Arjuna asked for weapons | Adi Parva - Section 226 | Mahabharata In Tamil
(காண்டவ தகா பர்வத் தொடர்ச்சி)
அக்னிக்கு வழி காட்டிய பிரம்மன்; அக்னி கிருஷ்ணனிடமும் அர்ஜுனனிடமும் வந்தது; அக்னியிடம் பேசிய அர்ஜுனன்; அக்னியிடம் வில்லும், குதிரைகளுடன் கூடிய தேரும்; வற்றாத அம்புகளும் கேட்ட அர்ஜுனன்…
வைசம்பாயனர் சொன்னார், "பிறகு ஹாவ்யவாகனன் (அக்னி) கோபமும், ஏமாற்றமும் கொண்டு, தனது பிணி போக்கப்படாமல் {நோய் குணமாகாமலேயே}, பெருந்தகப்பனிடம் {பிரம்மனிடம்} சென்றான். அவன் பிரம்மனிடம் நடந்தது அனைத்தையும் சொன்னான். அந்த சிறப்புவாய்ந்த தெய்வம், சிறிது நேரம் யோசித்துவிட்டு, அவனிடம் {அக்னியிடம்}, "ஓ பாவமற்றவனே, இந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நீ காண்டவ வனத்தை இன்றே உண்ணும் வழியை நான் கண்டுவிட்டேன். பழங்காலத்தின் தெய்வங்களான நரனும் நாராயணனும், இந்த மனித உலகத்தில் தேவர்களின் காரியத்தை நிறைவேற்றுவதற்காக அவதரித்திருக்கிறார்கள். அவர்கள் அர்ஜுனன் என்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் இப்போது காண்டவ வனத்தில்தான் தங்கியிருக்கிறார்கள்.
அந்தக் கானகத்தை எரிக்க அவர்களின் துணையை நீ அவர்களிடம் வேண்டிக் கொள். அதன் பிறகு, அந்த வனத்தை தேவர்களே காத்தாலும், நீ அதை உண்டுவிடலாம். அவர்கள் நிச்சயமாக காண்டவ வனத்தின் உயிரினங்கள் தப்பிப் போகாதவாறு இந்திரனை (யாரும் தப்பிப் போக இந்திரன் உதவினால் அவனை) முறியடிப்பார்கள். இதில் எனக்கு சந்தேகமே இல்லை." என்றார். இந்த வார்த்தைகளைக் கேட்ட அக்னி, விரைவாக கிருஷ்ணனிடமும் பார்த்தனிடமும் {அர்ஜுனனிடமும்} வந்தான். ஓ மன்னா {ஜனமேஜயா}, சிறப்பு மிகுந்த அந்த இருவரிடமும் அவன் {அக்னி} என்ன பேசினான் என்பதை நான் முன்னமே சொல்லியிருக்கிறேன்.
ஓ மன்னர்களில் புலி போன்றவனே {ஜனமேஜயனே}, இந்திரனின் விருப்பத்திற்கு எதிராக காண்டவ வனத்தை எரிக்கும் விருப்பம் கொண்ட அக்னியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்}, அந்தச் சந்தர்ப்பத்திற்கேற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அவனிடம் {அக்னியிடம்}, "என்னிடம் எண்ணிலடங்கா அற்புதமான தெய்வீக ஆயுதங்கள் இருக்கின்றன. அதைக் கொண்டு இடியைத் தாங்குபவர்களை {இந்திரர்களை} எதிர்த்தும் நான் போரிட முடியும். ஆனால், ஓ உயர்ந்தவரே {அக்னியே}, போர்க்களத்தில் எனது சக்தியை நான் செலுத்துவதற்கு வேண்டிய எனது கரங்களின் பலத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய வில் என்னிடம் இல்லை. எனது கரங்களின் லகுவான தன்மைக்கு ஏற்ற வகையில் என்னிடம் வற்றாத கணைகள் {அம்புகள்} இல்லை.
நான் எடுத்துச் செல்ல விரும்பும் எனது கணைகளின் சுமையை எனது ரதத்தால் தாங்க முடியாது. காற்றின் வேகம் கொண்ட தெய்வீக வெண்ணிற குதிரைகளும் மேக கர்ஜனையை எழுப்பும் சக்கரங்களும் பூட்டப்பட்ட சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட ரதத்தை நான் விரும்புகிறேன். மேலும், கிருஷ்ணனின் சக்திக்கு ஏற்றவகையில் நாகர்களையும் பிசாசங்களையும் கொல்லும் எந்த ஆயுதமும் மாதவனிடம் {கிருஷ்ணனிடம்} இல்லை. ஓ உயர்ந்தவரே, இந்திரன் இந்த அகன்ற கானகத்தில் மழையைப் பொழியும் போது அதைத் தடை செய்யவும், இந்த காரியத்தில் நாங்கள் வெற்றி அடையவும் நீரே எங்களுக்கு வழி காட்ட வேண்டும். ஓ பாவகா {அக்னியே}, நாங்கள் ஆண்மையினாலும், வீரத்தாலும் செய்யக்கூடிய அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், ஓ உயர்ந்தவரே, அதற்குத் தேவையானப் பொருட்களை நீர்தான் எங்களுக்குக் கொடுக்க வேண்டும்." என்றான் {அர்ஜுனன்}.
![]() |
![]() |
![]() |