சுவடுகளைத் தேடி!
கடந்து வந்த பாதையின் சுவடுகளைத் தேடிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் எழுத அமர்ந்திருக்கிறேன். இது நீண்ட நாளாக நான் செய்ய நினைத்தது. வாசகர்களுடன் ஒரு உரையாடல் செய்து, தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று பல நாள் நினைத்திருக்கிறேன். சரி ஆதிபர்வம் முடியட்டும். மனதில் இருப்பதை வாசகர்களுக்குத் தெரிவிக்கலாம் என்று இருந்தேன். இதோ ஆதிபர்வம் முடிந்துவிட்டது....
2012ம் வருடம் நவம்பர்
மாதத்தில் எனது பழைய வலைப்பூவில் பதிவுகள் எழுதிக் கொண்டிருந்தேன். அங்கே,
பதிவுகளோடு பதிவாக, கிசாரி மோகன் கங்குலி அவர்களின் ஆங்கில
மஹாபாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பையும் பதிவிட ஆரம்பித்தேன். வேறு பதிவு எழுதமுடியாத தருணத்தில் மட்டும் மஹாபாரதப் மொழியாக்கப் பதிவு எழுதுவது என்ற தீர்மானத்துடன் அதை எழுதிக் கொண்டிருந்தேன். 2012 டிசம்பர்
மாத முடிவு வரை வெறும் 4 பகுதிகள் மட்டுமே மொழி பெயர்த்திருந்தேன். எனது மற்ற
பதிவுகளுக்கு கிடைக்கும் பார்வை அந்த மஹாபாரதப் பதிவுகளுக்குக் கிடைக்கவில்லை.
இருண்ட பாதையில் வெளிச்சம் காட்டியவர்
திரு.ஜெயவேலன் |
மேலும் இரண்டு
வாரங்களில், இரண்டு மகாபாரதப் பதிவுகளை இட்டேன். மீண்டும் அதே நண்பர்
தொலைபேசியில் அழைத்தார். "நீங்கள் மேற்கொண்டிருப்பது மிகப் பெரும் பணி.
தொடர்ந்து செய்யுங்கள் விட்டுவிடாதீர்கள்." என்று ஊக்கம் கொடுத்தார். அவர்
சொன்ன பிறகு, அந்த வாரத்திலேயே மேலும் இரு பதிவுகளை இட்டேன்.
மஹாபாரதத்துக்கென்று தனி வலைப்பூ
நமது நண்பர் {திரு.ஜெயவேலன்} ஒருநாள், "நீங்கள் உங்கள் வலைப்பூவில் பல கருத்துகள் கொண்ட பதிவுகளுடன் சேர்த்து மஹாபாரதப் பதிவுகளை இடுவதால், படிப்பதற்கும் சிரமமாக இருக்கும். ஆகையால், மகாபாரதத்திற்கென்று தனி வலைப்பூ ஒன்றை நிறுவுங்கள்," என்று கேட்டுக் கொண்டார். எனக்கு அவர் சொன்னது சரிதான் என்று பட்டது. ஆகவே, புது வலைப்பூ ஒன்றை நிறுவினேன்.
புதிய வலைப்பூவுக்காக தனி டொமைன் {Domain} வாங்கலாமா என்றால், அதற்கென்று தனியாக செலவு செய்ய வேண்டுமே என்றெண்ணி, www.arasan.infoவின் சப் டொமைனாக {Sub-Domain}ஆக http://mahabharatham.arasan.infoஎன்ற முகவரியை உண்டாக்கி, புதிய மஹாபாரத பிளாகருடன் அதை மேப் செய்தேன். பிறகு பல காலம் கழித்து, அதற்கென்று தனி முகவரி வாங்கலாம் என்று நினைத்த போது {சமீபத்தில்தான்}, 'அனைத்து லிங்குகளையும் மாற்ற வேண்டியிருக்கும், அது பெரிய பணி அதனால் வேண்டாம்' என்று முடிவு செய்து அதை விட்டுவிட்டேன்.
படங்கள் இணைக்க வேண்டும்
தனி வலைப்பூ ஆரம்பித்த
உடன் வாரத்திற்கு 3 பதிவுகளாக இடுவது என்று முடிவு செய்து வேலை செய்ய
ஆரம்பித்தேன். இந்தப் புதிய வலைப்பூவில் மொழிபெயர்ப்புடன் சேர்ந்து அந்தப் பதிவு
சம்பந்தமான படங்களும் இருக்க வேண்டும் என்று திரு.ஜெயவேலன் அவர்கள் விரும்பினார்.
