எழுத்தாளர் திரு.ஜெயமோகன் |
நண்பர்களே!
முழு மஹாபாரதம் குறித்து ஒரு மதிப்புரை கேட்டு திரு. ஜெயமோகன் அவர்களுக்கு மின்மடலொன்று அனுப்பியிருந்தேன். அந்த எனது மடலையும், அதற்கு திரு.ஜெயமோகன் அவர்களின் பதில் மடலையும் கீழே தருகிறேன். தனிப்பட்ட முறையில் திரு.ஜெயமோகன் அவர்கள் எனக்குப் பதிலுரைத்திருந்தாலும், அதை இத்தளத்தில் பகிர்ந்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று கருதி அதை கீழே தருகிறேன்.
***************************************
திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
ஒரு முறை,
நீங்கள் யார் என்றே தெரியாமல் விஷ்ணுபுரம் புத்தகம் வாங்கினேன். ஐம்பது
பக்கங்கள் படித்திருப்பேன். அதையும், நான் மறுபடி மறுபடி படிக்க
வேண்டியிருந்தது. உங்கள் வார்த்தைகளில் அவ்வளவு நிறை இருந்தது. ஒரு
வார்த்தையை படிக்காமல் விட்டாலும், நான் கண்ட மனக்காட்சியில் ஒரு காட்சி
வெட்டபட்டதுபோல உணர்ந்து. மறுபடியும் மறுபடியும் படித்த பக்கங்களையே
படித்துக் கொண்டிருந்தேன். அப்போது யார் இந்த எழுத்தாளர், யார் இவர்,
வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறாரே என்று நினைத்துக் கொள்வேன்.பின்பு பல காலம் கழித்து உங்கள் வலைத்தளத்தைக் கண்டுபிடித்தேன். அதில் உள்ள கதைகள் பெரும்பாலனவற்றைப் படித்திருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் படித்துவிட்டு உங்களுக்கு மறுமொழி கூற
வேண்டும் என்று நினைப்பேன். இருப்பினும், அதில் ஒரு தயக்கம் இருந்து கொண்டே
இருந்தது. ஆனால், என்னை அறியாமலேயே உங்களுடன் எனக்கு ஒரு தொடர்பு கிடைத்தது.
நான் முழு மஹாபாரதம் என்ற வலைப்பூவில் கிசாரி மோகன் கங்குலி அவர்களின் The Mahabharata புத்தகத்தை மொழி பெயர்த்து வருகிறேன். அதைப் படித்த ஒரு நண்பர் அதைக்குறித்து உங்களுக்கு ஒரு மின்மடல் அனுப்ப, அதை நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தீர்கள். அதற்கும் நேரடியாக உங்களுக்கு நான் நன்றி சொல்லாமல் என் வலைப்பூவிலேயே நன்றி சொல்லியிருந்தேன். மன்னிக்க வேண்டும்.
நான் முழு மஹாபாரதம் என்ற வலைப்பூவில் கிசாரி மோகன் கங்குலி அவர்களின் The Mahabharata புத்தகத்தை மொழி பெயர்த்து வருகிறேன். அதைப் படித்த ஒரு நண்பர் அதைக்குறித்து உங்களுக்கு ஒரு மின்மடல் அனுப்ப, அதை நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தீர்கள். அதற்கும் நேரடியாக உங்களுக்கு நான் நன்றி சொல்லாமல் என் வலைப்பூவிலேயே நன்றி சொல்லியிருந்தேன். மன்னிக்க வேண்டும்.
அறிமுகம் இல்லாத ஒரு பெரிய மனிதரிடம் எப்படி அணுகுவது என்பதில்
எப்போதும் எனக்குத் தயக்கமே இருந்து வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியே
உங்களை இது வரை அணுகாததும்.
நீங்கள், உங்கள் வாசகர் ஒருவர் எழுதிய கடிதத்தின் மூலம் உங்கள் வலைத்தளத்தில் முழு மஹாபாரதம் வலைப்பூவை ஏற்கனவே அறிமுகப்படுத்திவிட்டீர்கள். அதற்கு நன்றி.
