Draupadi entered the amphitheatre! | Adi Parva - Section 187 | Mahabharata In Tamil
(சுயம்வர பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் பாஞ்சாலம் செல்கையில் நடுவில் வியாசரைச்சந்திப்பது; பாஞ்சாலம் சென்று இரந்துண்டு வாழ்ந்து ஒரு குயவன் வீட்டில்வசிப்பது; திரௌபதியின் சுயம்வரத்தை துருபதன் அறிவிப்பது; திரௌபதி மங்கள நீராடி சுயம்வர மண்டபத்திற்கு வருவது; குறியை அடிப்பவர்கள் திரௌபதியின் கரம் பற்றலாம் என்று திருஷ்டத்யும்னன் அறிவிப்பது...
அவர்கள், தலைநகரையும் {தலைநகர் காம்பில்யத்தையும்}, கோட்டையையும் கண்டபிறகு, ஒரு குயவனின் {பானை செய்பவர்} வீட்டில் வசித்தனர்.(6) அவர்கள், இரந்துண்டு வாழும் வாழ்வு முறையை நோற்று, பிராமணத் தொழிலைக் கைக்கொண்டனர். அந்த துருபதனின் தலைநகரில் {காம்பில்யத்தில்} யாரும் அந்த வீரர்களை அடையாளம் காணவில்லை.(7) யக்ஞசேனன் {துருபதன்}, தனது மகளை {திரௌபதியைப்} பாண்டுவின் மகனான கிரீடிக்கு {அர்ஜுனனுக்குக்} கொடுப்பதென்ற ஆசையை மனத்தில் வைத்திருந்தான். ஆனால் அதுகுறித்து அவன் {துருபதன்} யாரிடமும் பேசவில்லை.(8) ஓ ஜனமேஜயா! பாஞ்சால மன்னன் {துருபதன்}, அர்ஜுனனை மனத்தில் கொண்டு, அர்ஜுனனைத்தவிர வேறு யாராலும் நாணேற்ற முடியாத ஓர் உறுதியான வில்லை உண்டாக்கினான்.(9) மன்னன் {துருபதன்} வானத்தில் ஓர் இயந்திரத்தைச் செய்து, அதில் ஒரு குறியையும் இணைத்தான்.(10)
அப்போது துருபதன், "இந்த வில்லில் நாணேற்றி, நன்கு அலங்கரிக்கப்பட்ட இந்தக் கணைகளைக் கொண்டு, மேலே இந்த இயந்திரத்தில் இருக்கும் குறியை அடிப்பவனே எனது மகளை {திரௌபதியைப்} பெறுவான்" என்று சொன்னான் {துருபதன்}".(11)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இவ்வார்த்தைகளைச் சொல்லியே, துருபதன் அந்தச் சுயம்வரத்தை அறிவித்தான். ஓ பாரதா {ஜனமேஜயா}, இதைக்கேட்ட பிற நாடுகளின் மன்னர்கள் அவனது {துருபதனது} தலைநகரத்திற்கு {காம்பில்யத்திற்கு} வந்தனர்.(12) அங்கே பல சிறப்பு மிகுந்த முனிவர்களும் அந்தச் சுயம்வரத்தைக் காண வந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, துரியோதனனும், குருக்களும் கர்ணனைத் துணையாகக் கொண்டு அங்கே வந்தனர்.(13) அங்கே பல மேன்மைமிகு பிராமணர்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்திருந்தனர். அங்கு வந்திருந்த ஏகாதிபதிகள் அனைவரும் சிறப்பு மிகுந்த துருபதனால் முறையாக வணங்கி வரவேற்கப்பட்டனர்.(14) சுயம்வரத்தைக் காண விரும்பிய குடிமக்கள், கடல் என ஆர்ப்பரித்து, அந்த அரைவட்ட அரங்கத்தில் கட்டப்பட்டிருந்த மேடைகளில் அமர்ந்தனர்.(15)