அப்போது காப்புரிமை குறித்த விவாதங்கள் எங்களுக்குள் வந்தன. நாம் எதையும் வியாபாரம் செய்யவில்லை.
நல்ல நோக்கத்திற்காகவே செய்கிறோம். யாரிடமாவது வரையச் சொன்னால் அதற்கு தனியாக
செலவாகும். அது நம்மால் முடியாது. ஆகையால் முடிந்த வரை கூகுளில் தேடி எடுத்த படங்களை
இடுவது என்றும், வலைப்பூவின் கீழே, படத்தின் உரிமையாளர் மறுப்பு தெரிவித்தால் படங்கள்
அகற்றப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட முடிவு செய்தோம்.
ஆலோசனை முடிவின் படியே செய்யவும் ஆரம்பித்தேன். தேடும்போதுதான் தெரிந்தது அதுகூட எவ்வளவு கடினம் என்று. பல பதிவுகளுக்கு படங்களே கிடைக்கவில்லை.சில பதிவுகளுக்கு வெவ்வேறு படங்களை எடுத்து ஒன்றாக இணைத்தும், வண்ணம் மாற்றியும் பதிவுகளில் இட்டேன். பிறகு அற்புதமான இரு தளங்கள் கிடைத்தன. ஒன்று www.backtogodhead.in மற்றொன்று www.ancientvoice.wikidot.com. முதல் வலைத்தளத்தில் கருப்பு வெள்ளை பென்சில் ஓவிங்கள் பல கிடைத்தன. நமது முழு மஹாபாரத பதிவுகளில், பல பதிவுகளுக்கு அதிலிருந்து படங்களை எடுத்து, அதை வண்ணமாக மாற்றி அப்பதிவுகளில் இணைத்துக் கொண்டேன். இரண்டாவது வலைத்தளத்தில் மஹாபாரதம் சம்பந்தமாக வரைபடங்களைத் {Mapகளைத்} தயார் செய்து வைத்திருந்தார்கள். அதை பதிவிறக்கி எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார் திரு.ஜெயவேலன் அவர்கள். இப்படிப்பட்ட Mapகள் நமது பதிவுகளுக்கு அவசியம் தேவை என்றும் சொன்னார். நான் அதை ஏற்றுக் கொண்டேன். ஆனால் அந்த Mapகள் ஆங்கிலத்தில் இருந்தது. ஆகையால், அதன் மேலேயே தமிழில் தட்டச்சு செய்து மாற்றி அமைத்து தமிழில் உருவாக்கப்பட்ட வரைபடங்களை எனது பதிவுகளில் இணைத்துக் கொண்டேன்.
ஆலோசனை முடிவின் படியே செய்யவும் ஆரம்பித்தேன். தேடும்போதுதான் தெரிந்தது அதுகூட எவ்வளவு கடினம் என்று. பல பதிவுகளுக்கு படங்களே கிடைக்கவில்லை.சில பதிவுகளுக்கு வெவ்வேறு படங்களை எடுத்து ஒன்றாக இணைத்தும், வண்ணம் மாற்றியும் பதிவுகளில் இட்டேன். பிறகு அற்புதமான இரு தளங்கள் கிடைத்தன. ஒன்று www.backtogodhead.in மற்றொன்று www.ancientvoice.wikidot.com. முதல் வலைத்தளத்தில் கருப்பு வெள்ளை பென்சில் ஓவிங்கள் பல கிடைத்தன. நமது முழு மஹாபாரத பதிவுகளில், பல பதிவுகளுக்கு அதிலிருந்து படங்களை எடுத்து, அதை வண்ணமாக மாற்றி அப்பதிவுகளில் இணைத்துக் கொண்டேன். இரண்டாவது வலைத்தளத்தில் மஹாபாரதம் சம்பந்தமாக வரைபடங்களைத் {Mapகளைத்} தயார் செய்து வைத்திருந்தார்கள். அதை பதிவிறக்கி எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார் திரு.ஜெயவேலன் அவர்கள். இப்படிப்பட்ட Mapகள் நமது பதிவுகளுக்கு அவசியம் தேவை என்றும் சொன்னார். நான் அதை ஏற்றுக் கொண்டேன். ஆனால் அந்த Mapகள் ஆங்கிலத்தில் இருந்தது. ஆகையால், அதன் மேலேயே தமிழில் தட்டச்சு செய்து மாற்றி அமைத்து தமிழில் உருவாக்கப்பட்ட வரைபடங்களை எனது பதிவுகளில் இணைத்துக் கொண்டேன்.
