The story of the old swan as told by Sisupala | Sabha Parva - Section 40 | Mahabharata In Tamil
(சிசுபால வத பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : பீஷ்மரை நிந்திக்க கிழட்டு
அன்னத்தின் கதையைச் சொன்ன சிசுபாலன்...
சிசுபாலன், "உனது குலத்தில் புகழற்ற கிழப் பாவியே {பீஷ்மரே}, எண்ணற்ற போலிப் பயங்கரங்களைக் காட்டி இந்த ஏகாதிபதிகளை மிரட்ட உனக்கு வெட்கமாக இல்லையா?(1) குருக்களின் முதன்மையானவனான நீ, வாழ்வின் மூன்றாம் நிலையில் {பிரம்மச்சரியம்} வாழ்ந்து கொண்டு, அறம் குறித்து விரிவான ஆலோசனையை வழங்கிக் கொண்டிருக்கிறாய்.(2) ஒரு படகு மற்றொரு படகுடன் கட்டப்பட்டது போலவோ, ஒரு குருடன் இன்னொரு குருடனைத் தொடர்வதைப் போலவோ, குருக்கள் {குரு குலத்தவர்கள்} உன்னைத் தங்கள் வழிகாட்டியாகக் கொண்டுள்ளனர்.(3) பூதனயைக் கொன்றான் என்றும், இன்ன பிறச் செயல்களைச் செய்தான் என்றும் இவனை (கிருஷ்ணனைப்) பற்றிச் சொல்லி மேலும் ஒரு முறை எங்கள் இதயங்களைக் காயப்படுத்தியிருக்கிறாய்.(4)
கேசவனைப் {கிருஷ்ணனை} புகழ விரும்பி இப்படி முரட்டுத்தனமாகவும், முட்டாள்த்தனமாகவும் பேசும் உன் நாக்கு நூறு துண்டுகளாகப் பிளக்காமல் இருப்பது ஏன்?(5) ஞானத்தில் மேன்மையான நீ, அற்ப புத்தி கொண்ட மனிதனும் இகழ விரும்பும் ஒரு மாட்டு இடையனைப் புகழ விரும்புவது எவ்வாறு?(6) குழந்தையாக இருந்த கிருஷ்ணன் ஒரு பிணந்தின்னிக்கழுகைக் கொன்றதிலும், அல்லது போர்க்கலையில் நிபுணத்துவம் இல்லாத அஸ்வத்தையும் {குதிரையையும்}, ரிஷபத்தையும் {காளையையும்} அவன் {கிருஷ்ணன்} கொன்றதிலும் குறிப்பிடத்தக்க அம்சம் என்ன?(7) தேர் {சகடம்} என்ற அசையாத ஒரு துண்டு மரத்தை இவன் உதைத்துக் கீழே தள்ளினான் என்றால், ஓ பீஷ்மா, அதில் என்ன அற்புதம் இருக்கிறது?(8) ஓ பீஷ்மா, எறும்புப் புற்று போல இருக்கும் கோவர்த்தன மலையை ஒரு வாரம் காலம் இவன் தாங்கியதில் என்ன குறிப்பிடத்தகுந்த அம்சம் இருக்கிறது?(9) 'ஒரு மலையின் மேல் விளையாடிக் கொண்டிருக்கும்போது, அதிக உணவை உண்டான்' என்று நீ சொல்வதுதான் எனக்கு அதிக ஆச்சரியத்தைத் தருகிறது.(10) ஆனால், அறவிதிகளை அறிந்த நீ, கம்சனின் உணவை உண்டு, அவனையே கொன்ற இவனது தீய செயலை பெரும் சாதனையாக நினைக்கிறாய்.(11)
குருகுலத்தின் புகழற்றவனே {பீஷ்மனே}, அறவிதிகள் குறித்து நீ அறியாமையுடன் இருக்கிறாய். நான் இப்போது உனக்குச் சொல்வதை ஞானமுள்ளோரிடம் நீ கேட்டதில்லையா?(12) அறம்சார்ந்த ஞானமுள்ளோர், நேர்மையானவர்களிடம், யாரிடம் நாம் உணவைப் பெறுகிறோமா, யாரின் நிழலில் இருக்கிறோமோ அந்தப் பெண்களிடமும், பசுக்களிடமும், பிராமணர்களிடமும் உனது ஆயுதத்தைத் தூக்காதே என்று சொல்வார்கள். ஓ பீஷ்மா, இந்தப் படிப்பினைகள் அனைத்தையும் நீ தூக்கியெறிந்துவிட்டாய்.