The tributes list as mentioned by Duryodhana | Sabha Parva - Section 50 | Mahabharata In Tamil
(தியூத பர்வம் - 06)
பதிவின் சுருக்கம் : ராஜசூய வேள்விக்காக யுதிஷ்டிரனுக்கு காணிக்கையாக வந்த விலை உயர்ந்த பொருட்களைக் குறித்து துரியோதனன் விரிவாக திருதராஷ்டிரனுக்கு உரைத்தது...
துரியோதனன் சொன்னான், "ஓ பாரதரே, பூமியின் மன்னர்கள் அடுத்தடுத்து பாண்டு மகன்களுக்காகக் கொண்டு வந்தவையும், பாண்டவர்களால் சொந்தமாக்கிக் கொள்ளப்பட்டவையும், நான் கண்டவையுமான விலை உயர்ந்த பொருட்களைக் குறித்துச் சொல்கிறேன் கேட்பீராக.(1) எதிரியின் செல்வத்தைக் கண்டு நான் நினைவிழந்து என்னையே மறந்திருந்தேன். ஓ பாரதரே, பலர் கொண்டு வந்த பூமியின் விளைச்சல் மற்றும் பூமியின் உற்பத்தியில் இருந்து கிடைக்கும் செல்வங்களை நான் சொல்கிறேன் கேட்பீராக. காம்போஜ நாட்டு மன்னன் எண்ணற்ற தோல்களையும், கம்பளியினால் ஆன போர்வைகளையும், எலிகள் மற்றும் வளைகளில் வசிக்கும் விலங்குகளின் மயிர், பூனை மயிர் ஆகியவற்றால் செய்யப்பட்டவையும், தங்க இழைகளால் பிண்ணப்பட்டவையுமான போர்வைகளையும் அந்தச் சிறந்த மன்னனுக்குக் {யுதிஷ்டிரனுக்குக்} கொடுத்தான்.(2,3) கிளி மூக்குகளைப் போன்ற மூக்குகளைக் கொண்ட கல்மாஷம் மற்றும் தித்தேத்தி வகை குதிரைகளில் முன்னூறும் {காம்போஜ மன்னன்} கொடுத்தான். ஒலிவம் மற்றும் பிலுஷங்களால் கொழுத்து வளர்க்கப்பட்ட நூறு ஒட்டகங்களையும், அதே எண்ணிக்கையிலான பெண் கழுதைகளையும் அவன் கொடுத்தான்[1].(4)
[1] கும்பகோணம் பதிப்பில், "குருவிகள் போலச் சித்ர நிறமுள்ளவையும், கிளிமூக்குப் போலச் சிவந்த மூக்குள்ளவையுமான முந்நூறு குதிரைகளையும், சிலேஷ்மாதகம், வன்னி, புன்கு இவற்றின் காய்களினால் வளர்க்கப்பட்ட ஒட்டகங்களையும், பெண் குதிரைகளையும் திரிகர்த்த தேசத்தார் கொடுத்தனர்" என்றிருக்கிறது.
