Dhrishtadyumna Concealed! | Adi Parva - Section 194 | Mahabharata In Tamil
(சுயம்வர பர்வம் - 09)
பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் வசிக்கும் குயவன் வீட்டில் ஒளிந்திருந்த திருஷ்டத்யும்னன்; பாண்டவர்கள் கொண்டு வந்த பிச்சையை குந்தியின் வழிகாட்டுதல்படி பிரித்துக் கொடுத்துப் பரிமாறிய திரௌபதி; காரியத்தை அறிந்து கொண்டு துருபதனிடம் திரும்பிய திருஷ்டத்யும்னன்; துயரத்துடன் பிதற்றிய துருபதன்...
வைசம்பாயனர் சொன்னார், "குருகுல இளவரசர்கள் (பீமனும், அர்ஜுனனும்) குயவனின் வசிப்பிடத்தை நோக்கி நடந்து செல்கையில், பாஞ்சால இளவரசனான திருஷ்டத்யும்னனும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான்.(1) தனது பணியாட்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு, அந்தக் குயவனின் இல்லத்திற்கு அருகில் ஏதோ ஒரு பகுதியில் பாண்டவர்களுக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டான்.(2) பிறகு, எதிரிகளை அழிப்பவர்களான பீமனும், அர்ஜுனனும், சிறப்புமிகுந்த இரட்டையர்களும், மாலை நேர பிச்சையை முடித்துக் கொண்டு திரும்பி, அனைத்தையும் மகிழ்ச்சியுடன் யுதிஷ்டிரனிடம் கொடுத்தனர்.(3) அப்போது, அன்பான இதயம் கொண்ட குந்தி, துருபதனின் மகளிடம் {திரௌபதியிடம்}, "ஓ இனிமையானவளே, நீ ஒரு பகுதியை முதலில் இதிலிருந்து எடுத்து, தேவர்களுக்கு அர்ப்பணித்து, பிராமணர்களுக்குக் கொடுத்துவிடுவாயாக.(4) உண்ண விரும்புபவர்களுக்கு உண்ணக் கொடுப்பாயாக, நமது விருந்தினர்களாக வருபவர்களுக்குக் கொடுப்பாயாக. மீதத்தை இரு பங்காகப் பிரித்து, ஒரு பங்கை பீமனுக்குக் கொடுப்பாயாக. ஓ இனிமையானவளே, இந்த அழகான நிறம் கொண்ட இளைஞன் {பீமன்} யானைகளின் மன்னனுக்கு நிகராக பெரும் தீனி தின்பவனாவான். மறு பாதியை ஆறு பங்குகளாக இட்டு, இந்த நான்கு இளைஞர்களுக்கும், ஒன்றை எனக்கும் கொடுத்துவிட்டு, ஒன்றை உனக்கும் எடுத்துக் கொள்வாயாக" என்றாள்.(5,6)