Dhritarashtra lost his sleep | Adi Parva - Section 141 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 77)
பதிவின் சுருக்கம் : இளவரசனாகப் பட்டமேற்றுக் கொண்ட யுதிஷ்டிரன்; பலராமனிடம் கதாயுத்தம் பயின்ற பீமசேனன்; அர்ஜுனனுக்குப் பிரம்மசிரஸ் என்ற ஆயுதத்தைக் கொடுத்த துரோணர்; திக்விஜயம் செய்த பீமார்ஜுனர்கள்; பாண்டவர்களின் வளர்ச்சியைக் கண்டு தூக்கமிழந்த திருதராஷ்டிரன்...
Dhritarashtra lost his sleep Adi Parva - Section 141 Mahabharata In Tamil |
[1] பாண்டவர்களுக்கு பலராமனும், கிருஷ்ணனும் ஏற்கனேவே அறிமுகமாகிவிட்டனர் என்பது இங்கே தெரிகிறது.
அர்ஜுனன், தனது (ஆயுதங்களின் மீதான) உறுதியான பிடியாலும், நகர்வதில் உள்ள நளினத்தாலும், குறியில் கச்சிதத்தாலும், க்ஷுரம், நாராசம், பல்லம், விபாதை போன்ற நேரான, வளைந்த மற்றும் கனமான ஆயுதங்களில் திறமை பெற்றிருந்ததாலும், பெரிதும் கொண்டாடப்பட்டான். துரோணர், "அர்ஜுனனுக்கு நிகராகக் கரங்களின் நளினமும், நிபுணத்துவமும் கொண்ட ஒருவனும் உலகத்தில் இல்லை" என்று உறுதிகூறினார்.(6,7)
ஒரு நாள், துரோணர் கூடியிருந்த கௌரவ இளவரசர்களின் முன்னிலையில் அர்ஜுனனிடம், "அகஸ்தியருக்கு, அக்னிவேசர் என்ற பெயரில் ஆயுத அறிவியல் பயிலும் சீடர் ஒருவர் இருந்தார். அவர் எனக்குக் குருவாகவும், நான் அவருக்குச் சீடனாகவும் இருந்தோம். எனது ஆன்மத் தகுதியால், நான் அவரிடமிருந்து, இடியைப் போன்ற, முழு உலகத்தையும் உட்கொள்ளும் சக்தி கொண்ட, பொய்க்காத ஆயுதமான பிரம்மசிரஸ் என்ற ஆயுதத்தை அடைந்தேன். அந்த ஆயுதமானது, ஓ! பாரதா {அர்ஜுனா}, எனது {நான் இப்போது செய்யப்போகும்} இந்தச் செயலால், இப்போதிருந்து, சீடனுக்குச் சீடன் பெயர்ந்து கொண்டே இருக்கும்.(8-10) அதை எனக்குக் கொடுக்கும்போது எனது குரு என்னிடம், “ஓ! பரத்வாஜரின் மகனே {துரோணா}, இந்த ஆயுதத்தை எப்போதுமே நீ மனிதர்கள் மீது ஏவக்கூடாது. குறிப்பாக சக்தி குறைந்தவர்கள் மீது ஏவவே கூடாது" என்று சொன்னார்.(11) ஓ! வீரனே {அர்ஜுனா}, நீ யாரும் பெறமுடியாத இந்தத் தெய்வீக ஆயுதத்தை இப்போது அடைந்திருக்கிறாய். ஆனால் முனிவரின் (அக்னிவேசரின்) கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பாயாக.(12) இங்கே பார் அர்ஜுனா, இப்போது உனது சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நீ உனது ஆசாரியனுக்குரிய கூலியைக் (தட்சணையைக்) கொடுப்பாயாக" என்றார். இதைக்கேட்ட அர்ஜுனன், தனது குரு என்ன கேட்டாலும் தருவதாக வாக்களித்தான்.(13)
அதற்குக் குரு, “ஓ! பாவங்களற்றவனே {அர்ஜுனா}, நான் உன்னுடன் போரிடும் போது, நீயும் என்னுடன் போரிட வேண்டும்" என்று கேட்டார். அந்தக் குரு இளவரசர்களில் காளை தனது வார்த்தைகளால் அதற்கு உறுதி கூறி,(14) துரோணரின் பாதத்தைத் தொட்டு, வடக்கு நோக்கிச் சென்றான். "ஆழி சூழ் உலகத்தில் அர்ஜுனனுக்கு நிகரான வில்லாளி இல்லை" என்ற சொல் உலகமெங்கும் எதிரொலித்தது {பரவியது}.(15)
