Duryodhana tumbled down | Sabha Parva - Section 46 | Mahabharata In Tamil
(தியூத பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : துரியோதனன் குளத்தில் விழுவது; தரையை குளம் என்று நினைத்து ஆடைகளை உயர்த்துவது; பிறகு யுதிஷ்டிரனிடம் விடைபெற்று ஹஸ்தினாபுரம் திரும்புவது; பாண்டவர்களின் வளமையைக் கண்டு துரியோதனன் அடையும் பொறாமை; அவற்றை சகுனியிடம் விவரித்தல்...
வைசம்பாயனர் சொன்னார், "மனிதர்களில் காளையான துரியோதனன் தொடர்ந்து (பாண்டவர்களின்) சபாமண்டபத்துடன் கூடிய அரண்மனையிலேயே வசித்தான். அந்த குரு இளவரசன் {துரியோதனன்} சகுனியுடன் சேர்ந்து அந்த மாளிகை முழுவதையும் ஆராய்ந்தான்.(1) அந்தக் குரு இளவரசன் {துரியோதனன்} இத்தகைய தெய்வீக வடிவமைப்புகளை யானையின் பெயரை வைத்து அழைக்கப்படும் நகரத்தில் (ஹஸ்தினாபுரத்தில்) கண்டதேயில்லை.(2)
ஒரு நாள் மன்னன் துரியோதனன் அம்மாளிகையைச் சுற்றி வருகையில், ஒரு பளிங்கு தரைக்கு வந்தான். அந்த மன்னன் {துரியோதனன்}, தனது அறியாமையால், அதை நீர் நிறைந்த குளம் என்று கருதித் தனது ஆடைகளை இழுத்துக் கொண்டான். பிறகு தனது தவறை உணர்ந்த அந்த மன்னன் {துரியோதனன்} அந்த மாளிகையில் பெரும் சோகத்துடன் உலவினான்.(3-5) சிறிது நேரம் கழித்து அம்மன்னன் {துரியோதனன்}, பளிங்கு போன்ற இதழ்களைக் கொண்ட தாமரைகளுடன் கூடிய குளத்தைக் கண்டு, தரை என்று கருதி தனது ஆடைகளுடன் உள்ளே விழுந்தான்.(6)
துரியோதனன் அந்தக் குளத்துக்குள் விழுந்ததைக் கண்ட பெரும் பலம் வாய்ந்த பீமன் உரக்கச் சிரித்தான். அந்த அரண்மனையில் இருந்த பணியாட்களும் சிரித்தார்கள்.(7) மன்னனின் உத்தரவால் அந்தப் பணியாட்கள் அழகான உலர்ந்த ஆடைகளை அவனுக்காக {துரியோதனனுக்காக} கொண்டு வந்தனர். துரியோதனனின் பரிதாப நிலையைக் கண்ட பெரும் பலம் வாய்ந்த பீமன்,(8) அர்ஜுனன், இரட்டையர்கள் {நகுலன், சகாதேவன்} என அனைவரும் உரக்கச் சிரித்தனர். இது போன்ற கேலிகளுக்கு {அவமானங்களுக்கு} பழக்கப்படாத துரியோதனனால் அவர்களது சிரிப்பைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(9)
அவன், தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டு, அவர்களிடம் தனது பார்வையைச் செலுத்தாமலிருந்தான். மீண்டும் ஒரு வரண்ட தரையைத் தண்ணீரென நினைத்த அந்த ஏகாதிபதி {துரியோதனன்} தனது ஆடைகளைத் தூக்கிக் கட்டிக் கொண்டதைக் கண்டு அனைவரும் மீண்டும் சிரித்தார்கள். அந்த மன்னன் {துரியோதனன்} சிறிது நேரம் கழித்து பளிங்கினால் ஆன மூடிய கதவை தவறுதலாகத் திறந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.(10,11) அதைக் கடந்து செல்ல அவன் {துரியோதனன்} நினைக்கையில், அவனது தலை அந்தக் கதவில் மோதி, தள்ளாடியபடி நின்றான். மற்றொரு இடத்தில் திறந்திருந்த கதவை மூடியிருப்பதாக நினைத்து, அதைத் திறக்க தனது கையை நீட்டியபடி குப்புற விழுந்தான்.