The slaughter of Sisupala | Sabha Parva - Section 44 | Mahabharata In Tamil
(சிசுபால வத பர்வம் - 06)
பதிவின் சுருக்கம் : சிசுபாலன் கிருஷ்ணனை அறைகூவி அழைத்தது; அங்கே கூடியிருந்து மன்னர்களுக்கு சிசுபாலனின் தவறுகளைக் கிருஷ்ணன் விளக்குவது; சிசுபாலன் கிருஷ்ணனைக் கடிந்து கொள்வது; கிருஷ்ணன் சிசுபாலனைக் கொல்வது; யுதிஷ்டிரனின் ராஜசூய வேள்வி முடிவுக்கு வருவது; கிருஷ்ணன் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு துவாரகை திரும்புவது...
வைசம்பாயனர் சொன்னார், "பீஷ்மரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட, பேராற்றல் வாய்ந்த சேதியின் ஆட்சியாளன் {சிசுபாலன்}, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} போரிட விரும்பி, அவனிடம்,(1) "ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நான் உன்னை அறைகூவி அழைக்கிறேன். நான் இன்று உன்னையும் பாண்டவர்கள் அனைவரையும் கொல்லும்வரை என்னுடன் போரிடுவாயாக.(2) ஓ கிருஷ்ணா, பாண்டுவின் மகன்கள், மன்னனாகக் கூட இல்லாத உன்னை வழிபட்டு, இந்த மன்னர்களை அவமதித்ததால், உன்னுடன் சேர்த்துக் கொல்லப்பட தகுதி படைத்தவர்களே.(3) ஓ கிருஷ்ணா, மன்னனாக இல்லாதவனும், அடிமையும், தீயவனும், வழிபடத் தகாதவனுமாகிய ஆகிய உன்னை வழிபடத் தகுதியுடையவன் என்று குழந்தைத்தனமாகப் பூஜித்த பாண்டவர்கள் கொல்லப்படத் தக்கவர்களே என்பது என் கருத்து" என்று சொன்னான்.(4) இப்படிச் சொன்ன அந்த மன்னர்களில் புலி {சிசுபாலன்}, அங்கே கோபத்தில் முழங்கியபடி நின்றான்[1]. சிசுபாலன் ஓய்ந்த பிறகு, கிருஷ்ணன், பாண்டவர்களின் முன்னிலையில் அனைத்து மன்னர்களிடமும் மென்மையான சொற்களில் இவ்வாறு பேசினான்.(5)
[1] கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகமாக, "பராக்ரசாலியான அந்தச் சிசுபாலன் இவ்வாறு சொல்லிப் புலிபோல் இரைந்து எல்லாப் பிராணிகளும் பார்த்திருக்கையில் மிகக் கோபமுற்று எல்லா அரசர்களோடுங்கூட யுத்தஸந்நாஹஞ் செய்து கொண்டு தர்மராஜருடைய யாகத்தைக் கெடுக்கும் எண்ணத்துடன் விரைவாகச் சென்றான். அதன் பிறகு, கேசியைக் கொன்றவரும், பகைவரையழிப்பவருமாகிய கேசவர், சக்கரத்தையும், கதையையும் கையிலேந்திக் கொண்டு தாருகனென்னும் ஸாரதியினால் கொடிகட்டி அலங்கரிக்கப்பட்டதும், ரதங்களுள் உத்தமுமான தமது ரதத்தினருகிற்சென்று பீஷ்மரால் கைகொடுக்கப்பெற்று அதன் மேலேறினார். கெட்ட ஸ்வபாவமுள்ள அந்தச் சிசுபாலனால் கோபம் மூட்டப்பட்ட அரசர்களனைவரையும் கிருஷ்ண பகவான் ஒற்றைத் தேராளியாக யுத்தத்தில் ஸந்தித்தார். அப்போது கருடக் கொடி கட்டின ரதத்திலிருப்பவரும், உதயகால ஸூர்யனைப் போலத் தம் ஒளியினால் பிறருக்குத் தாபத்தையுண்டு பண்ணிக் கொண்டு வில்லில் நாணேறிடுகிறவரும், உயர்ந்த புஷ்பரதத்திலிருக்கும் இரண்டாவது மன்மதனைப் போன்றவரும், தாமரை மலர் போன்ற கண்களையுடையவருமான கண்ணபிரானை அரசர்களனைவரும் கண்டனர். அவ்வாறு தம் பராக்ரமத்தினால் கொளுத்திகிறவர் போல ஸஞ்சரிக்கும் கண்ணனைக் கண்டு அரசர்கள் பரவசர்களாகி கிருஷ்ணனுக்குத் தக்க மரியாதையைச் செய்தனர். ஜனமேஜய ராஜாவே, சிறந்த கைகளையுடையவரும், அஸுரச்ரேஷ்டர்களையழிப்பவரும், பகைவர்களான வீரர்களைக் கொல்லுகிறவருமாகிய அந்த யாதவ வீரர் அவ்வரசர்களை நோக்கி இன்சொல்லாகச் சொல்லலானார்" என்றிருக்கிறது. இது கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் இல்லை.
