The plan of Sakuni | Sabha Parva - Section 47 | Mahabharata In Tamil
(தியூத பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : சகுனி, யுதிஷ்டிரனைப் பார்த்துப்
பொறாமை கொள்ளாதே என்று துரியோதனனுக்கு அறிவுறுத்துவது; தனது நண்பர்களுக்கும், தனது அணி தலைவர்களுக்கும் எந்த
ஆபத்தும் இல்லாமல், பாண்டவர்களின் செல்வத்தை அபகரிக்க துரியோதனன் திட்டம் கேட்பது; சகுனி அதற்கு ஒரு வழி
சொல்வது...
சகுனி சொன்னான், "ஓ துரியோதனா, நீ யுதிஷ்டிரனிடம் பொறாமை கொள்ளக் கூடாது. பாண்டுவின் மகன்கள் அவர்களுக்குத் தகுதியான நற்பேறையே அனுபவிக்கிறார்கள்.(1) ஓ எதிரிகளைக் கொல்பவனே {துரியோதனா}, ஓ பெரும் மன்னா, எண்ணற்ற திட்டங்களைத் தீட்டினாலும் உன்னால் அவர்களை {பாண்டவர்களை} அழிக்க முடியவில்லை. அத்திட்டங்களில் பலவற்றை உன்னால் செயல்படுத்தவே முடியவில்லை. அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்} நற்பேற்றால் அவை அனைத்திலும் இருந்து தப்பித்தனர்.(2,3) அவர்கள் {பாண்டவர்கள்} திரௌபதியை மனைவியாய் அடைந்து, துருபதன், துருபதனின் மகன்கள், வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகியோரை கூட்டாளிகளாய் அடைந்து, இந்த உலகத்தை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வர அவர்கள் உதவியைப் பெற்றிருக்கிறார்கள்.(4)
ஓ மன்னா {துரியோதனா}, அவர்கள் வஞ்சனையின்றி தங்கள் தந்தைவழி {பாண்டுவின்} நாட்டின் பங்கை அடைந்து தங்கள் சக்தியாலேயே வளர்ந்திருக்கிறார்கள். இதில் நீ வருத்தமடைய என்ன இருக்கிறது?(5) ஹஸ்தாசனனை {அக்னியை}[1] நிறைவடையச் செய்த தனஞ்சயன் {அர்ஜுனன்} காண்டீபத்தையும், வற்றாத அம்பறாத்தூணிகள் இரண்டையும், பல தெய்வீக ஆயுதங்களையும் அடைந்தான்.(6) அந்தத் தனித்தன்மை வாய்ந்த வில்லுடன், தனது கரத்தின் பலத்தையும் சேர்த்து உலக மன்னர்கள் அனைவரையும் அவனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறான். இதில் நீ வருத்தமடைய என்ன இருக்கிறது?(7)
[1] ஹுதாசனனைத் {அக்னியைத்} திருப்தி செய்த தனஞ்சயன் {அர்ஜுனன்} காண்டிபத்தையும், இரு வற்றாத அம்பறாத்தூணிகளையும்,.... பார்க்க: ஆயுதங்கள் கேட்ட அர்ஜுனன் - ஆதிபர்வம் பகுதி 226 ; கிருஷ்ணனுக்குக் கிடைத்த சக்கரம் - ஆதிபர்வம் பகுதி 227
எதிரிகளைக் கொல்பவனும், இருகைகளையும் சம திறனுடன் இயக்குபவனுமான அர்ஜுனன், மயாசுரனைத்[2] தீயில் இருந்து காப்பாற்றி, தனக்கு அந்த சபா மண்டபத்தைக் கட்டித் தர அவனை ஏற்பாடு செய்தான்.(8) இதனாலேயே மயனின் கட்டளையின் பேரில், கடும் முகம் கொண்ட ராட்சசர்களும், கின்னரர்கள் என்று அழைக்கப்பட்டவர்களும் அந்த சபா மண்டபத்தைக் கட்டுவதில் அவர்களை ஆதரித்தனர். இதில் நீ வருத்தப்பட என்ன இருக்கிறது?(9) ஓ மன்னா, உனக்கு கூட்டாளிகளே இல்லை என்று நீ சொன்னாய். ஓ பாரதா {துரியோதனா}, இது உண்மை இல்லை. உனது தம்பிகளான இவர்கள் அனைவரும் உனக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறார்கள்.(10) பெரும் வில்லைத் தாங்கும் துரோணர், அவரது மகன் {அஸ்வத்தாமன்}, ராதையின் மகன் கர்ணன், பெரும் போர் வீரரான கௌதமர் (கிருபர்),(11) நானும் எனது சகோதரர்களும், மன்னன் சௌமதத்தி ஆகியோர் உனக்குக் கூட்டாளிகளாக இருக்கிறோம். இவர்கள் அனைவருடன் ஒன்றிணைந்து இந்த முழு உலகத்தையும் வெற்றி கொள்வாயாக" என்றான் {சகுனி}.(12)