பிறகு இந்த வலைப்பூவின்
கீழேயே வாசகர்கள் படம் வரைந்து அனுப்பலாம் என்று கோரிக்கை வைத்தேன். அது இப்போதும்
இருக்கிறது. ஆனால் ஒரு படம் கூட வரவில்லை. யாராவது பென்சிலில் கிறுக்கலாகத்
தீட்டிக் கொடுத்திருந்தால் கூட நான் அதை வண்ணமாக மாற்றியோ அல்லது அப்படியேவோ பயன்படுத்தியிருப்பேன். ஆனால்
அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.
பின்னூட்டங்கள் வர ஆரம்பித்தன
பிப்ரவரி மாத வாக்கில்,
பதிவுகளில் நிறைய எழுத்துப் பிழைகளும், பொருள் சேர்ந்து வராத குறைகளும் இருப்பதாக
திரு.ஜெயவேலன் அவர்கள் உணர்ந்து எனக்குத் தெரியப்படுத்தினார். நான் அவர்
சொன்னதையெல்லாம் ஒவ்வொன்றாகத் திருத்த ஆரம்பித்தேன். அதன் பிறகு ஒரு நாளைக்கு ஒரு
பதிவிடுவது என்று ஆனது. அதனால் நானும் திரு.ஜெயவேலன் அவர்களும் தினமும் எங்களது
கருத்துகளைப் பகிர்ந்து கொள்வோம். அன்றன்றைய பதிவுகளை அன்றன்றே அவர் சுட்டிக்காட்டுவார், நானும் திருத்திவிடுவேன். பிறகு
திருத்துவது கடினமாக இருந்தது {வேலை நேரத்தில் செய்ய முடியவில்லை}. ஆகையால்
திரு.ஜெயவேலனிடம் எனது தளத்தின் கடவுச் சொற்களைக் கொடுத்து நீங்களே திருத்தி
விடுங்கள் என்று சொல்லிவிட்டேன். அவரும் இதுநாள் வரை ஒவ்வொரு பிழையாகப் பார்த்துப் பார்த்துத்
திருத்தி வருகிறார்.
பதிவுகள் குறித்த
பின்னூட்டங்கள் ஒன்றோ இரண்டோதான் அதுவரை வந்திருந்தன. அப்படி முதலில் பின்னூட்டம்
கொடுத்தவர்கள் திரு.இர.கருணாகரன் அவர்களும், திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்களும்
ஆவர். அவர்கள் ஏற்கனவே வந்திருந்த பதிவுகளுக்கு வரவேற்புத் தெரிவித்திருந்தனர். அதன்பின்பு
ஒருவர் பின் ஒருவராக வந்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர். எப்படியும் ஒரு
பதிவுக்கு குறைந்தது பத்து பின்னூட்டம் என வளர்ந்தது. மஹாபாரதப் பதிவுகளுக்குக் கீழேயே பின்னூட்டங்கள்
இருப்பதால் மஹாபாரதம் படிப்பதில் சோர்வு ஏற்படுகிறது என்று எதிர்வினை வந்ததால்
பின்னூட்டம் பகுதியை நிறுத்திவிட்டேன். எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களும் தனது மதிப்புரையில் பின்னூட்டப் பகுதியை நீக்கச்
சொல்லியே கேட்டிருந்தார். அதற்கு பதிலாக
விவாத மேடை என்ற புதிய பகுதியை அறிமுகம் செய்திருக்கிறேன். அதற்கும்
பதிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் பதிவுகளைப் படிப்பதில் சோர்வு
ஏற்படாது.