அவன் {கிருஷ்ணன்}, "மன்னர்களே, இந்த தீய மனதுடையவன், சத்வதகுல மகளின் மகனும், எங்கள் சத்வத குலத்துக்கு வந்த பெரும் எதிரியுமாவான். நாங்கள் இவனைக் காயப்படுத்த எண்ணியதில்லை என்றாலும், இவன் {சிசுபாலன்} எப்போதும் எங்களுக்குத் தீமையையே நாடினான்.(6) மன்னர்களே, தீய செயல்களைச் செய்யும் இந்தப் பாவி {சிசுபாலன்}, எனது தந்தையின் {வசுதேவரின்} தங்கை மகனாக இருப்பினும், நான் பிராக்ஜோதிஷ நகருக்கு சென்றுவிட்டதைக் கேள்விப்பட்டு, துவாரகைக்கு வந்து, அந்த நகரத்தை எரித்தான்.(7) போஜ மன்னன் {உக்கிரசேனன்} ரைவத மலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த மன்னனின் பணியாட்களைத் தாக்கி, அவர்களைச் சங்கிலிகளில் பிணைத்து தனது நகரத்துக்கு இழுத்துச் சென்றான்.(8) தன் காரியங்கள் அனைத்திலும் பாவம் நிறைந்தவனாக உள்ள இந்த இழிந்தவன், என் தந்தையின் குதிரை வேள்விக்காக ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் சுதந்திரமாக விடப்பட்டிருந்த குதிரையை அவ்வேள்வியைத் தடை செய்யும்பொருட்டுக் களவாடினான்.(9) அப்பாவியான பப்ருவின் (அக்ரூர்) மனைவி துவாரகையில் இருந்து சௌவீர நாட்டுக்குச் செல்லும் வழியில், தீய நோக்கங்களால் உந்தப்பட்ட இவன், அவள் விருப்பமின்றி அவளை அபகரித்துச் சென்றான்.(10)
தன் தாய் மாமனுக்குத் தீங்கிழைத்த இவன் {சிசுபாலன்}, மன்னன் கரூஷனின் உடையை அணிந்து கொண்டு, கரூஷனுக்காக நிச்சயிக்கப்பட்டிருந்த விசால நாட்டு இளவரசியான அப்பாவி பத்திரையை அபகரித்துச் சென்றான்[2].(11) இந்தத் துயரங்கள் அனைத்தையும் நான் என் தந்தையின் {வசுதேவரின்} தங்கைக்காகப் பொறுமையாகத் தாங்கிக் கொண்டேன். இருப்பினும், இவையெல்லாம் இன்று இந்த மன்னர்கள் முன்னிலையில் நற்பேற்றின் பொருட்டே நடைபெற்றது.(12) இவன் {சிசுபாலன்} என்னிடம் கொண்டிருக்கும் பகைமையை இன்று நீங்கள் அனைவரும் கண்டீர்கள். என் முதுகுக்குப் பின்னால் இவன் {சிசுபாலன்} செய்ததையெல்லாம் அறிந்தீர்கள்.(13) இதையெல்லாம் மீறி, இந்த ஏகாதிபதிகளின் முன்னிலையில் செருக்கின் எல்லையைக் கடந்ததால், இவன் {சிசுபாலன்} என்னால் கொல்லப்படத் தகுதியுடையவனாக இருக்கிறான். இவன் இன்று எனக்கு ஏற்படுத்தியிருக்கும் காயங்களை என்னால் மன்னிக்க இயலவில்லை.(14) விரைவான மரணத்தை விரும்பி, இந்த மடையன் ருக்மிணியை விரும்பினான். ஆனால் வேதப் பொருளை அடைய முடியாத சூத்திரன் போல, இந்த மூடனால் {சிசுபாலனால்} அவளை {ருக்மிணியை} அடைய முடியவில்லை", என்றான் {கிருஷ்ணன்}.(15)
