Showing posts with label சிசுபால வத பர்வம். Show all posts
Showing posts with label சிசுபால வத பர்வம். Show all posts

Friday, October 04, 2013

சிசுபால வதம் -சபாபர்வம் பகுதி 44

The slaughter of Sisupala | Sabha Parva - Section 44 | Mahabharata In Tamil

(சிசுபால வத பர்வத் தொடர்ச்சி)

சிசுபாலன் கிருஷ்ணனுக்குச் சவால் விடுவது; கிருஷ்ணன் அங்கே கூடியிருந்து மன்னர்களுக்கு சிசுபாலனின் தவறுகளை விளக்குவது; சிசுபாலன் கிருஷ்ணனைக் கடிந்து கொள்வது; கிருஷ்ணன் சிசுபாலனைக் கொல்வது; யுதிஷ்டிரனின் ராஜசூய வேள்வி முடிவுக்கு வருவது; கிருஷ்ணன் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு துவாரகை திரும்புவது.

வைசம்பாயனர் சொன்னார், "பீஷ்மரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட, பெரும் வீரம் கொண்ட சேதியின் ஆட்சியாளன் {சிசுபாலன்}, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} போரிட விரும்பி, அவனிடம் "ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நான் உனக்குச் சவால் விடுகிறேன். நான் உன்னைக் கொல்லும்வரை பாண்டவர்களுடன் சேர்ந்து சண்டையிடு. ஓ கிருஷ்ணா, பாண்டுவின் மகன்கள், மன்னனாகக் கூட இல்லாத உன்னை வழிபட்டு, இந்த மன்னர்களை அவமதித்ததால், உன்னுடன் சேர்த்துக் கொல்லப்பட தகுதி படைத்தவர்களே. ஓ கிருஷ்ணா, மன்னனாக இல்லாதவனும், அடிமையும், தீயவனும், வழிபடத்தகாதவனுமாகிய ஆகிய உன்னை வழிபடத்தகுதியுடையவன் என்று குழந்தைத்தனமாகப் பூஜித்த பாண்டவர்கள் கொல்லப்படத் தக்கவர்களே என்பது என் கருத்து" என்று சொன்னான். இப்படிச் சொன்ன அந்த மன்னர்களில் புலி {சிசுபாலன்}, அங்கே கோபத்தில் கர்ஜித்தபடி நின்றான். 


இப்படி சிசுபாலன் ஓய்ந்த பிறகு,  கிருஷ்ணன், பாண்டவர்கள் முன்னிலையில் அனைத்து மன்னர்களிடமும் மெல்லிய வார்த்தைகளில் பேசினான், "மன்னர்களே, இந்த தீய மனதுடையவன், சத்வகுலமகளின் மகன், எங்கள் சத்வ குலத்துக்கு வந்த பெரும் எதிரியாவான். நாங்கள் இவனைக் காயப்படுத்த எண்ணுவதே கிடையாது என்றாலும், இவன் {சிசுபாலன்} எப்போதும் எங்கள் தீமையையே நாடினான். மன்னர்களே, தீய செயல்கள் புரியும் இந்தப் பாவி {சிசுபாலன்}, எனது தந்தையின் {வசுதேரின்} தங்கை மகனாக இருப்பினும், நான் பிராக்ஜோதிஷ நகருக்கு சென்றுவிட்டதைக் கேள்விப்பட்டு, துவாரகைக்கு வந்து, அந்த நகரத்தை எரித்தான். போஜ மன்னன் {உக்கிரசேனன்} ரைவத மலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த மன்னனின் பணியாட்களைத் தாக்கி, அவர்களைச் சங்கிலிகளில் பிணைத்து தனது நகரத்துக்கு இழுத்துச் சென்றான். இவனது எல்லா செயல்களிலும் பாவத்தைச் செய்த இந்த பாவி {சிசுபாலன்}, எனது தந்தையின் {வசுதேவரின்} வேள்வியைத் தடை செய்யும் பொருட்டு, ஆயுதம் தாங்கிய வீரர்களின் பாதுகாப்புடன் விடப்பட்டிருந்து அந்த குதிரை வேள்விக்கான வேள்விக்குதிரையை திருடிச் சென்றான். தீய நோக்கங்களால் உந்தப்பட்டு, அப்பாவியான பப்ருவின் (அக்ரூர்) மனைவியை, அவள் துவாரகையில் இருந்து சௌவீர நாட்டுக்குச் செல்லும் வழியில், அவள் தயங்கிய போதும், அவளுடன் பெரும் உவகை கொண்டான் {this one ravished the reluctant wife of the innocent Vabhru}. தனது மாமனுக்குத் தீங்கிழைத்த இவன் {சிசுபாலன்}, மன்னன் கருஷனின் உடைக்குள் ஒளிந்து கொண்டு, கருஷனுக்காக நிச்சயிக்கப்பட்டிருந்த விசாத தேசத்து இளவரசியான அப்பாவி பத்திரையுடன் உவகை கொண்டான் {உல்லாசமாக இருந்தான்}. இந்தத் துயரங்கள் அனைத்தையும் நான் எனது தந்தையின் {வசுதேவரின்} தங்கைக்காகப் பொறுமையாகத் தாங்கிக் கொண்டேன். இருப்பினும், இவையெல்லாம் இன்று இந்த மன்னர்கள் முன்னிலையில் நடைபெற்றது அதிர்ஷ்ட வசமே. இவன் {சிசுபாலன்} என்னிடம் கொண்டிருக்கும் பகைமையை இன்று நீங்கள் அனைவரும் கண்டீர்கள். என் முதுகுக்குப் பின்னால் இவன் {சிசுபாலன்} செய்ததையெல்லாம் அறிந்தீர்கள். இதையெல்லாம் மீறி, இந்த ஏகாதிபதிகளின் முன்னிலையில் கர்வத்தின் எல்லையைக் கடந்ததால், இவன் {சிசுபாலன்} என்னால் கொல்லப்படத் தகுதியுடையவனாக இருக்கிறான். இவன் இன்று எனக்கு ஏற்படுத்தியிருக்கும் காயங்களை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. விரைவான மரணத்தை விரும்பி, இந்த மடையன் ருக்மிணியை விரும்பினான். ஆனால் வேதப் பொருளை அடைய முடியாத சூத்திரன் போல, இந்த மூடனால் {சிசுபாலனால்} அவளை {ருக்மிணியை} அடைய முடியவில்லை" ,என்றான் {கிருஷ்ணன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட அங்கு கூடியிருந்து ஏகாதிபதிகள், சேதி நாட்டு ஆட்சியாளனை {சிசுபாலனை} இகழ்ந்தார்கள். ஆனல் பலம்பொருந்திய சிசுபாலன், இந்த வார்த்தைகளைக் கேட்டு, சத்தமாகச் சிரித்து, "ஓ கிருஷ்ணா, ருக்மிணி (உனது மனைவி) மீது நான் ஆசை கொண்டிருந்தேன் என்பதை இவ்வளவு மன்னர்கள் முன்னிலையில் சொல்கிறாயே, சபையில் இவற்றைச் சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா? ஓ மதுவைக் கொன்றவனே {கிருஷ்ணனே}, தனது மனைவி வேறு யாராலோ நினைக்கப்பட்டாள் என்று மதிப்பு மிக்க மனிதர்களுக்கிடையில் சொல்வதற்கு உன்னைவிட்டால் வேறு ஆண்மகன் யார் இருக்கிறார்? ஓ கிருஷ்ணா, நீ விரும்பினால் என்னை மன்னி அல்லது மன்னிக்காதே. ஆனால் கோபத்தாலோ, நட்பாலோ, நீ எனக்கு என்ன செய்துவிட முடியும்?" என்று கேட்டான் {சிசுபாலன்}.

