Indra entered the field! | Adi Parva - Section 228 | Mahabharata In Tamil
(காண்டவ தாஹ பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : அக்னி காண்டவ வனத்தை எரிக்க ஆரம்பித்தது; கிருஷ்ணனும் அர்ஜுனனும் கானகத்தில் எதிர் எதிர் பக்கங்களில் நின்று கொண்டு தப்பிக்க நினைத்த உயிரினங்களைக் கொன்றது; நெருப்பு விண்ணுலகை எட்டியது; தேவர்கள் துயருற்றது; தேவேந்திரனிடம் அவர்கள் முறையிட்டது; இந்திரன் களத்தில் இறங்கி கானகத்தைக் காக்கத் துணிந்தது; அக்னியிடம் கோபம் கொண்ட இந்திரன் கடும் மழையைப் பொழிந்தது...
வைசம்பாயனர் சொன்னார், "தேர் வீரர்களில் முதன்மையான அவர்கள் இருவரும், தங்கள் தேர்களில் ஏறிக் கானகத்தின் எதிர் எதிர்ப் புறங்களில் தங்களை நிறுத்திக் கொண்டு, அந்தக் காண்டவ வனத்தில் வசித்த அனைத்து உயிரினங்களையும் படுகொலை செய்யத் தொடங்கினர்.(1) காண்டவ வனவாசி உயிரினங்கள் எந்த இடத்திலெல்லாம் தப்ப நினைத்தனவோ அங்கெல்லாம் அந்தப் பெரும் வீரர்கள் விரைந்தனர் (அவை தப்புவதைத் தடுக்க).(2) நிச்சயமாக அந்த இரு தேர்களும் ஒன்றாகவே தெரிந்தன. அந்த இருவீரர்களும் கூட ஒருவராகவே தெரிந்தனர்.(3) அந்தக் கானகம் அவ்வாறு எரிந்து கொண்டிருக்கையில், நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் உயிரினங்கள் பயங்கரமான கதறல்களை எழுப்பி எல்லாத் திசைகளிலும் ஓடின.(4) சிலவற்றிற்குக் குறிப்பிட்ட உறுப்புகள் எரிந்திருந்தன. சில அதிகமான வெப்பத்தால் பொசுங்கிப் போயின. சில வெளியே வந்தன, சில அச்சத்தால் ஓடின.(5)
சில உயிரினங்கள் தங்கள் குட்டிகளையும், சில பெரும் பாசத்தால் தங்கள் தாய் தந்தையரையும், தமையன்களையும் அரவணைத்துக் கொண்டு, யாரையும் கைவிட முடியாமல், தங்கள் அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து அமைதியாக இறந்தன.(6) பல விலங்குகள் தங்கள் உதடுகளைக் கடித்துக் கொண்டு மேலெழுந்தவாரியாக எழுந்து, விரைவில் நெருப்பாகக் கீழே விழுந்தன.(7) சில தரையில் உருண்டு இறக்கைகளும், கண்களும், பாதங்களும் பொசுங்கி எரிந்து இறந்தன. இந்த உயிரினங்கள் அனைத்தும் விரைவாக அழிந்தன.(8) அந்தக் கானகத்தின் குளங்களும், ஏரிகளும் நெருப்பால் சுடப்பட்டுக் கொதிக்க ஆரம்பித்தன; அதிலிருந்த மீன்களும் ஆமைகளும் அனைத்தும் அழிந்தன.(9)
அந்தக் கானகவாழ் உயிர்களின் பெரும் படுகொலையைக் கண்ட போது, நெருப்பே பல வடிவங்களை ஏற்றதைப் போல பல விலங்குகளின் உடல்கள் அனைத்தும் எரிந்து போய் நெருப்பாகக் கிடந்தன.(10) இறகுகளைக் கொண்டு பறந்து தப்பிக்க நினைத்த பறவைகள், அர்ஜுனனின் கணைகளால் துண்டுகளாக அறுக்கப்பட்டுத் தரையில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் {நெருப்பு எனும் பூதத்தில்} விழுந்தன.(11) அர்ஜுனனின் கணைகளால் துளைக்கப்பட்ட பறவைகள் புறங்களனைத்திலிருந்தும் அந்த எரியும் காட்டுக்குள் பேரிரைச்சலுடன் விழுந்தன.(12) கணைகளால் தாக்குண்ட அக்கானக வாசிகள் பேரொலியுடன் ஓலமிடவும் கதறவும் தொடங்கின. அங்கே எழுந்த ஓலம் (பழங்காலத்தில்) பாற்கடலைக் கடைந்த போது ஏற்பட்ட பயங்கர ஓலத்தைப் போல இருந்தது.(13) சுடர் விட்டு எரியும் அந்தப் பெரும் நெருப்பின் சுடர்கள் வானத்தை எட்டின. அப்படி வானத்தை எட்டிய சுடர்களால் தேவர்களும் பெருந்துன்பத்துக்கு உள்ளாகினர்.(14)
அந்தச் சிறப்புவாய்ந்த சொர்க்கவாசிகள் அனைவரும் சேர்ந்து உடலெல்லாம் ஆயிரம் கண் கொண்டவனும், நூறு வேள்விகள் செய்வனும், அசுரர்களைக் கொன்றவனுமான தங்கள் தலைவனிடம் {இந்திரனிடம்} சென்றனர். இந்திரனை அணுகிய அந்தத் தேவர்கள்,(15) "ஓ மரணமற்றவர்களின் தலைவா, ஏன் அக்னி கீழிருக்கும் உயிரினங்களை எரிக்கிறான்? உலகத்தின் முடிவுக்கான நேரம் வந்துவிட்டதா?" என்று கேட்டனர்".(16)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "தேவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்டும், அக்னியின் செயலைத் தானே கண்டும், விருத்திரனைக் கொன்றவன் {இந்திரன்}, காண்டவ வனத்தைப் பாதுகாக்கப் புறப்பட்டான்.(17) தேவர்களின் தலைவனான வாசவன் {இந்திரன்}, அனைத்து வகையான மேகங்களால் முழு வானத்தையும் மறைத்து, அந்த எரியும் காட்டின் மேல் மழையைப் பொழியத் தொடங்கினான்.(18) இந்திரனால் ஆணையிடப்பட்ட நிறை அதிகமான அம்மேகங்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வந்து, போர்த்தேர்களின் கொடிக்கம்பத்தைப் போன்ற கனமுடைய அடர்த்தியான மழையைக் காண்டவ வனத்தின் மீது பொழிந்தன.(19) ஆனால் அந்த மழையும் பாதி வானத்தில் வந்து கொண்டிருக்கும் போதே, அந்தக் காட்டிலிருக்கும் நெருப்பின் வெப்பத்தால் மிகவும் வற்றிப் போனது. எனவே அந்த மழையின் நீர் கீழே இருக்கும் நெருப்பை அடையவே இல்லை.(20) நமுசியைக் கொன்றவன் {இந்திரன்}, அக்னியிடம் கோபம் கொண்டு, பெரும் நிறை கொண்ட மேகங்களை அங்கே சேகரித்துக் கடும் மழையைப் பொழிந்தான்.(21) அந்த அடர்த்தியான மழையால், நெருப்பு கட்டுக்குள் அடங்கியது. மேலே மேகங்களுடன் அந்தக் கானகமே புகையாலும், மின்னல் வெட்டாலும், நிறைந்து பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது" {என்றார் வைசம்பாயனர்}.(22)

ஆங்கிலத்தில் | In English |