Did Draupadi laugh?| Sabha Parva - Section 49 | Mahabharata In Tamil
(தியூத பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : ஜனமேஜயன்
கேட்டுக்கொண்டதற்கேற்ப வைசம்பாயனர், துரியோதனன் திருதரஷ்டிரனிடம் சோகமாகப் பேசியதை முழுமையாகச் சொல்வது;
பகடையாட்டம் வேண்டாம் என்று திருதராஷ்டிரன் துரியோதனனிடம் சொல்வது; விதுரனின் ஞானம் குறித்து சொல்வது;
துரியோதனன் தனது தரப்பு சோகங்களைச் சொல்வது...
ஜனமேஜயன், "ஓ வேதங்களை அறிந்தவர்களில் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, எனது முப்பாட்டன்களான பாண்டுவின் மகன்களைத் துயரத்தில் ஆழ்த்திய, பங்காளிகளுக்குள் தீமையை விளைவித்த பகடை விளையாட்டு எப்படி நடைபெற்றது?(1) அந்தச் சபையில் எந்தெந்த மன்னர்கள் இருந்தனர். அவர்களில் அந்த விளையாட்டை அங்கீகரித்தவர்கள் யார்? அவர்களில் ஏற்காதவர் யார்?(2) ஓ பாவமற்றவரே {வைசம்பாயனரே}, ஓ மறுபிறப்பாளர்களின் {பிராமணர்களின்} தலைவரே, உலகத்தின் அழிவுக்குக் காரணமாக இருந்த இது குறித்து நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்." என்றான்".(3)
சௌதி சொன்னார், "இப்படி மன்னனால் {ஜனமேஜயனால்} கேட்கப்பட்ட போது, முழு வேதங்களையும் அறிந்தவரும், பெரும் சக்தி கொண்டவருமான வியாசரின் சீடர் {வைசம்பாயனர்}, நடந்தது அத்தனையும் விவரமாகக் கூறினார்.(4)
வைசம்பாயனர் சொன்னார், "ஓ பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, ஓ பெரும் மன்னா {ஜனமேஜயா}, நீ கேட்க விரும்பினால், நான் மறுபடி அனைத்தையும் விரிவாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(5)
விதுரனின் கருத்தை உறுதிப்படுத்திக் கொண்ட அம்பிகைமகன் திருதராஷ்டிரன், துரியோதனனைத் தனிமையில் அழைத்து,(6) "ஓ காந்தாரியின் மகனே, பகடையாட்டம் {த்யூதம்} வேண்டாம். விதுரன் அதுகுறித்து நன்றாகப் பேசவில்லை. பெரும் ஞானம் கொண்ட அவன், எனக்கு நன்மையல்லாத ஓர் ஆலோசனையை எனக்குச் சொல்லமாட்டான்.(7) விதுரன் எனக்கு அதிக நன்மை தரும் காரியத்தையே சொல்வான் என நான் கருதுகிறேன். ஓ மகனே {துரியோதனா}, அஃது உனது நன்மைக்காகவும் தான் என நான் கருதுவதால், அதையே செய்வாயாக.(8) வாசவனுக்கு {இந்திரனுக்கு} ஆன்ம குருவும், சிறப்புமிகுந்தவரும், கல்விமானும், ஞானியுமான பிருஹஸ்பதி, தேவர்கள் தலைவனுக்கு {இந்திரனுக்கு} விளக்கிச் சொன்ன அனைத்து (அரசியல் நீதிகளின்) அறிவியலையும் விதுரன் அறிவான்.(9)
ஓ மகனே {துரியோதனா}, விதுரன் அறிவுறுத்துவதை நான் எப்போதும் ஏற்றுக் கொள்வேன். ஓ மன்னா {துரியோதனா}, விருஷ்ணி குலத்தோரின் {யாதவ குலத்தோரின்} மதிப்பிற்குரிய ஞானமுள்ள உத்தவரைப் போல, பெரும் புத்திசாலியான விதுரன், குரு குலத்தில் முதன்மையானவன் என்று கருதப்படுகிறான். ஆகையோல், ஓ மகனே {துரியோதனா}, பகடையாட்டம் வேண்டாம். பகடை வேற்றுமையை உண்டாக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.(10,11) வேற்றுமைகளே ஒரு நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தும். எனவே, ஓ மகனே {துரியோதனா} சூதாடும் உனது திட்டத்தைக் கைவிடுவாயாக. ஓ மகனே {துரியோதனா}, நீ தந்தையும் தாயுமான எங்களிடம் பெற விதிக்கப்பட்ட மூதாதையர்களின் தரம் மற்றும் உடைமைகளை அடைந்தாய். நீ கல்வியறிவு பெற்றவன், அனைத்து பிரிவு ஞானத்திலும் புத்திசாலியாக இருக்கிறாய். நீ உனது பெற்றோரின் வசிப்பிடத்தில் அன்புடனும் பாசத்துடனும் வளர்க்கப்பட்டிருக்கிறாய்.(12,13)