[2] கும்பகோணம் பதிப்பில், "இவன் மாதுலனுக்குத் தீங்கிழைப்பவனாக மாயையினால் மறைந்து விசாலனுடைய புதல்வியாகிய பத்ரையென்பவளை அவள் துயரப்படும்படி குகுரர்களையும், அந்தகர்களையும் கொன்று அவர்களின் மனைவிகளையழவைத்துக் கரூச தேசத்தரசனுக்காகக் கொண்டு போனான். கெட்ட எண்ணமுள்ள இவன் என் தந்தையினால் வரிக்கப்பட்டவளும், பதிவ்ரதையும், விசாலராஜன் பெண்ணுமான பத்ரையைப் பரபரப்புடன் உள்ளே பிரவேசித்து எடுத்தான். இவன் என்னை ஜயிக்கக் கருதிக் கரூச ராஜாவுடன் ஸ்நேஹஞ்செய்து கொண்டு ஜராஸந்தனையடுத்து எனக்கு இன்னாதவற்றைச் செய்தான்" என்றிருக்கிறது. இது கங்குலி, மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் சொல்லப்பட்டிருக்கும் செய்திக்கு முரணாக இருக்கிறது. மேலும் அதிக செய்தியாக, அதைத் தொடர்ந்து "அரசர்களே, அவற்றையையெல்லாம் நான் எண்ண முடியாது. இவ்வாறு இவன் யாதவர்களுக்கு எல்லையில்லாத தீங்கள் செய்தவன். இவன் மிகக் கபடமாகவே நம்முடைய விஷயத்தில் அனேக கார்யங்களைச் செய்தான். ‘இவனைக் கொல்லுவதற்குரிய குற்றங்கள் நூற்றை நாம் பொறுப்போம்’ என்று இவன் தாயாருக்கு நான் செய்த கொடிய சபதங்களினால் நான் கட்டுப்பட்டிருந்தேன். அவ்வாறாகவே இவனையழிப்பதற்குரிய குற்றங்கள் நூறும் என்னால் பொறுக்கப்பட்டன. இவனைக் கொல்லுகிற காலமாகிய இந்த ஸமயத்தில் நான் எவ்வகையிலும் பொறுக்கக்கூடாத பிழைகள் இரண்டுள்ளன. ‘யாகத்துக்கிடையூறு செய்பவனைக் கொல்வேன்; பாண்டவர்களுக்கு விரோதியைக் கொல்வேன்’ என்ற இரண்டு வகை நிச்சயம் எனக்கு இருக்கிறது. அதை நான் எப்படி மாற்றுவேன்?" என்றுமிருக்கிறது. அதன் பிறகு மேற்கண்ட அடிக்குறிப்பு எண்ணுக்குப் பின்வருமாறே தொடர்கிறது.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்டவர்களும், அங்கு திரண்டிருந்தவர்களுமான ஏகாதிபதிகள், சேதி நாட்டு ஆட்சியாளனை {சிசுபாலனை} இகழ்ந்தார்கள்.(16) ஆனால் பலம்பொருந்திய சிசுபாலன், இந்த வார்த்தைகளைக் கேட்டு, சத்தமாகச் சிரித்து,(17) "ஓ கிருஷ்ணா, ருக்மிணி (உனது மனைவி) மீது நான் ஆசை கொண்டிருந்தேன் என்பதை இவ்வளவு மன்னர்கள் முன்னிலையில் சொல்கிறாயே, சபையில் இவற்றைச் சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா?(18) ஓ மதுவைக் கொன்றவனே {கிருஷ்ணா}, தனது மனைவி வேறு யாராலோ நினைக்கப்பட்டாள் என்று மதிப்பு மிக்க மனிதர்களுக்கிடையில் சொல்வதற்கு உன்னைவிட்டால் வேறு ஆண்மகன் யார் இருக்கிறார்?[3](19) ஓ கிருஷ்ணா, நீ விரும்பினால் என்னை மன்னி அல்லது மன்னிக்காதே. ஆனால் கோபத்தாலோ, நட்பாலோ, நீ எனக்கு என்ன செய்துவிட முடியும்?" என்று கேட்டான் {சிசுபாலன்}.(20)
