The Chakra obtained by Krishna! | Adi Parva - Section 227 | Mahabharata In Tamil
(காண்டவ தாஹ பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : அக்னி, வருணனை வரவழைத்து, சோமனிடம் வருணன் பெற்ற குதிரைகளுடன் கூடிய ரதத்தையும், காண்டீவத்தையும், அம்பறாத்தூணிகளையும் அர்ஜுனனுக்குப் பெற்றுக் கொடுத்தது; கிருஷ்ணனுக்கு அக்னி சக்கரத்தைக் கொடுத்தது; கிருஷ்ணனுக்கு வருணன் கௌமோதகி என்ற கதாயுதத்தைக் கொடுத்தது; கிருஷ்ணனும் அர்ஜுனனும் திருப்தியடைந்தது; அக்னி கானகத்தை எரிக்க ஆரம்பித்தது...
வைசம்பாயனர் சொன்னார், "இப்படி அர்ஜுனனால்
சொல்லப்பட்ட, புகையைக் கொடியாகக் கொண்ட ஹுதாசனன் {அக்னி}, வருணனிடம் பேச விரும்பி,
அந்த அதிதியின் மகனை {வருணனை} நினைத்துப் பார்த்தான். அந்த வருணன் விண்ணுலகின் ஒரு
புறத்தைக் காத்து வருபவனாவான். நீரைத் தனது வீடாகக் கொண்டு, அந்தப் பூதத்தை {பஞ்ச பூதத்தில்
ஒன்றான நீர் என்ற பூதத்தை} ஆண்டான். பவகனால் {அக்னியால்} தான் நினைக்கப்படுகிறோம் என்பதை
அறிந்த வருணன், உடனடியாக அக்னியின் முன்பு வந்தான்.(1,2) புகையைக் கொடியாகக் கொண்ட
அந்தத் தேவன் {அக்னி} நீரை ஆள்பவனை {வருணனை} மரியாதையுடன் வரவேற்றான். அந்த நான்காவது
லோகபாலன் {அக்னி}, அந்த நிலைத்த தேவர்களுக்குத் தேவனிடம் {வருணனிடம்},(3) "மன்னன்
சோமனிடம் பெற்ற வில்லையும் {வில் - காண்டீவம்}, அம்பறாத்தூணியையும் {அம்பினை வைக்கும்
பேழை (கூடை)யையும்}, குரங்குக் கொடி கொண்ட ரதத்தையும் தாமதமில்லாமல் எனக்குக் கொடுப்பாயாக.(4)
பார்த்தன் {அர்ஜுனன்} காண்டீபத்தைக் கொண்டும், வாசுதேவன் {கிருஷ்ணன்} சக்கரத்தைக் கொண்டும்
பெரிய சாதனைகளைச் சாதிப்பார்கள். ஆகவே, அவை இரண்டையும் இன்று என்னிடம் கொடுப்பாயாக"
என்றான் {அக்னி}.(5)
இந்த வார்த்தைகளைக் கேட்ட வருணன் பவகனிடம்
{அக்னியிடம்}, "நன்று, நான் அவற்றைக் கொடுக்கிறேன்" என்று சொன்னான். அவன்,
விற்களில் ரத்தினமான, பெரும் சக்தியுடைய அந்த அற்புதமான வில்லைக் {காண்டீவத்தைக்} கொடுத்தான். அந்த வில் புகழையும் சாதனைகளையும் அதிகரிப்பதாகவும்,
எந்த ஆயுதத்தாலும் தாக்கப்படாததாகவும் இருந்தது. அஃது ஆயுதங்களில் தலைமையானதாகவும்,
எல்லா ஆயுதங்களையும் அழிப்பதாகவும் இருந்தது. எதிரிப்படைகளை அழிக்கும் தன்மை கொண்டதாகவும்,
அஃது ஒன்றே நூறு விற்களுக்குச் சமமானதாகவும் இருந்தது. அது நாடுகளை அளவில் பெரியாக்குவதாகவும்,
பல அற்புதமான நிறங்களைத் தன்னகத்தே கொண்டதாகவும் இருந்தது. அது நன்கு அலங்கரிக்கப்பட்டு
பலவீனக்குறியேதும் இல்லாததாக, எந்தத் தீங்கும் இல்லாததாகப் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.