இருப்பினும் அவ்வலைப்பூவில், இதுவரை ஆதிபர்வத்தில் 171 பகுதிகள் மொழி
பெயர்த்துள்ளேன். அவற்றுக்கான உங்கள் மதிப்புரை ஏதேனும் கிடைத்தால் நன்றாக
இருக்கும் என்று கருதியே இக்கோரிக்கை மடலை எழுதுகிறேன்.
கடைசியாக நான் மொழிபெயர்த்த பகுதியைக் காண
http://mahabharatham.arasan. info/2013/08/Mahabharatha- Adiparva-Section171.html என்ற லிங்குக்குச் செல்லலாம்.
ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
நன்றி!
அன்புடன்,
செ. அருட்செல்வப்பேரரசன்
***************************************
அன்புள்ள அருட்செல்வப்பேரரசன்
மொழியாக்கம்
நன்றாக இருக்கிறது. இதுவரை வந்த மொழியாக்கங்களின் பெரிய சிக்கல்கள் இரண்டு.
ஒன்று அவை சம்ஸ்கிருதச் சொற்களை நிறையவே போட்டு ஒருவகை மணிப்பிரவாளமொழியை
கையாண்டிருந்தன. இன்னொன்று சம்ஸ்கிருதச் சொற்றொடர்களின் அமைப்பை அப்படியே
நகல் செய்து ‘யாருடைய கைகளால் அன்னம் கிடைக்கப்பெறுகிறதோ அந்த...’
என்பதுபோன்ற சொற்றொடர்களை உருவாக்கியிருந்தன. ஆகவேதான் அவை சமகால
வாசிப்புக்கு அன்னியமாக உள்ளன
உங்கள் மொழியாக்கம் இன்றைய மொழியில் அமைந்துள்ளது.
ஆகவே இதன் பயன் மிக அதிகம். இணையத்தில் இருப்பதனால் தேவையான பகுதிகளை
எளிதாகத் தேடி வாசிக்க முடிகிறது. இரண்டு விஷயங்களை விதிகளாக
கைக்கொள்ளலாம். ஒன்று, கூடுமானவரை நல்ல சமகால தமிழ்ச்சொற்களைக்
கையாளவேண்டும். இரண்டு, கூட்டுச்சொற்றொடர்களை கூடுமானவரை தவிர்த்து எளிமையான
சொற்றொடர்களை பயன்படுத்தலாம்.
இன்னொரு ஆலோசனை, மகாபாரதப் பகுதிகளுக்குக் கீழே
விவாதங்களைச் சேர்க்கவேண்டாம். இணையதளத்திலேயே அவற்றுக்கு ஒரு தனி இணைப்பு
[ஹைப்பர் லிங்க்] கொடுங்கள். அதில் விவாதங்களை வைத்துக்கொள்ளுங்கள்.
விவாதங்களுக்கு வரும் வினாக்கள் மிக அபத்தமான, ஆரம்பநிலையில் உள்ளன.
மகாபாரதத்துடன் இவற்றையும் வாசிக்க நேர்வது சோர்வளிக்கிறது.
இந்த மகாபாரதப் பக்கங்களுக்கு ஒரு நிரந்தரத்தன்மை
உண்டு. விவாதங்கள் மிகமிகத் தற்காலத்தன்மை கொண்டவை. ஒருகட்டத்தில் இந்த
சில்லறைக்கேள்விகள் மகாபாரத மொழியாக்கத்துக்கே சுமையாக ஆகிவிடக்கூடும்.
மேலும் ஆரம்பக்கட்ட மகாபாரத வாசகர்களை தேவையில்லாமல் திசைதிருப்பவும் இவை
வழிவகுக்கும்.
ஆகவே மகாபாரதப்பகுதிகள் தனியாக, நூலின்
அத்தியாயங்கள் போலவே இருக்கட்டும். கேள்வி பதில்களுக்கு பக்கவாட்டில் ஒரு தனி
வழியை திறந்துவிடுங்கள்
வாழ்த்துக்கள். பெரிய பணி. மகத்தான பணி . நன்றி
ஜெ
***************************************
திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் ஒரு வரைகலைஞனாக இருப்பதால், வெளியே எங்கும் சென்று நான் மொழிபெயர்த்ததைத் தட்டெழுதத் தேவையில்லை. வெளியே எங்கும் சென்று பிளாகரில் பதிவுகளை ஏற்றத்தேவையில்லை. அனைத்தையும் நானே என் வீட்டிலேயே செய்துவிடுவதால் அன்றன்று மொழிபெயர்த்ததை அன்றன்றே பதிவேற்றிவிட முடிகிறது. அதனால் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கத் துணிந்தேன்.
