Ma! We have brought alms! | Adi Parva - Section 193 | Mahabharata In Tamil
(சுயம்வர பர்வம் - 08)
பதிவின் சுருக்கம் : 'பிச்சை கொண்டு வந்தோம்' என்று சொல்லிய பீமன் மற்றும் அர்ஜுனனின் வார்த்தைகளைக் கேட்ட குந்தி 'அனைவரும் சேர்ந்து அனுபவியுங்கள்' என்று சொன்னது; யுதிஷ்டிரனும், அர்ஜுனனும் திரௌபதியைக் குறித்து பேசிக் கொண்டது; வியாசர் சொன்னதை நினைவு கூர்ந்து, சகோதரர்கள் அனைவருக்கும் திரௌபதி பொது மனைவி என்று யுதிஷ்டிரன் தீர்மானித்தது; குயவன் வீட்டிற்கு வந்தது கிருஷ்ணன்...
வைசம்பாயனர் தொடர்ந்தார், இப்படித் தனது தாயால் கேட்கப்பட்டவனும், மனிதர்களில் வீரனும், குருகுலக் கொழுந்துகளில் முதன்மையானவனும், புத்திக்கூர்மை உடையவனுமான மன்னன் (யுதிஷ்டிரன்), சிறிது நேரம் சிந்தித்து, குந்தியைத் தேற்றி, தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்},(6) "ஓ பல்குனா {அர்ஜுனா}, உன்னால் யக்ஞசேனி {திரௌபதி} வெல்லப்பட்டாள். எனவே, நீ அவளைத் திருமணம் செய்து கொள்வதே முறையாகும். ஓ எதிரிகளை நிலைத்து எதிர்ப்பவனே, புனித நெருப்பை மூட்டி, முறையான சடங்குகளுடன் அவளது கரத்தைப் பற்றுவாயாக" என்றான் {யுதிஷ்டிரன்}.(7)
இதைக் கேட்ட அர்ஜுனன், "ஓ மன்னா, பாவத்தில் என்னைப் பங்குகொள்ள வைக்காதீர். உமது விருப்பம் அறவிதிகளுக்கு ஏற்புடையதாக இல்லை. அது பாவிகள் பின்பற்றும் வழியாகும். முதலில் நீரும், அதன்பிறகு செயற்கரிய சாதனைகள் செய்பவரான பலம் வாய்ந்த கரங்களும் கொண்ட பீமரும் திருமணம் செய்ய வேண்டும்.(8) அதன்பிறகே நான் செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு, நகுலனும், இறுதியாகப் பெரும் செயல் புரியும் சகாதேவனும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரனே}, விருகோதரரும் {பீமரும்}, நானும், இரட்டையர்களும், ஏன் இந்தக் கன்னிகையும் கூட உமுது கட்டளைக்காக என்றும் காத்திருப்போம்.(9) நிலைமை இப்படி இருக்கும் போது, எதையும் சிந்தித்த பிறகு செய்தல் நலம். நாங்கள் அனைவரும் உமக்குக் கீழ்ப்படிபவர்களே. நீர் விரும்பியவாறு எங்களுக்குக் கட்டளையிடுவீராக" என்றான் {அர்ஜுனன்}".(10)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "மரியாதையும், பாசமும் நிறைந்த ஜிஷ்ணுவின் {அர்ஜுனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்கள் அனைவரும், பாஞ்சால இளவரசியின் மீது தங்கள் பார்வையைச் செலுத்தினர்.(11) அந்தப் பாஞ்சால இளவரசியும் அவர்கள் அனைவரையும் கண்டாள். அந்த இளவரசர்கள் அனைவரும் அந்தச் சிறப்பு மிகுந்த கிருஷ்ணையைப் {திரௌபதியைப்} பார்த்த பிறகு, தங்கள் ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டனர். பிறகு அனைவரும் அமர்ந்து திரௌபதியை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தனர்.(12) உண்மையில், அளவில்லாச் சக்தி கொண்ட அந்த இளவரசர்கள் அனைவரும் திரௌபதியைப் பார்த்த போது, காமதேவன் அவர்களது இதயத்தின் மேல் படையெடுத்து, அவர்களது உணர்வுகளைக் கலங்கடித்தான்.(13) பகட்டான அழகைக் கொண்டவளான அந்தப் பாஞ்சாலியைப் பூமியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மேலாகப் படைப்புக் கடவுள் வடித்திருந்தான். அவளது அழகு அனைத்து உயிர்களையும் கொள்ளையடித்தது.