அஃது எப்போதும் தேவர்களாலும், கந்தர்வர்களாலும் வழிபடத்தக்கதாக இருந்தது. வற்றாத அம்பறாத்தூணிகள்
இரண்டையும் வருணன் கொடுத்தான்.(6-9)
ஒரு பெரும் குரங்கைக் கொடியில் கொண்டு
தெய்வீக ஆயுதங்களால் நிரம்பிய ஒரு தேரையும் கொடுத்தான். அந்த தேரில் பூட்டப்பட்டிருந்த குதிரைகள், கந்தர்வலோகத்தில்
பிறந்தவையாக, பஞ்சு போன்ற மேகக்கூட்டங்களைப் போன்றும், வெள்ளியைப் போன்றும் வெண்மையான
நிறத்தில், தங்கச் சேணத்தால் அலங்கரிக்கப்பட்டவையாக, வேகத்தில் காற்றுக்கும் மனத்திற்கும்
ஈடானவையாக இருந்தன. போருக்காகவே ஆயத்தம் செய்யப்பட்டு, ஆயுதங்களால் நிரப்பப்பட்டுத்
தேவர்களாலும், அசுரர்களாலும் அழிக்க முடியாதபடி அந்தத் தேர் இருந்தது.(10,11) அது பெரும்
பிரகாசம் கொண்டதாக இருந்தது. அதன் சக்கரங்களின் ஒலி மிகச்சிறந்ததாக இருந்தது. அதைக்
கண்ட அனைத்து உயிர்களின் இதயங்களையும், மகிழ்ச்சியால் நிறைத்தது. அது படைப்புத் தலைவர்களில்
ஒருவரும், அண்ட வடிவமைப்பாளனுமான விஸ்வகர்மாவால் கடும் ஆன்ம தவத்திற்குப் பிறகு செய்யப்பட்டது.
அது யாராலும் நெடுநேரம் பார்க்கத்தகாதவாறு சூரியனைப் போன்ற பெரும் பிரகாசத்துடன் இருந்தது.
இந்த தேரில் இருந்துதான் தலைவன் சோமன் தானவர்களை அழித்தான்.(12,13) மாலை நேர மேகம்,
மறையும் சூரியனின் ஒளியைக் கொண்டு பிரகாசிப்பது போல அஃது ஒளிரும் அழகுடன் இருந்தது.
அது தங்க நிறத்துடன் அழகும் கூடிய அற்புதமான கொடி மரத்தைக் கொண்டிருந்தது. அந்தக் கொடி
மரத்தில் ஒரு தெய்வீகக் குரங்கு {அனுமன்}, சிம்மத்தைப் போன்றோ அல்லது புலியைப் போன்றோ
பயங்கரமாக அமர்ந்திருந்தது.(14,15) அந்தக் குரங்கு, உயர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டு
சற்றுக் குனிந்து, கண்டது அனைத்தையும் எரிப்பது போல இருந்தது. மேலும் அந்தக் (மற்ற)
கொடிகளில் பல பெரும் விலங்குகள் இருந்தன,(16) அவற்றின் கர்ஜனைகளும், கதறல்களும் எதிரி
வீரர்களை மயக்கமடையச் செய்யும் வகையில் இருந்தன.
அர்ஜுனன், போர்க்கவசம் அணிந்து, கையில்
வாளை எடுத்துக் கொண்டு, விரல்களுக்குத் தோலாலான கையுறைகளை அணிந்து, பல கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட
அந்தத் தேரை வலம் வந்து, தேவர்களுக்குப் பணிந்து, தெய்வீகத் தேரானது நல்லோன் ஒருவனை
சொர்க்கத்திற்குச் கொண்டு செல்வது போல அதன்மீது ஏறிச் சென்றான்.(17,18) ஹுதாசனனைப்
{அக்னியைப்} பணிந்த பெரும் சக்தி கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, பழங்காலத்தில் பிரம்மனால்
உண்டாக்கப்பட்ட அந்த வில்லை {காண்டீபத்தை} எடுத்து, அதன் நாணை பலமாகச் சுண்டினான்.(19,20)
அந்தப் பலமிக்கப்பாண்டவன் அவ்வாறு சுண்டியபோது, அந்த நாணொலியைக் கேட்டவர்கள் அச்சத்தால்
நடுங்கினர்.(21) குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தேரையும், வில்லையும், வற்றாத இரு அம்பறாத்தூணிகளையும்
அடைந்த பிறகு மிகவும் மகிழ்ந்து அந்தக் காரியத்திற்குத் துணை புரியத் தன்னைத் தகுதிவாய்ந்தவனாக
நினைத்தான்.(22) பவகன் {அக்னி}, சக்கரத்தின் நடுவில் உள்ள துளையில் இரும்புக் கழியை
இணைத்து, அந்தச் சக்கரத்தைக் கிருஷ்ணனுக்குக் கொடுத்தான். அது நெருப்பை உமிழும் ஆயுதமாக
{சக்கராயுதமாக} இருந்தது. அஃது அவனுக்குப் {கிருஷ்ணனுக்குப்} பிடித்தமான ஆயுதமானது.
