The kings wrath for Bhishma | Sabha Parva - Section 43 | Mahabharata In Tamil
(சிசுபால வத பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : பீஷ்மர், பீமனின் கோபமாற்றுவது; இதைக் கேட்ட சிசுபாலன் மிகுந்த கோபம் கொண்டு பீஷ்மரை இகழ்வது; பீஷ்மர் பேசிய வார்த்தைகள் அங்கு கூடியிருந்து மன்னர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்துவது; பீஷ்மரைக் கொல்ல அங்குக் கூடியிருந்த மன்னர்களில் சிலர் எண்ணுவது; பீஷ்மர் சமாதானம் சொல்வது...
பீஷ்மர் சொன்னார், "அழியாத பலம் கொண்ட உன்னை {பீமனே} சேதி நாட்டு ஆட்சியாளன் {சிசுபாலன்} சொந்த புத்தியால் அழைக்கவில்லை. நிச்சயமாக, இது அண்டத் தலைவனான கிருஷ்ணனின் காரியம்தான்.(1) ஓ பீமா, மரணத்தினால் ஆட்கொள்ளப்பட்டவனும், தன் குலத்தில் இழிந்தவனுமான இவன் {சிசுபாலன்} இன்று என்னை அவமதித்தது போல அவமதிக்க இந்தப் பூமியில் வேறு எந்த மன்னன் இருக்கிறான்?(2) இந்த பலம்வாய்ந்த கரங் கொண்டவன் {சிசுபாலன்}, ஹரியின் {கிருஷ்ணனில்} சக்தியில் ஒரு பாகம்தான் என்பதில் ஐயமில்லை. நிச்சயமாக, அந்தத் தலைவன் {கிருஷ்ணன்} தனது சக்தியைத் தானே எடுத்துக் கொள்ள விரும்புகிறான்.(3) இந்தச் சூழ்நிலையில், ஓ குரு குலத்தின் புலியே {பீமா}, தீய இதயம் கொண்டவனும், புலி போன்றவனுமான சேதி நாட்டு மன்னன் {சிசுபாலன்}, நம்மையெல்லாம் மதிக்காமல் முழங்கிக் கொண்டு இருக்கிறான்" என்றார் {பீஷ்மர்}".(4)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பீஷ்மரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சேதி நாட்டு மன்னன் {சிசுபாலன்} மேலும் பொறுத்துக் கொள்ள முடியாமல். கோபத்தால் பீஷ்மரிடம் பேசினான்.(5) அவன் {சிசுபாலன்}, "ஓ பீஷ்மா, அடிக்கடி இருக்கையில் இருந்து எழுந்து, திறம்பெற்ற ஒரு வந்தியைப் போலத் தொடர்ந்து கேசவனைப் {கிருஷ்ணனைப்} புகழ்ந்து கொண்டிருக்கிறாய். அவன் {கிருஷ்ணன்} கொண்டிருப்பதாக நீர் சொல்லும் ஆற்றல் எமது {உமது எதிரியாகிய எங்களுக்கே} ஆகட்டும்.(6) ஓ பீஷ்மா, உனது மனம் மற்றவர்களைப் புகழ்வதில் இனிமை அடைகிறது என்றால், கிருஷ்ணனை விட்டு நீ இந்த மன்னர்களைத் துதிப்பாயாக.(7) பிறக்கும் போதே இந்தப் பூமியைப் பிளந்தவனும், மன்னர்களில் அற்புதமானவனுமான பாஹ்லீகத்தின் ஆட்சியாளன் தரதனைத் துதிப்பாயாக.(8)
ஓ பீஷ்மா, அங்கம், வங்கம் எனும் பகுதிகளை ஆளும் ஆட்சியாளன் கர்ணன், ஆயிரம் கண்கள் உடையவனுக்கு {இந்திரனுக்கு} நிகரானவன், பெரும் வில்லை வளைப்பவன்,(9) பலம் வாய்ந்த கரங்களும், பிறக்கும் போதே தெய்வீக காது குண்டலங்களும், இயற்கையான கவசமும் கொண்டு, உதயசூரியனைப் போலப் பிரகாசித்து,(10) வாசவனுக்கு {இந்திரனுக்கு} நிகரான ஒப்பற்ற ஜராசந்தனை மல்யுத்தத்தில் வீழ்த்தி அந்த ஏகாதிபதியை கிழித்து துவைத்தவன் {கர்ணன்} இருக்கிறான். அவனைத் துதிப்பாயாக.(11)