பிறகு ஒரு நாள், ஒரு வாசகர் நண்பர் மொழிபெயர்ப்பில் ஒரு சந்தேகம் கேட்டார். மேலும், மூலத்தில் உள்ள எண்களுக்கும், நமது மொழிபெயர்ப்பில் உள்ள எண்களுக்கும் வித்தியாசம் இருப்பதாகவும் சுட்டிக் காட்டினார். பரவாயில்லை ஆங்கிலத்தில் அவராகத் தேடிப் பார்த்து நமக்குச் சுட்டிக் காட்டுகிறாரே, அதுவே நமது பதிவின் அடியிலேயே ஆங்கில மூலத்திற்கு ஒரு சுட்டியைக் கொடுத்தால் என்ன என்று தோன்றிற்று. அப்போது 80 பகுதிகள் வரை மொழி பெயர்த்திருந்தேன். இருந்தாலும், அனைத்து பதிவிற்கு அடியிலேயேயும். அந்தப் பதிவின் ஆங்கில மூலத்திற்கு செல்வதற்கான சுட்டி, அந்தக் குறிப்பிட்ட பதிவுக்கு முந்தைய பதிவிற்கு செல்வதற்கான சுட்டி, அந்தப் பதிவுக்கு பிந்தைய பதிவுக்கு செல்வதற்கான சுட்டி என மூன்று பட்டன்களை ஒவ்வொரு பதிவின் அடியிலேயும் நிறுவினேன். அதன் பிறகு எழுதிய பதிவுகளுக்கெல்லாம் முன்னேற்பாடாகவே அந்த பட்டன்கள் இருக்குமாறு பார்த்துக் கொண்டேன்.
ஆங்கில மொழிபெயர்பைக் காட்டும் சுட்டி
பிடிஎப் கோப்புகள் இலவசமாக
20.3.2013ல் ஆதிபர்வம் பகுதிகள் 01முதல் 61 வரையும், 2.6.2013ல் ஆதிபர்வம் பகுதிகள் 51முதல் 100 வரையும், 19.7.2013ல் ஆதிபர்வம் பகுதிகள் 101 முதல் 150வரையும், 25.7.2013ல் ஆதிபர்வம் பகுதிகள் 001 முதல் 150வரையும் பிடிஎப் (PDF) கோப்புகளாகவே நமது வலைப்பூவிலேயே வெளியிட்டேன். நல்ல வரவேற்பு இருந்தது. பல பதிவிறக்கங்களையும் கண்டது.
150க்கு மேல் இன்னும்
பிடிஎப் கோப்பு தயாரிக்கவில்லை. ஆதிபர்வம் பகுதி 01 முதல் 236 வரை கடைசி நாளான இன்று வரை
பல திருத்தங்களைச் செய்திருக்கிறோம் {திரு.ஜெயவேலனும், நானும் சேர்ந்து} ஆன்லைனிலேயே நேரடியாகப் பதிவுகளையே திருத்தியிருக்கிறோம். ஆகையால், இனி பிடிஎப்
கோப்பு இடுவதாக இருந்தால், கடைசியாக திருத்தப்பட்ட பதிப்புகளை எல்லாம் ஒன்றாகத்
திரட்டித்தான் பிடிஎப் ஆக்க வேண்டும். அதைத் தாயாரிக்கும் பணி மிகப்பெரியதாக
இருக்கிறது. ஒரு பதிவை காப்பி செய்தால், அது படங்களின்றி வருகிறது. வேறு பதிவை
காப்பி செய்தால், எழுத்து சிதைந்து வருகிறது. நாங்கள் {நானும் திரு.ஜெயவேலன்
அவர்களும்} இருவரும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கிடையாது. தெரிந்ததை வைத்து
முடிந்ததை மட்டும் செய்து வருகிறோம். அதில் நேரத்தை செலவிடும் நேரம் பத்து
மொழியாக்கப் பதிவுகளை இட்டுவிடலாம். திரு.ஜெயவேலன் அவர்களோ அல்லது வாசக நண்பர்கள்
யாரவதோ தொகுத்தால் தான் முடியும்.
ஒருவராக மொழிபெயர்ப்பது ஏன்?
2013 மே மாதம் ஆரம்பம் வரை
மொத்தம் 7,000 பார்வைகள் மட்டுமே பெற்றிருந்தது மஹாபாரத வலைப்பூ. திரு.வள்ளுவர்
அவர்கள் பின்னூட்டத்தில் ஏன் ஒருவராக மொழிபெயர்க்கிறீர்கள், ஒரு அணியை (Team-ஐ) வைத்துக்
கொண்டு மொழிபெயர்த்தால் பணி வேகமாக முடியுமே என்று கேட்டிருந்தார். எனது வேலை
நேரத்தையும், அதில் இருக்கும் சிரமத்தையும், மேலும், பலர் சேர்ந்து மொழி
மாற்றுவதால் ஏற்படும் சில ஒழுங்கின்மைகளையும் தெரிவித்து அதற்கு மறுப்பு
தெரிவித்திருந்தேன்.