(12) மேலும் உண்மையில் திறந்திருந்த மற்றொரு கதவை மூடியிருப்பதாக நினைத்து, அந்த மன்னன் {துரியோதனன்} அதனின்று விலகிச் சென்றான்.(13) ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் துரியோதனன், ராஜசூய வேள்வியில் அபரிமிதமான செல்வத்தைக் கண்டும், அந்த சபாமண்டபத்துக்குள் நடந்த பல பிழைகளுடனும் {ஏமாற்றங்களுடனும்} பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு ஹஸ்தினாபுரம் திரும்பினான்.(14,15)
அப்படி அவன் {துரியோதனன்} தனது நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போதே, பாண்டவர்களின் செல்வச்செழிப்பைக் கண்டு இதயம் பிளந்தவனாக, பாவத்தின் பக்கம் சேர்ந்து துன்புற்றான்.(16) பாண்டவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதையும், மன்னர்கள் அவர்களுக்கு கப்பம் கட்டுவதையும், மன்னர்கள் மட்டும் அல்லாமல் இளையவர்களும் முதியவர்களும், பாண்டவர்களுக்கு நன்மை செய்வதையும், கண்டு, பாண்டுவின் சிறப்புவாய்ந்த மகன்களின் {பாண்டவர்களின்} செல்வச்செழிப்பையும் பிரகாசத்தையும் நினைத்து, திருதராஷ்டிரன் மகனான துரியோதனன் மங்கிப் போனான்.(17,18) துயரால் பீடிக்கப்பட்ட இதயத்துடன் (தனது நகரத்தை நோக்கி) முன்னேறிய அவன் {துரியோதனன்}, மனத்தில் சபாமண்டபத்தையும், ஞானமுள்ள யுதிஷ்டிரனின் ஒப்பற்ற செழிப்பையுமே நினைத்துச் சென்றான்.(19) திருதராஷ்டிரனின் மகனான துரியோதனன், இப்படியே தனது நினைப்புகளில் மூழ்கி சுபலனின் மகனுடன் பேசாமல் வந்தான். அவன் {சகுனி} தொடர்ந்து பேச முயிற்சித்தாலும் ஒரு வார்த்தையும் பேசாமல் வந்தான்.(20)
நினைவு தப்பி இருக்கும், அவனைக் கண்ட சகுனி, "ஓ துரியோதனா, நீ ஏன் பெருமூச்செறிகிறவன் போல இப்படிச் செல்கிறாய்?" என்று கேட்டான்.(21)
துரியோதனன், "ஓ மாமா, சிறப்புமிகுந்த அர்ஜுனனின் ஆயுதங்களின் வலிமையால் யுதிஷ்டிரன் முழு உலகத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதையும், பிருதையின் {குந்தியின்} மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} வேள்வி, தேவர்களில் புகழ்வாய்ந்த சக்ரனின் {இந்திரனின்} வேள்வி போல இருந்ததையும் கண்டு,(22,23) பகலும், இரவுமாக பொறாமையால் எரிந்து, கோடைகாலத்தில் {ஆனி, ஆடி மாதங்களில்} வற்றிவிடும் ஆழமற்ற குளத்தைப் போன்றவனாக நான் இருக்கிறேன்.(24) சத்வதர்களின் தலைவனால் {கிருஷ்ணனால்} சிசுபாலன் கொல்லப்பட்ட போது, சிசுபாலன் பக்கம் நின்று பேச ஒரு ஆண் மகனும் இல்லாததைக் கண்டீரா?(25)
