Bhima leaped up impetuously | Sabha Parva - Section 41 | Mahabharata In Tamil
(அர்க்கியாஹரணப் பர்வத் தொடர்ச்சி)
சிசபாலன் ஜராசந்தனின் மரணத்தைச் சுட்டிக் காட்டி கிருஷ்ணன், பீமன், அர்ஜுனன் ஆகியோரை இகழ்வது; பீஷ்மரைப் பெண்தன்மை உள்ளவர் என்று வசைபாடுவது; இதையெல்லாம் கேட்ட பீமன் கோபத்தால் மூர்க்கத்தனமாகக் குதிக்க எத்தனிப்பது; பீஷ்மர் அதைத் தடுப்பது; சிசுபாலன் அசட்டையாக அதைப் பார்ப்பது; பீஷ்மர் பீமனுக்கு ஆலோசனைகள் கூறுவது;
சிசுபாலன் சொன்னான், " 'இவன் ஒரு அடிமை' என்று சொல்லி கிருஷ்ணனுடன் போரிட விரும்பாத பெரும்பலம் வாய்ந்த மன்னன் ஜராசந்தன் எனது உயர்ந்து மதிப்புக்குத் தகுதி வாய்ந்தவராக இருந்தார். ஜராசந்தனின் மரணத்தைப் பொறுத்தவரை கேசவன் {கிருஷ்ணன்} செய்த காரியத்தையும், பீமனும் அர்ஜுனனும் செய்த காரியங்களையும் யார்தான் சரி என்று புகழ்வார்கள்? முறையற்ற வாயில் வழியாக நுழைந்து, அந்தணர்களாக வேடம் பூண்டு, மன்னன் ஜராசந்தனின் பலத்தைக் கிருஷ்ணன் கண்டான். அந்த ஏகாதிபதி {ஜராசந்தன்} பாதங்களைக் கழுவ நீர் கொடுத்தபோது, அதன் பிறகே தனது அந்தண வேடத்தை அறம்சார்ந்து வெளிப்படுத்தினான்.
ஓ குரு குலத்தானே {பீஷ்மா}, கிருஷ்ணன், பீமன், அர்ஜுனன் ஆகியோரை ஜராசந்தன் உண்ணும்படி கேட்டுக் கொண்ட போது, இந்த கிருஷ்ணன் தான் அந்த ஏகாதிபதியின் {ஜராசந்தனின்} கோரிக்கையை நிராகரித்தான். இந்த முட்டாள் {கிருஷ்ணன்} காட்டிக் கொள்வது போல, இவன் தான் {கிருஷ்ணன்தான்} அண்டத்தின் தலைவன் என்றால், இவன் ஏன் தன்னை அந்தணனாக கருதவில்லை? இருப்பினும் இந்தக் காரியம் எனக்கு ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்துகிறது. நீ என்னதான் பாண்டவர்களை ஞானமற்ற வழியில் நடத்திச் சென்றாலும், அவர்கள் உன்னை நேர்மையானவனாகவே மதிக்கின்றனர். ஓ பாரதா {பீஷ்மா}, பெண் தன்மையுள்ளவனும், கிழவனுமான உன்னை எல்லா காரியங்களுக்கும் வழிகாட்டியாகப் பெற்றவர்கள் இதை ஆச்சரியமாக நினைக்காமல் இருக்கலாம்."
வைசம்பாயனர் தொடர்ந்தார், "சிசுபாலனின் இந்தக் கடும் வார்த்தைகளைக் கேட்ட அந்த பெரும் பலம் வாய்ந்த மனிதர்களில் முதன்மையான பெரும் சக்தி கொண்ட பீமசேனன் பெரும் கோபம் கொண்டான். இயற்கையிலேயே பெரிதான அவனது கண்கள் மேலும் விரிந்து, தாமரை இலைகளைப் போல அகன்றது. அது, கோபத்தால் தாமிரம் போன்று சிவந்திருந்தது. அங்கே கூடியிருந்த ஏகாதிபதிகள் அவனுடைய {பீமனுடைய} நெற்றியில் மும்மடங்கு உயரமான மலைகளுக்கு மத்தியில் ஓடும் கங்கையின் நீரூற்றைப் போன்ற மூன்று சுருக்கங்களைக் கண்டனர். பீமசேனன் தனது பற்களை நரநரவென்று கோபத்தால் கடித்த போது, அந்த ஏகாதிபதிகள் அவனது {பீமனது} முகத்தில், யுக முடிவில் அனைத்து உயிரையும் விழுங்கக் காத்திருக்கும் மரணத்தின் பிரதிபலிப்பைக் கண்டனர். பெரும் மனோ சக்தி கொண்ட அந்த வீரன் {பீமன்} மூர்க்கமாகக் குதிக்கத் தயாரான போது, அந்த பலம் வாய்ந்த கரங்கள் கொண்ட பீஷ்மர், மகாசேனனை (தேவர்கள் தளபதி) {முருகனைப்} பிடித்துக் கொண்ட மகாதேவன் {சிவன்} போல அவனைப் {பீமனைப்} பிடித்துக் கொண்டார். ஓ பாரதா {ஜனமேஜயா}, பீமனின் கோபத்தை குருக்களின் பாட்டனான பீஷ்மர் பல நல்ல ஆலோசனைகள் கொடுத்து அடக்கினார். அந்த எதிரிகளைத் தண்டிக்கும் பீமனால், கண்டங்களை மீறாதக் கடலைப் போல பீஷ்மரின் வார்த்தைகளைத் தட்ட முடியவில்லை. ஆனால், ஓ மன்னா {ஜனமேஜயா}, பீமன் கோபமாக இருந்தாலும், ஆண்மையுடன் வீரம் கொண்ட சிசுபாலன், பயத்தால் நடுங்கவில்லை. பீமன் அடிக்கடி மூர்க்கமாகக் குதிக்கத் தயாரானாலும், சிறு விலங்கின் கோபத்தை அசட்டை செய்யும் சிங்கம் போல, சிசுபாலன் ஒரு நினைவைக் கூட அவனை {பீமனைக்} குறித்து நினைக்கவில்லை. அந்த பலம் வாய்ந்த சேதி மன்னன், பயங்கர வீரம் கொண்ட பீமன் கோபத்துடன் இருப்பதைக் கண்டு சிரித்துக் கொண்டே, "அவனை {பீமனை} விடு, ஓ பீஷ்மா! இந்த ஏகாதிபதிகள் அனைவரும் அவன் {பீமன்} எனது வீரத்தால், நெருப்பில் விழுந்த பூச்சிபோல பொசுங்கிப் போவதைக் காணட்டும்" என்றான். சேதி நாட்டு ஆட்சியாளனின் {சிசுபாலனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட குருக்களில் முதன்மையான, புத்திசாலி மனிதர்களின் தலைவரான பீஷ்மர், பீமனிடம் இந்த வார்த்தைகளில் பேசினார்.
![]() |
![]() |
![]() |