The Birth mystery of Sisupala | Sabha Parva - Section 42 | Mahabharata In Tamil
(சிசுபால வத பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : பீஷ்மர், சிசபாலன் மூன்று கண்கள் மற்றும் நான்கு கரங்களுடன் பிறந்ததாகக் கூறுவது; யாருடைய மடியில் வைக்கும்போது அவை விழுகின்றனவோ அவனே சிசுபாலனின் கொலையாளி என்று ஓர் அரூபக் குரல் சொல்வது; கிருஷ்ணன் மடியில் வைக்கும் போது அவ்வுறுப்புகள் விழுவது; சிசுபாலனின் தாய் கிருஷ்ணனிடம் வரம் கேட்பது; சிசுபாலனின் நூறு பிழைகளைப் பொறுப்பதாக கிருஷ்ணன் உறுதி கூறுவது...
பீஷ்மர் சொன்னார், "சேதி மன்னனின் குலத்தில் சிசுபாலன் மூன்று கண்களுடனும் நான்கு கரங்களுடனும் பிறந்தான். அவன் {சிசுபாலன்} பிறந்ததும், கழுதைக்கொப்பான குரலில் இரைந்து ஊளையிட்டான்.(1) இதனால் அவனது {சிசுபாலனது} தந்தையும் தாயும் உறவினர்களும் அச்சத்தால் பீடிக்கப்பட்டனர். இந்த இயல்புக்கு மீறிய தீய சகுனங்களைக் கண்ட அவனது {சிசுபாலனது} பெற்றோர் அவனைக் கைவிடத் தீர்மானித்தனர்.(2) ஆனால், {புலப்படாத} ஓர் அரூபமான குரல், அந்த நேரத்தில் ஒலித்து, துயரத்தில் மூழ்கியிருந்த மன்னனிடம், அவனது மனைவி, அமைச்சர்கள் புரோகிதர் ஆகியோர் முன்னிலையில்,(3) "ஓ மன்னா, உன்னுடைய இந்த மகன், நற்பேறு பெற்றவனாகவும், பலத்தில் மேன்மையானவனுமாக இருப்பான். எனவே நீ அச்சப்பட வேண்டாம். கவலையில்லாமல் இந்தக் குழந்தையை {சிசுபாலனை} நீ வளர்ப்பாயாக.(4) அவன் (குழந்தைப் பருவத்திலேயே) இறந்து போக மாட்டான். அவனது காலம் {இறப்பு} இன்னும் வரவில்லை. ஆயுதங்களால் இவனை {சிசுபாலனை} கொல்லப் போகிறவனும் ஏற்கனவே பிறந்துவிட்டான்" என்றது {அந்த அரூபமான குரல்}.(5)
இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தக் குழந்தையின் தாய், துயர மிகுதியால் அந்த அரூபக் குரலிடம்,(6) "என் பிள்ளையை மதித்து இந்த வார்த்தைகளை உதிர்த்தவனை நான் குவிந்த கரங்களுடன் வணங்குகிறேன். அவன் {சிசுபாலனைக் கொல்லப் போகிறவன்} தெய்வீகமானவனா? அல்லது வேறு ஏதாவது உயிர்வகையைச் சேர்ந்தவனா என்று அவனே {அரூபக் குரலே} சொல்லட்டும்.(7) எனது மகனை {சிசுபாலனை} கொல்லப் போகிறவன் எவன் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்" என்றாள்.(8)
அதற்கு அந்த அரூபக் குரல், "யார் மடியில் இக்குழந்தையை வைக்கும்போது, இவனது {சிசுபாலனது} மிகுதியான கரங்களும் ஐந்து தலை நாகத்தைப் போல தலைகளும் விழுமோ, யாருடைய பார்வை பட்டதும் இவனது மூன்றாவது கண் மறைகிறதோ, அவனே இக்குழந்தையைக் கொல்லப் போகிறவன்" என்றது.(9,10)