மொழிபெயர்ப்பதை நிறுத்திவிடலாமா?
அந்தப்
பின்னூட்டத்தில்தான் அவர் {திரு.வள்ளுவர்} என்னிடம், "தங்களுக்கொரு செய்தி, இதற்கு
முன்பே 80 ஆண்டுகளுக்கு முன் முழுமையான மகாபாரதம் ம.வீ.ராமாசுனாச்சாரியார் என்பவரால்
தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது" என்று கேட்டிருந்தார். அவர் கேட்பதற்கு சில
நாட்களுக்கு முன்புதான் நானும் அந்த மொழிபெயர்ப்பைப் பற்றிக்
கேள்விப்பட்டிருந்தேன். இப்படி ஒரு மொழி பெயர்ப்பு இருக்கும்போது நாமும் ஏன் மொழி
பெயர்க்க வேண்டும். இப்பணியை இத்தோடு நிறுத்திவிடலாம் என்று யோசித்து
திரு.ஜெயவேலன் அவர்களிடம் கேட்டேன். அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அப்படியா
அப்படியா என்று மட்டும் கேட்டார். பதில் ஒன்றும் சொல்லாமலேயே விட்டுவிட்டார்.
அதுவரை நான் ஆதிபர்வத்தில் 85 பகுதிகள் மொழிபெயர்த்திருந்தேன்.
அடுத்த நாள் அவர் என்னை
தொலைபேசியில் அழைத்து "நான் இதை முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால்
அந்தப் பதிப்பு யார் கையிலும் இல்லை என்றே நான் கேள்விப்பட்டேன். மேலும் அப்படியே
ஒரு மொழிபெயர்ப்பு இருந்தாலும் நீங்கள் மொழிபெயர்ப்பதில் எந்தத் தடையும் இல்லையே.
நீங்கள் தொடருங்கள்" என்றார். நான், "அவர் {திரு.ம.வீ.ராமானுஜாசாரியார்
அவர்கள், வடமொழி மூலத்திலிருந்தே மொழி பெயர்த்திருக்கிறாராம். நாம் மொழிபெயர்ப்பது
ஆங்கிலத்திலிருந்து, எப்படி இருந்தாலும் அதற்கு நிகராகாது" என்று சொன்னேன்.
அதற்கு அவர், "நிகரோ நகிர் இல்லையோ, இது உங்களுக்கு விதிக்கப்பட்ட வேலை,
நீங்கள் தொடருங்கள். நாம் கொடுப்பது மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது. அதிக
பேரைச் சென்றடைகிறது. நாளை யார் வேண்டுமானாலும் இணையத்தில் தேடி எடுத்துக்
கொள்ளலாம். அகையால் இதை நீங்கள் கண்டிப்பாகத் தொடர்ந்தே ஆக வேண்டும்."
என்றார். எனக்கு ஒரு வகையில் சமாதானம் ஏற்பட்டது. "சரிதான், இணையத்தில்
இருப்பதால், யார் வேண்டுமானாலும் எளிதில் தேடி எடுத்துக் கொள்ளலாமே. சரி
தொடர்வோம்" என்று தொடர்ந்தேன். 2013, மே 16ம் தேதி, ஆங்கிலத்தில் இருந்து ஒரு
Family Tree படத்தைப் பதிவிறக்கி, தமிழில்மஹாபாரத வம்ச வரலாற்று படம் ஒன்றை வடிவமைத்து தளத்தில் வெளியிட்டேன். அதற்கு
நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து வலைப்பூவின் பார்வைகளும் அதிகரிக்க
ஆரம்பித்தன.
திரட்டிகள்
மே மாத முடிவில் மொத்தம் 10,000 பார்வையாளர்களைத் தாண்டியிருந்தது முழு மஹாபாரத வலைப்பூ. நான் இந்தக் காலத்தில்தான் பதிவுகளைத் திரட்டிகளில் இணைக்க ஆரம்பித்தேன். இண்ட்லி, தமிழ்மணம், தமிழ்10, தமிழ்வெளி, தேன்கூடு, ஹாரம் என எந்தத் திரட்டியும் விடவில்லை {இங்கே குறிப்பிடாத பல திரட்டிகளையும் கூட முயன்றிருக்கிறேன்}. அதனால்தான் அந்த அளவே கூட பார்வைகள் கிடைத்தன.