(13,14) ஓ குரு குலத்தின் புகழற்றவனே {பீஷ்மா}, கேசவனைப் {கிருஷ்ணனைப்} புகழ விரும்பி, ஏதோ நான் எதையும் அறியாதவனைப் போல அவன் {கிருஷ்ணன்} மேன்மையானவன் என்றும், பெருமை வாய்ந்தவன் என்றும் என் முன்னிலையில் பிதற்றுகிறாய்.(15) உனது வார்த்தையால், ஓ பீஷ்மா, பெண்ணையும், வழிபடத்தகுந்த பசுவையும் கொன்றவனை {கிருஷ்ணனைப்} புகழ்வதில் என்ன பெரிய பாடத்தை அறிய முடியும்? ஓ பீஷ்மா, இப்படிப்பட்டவன் {கிருஷ்ணன்} எப்படி புகழ்ச்சிக்குத் தகுதியுடையவனாக இருப்பான்?(16) "இவனே {கிருஷ்ணா} ஞானமுள்ளோரில் முதன்மையானவன், இவனே அண்டத்தின் தலைவன்" என்ற உனது வார்த்தைகளைக் கேட்டு ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} இதையெல்லாம் உண்மை என்று நம்பிவிடப்போகிறான்.ஆனால் நிச்சயமாக, இவையெல்லாம் பொய்யே.(17)
புகழ்ந்து பாடுபவனின் வரிகள், அது அடிக்கடிப் பாடப்பட்டாலும், அதைப் பாடுபவன் மீது எந்தக் கருத்தையும் ஏற்படுத்தாது. ஒவ்வொரு உயிரினமும் பூலிங்கப் பறவைப் (சிங்கத்தின் பற்களுக்கிடையே இருக்கும் இறைச்சியை உண்பது) போல தனது மனப்போக்கின் படி நடக்கின்றன.(18) இந்த உனது மனப்போக்கு காரியம் சார்ந்ததே. அதில் சிறிது சந்தேகமும் இல்லை. உன்னை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு, கிருஷ்ணனை வழிபாட்டுக்குத் தகுந்தவன் என்று கருதும் பாண்டுவின் மகன்கள் பாவகர மனப்போக்கையே கொண்டுள்ளனர். அறவிதிகள் அறிந்தும், நீ ஞானமுள்ளோர் பாதையில் இருந்து விழுந்துவிட்டாய்.(19,20) எனவே நீயும் பாவியே. ஓ பீஷ்மா, தன்னை அறம்சார்ந்தவனாகவும், ஞானத்தில் மேன்மையானவனாகவும் கருதும் ஒருவன், அறநோக்கங்களில் இருந்து இப்படி விலகிச் செல்வானா?(21)
நீதியின் வழிகளை நீ அறிந்திருந்தால், ஞானத்தின் வழியை நீ அறிந்திருதால், நீ அருளப்பட்டிருப்பாயாக. ஓ பீஷ்மா, ஞானத்திலும், அறத்திலும் செருக்கு கொண்டிருக்கும் உன்னால், வேறு ஒருவனிடம் இதயத்தை வைத்திருந்த அறம்சார்ந்த பெண்ணான அம்பை[1] கடத்திச் செல்லப்பட்டது ஏன்? உன்னால் கொண்டு வரப்பட்டும், அந்தப் பெண்ணின் {அம்பைன்} நிலையை அறிந்த நேர்மையான அறவழிகளுக்குக் கட்டுப்பட்ட உனது தம்பி விசித்திரவீரியன் அவளை {அம்பையை} திருமணம் செய்து கொள்ளவில்லை. அறம் குறித்து சுயபுராணம் பாடும் உனது கண்களுக்கு எதிரிலேயே, உனது தம்பியின் விதவை மனைவிகள் {அம்பிகை, அம்பாலிகை} அடுத்தவரிடம் {வியாசரிடம்} பிள்ளைகள் பெற்றனரே அது நேர்மையா வழிதானா?(22-24) இதில் அறம் எங்கே இருக்கிறது, ஓ பீஷ்மா? உனது அறியாமையாலும், ஆண்தன்மையற்ற நிலையாலும் ஏற்ற இந்த பிரம்மச்சரியம் கனியற்றதாகும்.(25)
[1] அம்பை கடத்திச் செல்லப்பட்டாள்? - பார்க்க: காசியில் நடந்த சுயம்வரம் | ஆதிபர்வம் பகுதி 102