குழந்தையின் மூன்று கண்களையும், நான்கு கரங்களையும், அரூபக் குரலின் வார்த்தைகளையும் கேள்விப்பட்ட(11) உலகத்தின் மன்னர்கள் அனைவரும் சேதிக்கு அவனைக் காணச் சென்றனர். சேதியின் மன்னன் அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் தகுதிக்கேற்ப வழிபட்டு,(12) ஒருவர் பின் ஒருவராக அவர்களது மடியில் குழுந்தையை வைத்துப் பார்த்தான். ஒருவர் பின் ஒருவராக ஆயிரம் மன்னர்கள் மடியில் வைத்தும், அந்த அரூபக் குரல் சொன்ன வேளை வரவில்லை. துவாராவதியில் {துவாரகையில்} இவையனைத்தையும் கேள்விப் பட்ட பெரும் பலம் வாய்ந்த யாதவ வீரர்களான சங்கர்ஷணனும் {பலராமனும்}, ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்}, சேதியின் தலைநகருக்கு யாதவர்களின் மகளான (சேதியின் ராணியான), தங்கள் தந்தையின் தங்கையை {அத்தையைக்} காணச் சென்றனர்.(13-15)
அங்கே சென்ற ராமனும் {பலராமனும்}, கேசவனும் {கிருஷ்ணனும்}, அங்கே இருந்தவர்களில் அவரவர் தகுதிக்கேற்ப அனைவரையும் வணங்கி, மன்னனையும் ராணியையும் வணங்கி, அனைவரின் உடல்நலனையும் விசாரித்த பிறகு, தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.(16) பதிலுக்கு அந்த வீரர்கள் வணங்கப்பட்டதும், பெரும் மகிழ்ச்சியுடன் இருந்த ராணி {சேதி நாட்டின் ராணி} தானே தனது குழந்தையை {சிசுபாலனை} தாமோதரனின் {கிருஷ்ணனின்} மடியில் வைத்தாள்.(17) அந்தக் குழந்தை {சிசுபாலன்} அப்படி மடியில் வைக்கப்பட்டதும், தேவைக்கதிகமான கரங்கள் அனைத்தும் கீழே விழுந்தன. நெற்றியில் இருந்த கண்ணும் மறைந்தது.(18)
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராணி துயரத்துடன் கிருஷ்ணனிடம் ஒரு வரம் கேட்டாள். அவள் {சேதி நாட்டின் ராணி}, "ஓ பெரும் பலம் கொண்ட கிருஷ்ணா, நான் அச்சத்தால் பீடிக்கப்படுகிறேன். எனக்கு ஒரு வரம் தருவாயாக.(19) துயர் நிறைந்தவர்களுக்கு துன்பத்தைக் களைய உறுதியளிப்பவன் நீ. அனைவரின் அச்சத்தையும் விலக்கவல்லவன் நீ", என்றாள்.
இப்படி அவளால் {சேதி நாட்டின் ராணியால்} கேட்டுக் கொள்ளப்பட்ட யது குலத்தின் கிருஷ்ணன்,(20) "ஓ மரியாதைக்குரியவளே, அஞ்சாதே. நீ நீதிகளை அறிந்தவள். உனக்கு என்னிடம் எந்த அச்சமும் இருக்காது. நான் உனக்கு என்ன வரம் தர வேண்டும்? ஓ அத்தை, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?(21) என்னால் முடிந்தாலும், முடியாவிட்டாலும், உன் ஆணையை நிறைவேற்றுவேன்" என்றான்.
இப்படி கிருஷ்ணன் சொன்னதும், {சேதி நாட்டின்} ராணி,(22) "ஓ பெரும் பலம் கொண்டவனே {கிருஷ்ணா}, சிசுபாலன் செய்யும் குற்றங்களை நீ எனக்காக மன்னிக்க வேண்டும். ஓ யது குலத்தின் புலியே, ஓ தலைவா, நான் கேட்கும் இதுவும் ஒரு வரம் தான் என்பதை அறிந்து கொள்வாயாக", என்றாள்.(23)
அதற்கு கிருஷ்ணன், "ஓ அத்தை, அவன் {சிசுபாலன்} கொல்லப்படத் தகுதி வாய்ந்தவனாக இருந்தாலும், நான் அவனது {சிசுபாலனது} நூறு குற்றங்களை மன்னிப்பேன். நீ வருந்தாதே" என்றான் {கிருஷ்ணன்}".(24)
பீஷ்மர் தொடர்ந்தார், "ஓ பீமா, மன்னனும், தீய இதயம் கொண்ட பாவியுமான இந்தச் சிசுபாலன், கோவிந்தன் {கிருஷ்ணன்} கொடுத்த வரத்தால் கர்வம் கொண்டு, உன்னைப் போருக்கு அழைக்கிறான்".(25)
ஆங்கிலத்தில் | In English |