The plan to get put | Sabha Parva - Section 48 | Mahabharata In Tamil
(தியூத பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : சகுனி திருதராஷ்டிரனிடம்
துரியோதனனின் துயர் விசாரிக்கச் சொல்வது; திருதராஷ்டிரன் துரியோதனனிடம் என்ன குறை என்று விசாரிப்பது; துரியோதனன்
தனது பொறாமையைப் பற்றிக் கூறுவது; சகுனி தனது திட்டத்தை வெளிப்படுத்துவது; திருதராஷ்டிரன் விதுரனிடம்
கலந்தாலோசிப்பதாகச் சொல்வது; துரியோதனன் அதற்கு மறுப்பு தெரிவிப்பது; விதுரனிடம் ஆலோசிக்காமலே ஒரு
தீர்மானத்திற்கு வருவது...
வைசம்பாயனர் சொன்னார், "ஓ மன்னா {ஜனமேஜயா}, மன்னன் யுதிஷ்டிரனின் ராஜசூய வேள்வியால் ஈர்க்கப்பட்ட சுபலனின் மகன் சகுனி, துரியோதனனின் நோக்கங்களை அறிந்து, சபா மண்டபத்தில் இருந்து வெளியே வரும்போது, அவனுக்கு {துரியோதனனுக்கு} விரும்பியவாறு பேசியபடியே, பெரும் ஞானமுள்ள திருதராஷ்டிரனை அணுகினான். அங்கே (அரியணையில்) அமர்ந்திருந்த அந்தக் கண்ணில்லா ஏகாதிபதியிடம் {திருதராஷ்டிரனிடம்},(1-3) "ஓ பெரும் மன்னா, ஓ பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரியோதனன் நிறமிழந்து மங்கி, உடல் மெலிந்து, மன அழுத்தத்துடன் கவலைக்கு இரையாகிறான்.(4) பகைவனின் காரணமாக உமது மூத்த மகனுக்கு {துரியோதனனுக்கு} நேர்ந்த துயரத்தை நீர் விசாரிக்காமல் இருப்பது ஏன்?" என்று கேட்டான் {சகுனி}.(5)
திருதராஷ்டிரன், "துரியோதனா, ஓ குருகுலத்தின் மகனே, உனது பெருந்துயருக்கான காரணம் என்ன? நான் கேட்கலாம் என்றால் எனக்குக் காரணத்தைச் சொல்வாயாக.(6) இந்தச் சகுனி நீ நிறமிழந்து மங்கி, உடல் மெலிந்து, மன அழுத்தத்துடன் கவலைக்கு இரையாவதாகச் சொல்கிறான். உனது கவலைக்கு என்ன காரணம் என்பது எனக்குத் தெரியவில்லை.(7) என்னுடைய இந்தப் பெரும் செல்வம் உனது கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. உன் தம்பிகளும், நம் உறவினர்கள் அனைவரும் உனக்கு ஏற்பில்லாத எதையும் செய்யவில்லை.(8) சிறந்த ஆடைகளையே நீ உடுத்துகிறாய், இறைச்சியுடன் சேர்ந்த சிறந்த உணவையே நீ உண்கிறாய், சிறந்த குதிரையே உன்னைச் சுமக்கிறது. மங்கச் செய்து உன்னை உடல் மெலியச் செய்வது எது?(9) விலையுயர்ந்த படுக்கைகளும், அழகான மங்கையரும், ஆசனங்கள் மற்றும் அறைகலன்களுடன் கூடிய மாளிகைகளும், மகிழ்ச்சிதரத்தக்க விளையாட்டுகளும், உனது உத்தரவுக்காக காத்திருக்கின்றன என்பதில் ஐயமில்லை.(10) தேவர்களுக்குரிய வசதிகள் அனைத்தும் உனக்கும் இருக்கின்றன. எனவே, ஓ பெருமையுடையவனே, ஓ மகனே {துரியோதனா}, ஏதுமில்லாதவன் போல நீ ஏன் வருத்தப்படுகிறாய்?" என்று கேட்டான்[1].(11)