நிச்சயமாகத் தனஞ்சயன் கதாயுத்தமாகட்டும், வாட்போராகட்டும், தேரிலிருந்து வில்லைப் பயன்படுத்துவதாகட்டும், எல்லாவற்றிலும் அற்புதமான திறமைபெற்றிருந்தான். சகாதேவன், கடமைகள் மற்றும் நீதிகளின் அறிவியலைத் தேவர்களின் ஆன்மிகத் தலைவனிடமிருந்து (பிருஹஸ்பதி) பெற்றுத் தொடர்ந்து தனது சகோதரர்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்தான். தனது சகோதரர்களுக்கு அன்பான நகுலன், துரோணரால் பயிற்சி கொடுக்கப்பட்டு, சிறந்த வீரனாகவும், பெரும் தேர்வீரனாகவும் (அதிரதனாகவும்) இருந்தான். கந்தர்வர்களால் படையெடுக்கப்பட்டும், தொடர்ந்து மூன்று வருடங்கள் வேள்வி செய்த பெரும் சௌவீரனைக் கொல்லும் அளவுக்கு, அர்ஜுனனும் மற்றவர்களும் பெரும் பலசாலிகளாகினர். பாண்டுவாலேயே அடக்கமுடியாத அந்த யவனர்களின் {சௌவீர} அரசனை, அர்ஜுனன் அடக்கினான்.(16-21)
மறுபடியும், எப்போதும் குரு குலத்தவரை அவமதித்தே வந்த சௌவீரர்களின் [2] மன்னனான பெரும் வீரம் கொண்ட விபுலனைப் புத்திசாலியான அர்ஜுனன் {தனது} பலத்தின் எல்லையை உணர வைத்தான் {அவனைக் கொன்றான்}. அர்ஜுனன், திடமாகப் போரிட்ட தத்தாமித்ரன் என்று அழைக்கப்பட்ட சௌவீர மன்னன் சுமித்திரனைத் (அவனது தற்பெருமையைத்) தனது கணைகளால் நொறுக்கினான். பீமனுடைய துணையைக் கொண்டு, தனித் தேரில் சென்ற அந்த மூன்றாவது பாண்டவன் {அர்ஜுனன்}, பத்தாயிரம் தேர்களுடன் இருந்த கிழக்கு நாடுகளின் மன்னர்களை அடக்கினான்.(22,23) தனஞ்சயன் {அர்ஜுனன்}, அதே போலவே தனித் தேரில் சென்று தெற்கு நாடுகளையும் குரு குலத்தவரின் அரசுக்கு பெரும் கப்பம் கட்ட வைத்தான்.(24) இப்படியே அந்த மனிதர்களில் முதன்மையானவர்களான சிறப்புமிக்கப் பாண்டவர்கள், மற்ற மன்னர்களின் பகுதிகளை வெற்றிக் கொண்டு, தங்கள் நாட்டின் {ஹஸ்தினாபுரத்தின்} எல்லைகளை விரிவுபடுத்தினர். அந்தப் பெரும்பலம்வாய்ந்த வில்லாளிகளின் பெரும் ஆற்றலையும், பலத்தையும் கண்ட மன்னன் திருதராஷ்டிரனுக்குப் பாண்டவர்கள் மீது வைத்திருந்த நல்லெண்ணம் விஷமாகி, அன்றிலிருந்து அவர்களைக் குறித்துக் கவலை கொண்டு, தூக்கமின்றி இருந்தான்" (என்றார் வைசம்பாயனர்}.(25-27)
[2] சௌவீரம் என்ற பெயரில் 12 இளவரசர்களால் ஆளப்பட்ட 12 நாடுகள் சிந்து நதிக்கரையோரம் இருந்தன. சௌவீரம் என்றால் நூறு வீரர்களின் அரசு என்று பொருள். ஜெயத்ரதன் அவர்களுக்கெல்லாம் தலைவனாக இருந்தான். வனபர்வத்தின் பகுதி 263ல் ஜெயத்தரன் திரௌபதியிடம் அவர்களின் பெயர்களை வரிசையாகக் கூறுகின்றான். வலைத்தளத்தில் http://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section263.html என்ற சுட்டியில் அதைக் காணலாம்.
ஆதிபர்வம் பகுதி 141ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English |