சிசுபாலன் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது, மதுவைக் கொன்ற மேன்மையானவன் {கிருஷ்ணன்}, தனது மனதில் அசுரர்களின் கர்வத்தை அடக்கும் சக்கரத்தை நினைத்தான். சக்கரம் தனது கைகளுக்கு வந்தவுடன்,  பேச்சில் வல்லவனான அந்தச் சிறந்தவன் {கிருஷ்ணன்}, சத்தமாக இந்த வார்த்தைகளைச் சொன்னான். "பூமியின் தலைவர்களே, ஏன் இவன் {சிசுபாலன்} இதுவரை என்னால் மன்னிக்கப்பட்டான் என்பதைக் கேளுங்கள். அவனது தாயாரால் கேட்டுக்கொள்ளப்பட்ட படி, இவனது {சிசுபாலனது} நூறு குற்றங்கள் என்னால் மன்னிக்கப்பட்டன. இதை அவள் {சிசுபாலனின் தாய்} என்னிடம் வரமாகவே கேட்டாள். நானும் அருளினேன். மன்னர்களே அந்த எண்ணிக்கை நிறைவடைந்துவிட்டது. ஏகாதிபதிகளே, நான் இப்போது உங்கள் முன்னிலையில் இவனை {சிசுபாலனைக்} கொல்லப் போகிறேன்" என்று சொல்லிய யதுக்களின் தலைவன், அந்த எதிரிகளைக் கொல்பவன், பெரும் கோபம் கொண்டு, உடனடியாக சேதியின் ஆட்சியாளன் {சிசுபாலன்} தலையைத் தனது சக்கரத்தால் துண்டித்தான். அந்தப் பெரும்பலம் படைத்தவன், இடியால் தாக்கப்பட்ட மலைப்பாறைபோல கீழே விழுந்தான். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயன்}, வானில் இருக்கும் சூரியனைக் காண்பது போல சிசுபாலன் உடலில் இருந்து கடும் சக்திவெளியேறுவதை அங்கே கூடியிருந்த மன்னர்கள் கண்டனர். அப்படி வெளியே வந்த அந்த சக்தி, அனைத்து உலகங்களாலும் வழிபடப்படும் தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடைய கிருஷ்ணனை வணங்கி, அவனது {கிருஷ்ணனின்} உடலுக்குள் புகுந்தது. மனிதர்களின் தலைவனான அந்த பெரும்பலம்வாய்ந்தவனின் {கிருஷ்ணனின்} உடலுக்கு அந்த சக்தி புகுந்ததைக் கண்ட அந்த மன்னர்க்கூட்டம் அதை அற்புதமாகக் கருதினர். சேதி மன்னனை {சிசுபாலனை} கிருஷ்ணன் கொன்ற பிறகு, மேகமற்று இருந்த போதும் அங்கே மழையின் தூறல் இருந்தது, இடி முழக்கம் கேட்டது, பூமியே நடுங்கியது. அங்கே இருந்த மன்னர்களில் சிலர் பேச்சரியாது ஜனார்த்தனனை {கிருஷ்ணனைப்} பார்த்த படியே நின்றிருந்தனர். சிலர் தங்கள் கட்டைவிரலை உள்ளங்கைகளில் கோபத்தால் பிசைந்து கொண்டு, தங்கள் உதடுகளைப் பற்களால் கடித்துக் கொண்டனர். அந்த மன்னர்களில் சிர் விருஷ்ணி குலத்தோனைத் {கிருஷ்ணனைத்} தனிமையில் சந்தித்துப் பாராட்டவும் செய்தனர். சிலர் மிகுந்த கோபம் கொண்டரன், அதே வேளையில் சிலர் நடுநிலைவகித்தனர். பெரும் முனிவர்கள் இதயத்தில் மகிழ்ந்து கேசவனை {கிருஷ்ணனைப்} புகழ்ந்து விட்டுச் சென்றனர். கிருஷ்ணனின் வீரத்தைக் கண்ட உயர் ஆன்ம அந்தணர்களும், பெரும்பலம் வாய்ந்த மன்னர்களும், இதயத்தில் மகிழ்ந்து அவனைப் புகழ்ந்தனர்.

பிறகு யுதிஷ்டிரன் தனது தம்பிகளை அழைத்து, மன்னன் சிசுபாலனின் இறுதிச் சடங்குகளை, தமகோஷனின் வீர மைந்தனான சிசுபாலனுக்குச் சரியான முறையில் செய்யக் கட்டளையிட்டான். பாண்டுவின் மகன்கள் தங்கள் தமையனின் கட்டளையைச் சரியாகச் செய்தனர். பிறகு யுதிஷ்டிரன், அனைத்து மன்னர்களுடன் சேர்ந்து மன்னன் சிசுபாலனின் மகனை சேதி நாட்டுக் அரசனாய் நிறுவினான்.

பிறகு பெரும் சக்தி படைத்த குருக்களின் மன்னனுடைய {யுதிஷ்டிரனின்} அந்த {ராஜசூய} வேள்வி, ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அனைத்து வளமைகளாலும் அருளப்பட்டு, அனைத்து இளைஞர்களுக்கும் திருப்தியுடையதாய் அழகாக அமைந்தது. கடைசியாக அந்த {ராஜசூய} வேள்வி, அனைத்து இடையூறுகளும் நீங்கி, அபரிமிதமான செல்வங்களுடனும், தானியங்களுடனும், அபரிமிதமான அரிசி மற்றும் அனைத்து விதமான உணவுகளும் கொண்டு, அவை அனைத்தும் கேசவனால் {கிருஷ்ணனால்} கவனிக்கப்பட்டு அதிர்ஷ்டகரமாக முடிவுக்கு வந்தது. யுதிஷ்டிரன் சரியான நேரத்தில் அந்தப் பெரும் வேள்வியை முடித்தான். பெரும் பலம் வாய்ந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அந்த மேன்மையான சௌரி {கிருஷ்ணன்}, தனது வில்லான சாரங்கத்துடனும், சக்கரத்துடனும், கதாயுதத்துடனும், அந்த வேள்வியை கடைசிவரை காத்து நின்றான். அனைத்து க்ஷத்திரிய ஏகாதிபதிகளும், வேள்வியை முடித்து குளித்து விட்டு நின்ற அறம் தழைக்கும் யுதிஷ்டிரனிடம் வந்து, "நற்பேறினாலேயே நீ வெற்றியடைந்தாய். ஓ அறம் சார்ந்தவனே {யுதிஷ்டிரனே}, நீ ஏகாதிபத்திய மரியாதையை அடைந்துவிட்டாய். ஓ அஜமித குலத்தானே, உன்னால் உமது குலத்தின் புகழ் எங்கும் பரவி நிற்கிறது. ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, இந்த உனது செயலால், நீ பெரும் அறத் தகுதியை அடைந்துவிட்டாய். நாங்கள் விரும்பியவாறு, நாங்கள் உன்னால் வழிபடப்பட்டோம். நாங்கள் எங்கள் நாடுகளுக்குத் திரும்ப விரும்புகிறோம் என்பதை உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறோம். நீ எங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்" என்றனர்.

அந்த ஏகாதிபதிகளின் வார்த்தைகளைக் கேட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், ஒவ்வொருவரையும் அவர்கள் தகுதிக்கேற்ப வணங்கி, தனது தம்பிகளிடம், "இந்த ஏகாதிபதிகள் தங்கள் சுய விருப்பத்தின் பேரிலேயே நம்மிடம் வந்திருக்கிறார்கள். எதிரிகளைத் தண்டிக்கும் இவர்கள் என்னிடம் விடைபெற்றுத் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப விரும்புகின்றனர். அவர்கள் அருளப்பட்டிருக்கட்டும். நமது நாட்டு எல்லை வரை இவர்களை வழி அனுப்பிவிட்டு வாருங்கள்", என்று கட்டளையிட்டான். தனது தமையனின் {யுதிஷ்டிரனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த அறம் சார்ந்த பாண்டவ இளவரசர்கள், அவரவர்கள் தகுதிக்கேற்ப அந்த மன்னர்களைத் தொடர்ந்து சென்றனர். மன்னன் விராடனை பலம் பொருந்திய திருஷ்டத்யும்னன் தொடர்ந்து சென்றான். பெரும் பலம் பொருந்திய ரதசாரதியான யக்ஞசேனனைத் தனஞ்சயன் {அர்ஜுனன்} தொடர்ந்து சென்றான். பீஷ்மரையும், திருதராஷ்டிரரையும் பீமசேனன் தொடர்ந்து சென்றான். போர்களத்தில் நிபுணனான சகாதேவன், துரோணரையும் அவரது மகனையும் {அசுவத்தாமன்} தொடர்ந்து சென்றான். சுபலனையும் அவனது மகனையும் {சகுனியையும்} நகுலன் தொடர்ந்து சென்றான். திரௌபதியின் மகன்களும், சுபத்திரையின் மகனும் {அபிமன்யுவும்} மலைசார்ந்த நாடுகளுக்கு மன்னர்களைத் தொடர்ந்து சென்றனர். மற்ற க்ஷத்திரியக் காளைகள் வேறு பல க்ஷத்திரியர்களைத் தொடர்ந்து சென்றனர். ஆயிரக்கணக்கான அந்தணர்களும் உரிய மரியாதைகளுடன் திரும்பிச் சென்றனர்.