ஆனால்,என்னதான்
நான் மஹாபாரதம் படித்திருந்தாலும், ஒரு சிலர் கேட்கும் கேள்விகளுக்கு, அதை
மறுபடியும் தேடிப் பார்த்துத்தான் பதிலளிக்க வேண்டியுள்ளது. அந்த
நேரத்தில் இன்னும் ஒரு பகுதியை மொழிபெயர்த்துவிடலாம். பணியும் வேகமாக
நிறைவடையும்.
நீங்கள் சொன்ன ஆலோசனைகள் என்ன என்று எனக்குப் புரிகிறது. இருப்பினும் அதை உடனே செய்ய இயலவில்லை. முழு மஹாபாரதம் வலைப்பூவை பிளாகரில் நானே தான் வடிவமைத்துக் கொண்டேன். எனக்கு அதிகம் எச்டிஎம்எல் (HTML) தெரியாது. ஆகையால், நீங்கள் சொன்னவாறு விவாதங்களுக்கென்று தனி பக்கத்தை ஒதுக்க உடனே எனக்குத் தெரியவில்லை.
இருப்பினும் அதுகுறித்து கூகுளில் தேடி, விரைவில் நீங்கள் சொன்னவாறு மாற்றி அமைத்துவிடுவேன். நான் சலிப்படையாதிருக்க மட்டுமல்லாது, பாரதத்தைப் படிக்க வருவோர் சலிப்படையாமல் இருக்கவே அதைச் செய்யப் போகிறேன்.
ஏதோ ஒரு வாசகன் என்று நினையாமல், எனது
வலைப்பூவையும் ஒரு பார்வையிட்டு ஒரு மதிப்புரை தந்தமைக்கு நன்றி. ஏதாவது
நான் பிழை செய்கிறேன் என்று உங்களுக்கு எப்போதாவது பட்டால், என்னைத்
திருத்தத் தயங்க வேண்டாம்.
எனது மொழியாக்கம் தற்காலத் தமிழில் இருக்க வேண்டும் என்றும்
எளிமையாக இருக்க வேண்டும் என்றும் மிகவும் சிரத்தை கொள்கிறேன். முடிந்தவரை
வடமொழி கலவாமல் எழுத முயல்கிறேன். இருப்பினும் தவிர்க்க முடியாத இடங்களில்
வந்து விடுகிறது. இயன்ற வரை இனி கூட்டுச்சொற்களையும் தவிர்க்க முயல்வேன்.
நன்றி.
அன்புடன்,
செ.அருட்செல்வப்பேரரசன்
***************************************
நண்பர்களே!
மேற்கண்ட காரணங்களுக்காக நான் இவ்வலைப்பூவில் உள்ள மறுமொழி பெட்டகத்தை நீக்குகிறேன். உங்களுக்கு ஏதேனும் என்னுடன் கருத்து பரிமாரிக் கொள்ள வேண்டுமென்றால் என்னைத் தொடர என்ற லிங்கில் உள்ள தேர்வுகளில் பல வழிகளில் என்னுடன் தொடர்பு கொள்ளலாம். அல்லது எளிமையான வழியாக மேலே தலைப்புப் பட்டையில் வலது கடைசியில் இருக்கும் தொடர்புக்கு என்ற படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படிவத்தைப் பயன்படுத்தினால், உங்கள் கருத்துகள் எனது மின்னஞ்சலுக்கே (dhevakidtpin@gmail.com) நேரடியாக வந்து சேரும்.
இனி வாசகர்கள் மற்ற தலைப்புகள் குறித்து சிந்தித்துத் தடுமாறாமல் முழு மஹாபாரதத்தை[f சிரமமில்லாமல் படிக்கலாம் என்று நினைக்கிறேன்.
நன்றி.