Forest conflagration extinguished! | Adi Parva - Section 236 | Mahabharata In Tamil
(மய தரிசன பர்வம் - 07)
பதிவின் சுருக்கம் :மந்தபாலர் தன் பிள்ளைகளிடம் உரையாடி அவர்களையும் ஜரிதையையும் அழைத்துக் கொண்டு வேறு நாட்டிற்குச் சென்றது; அர்ஜுனன் இந்திரனிடம் அனைத்து ஆயுதங்களையும் கேட்டது; இந்திரன் அதற்கு கால நிர்ணயம் செய்தது; கிருஷ்ணன் அர்ஜுனனின் நிலைத்த நட்பை இந்திரனிடம் வரமாகக் கேட்டது; கிருஷ்ணன், அர்ஜுனன், மயன் ஆகிய மூவரும் மகிழ்ச்சியாக நதிக்கரையில் வந்து அமர்ந்தது...
வைசம்பாயனர் சொன்னார், "மந்தபாலர் தனது பிள்ளைகளிடம், "உங்கள் பாதுகாப்புக்காக நான் அக்னியிடம் பேசினேன். அந்தச் சிறப்புமிகுந்த தேவன் {அக்னி} எனது விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தான்.(1) அக்னியின் அந்த வார்த்தையாலும், உங்கள் தாயின் {ஜரிதையின்} அறத்தாலும், நீங்களே பெற்றிருக்கும் பெரும் சக்தியாலும் தான் நான் முன்னமே வரவில்லை.(2) எனவே எனது மக்களே {மகன்களே}, என்னைக்குறித்து உங்கள் இதயங்களில் மனக்கசப்பை நிலைக்கச் செய்யாதீர். நீங்கள் அனைவரும் வேதங்களை அறிந்த முனிவர்கள். அக்னி கூட உங்கள் அனைவரையும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறான்" என்றார்".(3)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "தமது மகன்களுக்கு இப்படிப்பட்ட உறுதிகளைக் கொடுத்த அந்த பிராமணர் மந்தபாலர், தன்னுடன் தனது மனைவியையும் {ஜரிதையையும்} மகன்களையும் {சாரங்கப் பறவைகளையும்} அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்று, வேறு நாட்டிற்குச் சென்றுவிட்டார்(4).
இப்படியே அந்தக் கொடும் கதிர்கள் கொண்ட பிரகாசமான தேவன் {அக்னி}, பலத்தால் வளர்ந்து, இரு கிருஷ்ணர்களின் {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரின்} துணையுடன் உலக நன்மைக்காகக் காண்டவ வனத்தை எரித்தான்.(5) கொழுப்பு மற்றும் எலும்பினுள் இருக்கும் மஜ்ஜையின் ஆறுகள் பலவற்றைக் குடித்த அக்னி பெரிதும் மனநிறைவு அடைந்து தன்னை அர்ஜுனனுக்கு வெளிக்காட்டினான்.(6) மருத்துகளால் {காற்றுத் தேவர்களால்} சூழப்பட்ட புரந்தரன் {இந்திரன்}, வானில் இருந்து கீழே இறங்கி வந்து பார்த்தனிடமும் {அர்ஜுனனிடமும்}, கேசவனிடமும் {கிருஷ்ணனிடமும்},(7) "தேவர்களாலும் கூடாத காரியத்தைச் சாதித்துவிட்டீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் மனிதர்களால் அடைய முடியாத வரத்தை கேட்கலாம். நான் உங்களிடம் பெரும் மனநிறைவைக் கொண்டுள்ளேன்" என்றான் {இந்திரன்}".(8)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பார்த்தன் {அர்ஜுனன்}, இந்திரனிடம் அவனது அனைத்து ஆயுதங்களையும் கேட்டான். இது குறித்துப் பெரும் பிரகாசமுள்ள சக்ரன் {இந்திரன்}, அவற்றைக் கொடுக்க ஒரு நேரத்தை நிச்சயத்துக் கொண்டு,(9) "சிறப்பு மிகுந்த மாதவன் {கிருஷ்ணன்} உன்னிடம் எப்போது மனநிறைவு கொள்வானோ, ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனனே}, அப்போது நான் என் ஆயுதங்கள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பேன்.(10) ஓ குரு குலத்தின் இளவரசனே {அர்ஜுனனே}, அந்த நேரம் வரும்போது அதை நான் அறிவேன். உனது கடுந்தவங்களுக்காக, நான் உனக்கு நெருப்பாலான ஆயுதங்கள் {அக்னேயா அஸ்திரங்கள்} மற்றும் வாயவ்யா ஆயுதங்கள் ஆகிய அனைத்தையும் கொடுப்பேன். நீயும் அனைத்தையும் என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வாய்" என்றான் {இந்திரன்}.(11)
அர்ஜுனனுடனான தனது நட்பு எப்போதும் நிலைத்ததாக இருக்க வேண்டும் என்று வாசுதேவன் {கிருஷ்ணன்} கேட்டான். புத்திசாலிக் கிருஷ்ணன் விரும்பிக் கேட்ட வரத்தை தேவர்களின் தலைவனும் {இந்திரனும்}, அருளினான்.(12) கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் கேட்ட இந்த வரங்களைக் கொடுத்த மருத்துகளின் தலைவன் {இந்திரன்}, ஹுதாசனனுடனும் (வேள்வி நெய்யை உணவாகக் கொண்டவன்) {அக்னியுடனும்} பேசிய பிறகு, அனைத்துத் தேவர்களையும் அழைத்துக் கொண்டு விண்ணுலகம் சென்றான்.(13) பதினைந்து நாட்கள் அக்கானகத்தையும், அதிலிருந்த விலங்குகள், பறவைகள் ஆகியவை அனைத்தையும் எரித்த அக்னி பெரும் மனநிறைவு கொண்டு, மேலும் எரிவதை நிறுத்திக் கொண்டான்.(14)
ஏராளமான அளவில் இறைச்சியை உண்டு, கொழுப்பு மற்றும் இரத்தத்தைக் குடித்து பெரும் மனநிறைவை அடைந்த அக்னியானவன், அச்யுதன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனனிடம்,(15) "மனிதர்களில் புலிகளான உங்கள் இருவரால் நான் மனநிறைவு அடைந்தேன். வீரர்களே, எனது கட்டளையால் {வரத்தால்}, விரும்பும் இடத்திற்குச் செல்லத் தகுதிவாய்ந்தவர்களாக நீங்கள் இருப்பீர்கள்" என்றான்.(16) சிறப்பு வாய்ந்த அக்னியால் இப்படிச் சொல்லப்பட்ட அர்ஜுனனும், வாசுதேவனும், தானவன் மயனுமாகிய அம் மூவரும் சிறிது நேரம் அங்கே உலாவி விட்டு இறுதியாக இனிமைநிறைந்த ஆற்றங்கரையில் வந்து அமர்ந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(17,18)

************ மய தரிசன உப பர்வம் முற்றும் ************
************ ஆதிபர்வம் முற்றும் ************
ஆங்கிலத்தில் | In English |