில் பாதியை நான் வைத்துக் கொள்கிறேன்.(68) பாகீரதிக்கு {கங்கை ஆறு} தெற்கேயுள்ள நாட்டுக்கு நீயே மன்னன். அதே வேளையில், அந்த நதிக்கு வடக்கே இருக்கும் நாட்டுக்கு நான் மன்னன். ஓ! பாஞ்சாலா {துருபதா}, உனக்கு விருப்பமிருந்தால், என்னை உனது நண்பனாக அறிந்து {ஏற்றுக்} கொள்வாயாக" என்றார்.(69)
இந்த வார்த்தைகளைக் கேட்ட துருபதன், "உன்னத ஆன்மாவையும், பெரும் ஆற்றலையும் கொண்டவர் நீர். எனவே, ஓ! பிராமணரே {துரோணரே}, நீர் செய்யும் இச்செயலால் நான் ஆச்சரியமடையவில்லை. நான் உம்மிடம் பெரும் மனநிறைவு கொண்டேன். நான் உம்மிடம் அழியா நட்பை விரும்புகிறேன்" என்றான்".(70)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அதன்பிறகு, ஓ! பாரதா, துரோணர் பாஞ்சால மன்னனை சில வழக்கமான மரியாதைகளுடன் மகிழ்ச்சியாக விடுவித்து, பாதி நாட்டையும் அவனுக்கு அளித்தார்.(71) அன்றிலிருந்து துருபதன், கங்கைக் கரையில் பல நகரங்களுடன் கூடிய மகந்தி மாகாணத்தில் உள்ள காம்பில்யத்தில் கவலையுடனே வசித்து வந்தான்.(72) துரோணரிடம் பெற்ற தோல்விக்குப் பிறகு, துருபதன், சர்மண்வதி ஆற்றின் கரை வரை இருந்த தென் பாஞ்சால நாட்டை ஆட்சி செய்தான்.(73) பிரம்மசக்தியில் {ஆன்ம பலத்தில்} தாழ்ந்தவனாக இருக்கையில், வெறும் க்ஷத்திரிய பலத்தால் மட்டுமே துரோணரை வெல்லமுடியாது என்று நினைத்த துருபதன்,(74) (தனது பிராமண எதிரியை அடக்க) ஒரு மகனைப் பெறுவதற்காக உலகம் முழுவதும் திரிந்தான். அதே நேரத்தில், துரோணர் அஹிச்சத்திராபுரியிலேயே தொடர்ந்து வசிக்கலானார்.(75) ஓ! மன்னா, இப்படியே நகரங்களும், பட்டணங்களும் அடங்கிய அஹிச்சத்திராபுரி அர்ஜுனனால் அடையப்பட்டு, துரோணருக்கு அளிக்கப்பட்டது" {என்றார் வைசம்பாயனர்}.(76)
ஆதிபர்வம் பகுதி 140ல் உள்ள சுலோகங்கள் : 76
ஆங்கிலத்தில் | In English |