தம்பிகளுக்கெல்லாம் மூத்தவனாகப் பிறந்து, உனது சொந்த நாட்டுக்குள்ளேயே வாழ்ந்தும் நீ ஏன் உன்னை மகிழ்ச்சியற்றவனாக கருதிக் கொள்கிறாய்? ஓ பலம்வாய்ந்த கரம் கொண்டவனே, சாதாரண மக்களால் பெற முடியாத உள்ளதில் மிகச் சிறந்த உணவையும் ஆடைகளையும் பெறுகிறாய்.(14) நீ ஏன் இவ்வளவு வருத்தப்படுகிறாய்? ஓ மகனே {துரியோதனா}, ஓ பெரும் பலம் வாய்ந்த கரம் கொண்டவனே, மக்களாலும் செல்வங்களாலும் நிறைந்த உனது மூதாதையர் நாட்டை ஆண்டு, விண்ணுலகில் இருக்கும் தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போல நீ இருக்கிறாய். நீ ஞானம் கொண்டவனாக இருக்கிறாய். உன்னை மனச்சோர்வுக்குள்ளாக்கியிருக்கும் உனது துன்பத்துக்கான வேர் என்னவாக இருக்கும் என்பதை நீ எனக்குச் சொல்ல வேண்டும்", என்றான் {திருதராஷ்டிரன்}.(15,16)
துரியோதனன், "ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்தையும் (எதிரிகளின் செல்வச் செழிப்பைக்) கண்டும், உண்டும், உடுத்தியும் வரும் நான் பாவம் நிறைந்த இழிந்தவனாவேன். பகைவனின் செழிப்பைக் கண்டும் பொறாமை அடையாதவனை இழிந்தவன் என்றே சொல்கிறார்கள்.(17) ஓ மேன்மையானவரே, இது போன்ற செல்வச்செழிப்பு எனக்குத் நிறைவைத் தரவில்லை. குந்தி மகனின் {யுதிஷ்டிரனின்} பிரகாசமிக்க செழிப்பைக் கண்டு நான் பெருந்துன்பத்தில் இருக்கிறேன்.(18) பூமி முழுமையும் யுதிஷ்டிரனின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதைக் கண்டும், உயிரோடு இருக்கும் எனது ஆன்மா வலிமையானதுதான்.(19) நீபர்கள், சித்ரகர்கள், குகுரர்கள், காரஸ்கரர்கள், லோகஜங்கர்கள் ஆகியோர் {ஆகிய அரசர்கள்} யுதிஷ்திரனின் அரண்மனையில் அடிமைகளைப் போல இருக்கின்றனர்.(20)
இமயம், கடல், கடற்கரைப் பகுதிகள், ரத்தினங்களையும் தங்கத்தையும் தரும் கணக்கற்ற இடங்கள், ஆகியவற்றின் அதிபதிகளும் யுதிஷ்டிரனின் செழிப்பை அங்கீகரித்துள்ளனர்.(21) ஓ ஏகாதிபதி, மூத்தவனாகவும், சிறந்தவனாகக் கருதி மதிப்புடன் வரவேற்கப்பட்டு, (காணிக்கையாக வரும்) ரத்தினங்களையும் நகைகளையும் ஏற்கும் பணியில் நான் நியமிக்கப்பட்டேன்.(22) ஓ பாரதரே, அங்கே இருந்த கூட்டம் கொண்டு வந்திருந்த மதிப்புமிக்க நகைகளின் பெரும் அளவை யாரும் கண்டதில்லை.(23) ஓ மன்னா, அந்தச் செல்வங்களைப் பெற்று பெற்றே எனது கரங்கள் சோர்ந்தன. நான் களைப்புற்ற போது, அந்த மதிப்புமிக்க பொருட்களைக் கொண்டு வந்தவர்கள் நான் இயல்புநிலை அடையும் வரை காத்திருந்தனர்.(24)