[3] ருக்மிணி விதர்ப்ப மன்னன் பீஷ்மகனின் மகளாவாள். அவளுடைய தந்தை அவளைச் சிசுபாலனுக்குத் திருமணம் செய்து கொடுக்க உறுதியளித்திருந்தான். எனினும், கிருஷ்ணனைக் காதலித்து வந்த ருக்மிணி அவனுக்கு ஒரு மடலை அனுப்பினாள். அதன் பேரில், கிருஷ்ணனும், பலராமனும் சென்று ருக்மிணியின் சகோதரனான ருக்மியை வீழ்த்தி, ருக்மிணியை அபகரித்துச் சென்றனர்.
சிசுபாலன் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது, மதுவைக் கொன்ற மேன்மையானவன் {கிருஷ்ணன்}, தனது மனத்தில் அசுரர்களின் செருக்கை அடக்கும் சக்கராயுதத்தை நினைத்தான்.(21) சக்கரம் தனது கைகளுக்கு வந்தவுடன், பேச்சில் வல்லவனான அந்தச் சிறந்தவன் {கிருஷ்ணன்}, சத்தமாக இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(22)
அவன் {கிருஷ்ணன்}, "பூமியின் தலைவர்களே, ஏன் இவன் {சிசுபாலன்} இதுவரை என்னால் மன்னிக்கப்பட்டான் என்பதைக் கேட்பீராக. அவனது தாயாரால் வேண்டப்பட்ட படி, இவனது {சிசுபாலனது} நூறு குற்றங்கள் என்னால் மன்னிக்கப்பட வேண்டியிருந்தது.(23) இஃதை அவள் {சிசுபாலனின் தாய்} என்னிடம் வரமாகவே கேட்டாள். நானும் அருளினேன். மன்னர்களே அந்த எண்ணிக்கை நிறைவடைந்துவிட்டது. ஏகாதிபதிகளே, நான் இப்போது உங்கள் முன்னிலையில் இவனை {சிசுபாலனைக்} கொல்லப் போகிறேன்" என்று சொன்னான்.(24)
இவ்வாறு சொன்னவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்த யதுகுலத் தலைவன் {கிருஷ்ணன்}, பெரும் கோபம் கொண்டவனாக, உடனடியாக சேதியின் ஆட்சியாளன் {சிசுபாலன்} தலையைத் தனது சக்கரத்தால் துண்டித்தான்.(25) அந்தப் பெரும்பலம் படைத்தவன், இடியால் தாக்கப்பட்ட மலைப்பாறைபோல கீழே விழுந்தான். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயன்}, வானில் இருக்கும் சூரியனைக் காண்பது போல சிசுபாலன் உடலில் இருந்து கடும் சக்திவெளியேறுவதை அங்கே கூடியிருந்த மன்னர்கள் கண்டனர்.(26) அப்படி வெளியே வந்த அந்த சக்தி, அனைத்து உலகங்களாலும் வழிபடப்படும் தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடைய கிருஷ்ணனை வணங்கி, அவனது {கிருஷ்ணனின்} உடலுக்குள் புகுந்தது.(27) மனிதர்களின் தலைவனான அந்த பெரும்பலம் வாய்ந்தவனின் {கிருஷ்ணனின்} உடலுக்குள் அந்த சக்தி புகுந்ததைக் கண்ட அந்த மன்னர்க்கூட்டம் அதை அற்புதமாகக் கருதினர்.(28)
சேதி மன்னனை {சிசுபாலனை} கிருஷ்ணன் கொன்ற பிறகு, மேகமற்று இருந்த போதும் அங்கே மழை பொழிந்தது, இடி முழக்கம் கேட்டது, பூமியே நடுங்கியது.(29) அங்கே இருந்த மன்னர்களில் சிலர் பேச்சறியாது ஜனார்த்தனனை {கிருஷ்ணனைப்} பார்த்த படியே நின்றிருந்தனர்.(30) சிலர் தங்கள் கட்டைவிரலை உள்ளங்கைகளில் கோபத்தால் பிசைந்து கொண்டு, தங்கள் உதடுகளைப் பற்களால் கடித்துக் கொண்டனர்.