[1] கும்பகோணம் பதிப்பில் இதற்கு மேலும், "அப்பா, தாய்தந்தையர்களால் புத்ரனுக்குச் செய்யத்தக்கவற்றுள் எது சிறந்ததாக நினைக்கப்பட்டிருக்கிறதோ அதையும், நம்முடைய குலத்தின் ராஜ்யலக்ஷ்தி எல்லாவற்றையும் நீ அடைந்திருக்கிறாய். தேவலோகத்தில் தேவேந்திரனுக்கு இருப்பது போலவே எல்லா விருப்பங்களும், பலவகை சிறந்த உணவுகளும், பானங்களும் உனக்கு இருக்கின்றன. ஏன் வ்யஸனப்படுகிறாய்? நிருக்தம் சந்தம் முதலான ஆறு அங்கங்களோடு கூடிய வேதத்தையும் அஸ்திர வித்தையையும், சாஸ்திரங்களையும், பத்து இலக்கணங்களுடன் கிருபாச்சாரியரிடம் படித்துத் தேர்ந்திருக்கிறாய்; பலராமரிடத்திலும், கிருபரிடத்திலும், துரோணரிடத்திலும் அஸ்த்ர வித்தை கற்றிருக்கிறாய்; நீ ஸஹோதரர்களில் ஜ்யேஷ்டன்; ராஜ்யத்திலிருக்கிறாய்; புத்திரனே, ஏன் துயரப்படுகிறாய்? புத்திரனே, நீ பிரபுவாயிருந்து கொண்டு ஸூதர்களாலும், மாகதர்களாலும் துதிக்கப்பெற்று ஸாமான்ய ஜனங்களுக்குக் கிடையாத உணவு உடைகளை மிகுதியாக அனுபவிக்கிறாய். எல்லாந்தெரிந்தவனே, இவ்வுலகத்தில் மற்றொருவன் மேன்மையையடைந்திருக்கானென்பது உன் வ்யஸனத்திற்குக் காரணமாவதெப்படி? அதை நான் கேட்கிறேன்; சொல்" என்றிருக்கிறது. பத்து இலக்கணங்களுடன் கூடிய சாஸ்திரங்கள் என்பதன் அடிக்குறிப்பில், "1.ஸ்வரம், 2.வர்ணம், 3.பதம், 4.தாது, 5.வேற்றுமையுருபுகள், 6.வினையுறுப்புகள், 7.கிருதபத்யயம், 8.தத்திதபத்யயம், 9.காரகம், 10.ஸமாஸம்" என்றிருக்கிறது.
துரியோதனன், "நான் பாவியைப் போல உண்டு உடுத்தி கடும் பொறாமைக்கு இரையாகி எனது காலத்தைப் போக்கி வருகிறேன்.(12) பகைவனின் செருக்கைப் பொறுத்துக் கொள்ள முடியாதவனும், தனது குடிகளை அந்தப் பகைவனின் கொடுங்கோன்மையிலிருந்து விடுவிக்க விரும்புபவனும், அந்தப் பகைவனைக் கொன்று வாழ்பவனுமான ஒருவனே நல்ல ஆண்மகனென அழைக்கப்படுகிறான்.(13) ஓ பாரதரே, மனநிறைவும், செருக்கும் (ஒருவனுடைய) செழிப்பை அழித்துவிடும். கருணை மற்றும் அச்சம் என்ற இரு குணங்களைக் கொண்டவனால் ஒருபோதும் உயர முடியாது.(14) யுதிஷ்டிரனின் செழிப்பைக் கண்டபிறகு, நான் அனுபவிப்பவை ஏதும் எனக்கு நிறைவைத் தரவிலை. மிகுந்த பிரகாசத்தைக் கொண்ட குந்தி மகனின் {யுதிஷ்டிரனின்} செழிப்பு என்னை மங்கச் செய்கிறது.(15) அந்தச் செழுமை என் கண்ணெதிரே இல்லையென்றாலும், பகைவனின் செழுப்பையும், எனது வறுமையையும் நான் காண்கிறேன். எனவே நான் நிறம் இழந்து, சோகமாகி, மங்கிப் போய் மெலிந்திருக்கிறேன்.(16)
யுதிஷ்டிரன் இல்லற வாழ்வு வாழும் எண்பத்தெட்டாயிரம் ஸ்நாதக பிராமணர்களை ஆதரிக்கிறான். அவர்கள் ஒவ்வொருவருக்கும் முப்பது அடிமைப் பெண்களைக் கொடுத்திருக்கிறான்.(17) இது போக, ஆயிரக்கணக்கான பிராமணர்கள் அவனது அரண்மனையில் தங்கத் தட்டுகளில் உணவு உண்கின்றனர்.(18) காம்போஜ நாட்டு மன்னன் அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} கறுப்பாகவும், சிவப்பாகவும் கணக்கிலடங்கா கதலி மான்களின் தோல்களையும், அற்புதமான வடிவமைப்புகள் கொண்ட விலையுயர்ந்த சால்வைகளையும் (கப்பமாக) அனுப்பியிருக்கிறான். நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான பெண் யானைகளும், முப்பதாயிரம் பெண் ஒட்டங்கங்களும் அவனது அரண்மனைக்குள்ளேயே உலவுகின்றன. அவை அனைத்தையும் இந்தப் பூமியின் மன்னர்கள் பாண்டவர்களின் தலைநகருக்கு {காண்டவ பிரஸ்தம் / இந்திரப் பிரஸ்தம்} காணிக்கையாகக் கொண்டு வந்தனர்.(19,20) ஓ பூமியின் தலைவா, அந்த முதன்மையான வேள்விக்கு மன்னர்கள் தங்கக் குவியல்களைக் குந்தியின் மகனுக்காக {யுதிஷ்டிரனுக்காக} எடுத்து வந்தனர்.(23)