அனைத்து மன்னர்களும் அந்தணர்களும் சென்ற பிறகு, பலம்பொருந்திய வாசுதேவன் {கிருஷ்ணன்} யுதிஷ்டிரனிடம், "ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரனே}, உனது அனுமதியுடன் நான் துவாரகை செல்ல விரும்புகிறேன். பெரும் நற்பேறால், நீ வேள்விகளில் முதன்மையான ராஜசூய வேள்வியை முடித்திருக்கிறாய்" என்றான். ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} இப்படிச் சொல்லியதும், யுதிஷ்டிரன், "உனது கருணையால், ஓ கோவிந்தா {கிருஷ்ணா}, இந்தப் பெரும் வேள்வியை நான் முடித்திருக்கிறேன். உனது கருணையாலேயே எனது மேலாதிக்கத்தை அனைத்து க்ஷத்திரியர்களும் ஏற்றுக் கொண்டு, இங்கே பெரும் மதிப்புகளிலான காணிக்கைகளுடன் வந்தனர். ஓ வீரனே {கிருஷ்ணனே}, நீயில்லாமல், எனது இதயம் எந்த மகிழ்ச்சியையும் பெறவில்லை. ஆகையால், ஓ வீரனே {கிருஷ்ணனே}, ஓ பாவமற்றவனே நான் எப்படி உனக்கு விடைகொடுப்பேன்?  ஆனால் நீயும் துவாரகை சென்றாக வேண்டும்" என்றான். உலகம் முழுதும் புகழ் கொண்ட அறம்சார்ந்த ஹரி {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரனால் இப்படி சொல்லப்பட்ட பிறகு, தனது மைத்துனனுடன் {யுதிஷ்டிரனுடன்}, பிருதையிடம் {குந்தியிடம்} சென்று, "ஓ அத்தை, உனது மகன்கள் ஏகாதிபத்திய மதிப்பை அடைந்துவிட்டார்கள். அவர்கள் பெறும் செல்வச் செழிப்பை அடைந்துவிட்டார்கள். பெரும் வெற்றியையும் அடைந்து விட்டார்கள். இவை அனைத்திலும் திருப்தி கொள். ஓ அத்தை, நான் துவாரகை செல்ல விரும்புகிறேன். எனக்கு அனுமதி கொடு" என்றான். அதன் பிறகு கேசவன் {கிருஷ்ணன்}, திரௌபதியிடமும், சுபத்திரையிடமும் விடைபெற்றான். உள் அறைகளுக்குள் இருந்து யுதிஷ்டிரனுடன் வெளியே வந்து, தனது சுத்திகரிப்பு பணிகளை முடித்து, தனது தினசரி சடங்குங்களையும் வழிபாடுகளையும் முடித்து, அந்தணர்களை நல்வாழ்த்துகளை கூற வைத்தான். பிறகு அந்த பலம் வாய்ந்த கரம் கொண்ட தாருகன், அற்புதமான அலங்காரத்துடன் கூடிய மேகங்களைப் பிரதிபலிக்கும் ரதத்துடன் அங்கே வந்து நின்றான். கருடக் கொடி கொண்ட அந்த ரதம் அங்கே வந்ததைக் கண்ட தாமரை இலை போன்ற கண்கள் கொண்ட உயர்ந்த ஆன்மா {கிருஷ்ணன்}, அதை மரியாதையுடன் வலம் வந்து, அதன் மேல் ஏறி துவாரகைக்குக் கிளம்பினான். பிறகு, பெரும் வளமை கொண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன் பெரும் பலம்வாய்ந்த வாசுதேவனை {கிருஷ்ணனை} நடந்தே தொடர்ந்து சென்றான். பிறகு, தாமரை இலைகளைப் போன்ற கண்களை உடைய ஹரி {கிருஷ்ணன்}, ரதங்களில் சிறந்த தனது ரதத்தைச் சிறிது நேரம் நிறுத்தி, குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம், "ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரரே}, உமது குடிகளைக் கண்ணாகப் பொறுமையுடன் பாதுகாத்து வாரும். அனைத்து உயிர்களுக்கும் மேகம் எப்படி நன்மையைச் செய்கிறதோ, அனைத்துப் பறவைகளுக்கு மரம் எப்படி தனது கிளைகளை விரித்து நன்மை செய்கிறதோ, சாகாதவர்களுக்கு {தேவர்களுக்கு} ஆயிரம் கண்ணுடையவன் {இந்திரன்} எப்படிப் பாதுகாப்பாக இருக்கிறானோ, அப்படி உமது உறவினர்களுக்கு பாதுகாப்பாக இரும். கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் இப்படி பேசி முடித்து, ஒருவருக்கொருவர் விடைபெற்று தங்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர். ஓ மன்னா {ஜனமேஜயா}, சத்வ குலத்தலைவன் {கிருஷ்ணன்} துவாராவதிக்குத் {துவாரகைக்குத்} திரும்பியதும், மன்னன் துரியோதனன், மன்னன் சுபலனின் மகன் சகுனியுடன் தனியாக, அந்தத் தெய்வீக சபா மண்டபத்தில் தொடர்ந்து வாழ்ந்தான்.


பீஷ்மருக்கு எதிராக கலகம் பிறந்தது - சபாபர்வம் பகுதி 43

The kings wrath for Bhishma | Sabha Parva - Section 43 | Mahabharata In Tamil

(சிசுபால வத பர்வத் தொடர்ச்சி)

பீஷ்மர், பீமனின் கோபமாற்றுவது; இதைக் கேட்ட சிசுபாலன் மிகுந்த கோபம் கொண்டு பீஷ்மரை இகழ்வது; பீஷ்மர் பேசிய வார்த்தைகள் அங்கு கூடியிருந்து மன்னர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்துவது; பீஷ்மரைக் கொல்ல அங்குக் கூடியிருந்த மன்னர்களில் சிலர் எண்ணுவது; பீஷ்மர் சமாதானம் சொல்வது;

பீஷ்மர் சொன்னார், "அழியாத பலம் கொண்ட உன்னை {பீமனே} சேதி நாட்டு ஆட்சியாளன் {சிசுபாலன்} சொந்த புத்தியால் அழைக்கவில்லை. நிச்சயமாக, இது அண்டத் தலைவனான கிருஷ்ணனின் காரியம்தான். ஓ பீமா, என்னை மரணத்தினால் ஆட்கொள்ளப்பட்ட சொந்த குலத்தின் இந்தப் பாவி {சிசுபாலன்} இன்று அவமதித்தது போல அவமதிக்க இந்தப் பூமியில் வேறு எந்த மன்னன் இருக்கிறான்? இந்த பலம்வாய்ந்த கரம் உடையவன் {சிசுபாலன்}, சந்தேகமில்லாமல் ஹரியுடைய {கிருஷ்ணனுடைய} சக்தியின் ஒரு பாகம்தான். நிச்சயமாக, அந்தத் தலைவன் {கிருஷ்ணன்} தனது சக்தியைத் தானே எடுத்துக் கொள்ள விரும்புகிறார். இந்தச் சூழ்நிலையில், ஓ குரு குலத்தின் புலியே {பீமா}, தீய இதயம் கொண்ட புலி போன்ற சேதி நாட்டு மன்னன் {சிசுபாலன்}, நம்மையெல்லாம் மதிக்காமல் கர்ஜித்திக் கொண்டு இருக்கிறான்" என்றார் {பீஷ்மர்}.


வைசம்பாயனர் தொடர்ந்தார், "பீஷ்மரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சேதி நாட்டு மன்னன் {சிசுபாலன்} மேலும் பொறுத்துக் கொள்ள முடியாமல். கோபத்தால் பீஷ்மரிடம் பேசினான்.

"ஓ பீஷ்மா, நிபுணத்துவம் வாய்ந்த புகழ்பாடியைப் போல தொடர்ந்து இருக்கையில் இருந்து எழுந்து கேசவனைப் {கிருஷ்ணனைப்} புகழ்ந்து கொண்டிருக்கிறாய். அவன் {கிருஷ்ணன்} கொண்டிருப்பதாக நீர் சொல்லும் வீரத்தை நமது {உமது எதிரியாகிய நாங்கள்} எதிரிகள் அடையட்டும். ஓ பீஷ்மா, உனது மனம் மற்றவர்களைப் புகழ்வதில் இனிமை அடைகிறது என்றால், கிருஷ்ணனை விட்டு நீ இந்த மன்னர்களைத் துதி.

பிறக்கும் போதே இந்தப் பூமியைப் பிளந்த மன்னர்களில் அற்புதமான பால்ஹிகாவின் ஆட்சியாளன் தரதனைத் துதி.