(31) அந்த மன்னர்களில் சிலர் விருஷ்ணி குலத்தோனைத் {கிருஷ்ணனைத்} தனிமையில் சந்தித்துப் பாராட்டவும் செய்தனர். சிலர் மிகுந்த கோபம் கொண்டனர், அதே வேளையில் சிலர் நடுநிலை வகித்தனர்.(33) பெரும் முனிவர்கள் இதயத்தில் மகிழ்ந்து கேசவனை {கிருஷ்ணனைப்} புகழ்ந்து விட்டுச் சென்றனர். கிருஷ்ணனின் ஆற்றலைக் கண்ட உயர் ஆன்ம பிராமணர்களும், பெரும்பலம் வாய்ந்த மன்னர்களும், இதயத்தில் மகிழ்ந்து அவனைப் புகழ்ந்தனர்.(34)
பிறகு யுதிஷ்டிரன், தன் தம்பிகளை அழைத்து, மன்னன் சிசுபாலனின் இறுதிச் சடங்குகளை, தமகோஷனின் வீர மைந்தனான சிசுபாலனுக்குச் சரியான முறையில் செய்யக் கட்டளையிட்டான். பாண்டுவின் மகன்கள் தங்கள் தமையனின் கட்டளையைச் சரியாகச் செய்தனர். பிறகு யுதிஷ்டிரன், அனைத்து மன்னர்களுடன் சேர்ந்து மன்னன் சிசுபாலனின் மகனை சேதி நாட்டுக் அரசனாய் நிறுவினான்.(35,36)
பிறகு பெரும் சக்தி படைத்த குருக்களின் மன்னனுடைய {யுதிஷ்டிரனின்} அந்த {ராஜசூய} வேள்வி, ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அனைத்து செழிப்பாலும் அருளப்பட்டு, அனைத்து இளைஞர்களுக்கும் நிறைவை ஏற்படுத்துவதாக அழகாக அமைந்தது. இறுதியாக அந்த {ராஜசூய} வேள்வி, அனைத்து இடையூறுகளும் நீங்கி, அபரிமிதமான செல்வங்களுடனும், தானியங்களுடனும், அபரிமிதமான அரிசி மற்றும் அனைத்து விதமான உணவுகளும் கொண்டு, அவை அனைத்தும் கேசவனால் {கிருஷ்ணனால்} கவனிக்கப்பட்டு அதிர்ஷ்டகரமாக முடிவுக்கு வந்தது.(37,38) யுதிஷ்டிரன் சரியான நேரத்தில் அந்தப் பெரும் வேள்வியை முடித்தான். பெரும் பலம் வாய்ந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அந்த மேன்மையான சௌரி {கிருஷ்ணன்}, தனது வில்லான சாரங்கத்துடனும், சக்கரத்துடனும், கதாயுதத்துடனும், அந்த வேள்வியை கடைசிவரை காத்து நின்றான்.(39)
அனைத்து க்ஷத்திரிய ஏகாதிபதிகளும், வேள்வியை முடித்து குளித்து விட்டு நின்ற அறம் தழைக்கும் யுதிஷ்டிரனிடம் வந்து,(40) "நற்பேறினாலேயே நீ வெற்றியடைந்தாய். ஓ அறம் சார்ந்தவனே {யுதிஷ்டிரனே}, நீ ஏகாதிபத்திய மரியாதையை அடைந்துவிட்டாய். ஓ அஜமீட குலத்தானே, உன்னால் உமது குலத்தின் புகழ் எங்கும் பரவி நிற்கிறது.(41) ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, இந்த உனது செயலால், நீ பெரும் அறத் தகுதியை அடைந்துவிட்டாய்.(42) நாங்கள் விரும்பியவாறு, நாங்கள் உன்னால் வழிபடப்பட்டோம். நாங்கள் எங்கள் நாடுகளுக்குத் திரும்ப விரும்புகிறோம் என்பதை உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறோம். நீ எங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்" என்றனர்.(43)