பதிவின் சுருக்கம், ஆங்கிலத் தலைப்பு, பொருளடக்கம்
2013 ஜூலை 20ந்தேதி திரு.தியாகராஜன் என்ற வாசக நண்பர், வலைப்பூவுக்கு ஒரு TOCயும், அதாவது பொருளடக்கம் பக்கமும், பதிவுகளின் ஆரம்பத்தில் அந்தப் பதிவின் சுருக்கத்தையும், அதற்கு ஒரு ஆங்கிலத் தலைப்பையும் சூட்டுமாறு அறிவுறுத்தினார். சிந்தித்தேன். அபோது 170 பகுதிகளை கடந்து விட்டேன் என்று நினைக்கிறேன். மறுபடி ஆரம்பத்திலிருந்து திருத்திக் கொண்டு வர வேண்டுமே என்று எண்ணி மலைத்தேன். சரி செய்துதான் ஆகவேண்டும். நல்ல யோசனைதானே நாம் சிரமத்தைப் பார்க்கக்கூடாது என்று எண்ணி அனைத்து பதிவுக்கும் ஆங்கிலத் தலைப்பைக் கொடுத்தேன். ஆனால் சுருக்கம் கொடுப்பது பெரிய பணியாக இருக்கும் என்று கருதி, சுருக்கத்தை அவர் சொன்னதற்கு அடுத்த பதிவில் இருந்து மட்டும் கொடுக்க ஆரம்பித்தேன். அதுவும் பதிவுகளுக்குப் புது மெருகைக் கொடுத்தது. அவர் கேட்டுக் கொள்ளும் முன்பே நமது வலைப்பூவிலேயே அனைத்துப் பதிவுகளும் என்ற சுட்டியில் பொருளடக்கம் இருந்ததை அவர் கவனிக்கவில்லை போலும். ஆக அவர் சொன்ன அனைத்து அறிவுறுத்தல்களையும் செய்து முடித்தேன்.
மதிப்புரைகளும் அறிமுகங்களும் - பதிவு திரட்டிகளும்
27.5.2013 அன்று திரு.RVஅவர்கள் தனது வலைப்பூவில் முழு மஹாபாரதத்திற்கு ஒரு அறிமுகம் கொடுத்திருந்தார். அந்த வலைத்தளத்தில் இருந்து சில பார்வைகள் வந்திருப்பதை எனது பிளாகரின் டேஷ்போர்டில் கண்ட நான், அவரது வலைத்தளத்திற்கு சென்று, அந்தப் பதிவின் கீழே பின்னூட்டமாக எனது நன்றியைத் தெரிவித்திருந்தேன்.
திரு.ஜெயவேலன் அவர்கள்
தனது பங்குக்கு முகநூலில்மஹாபாரதத்தைப் பரப்பிக் கொண்டிருந்தார். அப்படி அவர் பரப்பி வருகையில்,
எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு நமது முழு மஹாபாரதத்தை அறிமுகப்படுத்தி ஒரு
மடல் எழுத, அதை திரு.ஜெயமோகன் அவர்கள் தனது தளத்தில் வெளியிட்டிருந்தார். அன்று ஒரு நாள் மட்டும் முழு மஹாபாரத வலைப்பூ
4000 பார்வைகளைக் கண்டது. அதுவரை அதிகபட்சமாக ஒரு மாதத்தில் கிடைக்கக்கூடிய
பார்வைகள் ஒரே நாளில் கிடைத்தன. பிறகு, வாடிக்கையாக வாசிக்கும் நண்பர்கள் பலர்
கிடைத்தனர்.
இங்கு எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களைக் குறித்து சொல்லியே ஆகவேண்டும். நான் அவரது நீண்ட நாள் வாசகன். இருப்பினும். அவரைத் தொடர்பு கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கு தயக்கமே காட்டி வந்திருக்கிறேன். நான் யார் என்று கூட தெரியாமல், ஒரு நண்பரின் மடல் மட்டும் கண்டு, "இவனுக்கெல்லாம் நாம் ஏன் அறிமுகம் கொடுக்க வேண்டும்" என்று நினையாமல் உடனே தனது தளத்தில் அறிமுகம் செய்து வைக்கும் பெருந்தன்மை இன்றைய எழுத்தாளர்களில் எத்தனை பேருக்கு இருக்கும். ஆங்கிலத்தில் Down to Earth என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட எளிமை கொண்ட ஒரு எழுத்தாளரைத் தமிழகம் காண்பது அரிது. இவரைப் போன்றோரை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும். திரு.ஜெயமோகன் அவர்கள் இவ்வளவு செய்தும், நான் மிக மிக தாமதமாகத்தான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். அந்தக் குற்ற உணர்ச்சி இன்னும் எனக்குள் இருக்கிறது.