ஓ பீஷ்மா, அங்கம் வங்கம் எனும் பகுதிகளை ஆளும் ஆட்சியாளன் கர்ணன், ஆயிரம் கண்கள் உடையவனுக்கு {இந்திரனுக்கு} நிகரானவன், பெரும் வில்லை வளைப்பவன், பலம் வாய்ந்த கரங்களும், பிறக்கும் போதே தெய்வீக காது கண்டலங்களும், இயற்கையான கவசமும் கொண்டு, உதயசூரியனைப் போலப் பிரகாசித்து, வாசவனுக்கு {இந்திரனுக்கு} நிகரான ஒப்பற்ற ஜராசந்தனை மல்யுத்தத்தில் வீழ்த்தி அந்த ஏகாதிபதியை கிழித்து துவைத்தவன் {கர்ணன்} இருக்கிறான். அவனைத் துதி.

ஓ பீஷ்மா, பெரும் பலம் வாய்ந்த வீரர்களான, தந்தையும் மகனுமான துரோணரும், அஸ்வத்தாமனும், புகழுக்குத் தகுந்தவர்கள், அந்தணர்களில் சிறந்தவர்கள் அவர்கள் இருவரில் எவர் ஒருவரும், ஓ பீஷ்மா, கோபம் கொண்டால் அசைவன மற்றும் அசையாதன கொண்ட மொத்த பூமியையும் அழித்து விடுவார்கள், என்று நான் நம்புகிறேன். ஓ பீஷ்மா, போரில் துரோணருக்கோ அஸ்வத்தாமனுக்கோ நிகரான ஒரு மன்னனை நான் காணவில்லை. நீ ஏன் அவர்களைப் புகழ விரும்பவில்லை?

பலம்வாய்ந்த கரம் கொண்ட மன்னர்களுக்கு மன்னன், கடல் சூழ்ந்த மொத்த உலகிலும் நிகரற்றவனாக இருக்கும் துரியோதனனையும் தாண்டி, பெரும் வீரமும், அனைத்து ஆயுதங்களும் கொண்ட ஜெயத்ரதனையும் தாண்டி, வீரத்துக்காக உலகத்தாரால் கொண்டாடப்படும் கிம்புருஷர்களின் குரு துருமன், சரத்வத்தின் மகனும், பாரத இளவரசர்களின் குருவும், பெரும் சக்தி படைத்த முதிய கிருபர் ஆகியோரையும் தாண்டி, கேசவனை {கிருஷ்ணனை} நீ ஏன் புகழ்கிறாய்? வில்லாளிகளில் முதன்மையான அற்புதமான மன்னனும், பெரும் சக்தி கொண்டவனுமான ருக்மியைப் புகழாமல் ஏன் கேசவனைப் புகழ்கிறாய்?

மிதமிஞ்சிய சக்தி கொண்ட பீஷ்மகன், மன்னன் தண்டவக்ரன், எண்ணற்ற வேள்விக்குச்சிகளுக்காக அறியப்படும் பகதத்தன், மகத மன்னன் ஜெயத்சேனன், விராடன், துருபதன், சகுனி, பிருஹத்வலன், அவந்த பாண்டியாவின் விந்தனும் அனுவிந்தனும், பெரும் வளமை கொண்ட ஸ்வேத உத்தம சாங்கியா, கர்வம் கொண்ட ரிஷசேனன், பெரும் பலம் கொண்ட ஏகலவ்யன், அபரிமிதமான சக்தி கொண்ட கலிங்க நாட்டு பெரும் சாரதி ஆகியோரையெல்லாம் விட்டு கேசவனை {கிருஷ்ணனை} நீ ஏன் புகழ்கிறாய்? ஓ பீஷ்மா, உனது மனம் எப்போதும் அடுத்தவர்களைத் துதி பாடுவதில் நிலைத்திருந்தால், நீ ஏன் சல்லியனையும், பூமியின் மற்ற ஆட்சியாளர்களையும் புகழவில்லை?

நீதிகள் சம்பந்தமாக அறம்சார்ந்த முதிய மனிதர்களிடம் நீர் கேட்காதது திண்ணமாகத் தெரிகிறது. அதற்கு நான் என்ன செய்துவிட முடியும். ஓ பீஷ்மா, தன்னையும் மற்றவர்களையும், இகழ்வதும் புகழ்வதும், மரியாதைக்குரியவர்களின் செயலில்லை என்பதை அறிவாயா? ஒ பீஷ்மா, அறியாமையால் விடாமல் தகுதியில்லாத கேசவனைப் {கிருஷ்ணனைப்} புகழும் இந்த உனது நடத்தையை யாரும் அங்கீகரிக்க மாட்டார்கள். உனது விருப்பத்தால் மட்டுமே, முழு அண்டத்தையும் இந்த போஜனின் (கம்சனின்) வேலைக்காரனும், மாட்டு இடையனுமானவனிடம் நிறுவ, உன்னால் எப்படி முடிகிறது?

ஒரு வேளை, ஓ பாரதா, இந்த நிலை உனது இயல்பன்று, நான் முன்னமே சொன்ன பூலிங்கப் பறவையைப் போலவே நீ இருக்கிறாய். இமயமலைக்கு அடுத்த பக்கத்தில் பூலிங்கம் என்ற ஒரு பறவை இருந்தது. ஓ பீஷ்மா, அந்தப் பறவை எப்போதும் பாதகமான வார்த்தைகளையே பேசும். 'மூர்க்கத்தனமாக எதையும் செய்யாதீர்' இதுவே அவள் {பூலிங்கப் பறவை} அடிக்கடிச் சொல்வது. ஆனால் தானே மூர்க்கமாகத் தான் நடந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவள் {பூலிங்கப் பறவை} அறிவதில்லை. குறைவான அறிவு கொண்ட அந்தப் பறவை சிங்கத்தின் உணவு உண்ட போது, அதன் வாயில், அதன் பற்களுக்கிடையே சிக்கியிருக்கும் இறைச்சித் துண்டுகளை உண்டது. நிச்சயமாக, ஓ பீஷ்மா, சிங்கம் சம்மதித்திருப்பதால் அந்தப் பறவை வாழ்கிறது. ஓ பாவம் நிறைந்த பாவியே, நீ எப்போதும் அந்தப் பறவை போலவே பேசுகிறாய். நிச்சயமாக, ஓ பீஷ்மா, இந்த மன்னர்கள் சம்மதித்திருப்பதால் மட்டுமே நீ வாழ்கிறாய். அனைவரின் கருத்துகளுக்கும் எதிராகச் செய்வதையே செய்யும் உன்னைப் போல வேறு எவனும் இல்லை" என்றான் {சிசுபாலன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "சேதி ஆட்சியாளனின் இந்தக் கடுஞ்சொற்களைக் கேட்ட பீஷ்மர், ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்தச் சேதி மன்னனிடம், "உண்மையில் இந்தப் பூமியின் ஆட்சியாளர்கள் சம்மதித்திருப்பதால்தான் நான் உயிருடன் இருக்கிறேனா? ஆனால், நான் இந்த மன்னர்களை ஒரு காய்ந்த புல்லுக்கு ஈடாகக் கூட மதிக்கவில்லை" என்றார். இந்த வார்த்தைகளைப் பீஷ்மர் பேசியது, கூடியிருந்த மன்னர்கள் கோபத்தால் கொதித்தார்கள். அவர்களில் சிலர் எழுந்து நின்று பீஷ்மரை இகழ ஆரம்பித்தார்கள்.

பீஷ்மரின் அந்த வார்த்தைகளைக் கேட்ட பெரும் விற்களைக் கொண்ட அந்த மன்னர்களில் சிலர், "இந்த பாவி பீஷ்மன், கிழவனாயிருந்தும் கர்வியாக இருக்கிறான். ஆகையால், மன்னர்களே, கோபத்தால் உந்தப் பட்டிருக்கும் இந்தப் பீஷ்மனை, விலங்கைக் கொல்வதைப் போல கொல்ல வேண்டும். நாம் இவனை புல்லையோ, வைக்கோலையோ எரிப்பது போல எரித்துவிடுவோம்" என்றனர். அந்த ஏகாதிபதிகளின் இந்த வார்த்தைகளைக் கேட்ட குருக்களின் பெருந்தகப்பன் பீஷ்மர், பெரும் புத்திகூர்மையோடு அந்தப் பூமியின் தலைவர்களுக்குப் பதிலளித்தார். "நமது பேச்சுக்கு ஒரு எல்லையை நான் காணவில்லை. வார்த்தைகள் வார்த்தைகளாலேயே பதிலளிக்கப்படுகின்றன. ஆகையால், பூமியின் தலைவர்களே, நான் சொல்வதை அனைவரும் கேளுங்கள். அழிவில்லா கோவிந்தன் {கிருஷ்ணன்} இதோ இருக்கிறான். நாம் அவனையே {கிருஷ்ணனையே}வணங்கியிருக்கிறோம். விரைவாக மரணத்தைவிரும்பும் இவன் {சிசுபாலன்}, சக்கரமும் கதாயுதமும் உடைய கருப்பு நிறம் கொண்ட மாதவனை  {கிருஷ்ணனை} போருக்கு அழைக்கட்டும்; அவன் {சிசுபாலன்} வீழ்த்தப்பட்டு, இந்தத் தெய்வத்தின் {கிருஷ்ணன்} உடலில் கலக்கட்டும்!" என்றார் {பீஷ்மர்}.