அந்த ஏகாதிபதிகளின் வார்த்தைகளைக் கேட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், ஒவ்வொருவரையும் அவர்கள் தகுதிக்கேற்ப வணங்கி, தனது தம்பிகளிடம், "இந்த ஏகாதிபதிகள் தங்கள் சுய விருப்பத்தின் பேரிலேயே நம்மிடம் வந்திருக்கிறார்கள்.(44) எதிரிகளைத் தண்டிக்கும் இவர்கள் என்னிடம் விடைபெற்றுத் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப விரும்புகின்றனர். அவர்கள் அருளப்பட்டிருக்கட்டும். நமது நாட்டு எல்லை வரை இவர்களை வழி அனுப்பிவிட்டு வாருங்கள்", என்று கட்டளையிட்டான்.(45)
தனது தமையனின் {யுதிஷ்டிரனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த அறம் சார்ந்த பாண்டவ இளவரசர்கள், அவரவர்கள் தகுதிக்கேற்ப அந்த மன்னர்களைத் தொடர்ந்து சென்றனர்.(46) மன்னன் விராடனை பலம் பொருந்திய திருஷ்டத்யும்னன் தொடர்ந்து சென்றான். பெரும் பலம் பொருந்திய தேர்வீரான யக்ஞசேனனை {துருபதனைத்} தனஞ்சயன் {அர்ஜுனன்} தொடர்ந்து சென்றான்.(47) பீஷ்மரையும், திருதராஷ்டிரரையும் பீமசேனன் தொடர்ந்து சென்றான். போர்களத்தில் நிபுணனான சகாதேவன், துரோணரையும் அவரது மகனையும் {அசுவத்தாமன்} தொடர்ந்து சென்றான்.(48) சுபலனையும், அவனது மகனையும் {சகுனியையும்} நகுலன் தொடர்ந்து சென்றான். திரௌபதியின் மகன்களும், சுபத்திரையின் மகனும் {அபிமன்யுவும்} மலைசார்ந்த நாடுகளுக்கு மன்னர்களைத் தொடர்ந்து சென்றனர்.(49) மற்ற க்ஷத்திரியக் காளைகள் வேறு பல க்ஷத்திரியர்களைத் தொடர்ந்து சென்றனர். ஆயிரக்கணக்கான பிராமணர்களும் உரிய மரியாதைகளுடன் திரும்பிச் சென்றனர்.(50)
அனைத்து மன்னர்களும் பிராமணர்களும் சென்ற பிறகு, பலம்பொருந்திய வாசுதேவன் {கிருஷ்ணன்} யுதிஷ்டிரனிடம்,(51) "ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரரே}, உமது அனுமதியுடன் நான் துவாரகை செல்ல விரும்புகிறேன். பெரும் நற்பேற்றால், நீர் வேள்விகளில் முதன்மையான ராஜசூய வேள்வியை முடித்திருக்கிறீர்" என்றான்.(52)
ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} இப்படிச் சொன்னதும், யுதிஷ்டிரன், "உனது கருணையால், ஓ கோவிந்தா {கிருஷ்ணா}, இந்தப் பெரும் வேள்வியை நான் நிறைவுசெய்தேன்.(53) உனது கருணையாலேயே எனது மேலாதிக்கத்தை அனைத்து க்ஷத்திரியர்களும் ஏற்றுக் கொண்டு, இங்கே பெரும் மதிப்புகளிலான காணிக்கைகளுடன் வந்தனர்.(54) ஓ வீரனே {கிருஷ்ணா}, நீயில்லாமல், எனது இதயம் எந்த மகிழ்ச்சியையும் அடையவில்லை. எனவே, ஓ ஓ பாவமற்றவனே நான் எப்படி உனக்கு விடைகொடுப்பேன்?(55) ஆனால் நீயும் துவாரகை சென்றாக வேண்டும்" என்றான்.