இங்கு எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களைக் குறித்து சொல்லியே ஆகவேண்டும். நான் அவரது நீண்ட நாள் வாசகன். இருப்பினும். அவரைத் தொடர்பு கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கு தயக்கமே காட்டி வந்திருக்கிறேன். நான் யார் என்று கூட தெரியாமல், ஒரு நண்பரின் மடல் மட்டும் கண்டு, "இவனுக்கெல்லாம் நாம் ஏன் அறிமுகம் கொடுக்க வேண்டும்" என்று நினையாமல் உடனே தனது தளத்தில் அறிமுகம் செய்து வைக்கும் பெருந்தன்மை இன்றைய எழுத்தாளர்களில் எத்தனை பேருக்கு இருக்கும். ஆங்கிலத்தில் Down to Earth என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட எளிமை கொண்ட ஒரு எழுத்தாளரைத் தமிழகம் காண்பது அரிது. இவரைப் போன்றோரை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும். திரு.ஜெயமோகன் அவர்கள் இவ்வளவு செய்தும், நான் மிக மிக தாமதமாகத்தான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். அந்தக் குற்ற உணர்ச்சி இன்னும் எனக்குள் இருக்கிறது.
முக நூல் (Facebook)
திரு.ஜெயவேலன்
அவர்களும் முழு மஹாபாரத முகநூல்பக்கத்தைச் செழுமைப்படுத்தி பலரை லைக் செய்ய வைத்துக் கொண்டிருந்தார். ஆகையால்
நான் பதிவிட்டதுமே (ஒரு அரை மணி நேரத்திற்குள்) படிக்க ஒரு ஐம்பது பேர்
சேர்ந்தனர். ஒருவர் அந்த முகநூல்பக்கத்தை லைக் செய்தாலே, அடுத்து நமது பதிவு Status update ஆகும்போது,
அவருக்கு {லைக் செய்தவருக்கு} சென்றுவிடும். அப்படி இந்த நொடி வரை 1033 பேர் லைக்
செய்திருக்கிறார்கள். மேலும் நானும் முகநூலில் பல குழுமங்களில் சேர்ந்து பக்கங்களை
பகிர்ந்து கொள்கிறேன். இப்போது வரை நமது வலைப்பூ 1,06,300 பார்வைகள்
பெற்றிருக்கிறது. மே மாத ஆரம்பத்தில் வெறும் பத்தாயிரம் பார்வைகளாக இருந்தது,
மூன்றே மாதத்தில் ஒரு லட்சம் பார்வைகளைக் கடந்தது.
நினைவுகள்
ஒரு லட்சம் பார்வைகளை எட்டும் போது யோசித்தேன். நாம் இந்த வலைப்பூவை நிறுத்திவிடலாம் என்று நினைத்தோமே. அப்போதைய பத்தாயிரம் பார்வைகள் இன்று ஒரு லட்சம் பார்வைகளாக மாறியிருக்கின்றனவே. வலைப்பூவைத் தொடர்ந்து நடத்தி நல்ல வேலை செய்தோம். ஒரு லட்சம் பேரில் பத்தாயிரம் பேராவது சில கதைகளையாவது தெரிந்திருக்க மாட்டார்களா? அதற்கு திரு.ஜெயவேலன் அவர்களுக்கு கோடி நன்றிகள்.