அந்த ஆயுதத்தை அடைந்த கிருஷ்ணனும் அந்தப் பணியை முடிக்கத் தகுந்தவனாக ஆனான்.(23)
பவகன் {அக்னி} கிருஷ்ணனிடம், "ஓ
மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, மனிதர்களாக இல்லாத பெரும் எதிரிகளையும்கூட இதைக் கொண்டு
நீ நிச்சயம் அழிக்க முடியும்.(24) இந்த {சக்கர} ஆயுதத்தைக் கொண்டு, போர்க்களத்தில்
இருக்கும் மனிதர்களையும், தேவர்களையும், ராட்சசர்களையும், பிசாசங்களையும், தைத்தியர்களையும்,
நாகர்களையும் விட நிச்சயம் நீ மேன்மையுடையவனாக இருப்பாய். இதைக் கொண்டு நீ யாரை வேண்டுமானாலும் தாக்க முடியும்.
ஓ மாதவா {கிருஷ்ணா}, போர்க்களத்தில் உன்னால் உனது எதிரிகள் மேல் ஏவப்படும் இந்த ஆயுதம்,
பொறுக்க முடியாததாக இருந்து, அந்த எதிரியைக் கொன்று மீண்டும் உனது கைகளுக்கே திரும்பும்"
என்றான்.(25-27)
வருணன், கிருஷ்ணனிடம் கௌமோதகி எனும் கதாயுதத்தைக்
கொடுத்தான். அஃது அனைத்து தைத்தியர்களையும் கொல்லும் வல்லமை கொண்டதாகும். ஏவப்படும்
போது அஃது இடியைப் போன்ற பெரும் ஒலியை எழுப்பக் கூடியதாக இருந்தது. (28)
அர்ஜுனனும், அச்யுதனும் {கிருஷ்ணனும்}
பவகனிடம் {அக்னியிடம்} பெரும் மகிழ்ச்சியுடன், "ஓ மேன்மையானவனே, இந்த ஆயுதங்களைத்
தரித்து, இதன் பயனை உணர்ந்து, கொடிகளுடனும், கொடிக்கம்பங்களுடனும் கூடிய தேர்களைப்
பெற்ற நாங்கள் இப்போது, நாகனைக் {தனது நண்பன் தக்ஷகனைக்} காக்க போரிட விரும்பும் வஜ்ரதாரியை
{இந்திரனைத்} தவிர்த்து மற்ற அனைத்துத் தேவர்களையும், அசுரர்களையும் (ஒன்றாகச் சேர்த்து)
எதிர்க்கும் வல்லமையைப் பெற்றிருக்கிறோம்" என்றனர்.(29,30)
மேலும் அர்ஜுனன், "ஓ பவகா {அக்னியே},
அளவிடமுடியாச் சக்தி கொண்ட ரிஷிகேசன் {கிருஷ்ணன்} தனது கையில் சக்கரத்துடன் போர்க்களத்தில்
உலவும்போது, இந்த ஆயுதத்தைக் கொண்டு, மூவுலகிலும் எதையும் அவனால் பொசுக்க முடியும்.
இந்தக் காண்டீவம் எனும் வில்லையும், வற்றாத இந்த இரட்டை அம்பறாத்தூணிகளையும் அடைந்த
பிறகு, மூவுலகத்தையும் வெல்ல நான் ஆயத்தமாக இருக்கிறேன்.(31,32) எனவே, ஓ தலைவா {அக்னி},
நீ விரும்பியவாறு, உனது நெருப்பை இந்தக் கானகத்தின் அனைத்துப் புறமும் செலுத்தி அனைத்தையும்
உட்கொள்வாயாக. நாங்கள் இங்கு உனக்கு உதவி செய்ய இருக்கிறோம்" என்றான் {அர்ஜுனன்}".(33)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படித்
தசார்ஹனாலும் {கிருஷ்ணனாலும்}, அர்ஜுனனாலும் சொல்லப்பட்ட சிறப்பு மிக்கத் தேவன் {அக்னி},
தனது சக்திக்குகந்த வடிவத்தைக் ஏற்று, அந்தக் கானகத்தை எரிக்க ஆயத்தமானான்.(34) தனது
ஏழு சுடர்களால் அனைத்துப் புறங்களிலும் அதனை {காட்டைச்} சூழ்ந்து, யுகத்தின் முடிவில்
அனைத்தையும் உட்கொள்ளும் பெரும் வடிவத்துடன் அந்தக் காண்டவ வனத்தை உட்கொள்ளத் தொடங்கினான்.(35)
ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அந்தக் கானகத்தைச் சூழ்ந்து அனைத்துப் புறங்களையும்
பற்றி மேகங்களைப் போலக் கர்ஜனை செய்த அக்னி அனைத்து உயிரினங்களையும் நடுங்கச் செய்தான்.(36)
ஓ பாரதா {ஜனமேஜயா}, மலைகளின் அரசனான மேரு, தனது மேல்விழும் சூரியனின் கதிர்களால் ஒளிர்வது
போல எரியும் அந்தக் கானகமும் ஒளிர்ந்தது" {என்றார் வைசம்பாயனர்}.(37)
ஆங்கிலத்தில் | In English |