Krishna traced Pandavas | Adi Parva - Section 191 | Mahabharata In Tamil
(சுயம்வர பர்வம் - 06)
பதிவின் சுருக்கம் : மன்னர்கள் கோபம் கொண்டு துருபதனைக் கொல்லத் துணிவதும்; பீமனும், அர்ஜுனனும் போருக்குத் துணிந்து நிற்பதை அறிந்து, கிருஷ்ணனும் பலராமனும் பேசிக் கொள்வதும்...
அவர்கள் {அம்மன்னர்கள்}, "நம்மைக் கடந்து, நம் கூட்டத்தைப் புல்லென மதித்துப் பெண்களில் முதன்மையானவளான அவனது மகளை {திரௌபதியை} இந்த பிராமணனுக்கு அளிக்க விரும்புகிறான் இந்தத் துருபதன்.(2) ஒரு மரத்தை நட்டு வைத்து, அது கனி கொடுக்கும் சமயத்தில் அதை வெட்டுகிறான். இந்தப் பாவி நம்மை மதிக்கவில்லை; எனவே நாம் இவனைக் கொல்வோம்.(3) அவனது வயதின் காரணமாக நாம் கொடுக்கும் பெரு மதிப்பையோ, வணக்கத்தையோ பெறும் தகுதி இவனுக்கில்லை. இப்படிப்பட்ட தீய குணங்களுக்காக, அனைத்து மன்னர்களையும் அவமதித்த இந்தப் பாவியை, அவனுடைய மகனுடன் சேர்த்துக் கொல்வோம்.(4) அனைத்து ஏகாதிபதிகளையும் அழைத்து, அவர்களுக்கு அற்புதமான உணவு கொடுத்து உபசரித்துவிட்டு, இறுதியாக நம்மை மதிக்க மறுக்கிறான்.(5)
தேவ சபை போன்ற இந்த மன்னர்கள் கூட்டத்தில், தனக்கு இணையான ஏகாதிபதியாக ஒருவனைக் கூடவா இவன் காணவில்லை?(6) சுயம்வரம் க்ஷத்திரியர்களுக்கானது என்ற வேதத்தின் முடிவு நன்கு அறியப்பட்டது. ஒரு க்ஷத்திரியப் பெண்ணால் கணவனாகத் தேர்ந்தெடுக்கப்பட பிராமணனுக்கு எந்த உரிமையும் இல்லை.(7) மன்னர்களே, இந்தக் கன்னிகை நம்மில் ஒருவனைத் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை எனில், இவளை நெருப்பில் தூக்கிப் போட்டுவிட்டு தத்தமது நாடுகளுக்கு நாம் திரும்புவோம்.(8) இந்த பிராமணனைப் பொறுத்தவரை, இவன் விரும்பாமலோ, பேராசையாலோ {விரும்பியோ விரும்பாமலோ} ஏகாதிபதிகளான நமக்குக் காயத்தை ஏற்படுத்திவிட்டான். இருப்பினும் இவனைக் கொல்லக்கூடாது.(9) நமது நாட்டின் உயிர்கள், செல்வங்கள், மகன்கள், பேரன்கள் இன்னும் என்னென்ன செல்வமெல்லாம் உண்டோ அவை அனைத்தும் இந்த பிராமணர்களுக்காகவே இருக்கின்றன.(10) இருப்பினும் (இவனுக்கு) ஏதாவது செய்தாக வேண்டும். பழிக்கு அஞ்சியோ, ஒவ்வொரு வர்ணத்திற்கும் தனிப்பட்டவையான சிலவற்றைச் சரியாகப் பராமரிக்க எண்ணியோ, இனி நடக்கப் போகும் சுயம்வரங்களில் இது போன்ற முடிவு ஏற்படக் கூடாது" என்றனர்.(11)
ஒருவருக்கு ஒருவர் இப்படிச் சொல்லிக் கொண்ட அந்த ஏகாதிபதிகளில் புலிகள், துருபதனைக் கொல்ல விரும்பி, இரும்புக் கதாயுதங்கள் போன்ற பெரும் ஆயுதங்களுடன் அவனை நோக்கி அங்கும், இங்குமாக விரைந்தனர்.(12) கோபத்துடன் கூடியவர்களான அந்த ஏகாதிபதிகள் அனைவரும், விற்கள் மற்றும் கணைகளுடன் தன்னை நோக்கி வருவதைக் கண்ட துருபதன், அச்சமடைந்தவனாக பிராமணர்களிடம் {அர்ஜுனன் மற்றும் பீமனிடம்} பாதுகாப்பை வேண்டினான்.(13) ஆனால், எதிரிகளைத் தண்டிக்கவல்லவர்களும், பெரும் வில்லாளிகளுமான அந்தப் பாண்டவர்கள் (பீமனும், அர்ஜுனனும்), விரைந்து வரும் அந்த ஏகாதிபதிகளை நோக்கி மதங்கொண்ட மூர்க்கமான யானைகளைப் போல முன்னேறிச் சென்றனர்.(14) விரல்களுக்குக் கையுறை அணிந்த ஏகாதிபதிகள், அந்தக் குரு வம்ச இளவரசர்களிடம் பெரும் கோபம் கொண்டு, பீமனையும், அர்ஜுனனையும் கொல்லத் தங்கள் ஆயுதங்களை உயர்த்திக் கொண்டு விரைந்து சென்றனர்.(15)