பாண்டுவின் புத்திசாலி மகன்களின் வேள்விக்காகக் கொண்டுவரப்பட்ட செல்வத்தைப் போல வேறு எந்த வேள்விக்கும் கொண்டு வரப்பட்டதாக நான் கண்டதும் கேட்டதும் இல்லை..(22) ஓ மன்னா, எதிரியிடம் இருக்கும் அபிரிமிதமான செல்வத்தைக் கண்ட பிறகு, என்னால் மன அமைதி பெற முடியவில்லை.(23) நூற்றுக்கணக்கான பிராமணர்கள் யுதிஷ்டிரனின் கொடையால் ஆதரிக்கப்பட்டு, {அவன் கொடுத்த} பசுக்களால் வந்த செல்வத்தை அடைந்து, அந்த மாளிகையின் வாயிலில் மூவாயிரம் கோடி காணிக்கைகளுடன் நின்றனர்.(24) அவர்களை வாயில் காப்போர் உள்ளே விடாமல் தடுத்துக் கொண்டிருந்தனர். அழகான தங்கக் கமண்டலங்களில் நெய்யைக் கொண்டவந்த அவர்களுக்கு அரண்மனைக்குள் நுழைய அனுமதி கிடைக்கவில்லை.(25) பெருங்கடலே வெள்ளைத் தாமிர {வெண்கலப்} பாத்திரத்தில் தனது நீரால் உற்பத்தி செய்யப்பட்ட அமுதத்தை நிரப்பிக் கொண்டு வந்தது. அந்த அமுதம் சக்ரனின் வருடந்திர செடிகள் மற்றும் மலர்களால் உற்பத்தி செய்வதை விட உயர்ந்ததாக இருந்தது.(26) (வேள்வியின் முடிவில்) வாசுதேவன் {கிருஷ்ணன்}, அற்புதமான சங்கைக் {சங்கு} கொண்டு வந்து, எண்ணிலடங்கா ரத்தினங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கத்தாலான ஆயிரம் பாத்திரங்களில் இருந்த கடல் நீரை எடுத்து பிருதையின் {குந்தியின்} மகனைக் {யுதிஷ்டிரனைக்} நீராட்டினான்.(27)
இவை யாவற்றையும் கண்ட நான் பொறாமையால் நோய் கொண்டேன். அந்தப் பாத்திரங்கள் கிழக்கு மற்றும் தெற்கு கடல்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மேலும் மனிதர்கள் தோளில் சுமந்தபடி அதை மேற்கு கடலுக்கும் கொண்டு சென்றனர். ஓ மனிதர்களில் காளையே, ஓ தந்தையே {திருதராஷ்டிரரே}, பறவைகள் மட்டுமே செல்லக்கூடிய வடக்கு பகுதிகளுக்கு அர்ஜுனன் சென்று, அங்கிருந்து பெரும் அளவிலான செல்வங்களைக் கொண்டு வந்தான். இன்னுமொரு அற்புதமான நிகழ்வையும் உமக்கு உரைக்கிறேன். கேட்பீராக.(28-30) நூறாயிரக்கணக்கான பிராமணர்கள் உணவூட்டப்பட்டபோது, அதைத் தெரிவிப்பதற்கென்று ஒவ்வொரு நாளும் சங்க நாதங்கள் தொடர்ச்சியாக முழங்கப்பட்டன.(31) ஆனால், ஓ பாரதா நான் தொடர்ந்து முழக்கப்பட்ட சங்கநாதங்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த ஒலியைக் கேட்டு எனது உடலின் மயிர்க்கால்கள் சிலிர்த்தன.(32)
ஓ பெரும் மன்னா, மிகப்பெரிய சுற்றுச் சுவருக்குள், கணக்கிலடங்கா ஏகாதிபதிகள் பார்வையாளர்களாக நிரம்பி, மேகமற்ற வானில் தெரியும் நட்சத்திரங்களைப் போல மின்னி பார்ப்பதற்கு அழகாக இருந்தனர்.(33) ஓ மனிதர்களின் மன்னா, ஞானமுள்ள பாண்டு மகனுக்காக {யுதிஷ்டிரனுக்காக}, அந்த வேள்விக்கு வந்த ஏகாதிபதிகள் அனைத்து வகையான செல்வங்களுடனும் வந்தனர்.(34) அப்படி வந்த மன்னர்கள் வைசியர்களைப் போல, பிராமணர்களுக்கு உணவு பரிமாறினார்கள். ஓ மன்னா, யுதிஷ்டிரனிடம் நான் கண்ட செழிப்பை, தேவர்களின் தலைவனிடமோ, யமனிடமோ, வருணனிடமோ,(35) குஹ்யர்களின் தலைவனிடமோ {குபேரனிடமோ} கூட காண முடியாது. பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} பெரும் செழிப்பைக் கண்டு என் இதயம் எரிகிறது. என்னால் அமைதியை அனுபவிக்க முடியவில்லை" என்றான் {துரியோதனன்}.(37)
துரியோதனனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சகுனி, "ஓ வாய்மையை ஆற்றலாகக் கொண்டவனே {துரியோதனா}, நீ கண்ட பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} ஒப்பற்ற செல்வத்தை எப்படி அடையலாம் என்பதைக் கேட்பாயாக.(37) ஓ பாரதா {துரியோதனா}, நான் பகடையில் திறன் பெற்றவன், உலகத்தில் அனைவருக்கும் மேன்மையானவன் {பகடையில்}, என்னால் வெற்றியை உறுதிகூற முடியும். {பாய்ச்சிகையின்} ஒவ்வொரு வீச்சுக்கும் வெற்றியை உறுதியாகச் சொல்ல முடியும். எப்போது என்ன பகடை வீசுவது, எப்போது வீசக்கூடாது என்பது எனக்குத் தெரியும். எனக்கு இந்த {பகடை} விளையாட்டில் சிறந்த ஞானம் உண்டு.(38) குந்தியின் மகனுக்கும் பகடை விளையாட விருப்பம் உண்டு என்றாலும் அவனுக்கு அதில் திறன் கிடையாது. விளையாடவோ அல்லது போரிடவோ அழைத்தால், அவன் நிச்சயம் வருவான்.(39) நான் ஒவ்வொரு வீச்சுக்கும் வஞ்சம் பயின்று அவனை {யுதிஷ்டிரனை} வீழ்த்துவேன். அவன் செல்வங்கள் அனைத்தையும் வெல்வேன், என்று உறுதி கூறுகிறேன். ஓ துரியோதனா! பிறகு நீ அவற்றை அனுபவிக்கலாம்" என்றான் {சகுனி}".(40)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "மன்னன் துரியோதனன், சகுனியால் இப்படி சொல்லப்பட்டதும், சிறிது நேரத்தைக் கூட கடத்தாமல் திருதராஷ்டிரனிடம்,(41) "ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பகடையில் {சொக்கட்டானில்} திறன்பெற்ற இந்தச் சகுனி, பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} செல்வங்களைப் பகடையில் வெல்லத் தயாராக இருக்கிறார். நீர் அவருக்கு அப்படிச் செய்ய அனுமதி வழங்குவீராக" என்றான் {துரியோதனன்}.(42)
திருதராஷ்டிரன், "நான் எப்போதும் பெரும் ஞானம் உள்ள எனது அமைச்சன் க்ஷத்தனின் {விதுரனின்} ஆலோசனைகளையே பின்பற்றுகிறேன். அவனிடம் ஆலோசித்த பிறகு நான் எனது முடிவை உங்களுக்குச் சொல்கிறேன்.(43) பெரும் முன் நோக்கும் திறனைக் {தீர்க்கதரிசனம்} கொண்டவனும், கண்களில் நீதியைக் கொண்டவனுமான அவன், இரு தரப்புக்கும் எது நல்லது, எது சரி என்பதையும், இவ்விஷயத்தில் எது செய்யப்பட வேண்டும் என்பதையும் சொல்வான்" என்றான் {திருதராஷ்டிரன்}.(44)
அதற்கு துரியோதனன், "நீர் க்ஷத்தரிடம் {விதுரரிடம்} ஆலோசனை கேட்டால், அவர் உம்மைத் தடுத்து விடுவார். நீர் இதைச் செய்யாமல் விட்டால், தந்தை திருதராஷ்டிரரே, நான் நிச்சயமாகத் தற்கொலையே செய்வேன்.(45) ஓ மன்னா, நான் இறந்த பிறகு, விதுரர் மகிழ்ச்சியாக இருப்பார். பிறகு நீர் அனைத்து உலகத்தையும் அனுபவிக்கலாம். என்னிடம் உமக்கு என்ன தேவை இருக்கிறது" என்றான் {துரியோதனன்}".