தமிழர் அனைவரும்
மஹாபாரதம் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வலைப்பூ மூன்று
மாதத்தில் ஒரு லட்சம் பார்வைகள் பெற்றது என்பது பெரிய சாதனை கிடையாது. மொழிபெயர்ப்பை
ஆரம்பித்த போது ஆதிபர்வம் முடியவே மூன்று வருடங்கள் ஆகும் என்று நினைத்தேன். ஆனால்
திரு.ஜெயவேலன் அவர்கள் கொடுத்த ஊக்கத்தால் இன்றோடு தொடரை ஆரம்பித்து 9 மாதங்களும்
17 நாட்களும் ஆகின்றன {22.11.2013 முதல் 8.9.2013 வரை) ஆக மொத்தம் 290 நாட்களில்
ஆதிபர்வத்தில் 236 பகுதிகளை முடித்துவிட்டேன். ஆகஸ்ட் 2013ல் மட்டுமே 58 பகுதிகளை
மொழிபெயர்த்தேன். கிருஷ்ண ஜெயந்திக்குள் (28.8.2013) ஆதிபர்வத்தை முடிக்க வேண்டும்
என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை. இன்றுதான் முடிகிறது. அதிலும் ஒரு
சிறப்புதான். நாளை விநாயகர் சதுர்த்தி அன்று சபா பர்வத்தின் முதல் பகுதியை
வெளியிட்டு ஆரம்பிக்கப் போகிறோம் என்ற நினைவே நெகிழ்ச்சியைத் தருகிறது.
புத்தகமாக வெளியிடலாமா?
மஹாபாரதத்தின்
ஆதிபர்வம் முடிந்ததும் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று சில வாசக நண்பர்கள்
கேட்டிருந்தார்கள். அச்சகத்தில் விசாரித்ததில், எழுத்து அளவைச் சுருக்கி, 7.5" x 10" அளவு கொண்ட ஒரு
புத்தகத்தை படங்கள் இல்லாமல் 400 பக்கங்கள் கொண்டதாக ஆக்கி {தற்சமயம் நாம் மொழிபெயர்த்திருக்கும் ஆதிபர்வ பகுதிகள் யூனிகோட் எழுத்துருவில், 10 புள்ளியில், MS Word மென்பொருளில், A4 அளவு கொண்ட கோப்பில் 700 பக்கங்கள் வருகிறது}, ஆயிரம் புத்தகம்
அச்சடிக்க வேண்டுமென்றால் ரூ.2,00,000 லட்சம் செலவு ஆகும் என்கிறார்கள். அவ்வளவு
பெரிய தொகை செலவு செய்ய நம்மால் முடியாது. ஆகையால் இது இருந்தவாறு இப்படியே இருக்கட்டும்.
எப்படியும் இன்றைய காலத்தில் இணையம் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டது. ஆகையால் அனைவரும்
இணையத்தில் அமரும் சமயம் வரும். அப்போது அனைவரும் இணையம் மூலமே முழு
மஹாபாரதத்தையும் படித்துக் கொள்ளட்டும் என்று நினைத்து அந்த எண்ணத்தைக்
கைவிடுகிறேன். பிற்காலத்தில் ஏதாவது பதிப்பகம் செலவை ஏற்க முன் வந்தால் செய்யலாம்
என்று இருக்கிறேன்.
இப்போதே பதிவு நீண்டு
விட்டதாகக் கருதுகிறேன். சபா பர்வம் மொழிபெயர்ப்புகளைத் தொடர வேண்டும். ஆகையால்
இத்தோடு நிறுத்துகிறேன். எதையாவது விட்டுவிட்டேன் என்று கருதினால், மீண்டும் இந்தப்
பதிவை திருத்திக் கொள்வேன்.
பார்வையிட்டு படித்த
அனைத்து வாசகர்களுக்கும் நன்றி. நமது முழு மஹாபாரத வலைப்பூவில் புதிதாக விவாதமேடை
தொடங்கியிருக்கிறோம். அருமையான விவாதங்களை இப்போதே திரு.தமிழ் வள்ளுவர் அவர்களும்,
திரு.மெய்யப்பன் அருண் அவர்களும், திரு.முத்தமிழ் வேந்தன் அவர்களும் தொடர்ந்து
நடத்தி வருகிறார்கள். இந்த வலைப்பூவின் அந்தப் பகுதி {விவாத மேடை} கண்டிப்பாக
மேலும் மேலும் வளரும். விருப்பம் இருக்கும் வாசகர்கள் அங்கே சென்று விவாதத்தில்
பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.
ஏதாவது பிழைகள்
சுட்டிக்காட்ட வேண்டுமென்றால் அந்த விவாத மேடையின் கடிதம் என்ற சுட்டியிலும்,
பதிவின் கீழே இருக்கும் மறுமொழி என்ற சுட்டியிலும், arulselvaperarasan@gmail.com
என்ற எனது மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம். பிழைகள் சுட்டிக்காட்டினால்
நிச்சயம் திருத்திக் கொள்வேன்.
அனைவருக்கும் நன்றி
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
8.9.2013, திருவொற்றியூர்
ஆங்கிலத்தில் | In English |