சிசுபாலனின் பிறப்பு மர்மம் - சபாபர்வம் பகுதி 42

The Birth mystery of Sisupala | Sabha Parva - Section 42 | Mahabharata In Tamil

(சிசுபால வத பர்வத் தொடர்ச்சி)

பீஷ்மர், சிசபாலன் பிறந்த போது மூன்று கண்கள் மற்றும் நான்கு கரங்களுடன் பிறந்ததாகக் கூறுவது; யாருடைய மடியில் வைக்கும்போது அவனது தேவைக்கு அதிகமான உறுப்புகள் விழுகின்றனவோ அவனே சிசுபாலனின் கொலையாளி என்று ஒரு அரூபக் குரல் சொல்வது; கிருஷ்ணன் மடியில் வைக்கும் போது அவ்வுறுப்புகள் விழுவது; சிசுபாலனின் தாய் கிருஷ்ணனிடம் வரம் கேட்பது; சிசுபாலனின் நூறு பிழைகளைப் பொறுப்பதாக கிருஷ்ணன் உறுதி கூறுவது;

பீஷ்மர் சொன்னார், "சேதி {சேதி நாட்டின்} மன்னனின் குலத்தில் சிசுபாலன் மூன்று கண்களுடனும் நான்கு கரங்களுடனும் பிறந்தான். அவன் {சிசுபாலன்} பிறந்ததும், கழுதைக் குரலில் கதறி ஊளையிட்டான். இதனால் அவனது {சிசுபாலனது} தந்தையும் தாயும் உறவினர்களும் அச்சத்தால் பீடிக்கப்பட்டனர். இந்த இயல்புக்குமிக்க சகுனங்களைக் கண்ட அவனது {சிசுபாலனது} பெற்றோர் அவனைக் கைவிடத் தீர்மானித்தனர். ஆனால், ஒரு அரூபமான குரல், அந்த நேரத்தில் ஒலித்து, துயரத்தில் மூழ்கியிருந்த மன்னனிடம், அவனது மனைவி, அமைச்சர்கள் புரோகிதர் ஆகியோர் முன்னிலையில், "ஓ மன்னா, இந்த உனது மகன், நற்பேறு பெற்றவனாகவும், பலத்தில் மேன்மையானவனுமாக இருப்பான். ஆகையால் நீ அச்சப்பட வேண்டாம். கவலையில்லாமல் இந்தக் குழந்தையை {சிசுபாலனை} நீ வளர்த்து வா. அவன் (குழந்தைப் பருவத்திலேயே) இறந்து போக மாட்டான். அவனது காலம் {இறப்பு} இன்னும் வரவில்லை. ஆயுதங்களால் இவனை {சிசுபாலனை} கொல்லப் போகிறவனும் ஏற்கனவே பிறந்துவிட்டான்" என்றது {அந்த அரூபமான குரல்}. இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தக் குழந்தையின் தாய், துயர மிகுதியால் அந்த அரூபக் குரலிடம், "எனது பிள்ளையை மதித்து இந்த வார்த்தைகளை உதிர்த்தவன் முன்னிலையில் நான் குவிந்த கரங்களுடன் வணங்குகிறேன். அவன் {சிசுபாலனைக் கொல்லப் போகிறவன்} தெய்வீகமானவனா அல்லது வேறு ஏதாவது உயிர்வகையைச் சேர்ந்தவனா என்று அவனே {அரூபக் குரலே} சொல்லட்டும். எனது மகனை {சிசுபாலனை} கொல்லப் போகிறவன் எவன் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்" என்றாள். அதற்கு அந்த அரூபக் குரல், "யார் மடியில் இக்குழந்தையை வைக்கும்போது, இவனது {சிசுபாலனது} மிகுதியான கரங்களும் ஐந்து தலை நாகத்தைப் போல தலை விழுமோ, யாருடைய பார்வை பட்டதும், இவனது மூன்றாவது கண் மறைகிறதோ, அவனே இக்குழந்தையைக் கொல்லப் போகிறவன்" என்றது. குழந்தையின் மூன்று கண்களையும், நான்கு கரங்களையும், அரூபக் குரலின் வார்த்தைகளையும் கேள்விப்பட்ட உலகத்தின் மன்னர்கள் அனைவரும் சேதிக்கு அவனைக் காணச் சென்றனர். சேதியின் மன்னன் அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் தகுதிக்கேற்ப வழிபட்டு, அவர்கள் {பிற மன்னர்கள்} மடியில் ஒருவர் பின் ஒருவராக வைத்துப் பார்த்தான். ஒருவர் பின் ஒருவராக ஆயிரம் {1000} மன்னர்கள் மடியில் வைத்தும், அந்த அரூபக் குரல் சொன்ன வேளை வரவில்லை.

துவாராவதியில் {துவாரகையில்} இவையனைத்தையும் கேள்விப்பட்ட பெரும் பலம் வாய்ந்த யாதவ வீரர்களான சங்கர்ஷனனுன் {பலராமனும்}, ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்}, சேதியின் தலைநகருக்கு யாதவர்களின் மகளான (சேதியின் ராணியான), தங்கள் தந்தையின் தங்கையை {அத்தையைக்} காணச் சென்றனர். அங்கே அவரவர் தகுதிக்கேற்ப அனைவரையும் வணங்கி, மன்னனையும் ராணியையும் வணங்கி, அனைவரின் உடல்நலனையும் விசாரித்த ராமனும் {பலராமனும்}, கேசவனும் {கிருஷ்ணனும்} தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். பதிலுக்கு அந்த வீரர்கள் வணங்கப்பட்டதும், பெரும் மகிழ்ச்சியுடன் இருந்த ராணி {சேதி நாட்டின் ராணி} தானே தனது குழந்தையை {சிசுபாலனை} தாமோதரனின் {கிருஷ்ணனின்} மடியில் வைத்தாள். அந்தக் குழந்தை {சிசுபாலன்} அப்படி மடியில் வைக்கப்பட்டதும், அந்த தேவைக்கதிகமான கரங்கள் கீழே விழுந்தன. நெற்றியில் இருந்த கண்ணும் மறைந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராணி துயரத்துடன் கிருஷ்ணனிடம் ஒரு வரம் கேட்டாள்.

அவள் {சேதி நாட்டின் ராணி}, "ஓ பெரும் பலம் கொண்ட கிருஷ்ணா, நான் பயத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு ஒரு வரம் தா. துயர் நிறைந்தவர்களுக்கு துன்பத்தைக் களைய உறுதியளிப்பவன் நீயே. அனைவரின் பயத்தையும் விலக்கவல்லவன் நீயே", என்றாள். இப்படி அவளால் {சேதி நாட்டின் ராணியால்} கேட்டுக் கொள்ளப்பட்ட யது குலத்தின் கிருஷ்ணன், "ஓ மரியாதைக்குரியவளே, பயப்படாதே. நீ நீதிகளை அறிந்தவள். உனக்கு என்னிடம் எந்த அச்சமும் இருக்காது. நான் உனக்கு என்ன வரம் தர வேண்டும்? ஓ அத்தை, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? என்னால் முடிந்தாலும் முடியாவிட்டாலும், உனது உத்தரவை நிறைவேற்றுகிறேன்" என்றான். இப்படி கிருஷ்ணன் சொன்னதும், {சேதி நாட்டின்} ராணி, "ஓ பெரும் பலம் கொண்டவனே {கிருஷ்ணா}, சிசுபாலன் செய்யும் குற்றங்களை நீ எனக்காக மன்னிக்க வேண்டும். ஓ யது குலத்தின் புலியே. ஓ தலைவா, நான் கேட்கும் இதுவும் ஒரு வரம் தான் என்பதை அறிந்து கொள்", என்றாள். அதற்கு கிருஷ்ணன், "ஓ அத்தை, அவன் {சிசுபாலன்} கொல்லப்படத் தகுதி வாய்ந்தவனாக இருந்தாலும், நான் அவனது {சிசுபாலனது} நூறு {100} குற்றங்களை மன்னிப்பேன். நீ வருந்தாதே" என்றான் {கிருஷ்ணன்}.

