(சம்பவ பர்வ தொடர்ச்சி)
சந்தனு, "வசுக்களின் குற்றம் என்ன? அபர்வா என்பது யார்? யாருடைய சாபத்தால் வசுக்கள் மனிதர்கள் மத்தியில் பிறந்தனர்? இந்த உனது குழந்தை கங்கதத்தன், மனிதர்களுடன் வாழும்படி என்ன செய்தான்? ஓ ஜானுவின் மகளே, எனக்கு முழுமையாகச் சொல்." என்றான்.
வைசம்பாயணர் தொடர்ந்தார், "இப்படிக் கேட்கப்பட்ட ஜானுவின் தெய்வீக மகள் கங்கை, தனது கணவனான, மனிதர்களில் எருதைப் போன்ற அந்த ஏகாதிபதியிடம், "ஓ பரத குலத்தில் சிறந்தவரே, வருணனால் மகனாகப் பெறப்பட்டவரே வசிஷ்டர், அந்த முனிவர் பிற்காலத்தில் அபர்வர் என்று அறியப்பட்டார். அவரது ஆசிரமம், மலைகளின் மன்னன் மேருவின் மார்பில் வீற்றிருந்தது. அந்த இடம் பல பறவைகளுடனும், மிருகங்களுடனும் புனிதமானதாக இருந்தது. அங்கே எல்லா காலங்களிலும், அந்தந்த காலங்களுக்கு ஏற்ற வகையில் மலர்கள் பூத்துக் குலுங்கும். ஓ பரதகுலத்தில் சிறந்தவரே, அறம்சார்ந்த மனிதர்களில் முன்னவரான அந்த வருணனின் மகன், தனது ஆன்மிக நோன்புகளை இனிய கிழங்குகளும் நீரும் நிறைந்திருந்த அந்தக் கானகத்திலேயே செய்து வந்தார்.