ஓ பீஷ்மா, பெரும் பலம் வாய்ந்த வீரர்களும், புகழுக்குத் தகுந்தவர்களும், பிராமணர்களில் சிறந்தவர்களும், தந்தையும் மகனுமான துரோணர், மற்றும் அஸ்வத்தாமன் ஆகிய இருவரில் எவர் ஒருவரும், ஓ பீஷ்மா, கோபம் கொண்டால் அசைவன மற்றும் அசையாதன கொண்ட மொத்த பூமியையும் அழித்து விடுவார்கள், என்று நான் நம்புகிறேன்.(12,13) ஓ பீஷ்மா, போரில் துரோணருக்கோ அஸ்வத்தாமனுக்கோ நிகரான ஒரு மன்னனை நான் காணவில்லை. நீ ஏன் அவர்களைப் புகழ விரும்பவில்லை?(14)
பலம்வாய்ந்த கரம் கொண்டவனும், மன்னர்களுக்கு மன்னனும், கடல் சூழ்ந்த மொத்த உலகிலும் நிகரற்றவனுமான துரியோதனனையும் கடந்து,(15) பேராற்றலும், அனைத்து ஆயுதங்களும் கொண்ட ஜெயத்ரதனையும் கடந்து, ஆற்றலுக்காக உலகத்தாரால் கொண்டாடப்படும் கிம்புருஷர்களின் குரு துருமன்,(16) சரத்வானின் மகனும், பாரத இளவரசர்களின் குருவும், பெரும் சக்தி வாய்ந்த முதியவருமான கிருபர் ஆகியோரையும் கடந்து, கேசவனை {கிருஷ்ணனை} நீ ஏன் புகழ்கிறாய்?(17) வில்லாளிகளில் முதன்மையானவனும், பெரும் சக்தி கொண்டவனும், சிறந்த மன்னனுமான ருக்மியைப் புகழாமல் ஏன் நீ கேசவனைப் புகழ்கிறாய்?(18)
அளவுகடந்த சக்தி கொண்ட பீஷ்மகன், மன்னன் தந்தவக்ரன் {தந்தவக்தரன்}, எண்ணற்ற வேள்வித் தண்டுகளுக்காக {யூபங்களுக்காக} அறியப்படும் பகதத்தன், மகத மன்னன் ஜெயத்சேனன்,(19) துருபதன், விராடன், சகுனி, பிருஹத்பலன், அவந்தியின் விந்தன், அனுவிந்தன், பாண்டியன், பெருஞ்செழிப்புடைய ஸ்வேதன், உத்தமன்,(20) சங்கன், செருக்குடைய விருஷசேனன், பெரும் பலம் கொண்ட ஏகலவ்யன், அபரிமிதமான சக்தி கொண்டவனும், பெரும் தேர்வீரனுமான கலிங்க நாட்டு மன்னன் ஆகியோர் அனைவரையும் விட்டு கேசவனை {கிருஷ்ணனை} நீ ஏன் புகழ்கிறாய்?(21)
ஓ பீஷ்மா, உனது மனம் எப்போதும் அடுத்தவர்களைத் துதி பாடுவதில் நிலைத்திருந்தால், நீ ஏன் சல்லியனையும், பூமியின் மற்ற ஆட்சியாளர்களையும் புகழவில்லை?(22) நீதிகள் சம்பந்தமாக அறம்சார்ந்த முதிய மனிதர்களிடம் நீ கேட்காதது திண்ணமாகத் தெரிகிறது. அதற்கு நான் என்ன செய்துவிட முடியும்?(23) ஓ பீஷ்மா, தன்னையும் மற்றவர்களையும், இகழ்வதும் புகழ்வதும், மரியாதைக்குரியவர்களின் செயலில்லை என்பதை அறிவாயா?(24) ஒ பீஷ்மா, அறியாமையால் விடாமல் தகுதியில்லாத கேசவனைப் {கிருஷ்ணனைப்} புகழும் இந்த உனது நடத்தையை யாரும் அங்கீகரிக்க மாட்டார்கள்.(25) உனது விருப்பத்தால் மட்டுமே, போஜனின் (கம்சனின்) வேலைக்காரனும், மாட்டு இடையனுமானவனிடம் முழு அண்டத்தையும் நிறுவ, உன்னால் எப்படி முடிகிறது?(26)