உலகம் முழுதும் புகழ் கொண்ட அறம்சார்ந்த ஹரி {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரனால் இப்படி சொல்லப்பட்ட பிறகு, தனது மைத்துனனுடன் {யுதிஷ்டிரனுடன்}, பிருதையிடம் {குந்தியிடம்} சென்று, "ஓ அத்தை, உனது மகன்கள் ஏகாதிபத்திய மாட்சிமையை அடைந்துவிட்டார்கள்.(56,57) அவர்கள் பெறும் செல்வச் செழிப்பை அடைந்துவிட்டார்கள். பெரும் வெற்றியையும் அடைந்து விட்டார்கள். இவை அனைத்திலும் நிறைவடைவாயாக. ஓ அத்தை, நான் துவாரகை செல்ல விரும்புகிறேன். எனக்கு அனுமதி கொடுப்பாயாக" என்றான்.(58)
அதன் பிறகு கேசவன் {கிருஷ்ணன்}, திரௌபதியிடமும், சுபத்திரையிடமும் விடைபெற்றான். அந்தப்புரத்திற்குள் இருந்து யுதிஷ்டிரனுடன் வெளியே வந்து,(59) தனது தூய்மைப் பணிகளை முடித்து, தனது தினசரி சடங்குங்களையும் வழிபாடுகளையும் முடித்து, பிராமணர்களை நல்வாழ்த்துகளை கூறச் செய்தான். பிறகு அந்த பலம் வாய்ந்த கரம் கொண்ட தாருகன், அற்புதமான அலங்காரத்துடன் கூடியதும், மேகங்களைப் பிரதிபலிக்க்ககூடியதுமான தேருடன் அங்கே வந்து நின்றான். கருடக் கொடி கொண்ட அந்த தேர் அங்கே வந்ததைக் கண்டவனும்,(60,61) தாமரை இலை போன்ற கண்கள் கொண்ட உயர்ந்த ஆன்மா {கிருஷ்ணன்}, அதை மரியாதையுடன் வலம் வந்து, அதன் மேல் ஏறி துவாரகைக்குப் புறப்பட்டான்.(62)
பிறகு, பெரும் செழிப்பைக் கொண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன் பெரும் பலம்வாய்ந்த வாசுதேவனை {கிருஷ்ணனை} நடந்தே தொடர்ந்து சென்றான்.(63) பிறகு, தாமரை இலைகளைப் போன்ற கண்களை உடைய ஹரி {கிருஷ்ணன்}, அந்தச் சிறந்த தேரைச் சிறிது நேரம் நிறுத்தி, குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம்,(64) "ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரரே}, உமது குடிகளைக் கண்ணாகப் பொறுமையுடன் பாதுகாப்பீராக. அனைத்து உயிர்களுக்கும் மேகம் எப்படி நன்மையைச் செய்கிறதோ, அனைத்துப் பறவைகளுக்கு மரம் எப்படி தனது கிளைகளை விரித்து நன்மை செய்கிறதோ,(65) சாகாதவர்களுக்கு {தேவர்களுக்கு} ஆயிரம் கண்ணுடையவன் {இந்திரன்} எப்படிப் பாதுகாப்பாக இருக்கிறானோ, அப்படி உமது உறவினர்களுக்கு பாதுகாப்பாக இருப்பீராக" என்றான் {கிருஷ்ணன்}.(66)
கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் இப்படி பேசி முடித்து, ஒருவருக்கொருவர் விடைபெற்று தங்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர். ஓ மன்னா {ஜனமேஜயா}, சத்வத குலத்தலைவன் {கிருஷ்ணன்} துவாராவதிக்குத் {துவாரகைக்குத்} திரும்பியதும், மன்னன் துரியோதனன், மன்னன் சுபலனின் மகன் சகுனியுடன் தனியாக, அந்தத் தெய்வீக சபா மண்டபத்தில் தொடர்ந்து வாழ்ந்து வந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(67,68)
ஆங்கிலத்தில் | In English |