அந்த ஏகாதிபதி {துருபதன்}, அந்தப் பெரிய அரங்கினுள் வடகிழக்கு வாயில் வழியாக வந்தான். பல அழகிய அறைகளுடன் இருந்த அந்த அரங்கமே துருபதன் தலைநகரத்திற்கு {காம்பில்யத்திற்கு} வடகிழக்கில், சமதளமான தரை கொண்ட மங்கலமான இடத்தைத் தேர்ந்தெடுத்து அமைக்கப்பட்டது. அந்த அரங்கத்தின் அனைத்துப் புறங்களும் உயர்ந்த சுவர்களுடன், சுற்றிலும் அகழியுடன், ஆங்காங்கே அலங்கார வளைவுகள் கொண்ட வாயில்களுடனும் இருந்தது. பலநிறத் துணிகள் ஆங்காங்கே அலங்காரமாகச் சுவர்களில் தொங்கவிடப்பட்டிருந்தன.(16,17) எக்காளத்தின் ஓசையும், கருப்புக் கற்றாழையின் நறுமணமும் அரங்கத்தை நிரப்பியது. ஆங்காங்கே சந்தனம்தெளிக்கப்பட்டு, மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.(18) உயர்ந்த அறைகளால் சூழப்பட்ட அந்த அரங்கம் முழுவதும் வெண்மையாகக் கைலாச மலையை முட்டி நிற்கும் மேகத்தின் நிறத்தைக் கொண்டிருந்தது.(19) அந்த அரங்கத்தின் சாளரங்களில் {ஜன்னல்களில்}, தங்க இழைகளின் வலைகள் பின்னப்பட்டிருந்தன; சுவர்களில் வைரமும், விலை மதிப்பில்லாக் கம்பளங்களும், துணிகளும் பதிக்கப்பட்டிருந்தன. அதிலிருந்த அனைத்து படிக்கட்டுகளும் மலர் வளையங்களுடனும், மலர் மாலைகளுடனும், அற்புதமான கற்றாழைகளின் நறுமணத்துடன் முழுவதும் வெண்ணிறமாக ஒருகறையும் இல்லாமல் அன்னத்தின் கழுத்தைப் போல இருந்தன. அங்கே வீசிய நறுமணம் ஒரு யோஜனை (எட்டு மைல்கள்) தூரத்திற்கு நுகர முடிந்தது.(20,21)
அந்த அறைகள் ஒவ்வொன்றும் பெரும் கூட்டத்தை உள்ளே அனுமதிக்கும் வகையில் நூறு கதவுகளுடன் இருந்தன. அவை விலைமதிப்பில்லா படுக்கைகளுடனும், கம்பளங்களுடனும், பல உலோகங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, இமயத்தின் முகடுகளைப் போல இருந்தன.(22) அங்கே இருந்த ஏழு அடுக்கு வீடுகளில், துருபதனால் அழைக்கப்பட்டிருந்தவர்களும், தங்கள் மேனியில் பல்வேறு ஆபரணங்களை அணிந்திருந்தவர்களும், ஒருவரை ஒருவர் அழகில் விஞ்சியவர்களுமான பல ஏகாதிபதிகள் அங்கே தங்கினர். அந்த அரங்க மேடையில் அமர்ந்ததவர்களும், அந்த நகரத்திலும், நாட்டிலும் வசிப்பவர்களுமான குடிமக்கள், கிருஷ்ணையைக் {திரௌபதியைக்} காண அங்கே குழுமிய மன்னர்கள், சிங்கங்கள் போன்று பெரும் சக்தி கொண்டு பெரும் ஆன்மாவுடன் அந்த அறைகளில் இருப்பதைக் கண்டனர். ஆட்சி உரிமை பெற்ற உயர்ந்தவர்களான அவர்கள் அனைவரும் கருங்கற்றாழையின் நறுமணக் குழம்பைப் பூசி மணத்துடன் இருந்தனர். பெரும் சுதந்திரத்துடன் அவர்கள் அனைவரும் பிரம்மனை வழிபட்டுத் தங்கள் நாடுகளை அனைத்து எதிரிகளிடம் இருந்தும் காத்தனர். தங்கள் தங்கள் நற்செயல்களின் மூலம் அவர்கள் முழு உலகத்தாலும் விரும்பப்பட்டார்கள்.(23-26)