பீஷ்மர் தொடர்ந்தார், "ஓ பீமா, இப்படி இந்தப் பாவி மன்னனான தீய இதயம் கொண்ட சிசுபாலன், கோவிந்தன் {கிருஷ்ணன்} கொடுத்த வரத்தால் கர்வம் கொண்டு, உன்னைப் போருக்கு அழைக்கிறான்.


Thursday, October 03, 2013

மூர்க்கமாகக் குதித்த பீமன் - சபாபர்வம் பகுதி 41

Bhima leaped up impetuously | Sabha Parva - Section 41 | Mahabharata In Tamil

(அர்க்கியாஹரணப் பர்வத் தொடர்ச்சி)

சிசபாலன் ஜராசந்தனின் மரணத்தைச் சுட்டிக் காட்டி கிருஷ்ணன், பீமன், அர்ஜுனன் ஆகியோரை இகழ்வது; பீஷ்மரைப் பெண்தன்மை உள்ளவர் என்று வசைபாடுவது; இதையெல்லாம் கேட்ட பீமன் கோபத்தால் மூர்க்கத்தனமாகக் குதிக்க எத்தனிப்பது; பீஷ்மர் அதைத் தடுப்பது; சிசுபாலன் அசட்டையாக அதைப் பார்ப்பது; பீஷ்மர் பீமனுக்கு ஆலோசனைகள் கூறுவது;

சிசுபாலன் சொன்னான், " 'இவன் ஒரு அடிமை' என்று சொல்லி கிருஷ்ணனுடன் போரிட விரும்பாத பெரும்பலம் வாய்ந்த மன்னன் ஜராசந்தன் எனது உயர்ந்து மதிப்புக்குத் தகுதி வாய்ந்தவராக இருந்தார். ஜராசந்தனின் மரணத்தைப் பொறுத்தவரை கேசவன் {கிருஷ்ணன்} செய்த காரியத்தையும், பீமனும் அர்ஜுனனும் செய்த காரியங்களையும் யார்தான் சரி என்று புகழ்வார்கள்? முறையற்ற வாயில் வழியாக நுழைந்து, அந்தணர்களாக வேடம் பூண்டு, மன்னன் ஜராசந்தனின் பலத்தைக் கிருஷ்ணன் கண்டான். அந்த ஏகாதிபதி {ஜராசந்தன்} பாதங்களைக் கழுவ நீர் கொடுத்தபோது, அதன் பிறகே தனது அந்தண வேடத்தை அறம்சார்ந்து வெளிப்படுத்தினான். 


ஓ குரு குலத்தானே {பீஷ்மா}, கிருஷ்ணன், பீமன், அர்ஜுனன் ஆகியோரை ஜராசந்தன் உண்ணும்படி கேட்டுக் கொண்ட போது, இந்த கிருஷ்ணன் தான் அந்த ஏகாதிபதியின் {ஜராசந்தனின்} கோரிக்கையை நிராகரித்தான். இந்த முட்டாள் {கிருஷ்ணன்} காட்டிக் கொள்வது போல, இவன் தான் {கிருஷ்ணன்தான்} அண்டத்தின் தலைவன் என்றால், இவன் ஏன் தன்னை அந்தணனாக கருதவில்லை? இருப்பினும் இந்தக் காரியம் எனக்கு ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்துகிறது. நீ என்னதான் பாண்டவர்களை ஞானமற்ற வழியில் நடத்திச் சென்றாலும், அவர்கள் உன்னை நேர்மையானவனாகவே மதிக்கின்றனர். ஓ பாரதா {பீஷ்மா}, பெண் தன்மையுள்ளவனும், கிழவனுமான உன்னை எல்லா காரியங்களுக்கும் வழிகாட்டியாகப் பெற்றவர்கள் இதை ஆச்சரியமாக நினைக்காமல் இருக்கலாம்."

வைசம்பாயனர் தொடர்ந்தார், "சிசுபாலனின் இந்தக் கடும் வார்த்தைகளைக் கேட்ட அந்த பெரும் பலம் வாய்ந்த மனிதர்களில் முதன்மையான பெரும் சக்தி கொண்ட பீமசேனன் பெரும் கோபம் கொண்டான். இயற்கையிலேயே பெரிதான அவனது கண்கள் மேலும் விரிந்து, தாமரை இலைகளைப் போல அகன்றது. அது, கோபத்தால் தாமிரம் போன்று சிவந்திருந்தது. அங்கே கூடியிருந்த ஏகாதிபதிகள் அவனுடைய {பீமனுடைய} நெற்றியில் மும்மடங்கு உயரமான மலைகளுக்கு மத்தியில் ஓடும் கங்கையின் நீரூற்றைப் போன்ற மூன்று சுருக்கங்களைக் கண்டனர். பீமசேனன் தனது பற்களை நரநரவென்று கோபத்தால் கடித்த போது, அந்த ஏகாதிபதிகள் அவனது {பீமனது} முகத்தில், யுக முடிவில் அனைத்து உயிரையும் விழுங்கக் காத்திருக்கும் மரணத்தின் பிரதிபலிப்பைக் கண்டனர். பெரும் மனோ சக்தி கொண்ட அந்த வீரன் {பீமன்} மூர்க்கமாகக் குதிக்கத் தயாரான போது, அந்த பலம் வாய்ந்த கரங்கள் கொண்ட பீஷ்மர், மகாசேனனை (தேவர்கள் தளபதி) {முருகனைப்} பிடித்துக் கொண்ட மகாதேவன் {சிவன்} போல அவனைப் {பீமனைப்} பிடித்துக் கொண்டார். ஓ பாரதா {ஜனமேஜயா}, பீமனின் கோபத்தை குருக்களின் பாட்டனான பீஷ்மர் பல நல்ல ஆலோசனைகள் கொடுத்து அடக்கினார். அந்த எதிரிகளைத் தண்டிக்கும் பீமனால், கண்டங்களை மீறாதக் கடலைப் போல பீஷ்மரின் வார்த்தைகளைத் தட்ட முடியவில்லை. ஆனால், ஓ மன்னா {ஜனமேஜயா}, பீமன் கோபமாக இருந்தாலும், ஆண்மையுடன் வீரம் கொண்ட சிசுபாலன், பயத்தால் நடுங்கவில்லை. பீமன் அடிக்கடி மூர்க்கமாகக் குதிக்கத் தயாரானாலும், சிறு விலங்கின் கோபத்தை அசட்டை செய்யும் சிங்கம் போல, சிசுபாலன் ஒரு நினைவைக் கூட அவனை {பீமனைக்} குறித்து நினைக்கவில்லை. அந்த பலம் வாய்ந்த சேதி மன்னன், பயங்கர வீரம் கொண்ட பீமன் கோபத்துடன் இருப்பதைக் கண்டு சிரித்துக் கொண்டே, "அவனை {பீமனை} விடு, ஓ பீஷ்மா! இந்த ஏகாதிபதிகள் அனைவரும் அவன் {பீமன்} எனது வீரத்தால், நெருப்பில் விழுந்த பூச்சிபோல பொசுங்கிப் போவதைக் காணட்டும்" என்றான். சேதி நாட்டு ஆட்சியாளனின் {சிசுபாலனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட குருக்களில் முதன்மையான, புத்திசாலி மனிதர்களின் தலைவரான பீஷ்மர், பீமனிடம் இந்த வார்த்தைகளில் பேசினார்.


சிசுபாலன் சொன்ன கிழட்டு அன்னத்தின் கதை - சபாபர்வம் பகுதி 40

The story of the old swan as told by Sisupala | Sabha Parva - Section 40 | Mahabharata In Tamil

(சிசுபால வத பர்வத் தொடர்ச்சி)

சிசபாலன் பீஷ்மரை ஏசுவது; கிழட்டு அன்னத்தின் கதை சொன்னது;

வைசம்பாயனர் சொன்னார் {பீஷ்மரை சிசுபாலன் திட்டுவது}, "உனது {குரு}குலத்தின் புகழற்ற கிழப் பாவியே {பீஷ்மரே}, எண்ணற்ற போலிப் பயங்கரங்களையும் காட்டி இந்த ஏகாதிபதிகளை மிரட்ட உனக்கு வெட்கமாக இல்லை! குருக்களின் முதன்மையான நீ, வாழ்வின் மூன்றாம் நிலையில் {பிரம்மச்சரியம்} வாழ்ந்து கொண்டு, அறம் குறித்து விரிந்த ஆலோசனையை வழங்கிக் கொண்டிருக்கிறீர். ஒரு படகு மற்றொரு படகுடன் கட்டப்பட்டது போல, ஒரு குருடன் இன்னொரு குருடனைத் தொடர்வதைப் போல, குருக்கள் {குரு குலத்தவர்கள்} உன்னைத் தங்கள் வழிகாட்டியாகக் கொண்டுள்ளனர். புதனனைக் {Putana} கொன்றான் என்றும் இன்ன பிறச் செயல்களைச் செய்தான் என்றும் இவனை (கிருஷ்ணனைப்) பற்றிச் சொல்லி மேலும் ஒரு முறை எங்கள் இதயங்களைக் காயப்படுத்தியிருக்கிறாய்.


