Forest conflagration extinguished! | Adi Parva - Section 236 | Mahabharata In Tamil
(மய தரிசன பர்வம் - 07)
பதிவின் சுருக்கம் :மந்தபாலர் தன் பிள்ளைகளிடம் உரையாடி அவர்களையும் ஜரிதையையும் அழைத்துக் கொண்டு வேறு நாட்டிற்குச் சென்றது; அர்ஜுனன் இந்திரனிடம் அனைத்து ஆயுதங்களையும் கேட்டது; இந்திரன் அதற்கு கால நிர்ணயம் செய்தது; கிருஷ்ணன் அர்ஜுனனின் நிலைத்த நட்பை இந்திரனிடம் வரமாகக் கேட்டது; கிருஷ்ணன், அர்ஜுனன், மயன் ஆகிய மூவரும் மகிழ்ச்சியாக நதிக்கரையில் வந்து அமர்ந்தது...
வைசம்பாயனர் சொன்னார், "மந்தபாலர் தனது பிள்ளைகளிடம், "உங்கள் பாதுகாப்புக்காக நான் அக்னியிடம் பேசினேன். அந்தச் சிறப்புமிகுந்த தேவன் {அக்னி} எனது விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தான்.(1) அக்னியின் அந்த வார்த்தையாலும், உங்கள் தாயின் {ஜரிதையின்} அறத்தாலும், நீங்களே பெற்றிருக்கும் பெரும் சக்தியாலும் தான் நான் முன்னமே வரவில்லை.(2) எனவே எனது மக்களே {மகன்களே}, என்னைக்குறித்து உங்கள் இதயங்களில் மனக்கசப்பை நிலைக்கச் செய்யாதீர். நீங்கள் அனைவரும் வேதங்களை அறிந்த முனிவர்கள். அக்னி கூட உங்கள் அனைவரையும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறான்" என்றார்".(3)