அறவிதிகளை அறிந்தவனே, உனது நற்பேற்றை நான் காணவில்லை. நீதிகளை இந்த வழிகளில் விவரமாக எடுத்துக் கூறும் நீ பெரியவர்களிடம் பணி செய்திருக்க மாட்டாய்.(26) வழிபாடு, பரிசு, கல்வி, வேள்விகள் ஆகிய அனைத்தும் தகுதியால் ஒரு பங்கு அல்ல, ஒரு மகனைப் பெறுவதில் பதினாறில் ஒரு பங்குகூட இவை அனைத்தும் சேர்ந்து ஈடாகாது.(27) ஓ பீஷ்மா, கணக்கற்ற நோன்புகளால் கிடைக்கும் தகுதியும், நோன்புகள்களால் கிடைக்கும் தகுதியும் ஒருவன் பிள்ளையற்று இருந்தால் கனியற்றதாகிவிடுகிறது.(28) நீ பிள்ளையற்றவன், கிழவன், போலி நீதிகளை உரைப்பவன். கதைகளில் வரும் அன்னப்பறவை போல, இப்போது உனது உறவினர்கள் கையாலேயே நீ சாகப் போகிறாய்.(29) ஞானம்படைத்தோர் இதை முதலிலேயே சொல்லியிருக்கின்றனர். நீ கேட்பதற்காக அதை முழுமையாக உனக்குச் சொல்கிறேன்.(30)
பழங்காலத்தில் ஒரு கடற்கரையில் ஒரு கிழட்டு அன்னப்பறவை வாழ்ந்து வந்தது. எப்போதும் நீதியைப் பேசியும், ஆனால் நடத்தையில் வேறு விதமாக இருந்தும், இறகுகள் முளைத்த குலத்திற்கு {பறவைகளுக்குப்} பாடம் நடத்தியது.(31) "அறம் பயில்வாயாக, பாவம் கைவிடுவாயாக' என்ற வார்த்தைகளையே மற்ற பறவைகள் அதனிடம் இருந்து அடிக்கடி கேட்டன.(32) ஓ பீஷ்மா, முட்டையிடும் இனம்சார்ந்த அந்தப் பறவைகள், கடலில் உலவிக் கொண்டு, அந்தக் கிழட்டுப் பறவைக்காக உணவு கொண்டு வந்தன என்று நாம் கேள்விப் படுகிறோம்.(33) ஓ பீஷ்மா, அந்தப் பறவைகள் அனைத்தும், தங்கள் முட்டைகளை அந்த முதிய பறைவையின் காவலில் வைத்துவிட்டு, கடலின் நீருக்குள் குதித்து உணவு தேடின. தன்னலனில் மட்டுமே அக்கறை கொண்டதும், பாவியுமான அந்தக் கிழட்டு அன்னப்பறவையோ, முட்டாள்த்தனமாகத் தன்னை நம்பிக் கொண்டிருக்கும் மற்ற பறவைகளின் முட்டைகளைத் தின்றது. சில காலம் கழித்து, முட்டைகளின் எண்ணிக்கை குறைந்ததை ஒரு ஞானமுள்ள பறவை கண்டது. ஒரு நாள் இந்தக் காரியத்தைத் தனது கண்களாலேயே கண்டது.(34,35) அந்தக் கிழட்டு அன்னப்பறவையின் இந்தப் பாவகரச் செயலைக் கண்ட அந்தப் பறவை, மற்ற பறவைகளிடம் சென்று துயருடன் பேசியது.(36) பிறகு, ஓ குருக்களில் சிறந்தவனே, அந்தப் பறவைகள் அனைத்தும் அந்தக் கிழட்டுப் பறவையின் தீய செயலைக் கண்டு, அந்தப் போலி நடத்தையுள்ள பாவியை அணுகி, அதைக் கொன்றன.(37)
உனது நடத்தையும், ஓ பீஷ்மா, அந்தக் கிழட்டு அன்னப்பறவையைப் போலவே இருக்கிறது. அந்த அன்னப்பறவைகள் கிழட்டு அன்னப்பறவையைக் கொன்றது போல கோபத்தில் இருக்கும் இந்தப் பூமியின் அதிபதிகள் உன்னைக் கொல்லப் போகிறார்கள்.(38) புராணங்களை அறிந்த மனிதர்கள், ஓ பீஷ்மா, இது சம்பந்தமாக ஒரு பழமொழியைச் சொல்வார்கள். நான், ஓ பாரதா {பீஷ்மா} அதைத் திரும்பச் சொல்கிறேன்.(39) அஃது இதுதான்: ஓ இறகுகளால் உன்னைத் தாங்குபவனே {பறவையே}, உனது இதயம் (ஆசைகளால்) பாதிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் நீ (அறத்தை) போதிக்கிறாய்; ஆனால், முட்டைகளை உண்ணும் இந்தப் பாவகர காரியம் உனது பேச்சை மீறிய செயலாக இருக்கிறது!" என்றான் {சிசுபாலன்}.(40)
ஆங்கிலத்தில் | In English |