பிந்து {பிந்துசரஸ்) ஆற்றில் இருந்து ரத்தினங்கள் மற்றும் தங்கங்களைக் கொண்டுவந்து, ஏரி போன்ற தரையை கொண்ட மாளிகையை அசுரத்தச்சன் மயன் (பாண்டவர்களுக்காக) பளிங்காலேயே கட்டிக் கொடுத்திருக்கிறான். அங்கு நிறைந்திருந்த (செயற்கை) தாமரைகளைக் கண்டு, ஓ மன்னா, அங்கு நீர் இருக்கிறது என்று தவறுதலாக நினைத்தேன்.(25) (அதைக் கடக்கும் போது) நான் எனது ஆடைகளைத் தூக்கியதைக் கண்ட விருகோதரன் (பீமன்), எதிரியின் செழிப்பைக் கண்டு மயங்கினேன் என்றும், எனக்கு அது போன்ற ரத்தினங்கள் கிடையாது என்றும் கருதி என்னைப் பார்த்து நகைத்தான்.(26) என்னால் முடிந்திருந்தால், ஓ மன்னா, அதன் காரணமாக அங்கேயை விருகோதரனை {பீமனைக்} கொன்றிருப்பேன். ஆனால், ஓ ஏகாதிபதி, ஆனால் நாம் பீமனைக் கொல்ல முயன்றால், நமது நிலையும் சிசுபாலனைப் போலத் தான் ஆகியிருக்கும் என்பதில் ஐயமில்லை.(27,28)
ஓ பாரதரே, பகைவனால் ஏற்பட்ட அந்த அவமானம் என்னை எரிக்கிறது. மீண்டும் ஒருமுறை, ஓ மன்னா, அதேபோன்ற ஒரு குளம், ஆனால் உண்மையில் அங்கு நீர் நிறைந்திருக்கிறது. நான் அதை பளிங்குத் தரை என்று தவறுதலாக நினைத்து அந்த நீருக்குள் விழுந்தேன்.(29) இதைக் கண்ட பீமனும், அர்ஜுனனும் கேலியாகச் சிரித்தனர். மற்ற மங்கையருடன் வந்த திரௌபதியும் அவர்களது சிரிப்பில் பங்கு கொண்டாள்.(30) அஃது என் இதயத்தை பெரும் துன்பத்துக்கு உள்ளாக்கியது. எனது ஆடைகள் நனைந்தன, மன்னனின் {யுதிஷ்டிரனின்} உத்தரவின் பேரில் பணியாட்கள் வேறு ஆடைகள் கொடுத்தனர். அதுவும் எனக்குப் பெரும் துயரத்தைக் கொடுத்தது.(31)
ஓ மன்னா, இன்னொரு தவறைக் குறித்தும் சொல்கிறேன் கேளும். சரியாகக் கதவு போலவே இருந்த ஒன்றின் ஊடாக நான் கடந்து செல்ல நினைத்தபோது, அங்கு பாதை இல்லை,(32) நான் சுவற்றில் எனது நெற்றியால் முட்டிக் கொண்டு காயமடைந்தேன். எனக்கு தலையில் அடிபட்டத்தைத் தூரத்திலிருந்தே கண்ட இரட்டையர்களான நகுலனும் சகாதேவனும் ஓடிவந்து அவர்கள் கரத்தால் தாங்கிப் பிடித்து அவர்களுக்கு என்னிடம் உள்ள அக்கறையைக் வெளிப்படுத்தினர்.(33)
சகாதேவன் மீண்டும் மீண்டும் புன்னகைத்தது போல, ஓ மன்னா, இது தான் கதவு, இந்த வழியாகச் செல்வீராக" என்றான்.[1](35) ஓ மன்னா, நான் அந்த மாளிகையில் கண்ட பல ரத்தினங்களின் பெயர்களைக் கூட கேள்விப்பட்டது இல்லை. இதன் காரணமாகவே எனது இதயம் வலிக்கிறது" என்றான் {துரியோதனன்}.(36)
[1] கும்பகோணம் பதிப்பில், "அங்கே அவ்வாறு அடிபட்ட என்னை, சேர்ந்திருந்த நகுலஸஹதேவர்களிருவரும் தூரத்திலிருந்து பார்த்து வ்யஸனப்பட்டுக் கைகளால் அணைத்தனர். அந்த ஸமயத்தில் ஸஹதேவன், என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு, "திருதராஷ்டிரபுத்திரனே, வாயில் இங்கேயிருக்கிறது; அங்கே போகாதே" என்று அடிக்கடி சொன்னான். அந்த ஸமயத்தில் பீமஸேனனும், "திருதராஷ்டிர புத்திரனே" என்றழைத்து, சிரித்து, "ராஜாவே, வாயில் இங்கே" என்று சொன்னான். அந்த ஸபையில் நான் கண்ட ரத்னங்களுக்குப் பெயர்களைக் கூட இதற்கு முன் நான் கேட்டதில்லை. அதுவும் என் மனத்தைச் சுடுகிறது" என்றிருக்கிறது.
ஆங்கிலத்தில் | In English |