செயற்கரிய சாதனைகள் புரிந்தவனும், பலம் வாய்ந்தவனுமான பீமன், வஜ்ரத்தைப் போன்ற பலத்துடன் கூடியவனாகப் பெரும் யானையொன்றைப் போல, அருகிலிருந்த ஒரு மரத்தைப் பிடுங்கி, அதன் இலைகளை உதிர்த்தான்.(16)
வலிய கரங்களைக் கொண்டவனும், எதிரிகளைக் கலங்கடிப்பவனும், பிருதையின் மகனுமான அந்தப் பீமன், கதாயுததாரியான யமனே தனது கடுந்தண்டத்துடன் நிற்பதைப் போல, அம்மரத்துடன், மனிதர்களில் காளையான அர்ஜுனனின் அருகில் நின்றான்.(17) நினைத்துப்பார்க்க முடியாத சாதனைகளைச் செய்தவனும், இயல்புக்குமீறிய நுண்ணறிவைக் கொண்டவனுமான ஜிஷ்ணு, தனது அண்ணனின் அருஞ்செயலைக் கண்டு மிகவும் வியந்தான். இந்திரனுக்கு நிகரான சாதனைகளைச் செய்த அவன், அச்சமனைத்தையும் உதிர்த்துவிட்டு, தங்களைத் தாக்குபவர்களைத் எதிர்கொள்ளத் தயாராக வில்லுடன் நின்றான்.(18)
தெய்வீகப் புத்திக்கூர்மையும், புத்திக்கெட்டாத அருஞ்செயல்களையும் செய்த தாமோதரன் (கிருஷ்ணன்}, ஜிஷ்ணு {அர்ஜுனன்} மற்றும் அவனது அண்ணன் {பீமன்} ஆகியோரின் அருஞ்செயலைக் கண்டு, தனது அண்ணனான பெரும் சக்தி கொண்ட ஹலாயுதனிடம் (பலதேவனிடம் {பலராமனிடம்}},(19) "பெரும்பலம் வாய்ந்த சிங்கத்தின் நடையைக் கொண்டு, கையில் முழுமையாக நான்கு முழ நீளத்திற்குப் பெரும் வில்லை வைத்திருக்கும் அந்த வீரனே அர்ஜுனன். ஓ சங்கர்ஷணரே {பலராமரே} நான் வாசுதேவனாக {வசுதேவரின் மகனாக} இருந்தால், இந்த எனது கணிப்பில் ஐயமேதுமில்லை.(20) வேகமாக மரத்தைப் பிடுங்கி ஏகாதிபதிகளை விரட்டத் தயாராயிருக்கும் மற்றொரு வீரரே விருகோதரர் {பீமர்}. இன்று, இவ்வுலகில் விருகோதரரைத் தவிர வேறு யாரும் போரில் இது போன்ற அருஞ்செயலைச் செய்ய முடியாது.(21) முழுமையாக நான்கு முழ உயரமும், சிங்க நடையும், அடக்கமான நடத்தையும், அழகான நிறமும், பளபளக்கும் நீண்ட மூக்கும் கொண்டு, தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடைய அந்த மற்றொரு இளைஞர், சற்று நேரத்திற்கு முன் அரங்கத்தை விட்டுச் சென்றாரே, அவர் தான் தர்மனின் மகன் {யுதிஷ்டிரர்}.(22) கார்த்திகேயனைப் {முருகனைப்} போன்று இருந்த மற்ற இளைஞர்கள் இருவரும் அஸ்வினி இரட்டையர்களின் மகன்கள் என்று நினைக்கிறேன். பாண்டுவின் மகன்கள் தங்கள் தாய் பிருதையுடன் {குந்தியுடன்}, அந்த அரக்கு மாளிகையில் இருந்து தப்பி விட்டார்கள் என்று நான் கேள்விப்பட்டேன்" என்றான்.(23)
பின்பு, நீரில்லா மேகம் போன்ற {வெண்மையான} நிறம் கொண்ட ஹலாயுதன் {பலராமன்}, தனது தம்பியிடம் {கிருஷ்ணனிடம்}, "இதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்குக் கிட்டிய நற்பேறினாலேயே, நமது தந்தையின் {வசுதேவரின்} சகோதரியான பிருதை {குந்தி},இந்தக் கௌரவ இளவரசர்களில் முதன்மையானவர்களுடன் (மரணத்திலிருந்து) தப்பினாள்" என்றான் {பலராமன்}.(24)
ஆங்கிலத்தில் | In English |