கேசவனைப் {கிருஷ்ணனை} புகழ விரும்பி இப்படி முரட்டுத்தனமாகவும் முட்டாள்த்தனமாகவும் பேசும் உனது நாக்கு நூறு துண்டுகளாகப் பிளக்காதது ஏன்? குறைந்த புத்தியுடைய மனிதர் கூட திட்ட விரும்பும் ஒரு மாட்டு இடையனை, ஞானத்தில் மேன்மையான நீ எப்படிப் புகழ விரும்புகிறாய்? குழந்தையாக இருந்த கிருஷ்ணன் ஒரு பிணந்தின்னிக்கழுகைக் கொன்றதிலும் அல்லது போர்க்கலையில் நிபுணத்துவம் இல்லாத அஸ்வனையும், ரிஷபனையும் அவன் {கிருஷ்ணன்} கொன்றதிலும் என்ன குறிப்பிடத்தக்க அம்சம் இருக்கிறது? ரதம் என்ற அசையாத ஒரு துண்டு மரத்தை இவன் உதைத்துக் கீழே தள்ளினான் என்றால், ஓ பீஷ்மா, அதில் என்ன அற்புதம் இருக்கிறது? ஓ பீஷ்மா, எறும்புப் புற்று போல இருக்கும் கோவர்தன மலையை இவன் ஒரு வாரம் தாங்கியதில் என்ன குறிப்பிடத்தகுந்த அம்சம் இருக்கிறது? 'ஒரு மலையின் மேல் விளையாடிக் கொண்டிருக்கும்போது, நிறைய உணவை உண்டான்' என்று நீர் சொல்லும்போதுதான் அதிக ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால், அறவிதிகளை அறிந்த நீ, கம்சனின் உணவை உண்டு, அவனையே {கம்சனையே} கொன்ற இவனது {கிருஷ்ணனது} தீய செயலை பெரும் சாதனையாக நினைக்கிறாய்.

குருகுலத்தின் புகழற்றவனே {பீஷ்மனே}, அறவிதிகள் குறித்து நீ அறியாமையுடன் இருக்கிறாய். ஞானமுள்ளோர் பேச்சை நீ கேட்டதில்லையா? நான் உனக்கு இப்போது என்ன சொல்வது? அறம்சார்ந்த ஞானமுள்ளோர், நேர்மையானவர்களிடம், யாரிடம் நாம் உணவைப் பெறுகிறோமா, யாரின் நிழலில் இருக்கிறோமோ அந்தப் பெண்களிடமும், பசுக்களிடமும், அந்தணர்களிடமும் உனது ஆயுதத்தைத் தூக்காதே என்று சொல்வார்கள். ஓ பீஷ்மா, இந்தப் படிப்பினைகள் எல்லாவற்றையும் நீ தூக்கியெறிந்துவிட்டாய். ஓ குரு குலத்தின் புகழற்றவனே {பீஷ்மா}, கேசவனைப் {கிருஷ்ணனைப்} புகழ விரும்பி, எனது முன்னிலையில் ஏதோ நான் எதையும் அறியாதவனைப் போல அவன் {கிருஷ்ணன்} மேன்மையானவன் என்றும் பெருமை வாய்ந்தவன் என்றும் பிதற்றுகிறாய். உனது வார்த்தையால், ஓ பீஷ்மா, பெண்ணையும், வழிபடத்தகுந்த பசுவையும் கொன்றவனை {கிருஷ்ணனைப்} புகழ்வதில் என்ன பெரிய பாடத்தை அறிய முடியும்? ஓ பீஷ்மா, இப்படிப்பட்டவன் {கிருஷ்ணன்} எப்படி புகழ்ச்சிக்குத் தகுதியுடையவனாக இருப்பான்? "இவனே {கிருஷ்ணனே} ஞானமுள்ளோரில் முதன்மையானவன், இவனே அண்டத்தின் தலைவன்" என்ற உனது வார்த்தைகளைக் கேட்டு ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} இதையெல்லாம் உண்மை என்று நம்பிவிடப்போகிறான். ஆனால் நிச்சயமாக, இவையெல்லாம் பொய்யே. புகழ்ந்து பாடுபவனின் வரிகள், அது அடிக்கடிப் பாடப்பட்டாலும், அதைப் பாடுபவன் மீது எந்த அபிப்பிராயத்தையும் ஏற்படுத்தாது.

ஒவ்வொரு உயிரினமும் பூலிங்கப் பறவைப் (சிங்கத்தின் பற்களுக்கிடையே இருக்கும் இறைச்சியை உண்பது) போல தனது மனப்போக்கின் படி நடக்கின்றன. இந்த உனது  மனப்போக்கு காரியம் சார்ந்ததே. அதில் சிறிது சந்தேகமும் இல்லை. உன்னை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு, கிருஷ்ணனை வழிபாட்டுக்குத் தகுந்தவன் என்று கருதும் பாண்டுவின் மகன்கள் பாவகர மனப்போக்கையே கொண்டுள்ளனர். அறவிதிகள் அறிந்தும், நீ ஞானமுள்ளோர் பாதையில் இருந்து விழுந்துவிட்டாய். ஆகையால் நீயும் பாவியே. ஓ பீஷ்மா, தன்னை அறம்சார்ந்தவனாகவும், ஞானத்தில் மேன்மையானவனாகவும் கருதும் ஒருவன், அறநோக்கங்களில் இருந்து இப்படி விலகிச் செல்வானா? நீதியின் வழிகளை நீ அறிந்திருந்தால், ஞானத்தால் நீ வழிகாட்டப்பட்டிருந்தால், நீ அருளப்பட்டிரு. ஓ பீஷ்மா, ஞானத்திலும் அறத்திலும் கர்வம் கொண்டிருக்கும் உன்னால் ஏன், வேறு ஒருவனிடம் இதயத்தை வைத்திருந்த அறம்சார்ந்த பெண்ணான *அம்பா கடத்திச் செல்லப்பட்டாள்? உன்னால் கொண்டு வரப்பட்டும், அந்தப் பெண்ணின் {அம்பாவின்} நிலையை அறிந்த நேர்மையான அறவழிகளுக்குக் கட்டுப்பட்ட உனது தம்பி விசித்திரவீரியன் அவளை {அம்பாவை} திருமணம் செய்து கொள்ளவில்லை. அறம் குறித்து சுயபுராணம் பாடும் உனது கண்களுக்கு எதிரிலேயே, உனது தம்பியின் விதவை மனைவிகள் {அம்பிகா, அம்பாலிகா} அடுத்தவரிடம் {வியாசரிடம்} பிள்ளைகள் பெற்றனரே அது நேர்மையா வழிதானா? இதில் அறம் எங்கே இருக்கிறது, ஓ பீஷ்மா? உனது அறியாமையாலும், ஆண்தன்மையற்ற நிலையாலும் ஏற்ற இந்த பிரம்மச்சரியம் கனியற்றதாகும். அறவிதிகளை அறிந்தவனே {பீஷ்மனே}, உனது நற்பேறை நான் காணவில்லை. நீதிகளை இந்த வழிகளில் விவரமாக எடுத்துக் கூறும் நீ பெரியவர்களுக்காகக் காத்திருந்திருக்க மாட்டாய். வழிபாடு, பரிசு, கல்வி, வேள்விகள் ஆகிய அனைத்தும் தகுதியால் ஒரு பங்கு அல்ல, ஒரு மகனைப் பெறுவதில் பதினாறில் ஒரு பங்குகூட இவை அனைத்தும் சேர்ந்து ஈடாகாது. ஓ பீஷ்மா, கணக்கற்ற நோன்புகளால் கிடைக்கும் தகுதியும், நோன்புகள்களால் கிடைக்கும் தகுதியும் ஒருவன் பிள்ளையற்று இருந்தால் கனியற்றதாகிவிடுகிறது. நீ பிள்ளையற்றவன், கிழவன், போலி நீதிகளை உரைப்பவன். கதைகளில் வரும் அன்னப்பறவை போல, இப்போது உனது உறவினர்கள் கையாலேயே நீ சாகப் போகிறாய். ஞானம்படைத்தோர் இதை முதலிலேயே சொல்லியிருக்கின்றனர். நீ கேட்பதற்காக அதை முழுமையாகச் சொல்கிறேன்.