பாண்டவர்களெனும் நெருப்பால் எரிக்கப்பட்டவர்களைப் போல இருந்த அவர்கள் அனைவரும் அந்தக் குற்றத்தை மன்னித்தார்களே; யாரால் அதை மன்னிக்க முடியும்?(26) வாசுதேவனால் {கிருஷ்ணனால்} செய்யப்பட்ட முறையற்ற அந்தப் பெருஞ் செயல், பாண்டுவின் சிறப்புமிகுந்த மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} பலத்தால் வெற்றியடைந்தது.(27) பல ஏகாதிபதிகள் ஏதோ வைசியர்கள் கப்பம் கட்டுவதுபோல, பல்வேறு பரிசுகளைக் குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரனுக்காகக் கொண்டு வந்தார்களே.(28) பிரகாசமிக்க யுதிஷ்டிரனின் செல்வத்தைக் கண்ட பிறகு, நான் பொறாமை கொள்ளக்கூடாது என்று எவ்வளவுதான் கருதினாலும், எனது இதயம் பொறாமையால் பற்றி எரிகிறது” {என்றான் துரியோதனன்}.(29)
இப்படித் தனது நிலையைப் பிரதிபலித்த துரியோதனன், நெருப்பால் சுடப்பட்டது போல காந்தார மன்னனிடம் {சகுனியிடம்} மறுபடியும் பேசினான்.(30) அவன் {துரியோதனன்}, "நான் சுடர்விட்டு எரியும் நெருப்பில் விழப்போகிறேன், அல்லது நஞ்சை விழுங்கப் போகிறேன், அல்லது நீரில் மூழ்கப்போகிறேன்.(31) ஆற்றல்மிக்க ஆண்மை கொண்ட எந்த மனிதன்தான் உலகத்தில் தனது எதிரிகள் செழிப்பிலும், தான் வறுமையிலும் வாழத் தாங்கிக் கொள்வான்?(32) எனவே, (எதிரிகளின்) இந்த செழிப்பையும், நற்பேற்றையும் கண்டும் தாங்கிக் கொண்டிருக்கும் நான் பெண்ணுமல்ல, பெண்ணல்லாதவனுமல்ல, ஆணுமல்ல, ஆணல்லாதவனுமல்ல.(33) உலகத்தின் மீதான அவர்களது {பாண்டவர்களது} ஆட்சி உரிமையையும், அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} இருக்கும் பரந்த மக்கள் கூட்டத்தையும், அந்த வேள்வியையும் கண்ட என்னைப் போன்ற யார்தான் பொறாமை கொள்ளாமல் இருப்பார்?(34) தனியாக அத்தகைய அரச செழிப்பை என்னால் பெற இயலாது; எனக்கு இந்த விஷயத்தில் உதவி செய்ய எந்தக் கூட்டாளியையும் நான் காணவில்லை. இதன் காரணமாகவே நான் தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறேன்.(35)
குந்தி மகனின் {யுதிஷ்டிரனின்} தெளிவான பெரும் செல்வச் செழிப்பைக் கண்ட பிறகு, நான் விதியே தலைமையானது என்றும், முயற்சிகள் பலனளிக்காது என்றும் கருதுகிறேன்.(36) ஓ சுபலரின் மகனே {சகுனியே}, முன்பு நான் அவனை {யுதிஷ்டிரனை} அழிக்க முயன்றேன். ஆனால் எனது முயற்சிகள் எல்லாவற்றையும் முறியடித்து, குளத்திற்குள் முளைக்கும் தாமரையென அவன் {யுதிஷ்டிரன்} செழிப்பில் வளர்ந்திருக்கிறான்.(37) இதன் காரணமாகவே நான் விதியை முதன்மையாகவும், முயற்சிகளைக் கனியற்றதாகவும் கருதுகிறேன். திருதராஷ்டிரனின் மகன்கள் சிதைவடைந்து வருகிறார்கள், பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறார்கள்.(38) பாண்டவர்களின் செழிப்பையும், சபா மண்டபத்தையும், அந்த வேலைக்காரர்கள் சிரித்ததையும் கண்டு எனது இதயம் நெருப்பில் இருப்பதைப் போல பற்றி எரிகிறது.(39) எனவே, ஓ மாமா, நான் ஆழ்ந்த துயரத்தில் இருப்பதையும், பொறாமையால் நிறைந்திருப்பதையும் அறிந்து கொண்டு, திருதராஷ்டிரரிடம் இது குறித்து சொல்வீராக", என்றான் {துரியோதனன்}.(40)
ஆங்கிலத்தில் | In English |