(46)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "துரியோதனனால் சொல்லப்பட்ட இந்தத் துயரமிக்க வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், துரியோதனின் உத்தரவை ஏற்று, தனது பணியாட்களை அழைத்து,(47) "கலைஞர்களைக் கொண்டு, ஆயிரம் தூண்களுடன் கூடியதும், நூறு கதவுகளைக் கொண்டதும், இனிமையானதும், அகன்றதுமான ஓர் அழகிய மாளிகையைக் கட்டுங்கள்.(48) தச்சர்களையும் இணைப்பாளர்களையும் {சிற்பிகளையும்} கொண்டு விலையுயர்ந்த கற்களை அதன் சுவர்களில் பதியுங்கள். அதை அழகாக்கி, அங்கே செல்வதற்கு வசதியாக அனைத்துக் காரியங்களையும் முடியுங்கள்" என்றான்.(48)
ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, துரியோதனனைத் தணிக்க ஒரு தீர்மானத்துக்கு வந்த மன்னன் திருதராஷ்டிரன், விதுரனை அழைத்துவர தூதுவர்களை அனுப்பினான்.(51) விதுரனைக் கலந்தாலோசிக்காமல் அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} எந்த முடிவையும் எடுத்ததில்லை. ஆனால், இவ்விஷயத்தைப் பொறுத்தவரை, சூதின் தீமையை அறிந்தும் அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} மகனிடம் கொண்ட அன்பினால் அதில் ஈர்ப்புடன் இருந்தான்.(52) இருப்பினும் புத்திசாலி விதுரன் இது குறித்து அறிந்ததும், கலி காலம் வந்து விட்டது என்று அறிந்து கொண்டான். அழிவின் தொடக்கத்தை உணர்ந்து விரைவாக திருதராஷ்டிரனிடம் வந்தான்.(53) விதுரன் தன் சிறப்புக்குரிய அண்ணனை {திருதராஷ்டிரனை} அணுகி, அவனது பாதம் பணிந்து இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(53)
அவன் {விதுரன்}, "ஓ மேன்மையான மன்னா {அண்ணா திருதராஷ்டிரா}, நீர் எடுத்திருக்கும் தீர்மானத்தை நான் அங்கீகரிக்கவில்லை. ஓ மன்னா, இந்தச் சூதாட்டத்தின் பொருட்டு, உமது பிள்ளைகளுக்குள் சச்சரவு வரும் வகையில் செயல்படாதீர்" என்றான்.(54)
திருதராஷ்டிரன், "ஓ க்ஷத்தா {விதுரா}, தேவர்கள் நம்மிடம் கருணையோடு இருந்தால், கண்டிப்பாக எனது மகன்களுக்குள் சச்சரவு ஏற்படாது.(55) எனவே, மங்கலமானதோ இல்லையோ, நன்மையானதோ இல்லையோ, நட்பு ரீதியான இந்தப் பகடை ஆட்டம் நடக்கட்டும். இது நிச்சயம் விதியால் நமக்கு விதிக்கப்படுகிறது.(56) ஓ பாரதக் குலத்தின் மகனே {விதுரா}, நான், துரோணர், பீஷ்மர் ஆகியோர் அருகில் இருக்கும்போது, விதியால் நிர்ணயிக்கப்பட்டிருந்தால் கூட என்ன தீமை நடந்துவிட முடியும்.(57) எனவே, காற்றின் வேகம் கொண்ட குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் இன்றே காண்டவப்பிரஸ்தம் சென்று, உன்னுடன் யுதிஷ்டிரனை அழைத்து வருவாயாக.(58) ஓ விதுரா, இதுவே எனது தீர்மானம் என்பதை நான் உனக்குச் சொல்கிறேன். எனக்கு வேறு எதையும் சொல்லாதே. நமக்கு அனைத்தையும் தரும் விதியே வலிமையானது என நான் கருதுகிறேன்" என்றான் {திருதராஷ்டிரன்}.(59)
திருதராஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு தனது குலம் அழிந்தது என்று கருதிய விதுரன், பெரும் ஞானம் கொண்ட பீஷ்மரிடம் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(60)
ஆங்கிலத்தில் | In English |