பழங்காலத்தில் ஒரு கிழட்டு அன்னப்பறவை ஒரு கடற்கரையில் வாழ்ந்தது. எப்போதும் நீதியைப் பேசி, ஆனால் நடத்தையில் வேறு விதமாக இருந்து, தனது இறகுகள் முளைத்த குலத்திற்கு பாடம் நடத்தியது. "அறம் பயில், பாவம் கைவிடு' என்ற வார்த்தைகளையே மற்ற பறவைகள் அதனிடம் இருந்து அடிக்கடி கேட்டன. அந்த முட்டையிடும் இனம்சார்ந்த பறவைகள், கடலில் உலவிக் கொண்டு, ஓ பீஷ்மா, அந்தக் கிழட்டுப் பறவைக்காக உணவு கொண்டு வந்தன என்று நாம் கேள்விப் படுகிறோம். ஓ பீஷ்மா, அந்தப் பறவைகள் அனைத்தும், தங்கள் முட்டைகளை அந்த முதிய பறைவையின் காவலில் வைத்துவிட்டு, கடலின் நீருக்குள் குதித்து உணவு தேடின. அந்த பாவியான கிழட்டு அன்னப்பறவை, தனது நலனில் மட்டும் அக்கறை கொண்டு, முட்டாள்த்தனமாகத் தன்னை நம்பிக் கொண்டிருக்கும் மற்ற பறவைகளின் முட்டைகளைத் தின்றது. சிறிது காலம் கழித்து, முட்டைகளின் எண்ணிக்கை குறைந்ததை ஒரு ஞானமுள்ள பறவை கண்டது. ஒரு நாள் இந்தக் காரியத்தைத் தனது கண்களாலேயே கண்டது. அந்தக் கிழட்டு அன்னப்பறவையின் இந்தப் பாவகரச் செயலைக் கண்ட அந்தப் பறவை, மற்ற பறவைகளிடம் சென்று துயருடன் பேசியது. பிறகு, ஓ குருக்களில் சிறந்தவனே, அந்தப் பறவைகள் அனைத்தும் அந்தக் கிழட்டுப் பறவையின் தீய செயலைக் கண்டு, அந்தப் போலி நடத்தையுள்ள பாவியை அணுகி, அதைக் கொன்றன.

உனது நடத்தையும், ஓ பீஷ்மா, அந்தக் கிழட்டு அன்னப்பறவையைப் போலவே இருக்கிறது. அந்த அன்னப்பறவைகள் கிழட்டு அன்னப்பறவையைக் கொன்றது போல கோபத்தில் இருக்கும் இந்தப் பூமியின் அதிபதிகள் உன்னைக் கொன்று விடுவார்கள். புராணங்களை அறிந்த மனிதர்கள், ஓ பீஷ்மா, இது சம்பந்தமாக ஒரு பழமொழியைச் சொல்வார்கள். நான், ஓ பாரதா {பீஷ்மா} அதைத் திரும்பச் சொல்கிறேன். அது இதுதான் : ஓ இறகுகளால் உன்னைத் தாங்குபவனே, உனது இதயம் (ஆசைகளால்) பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீ (அறத்தை) போதிக்கிறாய்; ஆனால், முட்டைகளை உண்ணும் இந்தப் பாவகர காரியம் உனது பேச்சை மீறிய செயலாக இருக்கிறது!" என்றான் {சிசுபாலன்}.
---------------------------------------------------------------------------------------------
*அம்பா கடத்திச் செல்லப்பட்டாள்?
பார்க்க  {சொடுக்கவும்}:காசியில் நடந்த சுயம்வரம் | ஆதிபர்வம் - பகுதி 102

சிசுபாலனை விமர்சித்த பீஷ்மர் - சபாபர்வம் பகுதி 39

Bhishma's critic on Sisupala | Sabha Parva - Section 39 | Mahabharata In Tamil

(சிசுபால வத பர்வம்)

மன்னர்கள் சினமாவதைக் கண்ட யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் ஆலோசனை கேட்பது; பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு சமாதானம் கூறி, சிசுபாலனையும் மற்ற மன்னர்களையும் விமர்சிப்பது;

வைசம்பாயனர் சொன்னார், "அந்தப் பெரும் கூட்டமான மன்னர்கள் அண்ட அழிவின் போது காற்றால் கொந்தளிக்கப்படும் கடலென கோபத்தில் கொந்தளிப்பதைக் கண்ட யுதிஷ்டிரன், அந்தக் குருகுல பெரும்பாட்டனிடம் {பீஷ்மரிடம்}, எதிரிகளைக் கொல்லும் புருஹிதன் (இந்திரன்) பெரும் சக்தி படைத்த பிருஹஸ்பதியிடம் சொல்வது போல அந்தப் புத்திசாலி மனிதர்களின் தலைவரான முதிர்ந்த பீஷ்மரிடம், "இந்தக் கடல்போன்ற மன்னர்க்கூட்டம் கோபத்தால் கொந்தளிக்கிறது. ஓ பாட்டா {பீஷ்மா}, நான் இக்காரியத்தில் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குச் சொல்லுங்கள். ஓ பாட்டா, எனது வேள்வி தடைபடாதவாறும், எனது குடிகளுக்குக் காயம் ஏற்படாதவாறும் நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.

அறவிதிகளை அறிந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இதைச் சொன்னதும், குருக்களின் பாட்டன் பீஷ்மர், "அஞ்சாதே, ஓ குருக்களின் புலியே {யுதிஷ்டிரனே}, நாயால் சிங்கத்தைக் கொல்ல முடியுமா? இதற்கு முன்பே நான் வழியைக் கண்டுபிடித்துவிட்டேன். அது நன்மையானதாகவும் வசதியான செயலாகவும் இருக்கும். தூங்கும் சிங்கத்தினை நாய்கள் கூட்டமாகச் சென்று குறைப்பதைப் போல,  இந்தப் பூமியின் அதிபதிகள் {மன்னர்கள்} செய்கின்றனர். உண்மையாகவே, ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா}, சிங்கத்தின் முன் நிற்கும் நாய்கள் போலவே, இவர்கள் {இந்த ஏகாதிபதிகள்} கோபத்தில், தூங்கும் விருஷ்ணி {யாதவ} குலத்தின் சிங்கத்தின் {கிருஷ்ணனின்} முன்பு நின்று கொண்டு குறைத்துக் கொண்டிருக்கின்றனர். அச்யுதன் {கிருஷ்ணன்} இப்போது தூங்கும் சிங்கமாக இருக்கிறான். அவன் விழிக்கும் வரை, இந்தச் சேதியின் தலைவன் {சிசுபாலன்}, இந்த மனிதர்களில் சிங்கம் {சிசுபாலன்}, இந்த ஏகாதிபதிகளைச் சிங்கங்கள் போல காட்சி அளிக்க வைக்கிறான். ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா}, ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, குறைந்த புத்தியுடைய இந்த சிசுபாலன், அண்டத்தின் ஆன்மாவுடன் முரண்பட்டு, தன்னுடன் சேர்த்து இந்த மன்னர்களையும், யமனின் உலகத்திற்கு அழைத்துப் போக விரும்புகிறான். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, உறுதியாக விஷ்ணு, தனது சக்திகளில் ஒன்றான சிசுபாலனைத் தனக்குள் எடுத்துக் கொள்ள விரும்புகிறார். ஓ புத்திசாலி மனிதர்களின் தலைவனே {யுதிஷ்டிரா}, ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, சேதி மக்களின் மன்னனான இந்தத் தீய மனம் படைத்தவனும், மற்ற ஏகாதிபதிகளும், வேண்டுமென்றே தவறான வழியில் செல்ல நினைக்கின்றனர். உண்மையில் இந்த மனிதர்களில் புலி {சிசுபாலன்} தன்னுடன் அழைத்துச் செல்ல நினைக்கும் இவர்களும் இந்தச் சேதியின் மன்னனைப் போலவே வேண்டுமென்றே தவறான வழியில் செல்ல நினைக்கின்றனர். ஓ யுதிஷ்டிரா மாதவனே {கிருஷ்ணனே} படைப்பாளி, அதே போல அவனே மூன்று உலகில் இருக்கக்கூடிய நான்கு வகையான அனைத்து உயிர்களையும் அழிப்பவனுமாவான்," என்றார் பீஷ்மர்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு அந்தச் சேதியின் ஆட்சியாளன் {சிசுபாலன்}, பீஷ்மரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, அவரிடம், ஓ பாரதா {ஜனமேஜயா}, கடினமான வார்த்தைகளைப் பேசினான்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2019, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top