அந்த அரைவட்ட அரங்கினுள் பாண்டவர்களும் நுழைந்தனர். அவர்கள் பிராமணர்களுடன் அமர்ந்து பாஞ்சால மன்னனின் {துருபதனின்} ஒப்பற்ற செழுமையைக் கண்டனர்.(27) அங்கே கூடியிருந்த இளவரசர்கள், பிராமணர்கள் மற்றும் பிற மனிதர்களின் கூட்டம் மிகவும் மகிழ்ச்சியுடன், நாடக நடிகர்கள் மற்றும் ஆடல் கலைஞர்களின் திறமைகளைக் காட்டும் நிகழ்ச்சிகளைக் கண்டு (தொடர்ச்சியாக அனைத்துவகைச் செல்வங்களையும் பெரும் பரிசாகப் பெற்றதால்) நாளுக்கு நாள் பருக்கத் {குண்டாகத்} தொடங்கினர்.(28) ஓ மன்னா {ஜனமேஜயா}, அது பல நாட்களுக்குத் தொடர்ந்தது. பதினாறாவது நாளில் நிறைந்தது. ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, துருபதனின் மகள் {திரௌபதி}, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, அந்த அரைவட்ட அரங்கினுள் நுழைந்தாள். அவள் விலைமதிப்பற்ற ஆடைகளும், அனைத்து ஆபரணங்களும்பூண்டிருந்தாள். தனது கரங்களில் ஒரு தங்கத் தட்டையும், மலர் மாலையையும் வைத்திருந்தாள்.(29,30)
அப்போது, அந்தச் சந்திர குலத்தின் புரோகிதரும், மந்திரங்கள் அறிந்தவருமான ஒரு புனிதமான பிராமணர், வேள்வி நெருப்பை மூட்டி, தூய்மையாக்கப்பட்ட நெய்யை ஊற்றினார்.(31) அப்படி நெய்யை ஊற்றிய அவர் {பிராமணர்}, அக்னியை நிறைவு கொள்ளச் செய்து, மற்ற பிராமணர்களை மங்கலச் சூத்திரங்களை {மந்திரங்களை} உச்சரிக்க வைத்துச் சுற்றிலும் இசைக்கப்பட்ட இசை வாத்தியங்களை அமைத்தார்.(32) ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, அந்த அரங்கமே அசைவற்று அமைதியானது. மேகத்தைப் போன்றோ, பேரிகையைப் போன்ற ஆழ்ந்த குரலுடைய திருஷ்டத்யும்னன், தனது தங்கையின் {திரௌபதியின்} கரம் பற்றி அந்தக் கூட்டத்திற்கு நடுவில் நின்றான். அப்படி நின்று ஓங்கிய குரலில், மேகத்தின் முழக்கத்தைப் போல, அழகானவார்த்தைகளில் சிறந்த முறையில் பேசினான்.(33,34)
அவன் {திருஷ்டத்யும்னன்}, "கூடியிருக்கும் மன்னர்களே, கேட்பீர்களாக. இதுதான் வில், இதுதான் குறி, இவைதாம் கணைகள். கூரியவையான இந்த ஐந்து கணைகளால், அதோ அந்த இயந்திரத்தில் இருக்கும் துளையின் வழியாக, அதற்கு அப்பால் இருக்கும் குறியை நீங்கள் அடிக்க வேண்டும்.(35) உண்மையாகச் சொல்கிறேன்; நல்ல குலத்தில் பிறந்தவரும், அழகுடன் கூடியவரும் பலம் கொண்டவருமான எவரும், இன்று இந்த அருஞ்செயலைச் சாதித்து, எனது தங்கை கிருஷ்ணையை {திரௌபதியை} தனது மனைவியாக அடையலாம்" என்றான் {திருஷ்டத்யும்னன்}.(36) அங்கே கூடியிருந்த ஏகாதிபதிகளிடம் இப்படிச் சொன்ன அந்தத் துருபதனின் மகன் {திருஷ்டத்யும்னன்}, தனது தங்கையிடம் {திரௌபதியிடம்}, அங்கே கூடியிருந்த பூமியின் {நாடுகளின்} தலைவர்களின் பெயர், குலம் மற்றும் சாதனைகளைச் சொல்லத் தொடங்கினான்" {என்றார் வைசம்பாயனர்}.(37)
ஆங்கிலத்தில் | In English |