ஒரு வேளை, ஓ பாரதா, இந்த நிலை உனது இயல்பன்று, நான் முன்னமே சொன்ன பூலிங்கப் பறவையைப் போலவே நீ இருக்கிறாய்.(27) இமயமலைக்கு அடுத்த பக்கத்தில் பூலிங்கம் என்ற ஒரு பறவை இருந்தது. ஓ பீஷ்மா, அந்தப் பறவை எப்போதும் பாதகமான வார்த்தைகளையே பேசும்.(28) 'மூர்க்கத்தனமாக எதையும் செய்யாதீர்' இதுவே அவள் {பூலிங்கப் பறவை} அடிக்கடிச் சொல்வது. ஆனால் தானே மூர்க்கமாகத்தான் நடந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவள் {பூலிங்கப் பறவை} அறிவதில்லை.(29) அற்ப அறிவு கொண்ட அந்தப் பறவை சிங்கம் உணவு உண்ணு போது, அதன் வாயில், அதன் பற்களுக்கிடையே சிக்கியிருக்கும் இறைச்சித் துண்டுகளை உண்டது.(30) நிச்சயமாக, ஓ பீஷ்மா, சிங்கம் சம்மதித்திருப்பதால் அந்தப் பறவை வாழ்கிறது. ஓ பாவம் நிறைந்த இழிந்தைவனே, நீ எப்போதும் அந்தப் பறவை போலவே பேசுகிறாய்.(31) நிச்சயமாக, ஓ பீஷ்மா, இந்த மன்னர்கள் சம்மதித்திருப்பதால் மட்டுமே நீ வாழ்கிறாய். அனைவரின் கருத்துகளுக்கும் எதிராகவே செய்யும் உன்னைப் போல வேறு எவனும் இல்லை" என்றான் {சிசுபாலன்}".(32)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "சேதி ஆட்சியாளனின் இந்தக் கடுஞ்சொற்களைக் கேட்ட பீஷ்மர், ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்தச் சேதி மன்னனிடம்,(33) "உண்மையில் இந்தப் பூமியின் ஆட்சியாளர்கள் சம்மதித்திருப்பதால்தான் நான் உயிருடன் இருக்கிறேனா? ஆனால், நான் இந்த மன்னர்களை ஒரு துரும்பாகக் கூட மதிக்கவில்லை" என்றார்.(34)
இந்த வார்த்தைகளைப் பீஷ்மர் பேசியதும், கூடியிருந்த மன்னர்கள் கோபத்தால் கொதித்தார்கள். அவர்களில் சிலர் எழுந்து நின்று பீஷ்மரை இகழத் தொடங்கினார்கள்.(35) பீஷ்மரின் அந்த வார்த்தைகளைக் கேட்டவர்களும், பெரும் விற்களைக் கொண்டவர்களுமான அந்த மன்னர்களில் சிலர், "இழிந்த பாவியான இந்தப் பீஷ்மன், கிழவனாயிருந்தும் செருக்குடன் இருக்கிறான். இவன் மன்னிக்கத்தகுந்தவனல்ல.(36) எனவே மன்னர்களே, கோபத்தால் உந்தப் பட்டிருக்கும் இந்தப் பீஷ்மனை, விலங்கைக் கொல்வதைப் போல கொல்ல வேண்டும். அல்லது துரும்பை எரிப்பது போல நாம் இவனை எரித்துவிடுவோம்" என்றனர்.(37)
அந்த ஏகாதிபதிகளின் இந்த வார்த்தைகளைக் கேட்ட குருக்களின் பெருந்தகப்பன் பீஷ்மர், பெரும் புத்திகூர்மையோடு அந்தப் பூமியின் தலைவர்களுக்குப் பதிலளித்தார்.(38) "நமது பேச்சுக்கு ஓர் எல்லையை நான் காணவில்லை. வார்த்தைகள் வார்த்தைகளாலேயே பதிலளிக்கப்படுகின்றன. எனவே, பூமியின் தலைவர்களே, நான் சொல்வதை அனைவரும் கேட்பீராக.(39) விலங்கைப் போல நான் உங்களால் கொல்லப்படுகிறேனோ, துரும்பாலான நெருப்பில் எரிக்கப்படுகிறேனோ {அதுவரை} உங்கள் அனைவரின் தலையிலும் என் காலை வைத்ததாகட்டும்.(40) அழிவில்லா கோவிந்தன் {கிருஷ்ணன்} இதோ இருக்கிறான். நாம் அவனையே {கிருஷ்ணனையே} வணங்கியிருக்கிறோம். விரைவாக மரணத்தை விரும்பும் இவன் {சிசுபாலன்}, சக்கரமும் கதாயுதமும் கொண்டவனும், கரிய நிறத்தவனுமான மாதவனை {கிருஷ்ணனை} போருக்கு அழைக்கட்டும்; அவன் {சிசுபாலன்} வீழ்த்தப்பட்டு, இந்தத் தேவனின் {கிருஷ்ணன்} உடலில் கலக்கட்டும்!" என்றார் {பீஷ்மர்}".(41,42)
ஆங்கிலத்தில் | In English |