[2] மயாசுரனைத் தீயில் இருந்து காப்பாற்றிய.... பார்க்க: "அர்ஜுனா! என்னைக் காப்பாற்று" என்றான் மயன்! - ஆதிபர்வம் பகுதி 230 ; "அரண்மனை கட்டிக் கொடு!" என்றான் கிருஷ்ணன் பகுதி 1
துரியோதனன், "ஓ மன்னா, உமக்குத் நிறைவுண்டாகுமானால், நான் உம்மையும் இந்த வீரர்களையும் வைத்து பாண்டவர்களை வெற்றி கொள்வேன்.(13) நான் அவர்களை {பாண்டவர்களை} இப்போது வீழ்த்தினால், இந்த உலகமும் அதில் இருக்கும் அனைத்து ஏகாதிபதிகளும் எனதாவார்கள், அனைத்து செல்வங்களும் நிரம்பிய அந்த சபா மண்டபத்துடன் கூடிய வீடும் எனதாகும்", என்றான் {துரியோதனன்}.(14)
சகுனி, "தனஞ்சயன் {அர்ஜுனன்}, வாசுதேவன் {கிருஷ்ணன்}, பீமசேனன், யுதிஷ்டிரன், நகுலன், சகாதேவன், தனது மகன்கள் இருவருடன் கூடிய துருபதன்(15) ஆகியோரை தேவர்களாலும் போரில் வீழ்த்த முடியாது. அவர்கள் போரில் திளைப்பவர்களும், பெரும் வில் படைத்தவர்களும், பெரும் வீரர்களுமாவர்.(16) ஆனால், ஓ மன்னா {துரியோதனா}, யுதிஷ்டிரனை வீழ்த்தும் வழிகள் எனக்குத் தெரியும். அதைக் கேட்டு, அதன்படியே நடப்பாயாக", என்று பதிலுரைத்தான் {சகுனி}.(17)
துரியோதனன், "ஓ மாமா, நமது நண்பர்களுக்கும், சிறப்புமிக்க மனிதர்களான வேறு சிலருக்கும் ஆபத்தில்லாமல் அவர்களை வீழ்த்த ஏதாவது வழியிருந்தால் எனக்குச் சொல்வீராக" என்றான்.(18)
சகுனி, "குந்தியின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு}, பகடை விளையாட்டில் விருப்பம் அதிகம், ஆனால் எவ்வாறு விளையாடுவது என அவனுக்குத் தெரியாது. அந்த மன்னனை {யுதிஷ்டிரனை} விளையாட அழைத்தால், அவனால் மறுக்க முடியாது.(19) நான் பகடையில் திறன் பெற்றவன். இக்காரியத்தில் {பகடை விளையாட்டில்} உலகத்தில் எனக்கு நிகர் யாருமில்லை. ஏன், ஓ குருவின் மகனே {துரியோதனா}, மூவுலகத்திலும் கிடையாது. எனவே, அவனை {யுதிஷ்டிரனை} பகடை விளையாட அழைப்பாயாக.(20) பகடையில் திறன் பெற்ற நான், ஓ மனிதர்களில் காளையே {துரியோதனா}, அவனது {யுதிஷ்டிரனது} நாட்டையும், அவனது {யுதிஷ்டிரனது} செல்வங்களையும் உனக்காக வெல்வேன்.(21) ஆனால், ஓ துரியோதனா, இவை அனைத்தையும் மன்னரிடம் (திருதராஷ்டிரரிடம்) சொல்வாயாக. உனது தந்தையின் {திருதராஷ்டிரனின்} ஆணையின் பேரில், நான் யுதிஷ்டிரனின் உடைமைகள் அனைத்தையும் நிச்சயம் வெல்வேன்", என்றான்.(22)
துரியோதனன், "ஓ சுபலரின் மகனே {சகுனி மாமனே}, குருக்களின் தலைவரான திருதராஷ்டிரரிடம் நீரே முறையாக இவை யாவற்றையும் சொல்வீராக. என்னால் அவ்வாறு செய்ய இயலாது" என்றான்.(23)
ஆங்கிலத்தில் | In English |