(14) குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தனது தம்பிகளைக் கண்டு, அவர்களின் மனத்தில் என்ன ஓடுகிறது என்பதைப் புரிந்து கொண்டான். அந்த மனிதக் காளை கிருஷ்ண துவைபாயனரின் {வியாசரின்} வார்த்தைகளையும் நினைவுகூர்ந்தான்.(15) அப்போது அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, தம்பிகளுக்கு மத்தியில் ஏற்படும் பிரிவை எண்ணி அஞ்சி, அவர்களிடம், "இந்த அதிர்ஷ்டம் கொண்ட திரௌபதி, நம் அனைவருக்கும் பொது மனைவியாக இருப்பாள்" என்றான் {யுதிஷ்டிரன்}".(16)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பாண்டுவின் மகன்கள், தங்கள் அண்ணன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அவற்றை மனத்தில் போட்டுச் சுழற்றி பெரும் மகிழ்ச்சியை அடைந்தனர்.(17) (கிருஷ்ணன், தான் சுயம்வரத்தில் கண்ட ஐவரும் குரு குல வீரர்களாக இல்லாமல் இருக்க முடியாது என ஐயம் கொண்ட) விருஷ்ணி குலத் தலைவன், ரோஹிணியின் மகனுடன் (பலதேவனுடன் {பலராமனுடன்}) அந்தமனிதர்களில் முதன்மையானவர்கள் வசித்திருக்கும் குயவனின் இல்லத்திற்கு வந்தான்.(18) கிருஷ்ணனும், பலதேவனும் அங்கே அந்தக் குயவனின் இல்லத்திற்கு வந்ததும், நல்ல உடற்கட்டும், நீண்ட கரங்களும் கொண்ட அஜாதசத்ருவை (யுதிஷ்டிரனைச்) சுற்றி அவனது தம்பிகள் நெருப்பின் பிரகாசத்தோடு அமர்ந்திருப்பதைக் கண்டனர்.(19)
அப்போது, வாசுதேவன் {கிருஷ்ணன்} அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையான, அஜமீட குலத்தில் வந்த குந்தி மைந்தனின் {யுதிஷ்டிரனின்} பாதங்களைத் தொட்டு, "நான் கிருஷ்ணன்" என்றான்.(20) யுதிஷ்டிரனை அணுகிய ரோஹிணியின் மகனும் {பலராமனும்} அதையே செய்தான் {பாதம் பணிந்தான்}. கிருஷ்ணனையும், பலதேவனையும் கண்ட பாண்டவர்கள் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.(21) ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அதன்பிறகு, அந்த யது குலத் தலைவர்கள், தங்கள் தந்தையின் சகோதரியான குந்தியின் பாதத்தையும் தொட்டனர்.(22) குருகுலத்தின் முதன்மையான அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, கிருஷ்ணனைக் கண்டு நலம் விசாரித்த பிறகு, "ஓ வாசுதேவா {கிருஷ்ணா}, மாற்றுருவில் வாழ்ந்து வரும் எங்களை நீ எவ்வாறு கண்டுபிடித்தாய்?" என்று கேட்டான்.(23)
அதற்கு வாசுதவேன் {கிருஷ்ணன்} சிரித்துக் கொண்டே, "ஓ மன்னா, நெருப்பை மறைத்தாலும், அஃதை எளிதில் அறிய முடியும். பாண்டவர்களைத் தவிர இத்தகு வலிமையை வேறு எவரால் வெளிப்படுத்த முடியும்?(24) எதிரிகள் அனைவரையும் தாக்குப்பிடிப்பவர்களே, பாண்டுவின் மகன்களே, உங்களது நற்பேறால் மட்டுமே நீங்கள் அந்தக் கடும் நெருப்பிலிருந்து தப்பினீர்கள். உங்களது நற்பேறால் மட்டுமே திருதராஷ்டிரனின் தீய மகனும், அவனது ஆலோசகர்களும், அக்காரியத்தில் வெற்றியடைய முடியவில்லை.(25) அருளப்பட்டிருப்பீராக! குகையில் இருக்கும் நெருப்பானது படிப்படியாக வளர்ந்து, சுற்றிலும் பரவுவது போல வளமையைப் பெருக்கிக்கொள்வீராக. எந்த ஏகாதிபதியும் உம்மை அடையாளம் காணாதபடி, நாங்கள் எங்கள் முகாமுக்குச் செல்கிறோம்" என்று சொல்லி, யுதிஷ்டிரனிடம் விடைபெற்று, குன்றாத வளமையுள்ள கிருஷ்ணன், தன்னுடன் பலதேவனையும் அழைத்துக் கொண்டு, குயவனின் வசிப்பிடத்தில் இருந்து விரைவாக வெளியேறினான்" {என்றார் வைசம்பாயனர்}.(26)
ஆங்கிலத்தில் | In English |