கால்நடை வளர்க்கும் கணக்கற்ற பிராமணர்கள், நீதிமானான யுதிஷ்டிரனைத் நிறைவடையச் செய்யும் வகையில், முப்பது கோடி காணிக்கைகளுடன் காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு அரண்மனைக்குள் அனுமதி கிடைக்கவில்லை. யுதிஷ்டிரன் கொடுத்த நிலத்தில் வாழ்ந்து, ஆடு மாடுகளைச் செல்வமாகக் கொண்ட நூற்றுக்கணக்கான பிராமணர்கள், அங்கே தெளிந்த நெய் நிரம்பிய தங்கள் தங்கக் கமண்டலங்களுடன் வந்தனர். அவர்கள் அப்படிப்பட்ட காணிக்கைகளைக் கொண்டு வந்த போதும், அவர்களுக்கு {பிராமணர்களுக்கு} அரண்மனைக்குள் அனுமதி கிடைக்கவில்லை.(5-8) கடற்கரையில் வசித்த சூத்திர மன்னர்கள், ஓ மன்னா, நற்குணத்தையும், கொடியிடையும், அடர்த்தியான கூந்தலையும் கொண்டவர்களும், தங்க ஆபரணங்களையும் பூண்டவர்களுமான நூறு ஆயிரம் பணிப்பெண்களைக் காருபசிக {பாருகச்ச} நாட்டில் இருந்து தங்களுடன் கொண்டு வந்தனர்; மேலும், பிராமணர்களுக்குத் தகுந்த ரங்கு மானின் பல வகைப்பட்ட தோல்களையும் மன்னன் யுதிஷ்டிரனுக்குக் காணிக்கையாக அவர்கள் கொண்டு வந்தனர்.(9,10) வானத்தின் மழையால் விளையும் பயிர்களை உண்டு வாழும் பைரவர் {த்ருமர்}, பராதர், துங்கர் {காச்யர்}, கிதாவகர் ஆகிய இனங்களைச் சார்ந்தவர்களும், கடற்கரையில் வசிப்பவர்களும், கானகங்கள் மற்றும் கடலின் அடுத்த கரையில் வசித்தவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு, தாங்கள் கொண்டு வந்த ஆடு மாடு, கழுதை, ஒட்டகம், காய்கறி, தேன், போர்வைகள், நகைகள், பல வகைப்பட்ட ரத்தினங்களுடன் வாயிலிலேயே அவர்கள் காத்திருந்தனர்.(11-14)
பெரும் போர்வீரனும், பிராக்ஜோதிஷ நாட்டின் ஆட்சியாளனுமான பகதத்தன், மிலேச்ச நிலங்களின் பெரும் ஆட்சியாளர்கள், யவனர்களின் தலைவர்க்ள என எண்ணற்றவர்கள், தாங்கள் கொண்டு வந்த காணிக்கைகளான காற்றின் வேகம் கொண்ட சிறந்த வகை குதிரைகளுடன், உள்ளே நுழைய முடியாமல் வாயிலிலேயே காத்திருந்தனர்.(15) (இதைக் கண்ட) மன்னன் பகதத்தன், தான் கொண்டு வந்திருந்தவையும், தந்தங்களால் ஆன கைப்பிடி கொண்டவையும், ரத்தினங்களாலும் வைரங்களாலும் அலங்கரிக்கப்பட்டவையுமான எண்ணற்ற வாள்களோடு அந்த வாயிலில் இருந்து விலக வேண்டியிருந்தது.(16) பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல இன மக்கள் அங்கே வந்தனர், அவர்களில் சிலருக்கு இரண்டு கண்களும், சிலருக்கு மூன்று கண்களும், சிலருக்கு நெற்றியில் கண்ணும் இருந்தன. அவர்களில் அவுஷ்மிகர்கள், நிஷாதர்கள், ரோமகர்கள் என்ற இனத்தாரும், ஒற்றைக் கால் கொண்ட சில நரமாமிச உண்ணிகள் ஆகியோரும் அங்கே வந்தனர்[2].(17) ஓ மன்னா, அவர்களும் அனுமதி மறுக்கப்பட்டு வாயிலுக்கு வெளியே நின்றனர்.
[2] கும்பகோணம் பதிப்பில், "த்வியக்ஷர் {இரண்டு கண்ணுடையவர்}, த்ரியக்ஷர் {மூன்று கண்களையுடையவர்}, தல்லாடாக்ஷர் {நெற்றியில் கண் கொண்டவர்}, ஔஷ்ணீஷர் {தலைப்பாகைக்காரர்}, அஹயர் {குதிரையில்லாதவர்}, பாஹுகர் {கை நீண்டவர்கள்}, புருஷாதகர் {மனிதனைத் தின்பவர்}, ஏகபாதர் {ஒற்றைக்காலர்} என்னும் ஜாதியார் அங்கே பொன் வெள்ளி முதலிய தனங்களை யுதிஷ்டிரனுக்குக் காணிக்கையாகக் கொடுக்க வந்து வாயிலில் தடுக்கப்பட்டிருந்ததைக் கண்டேன்" என்றிருக்கிறது.
இந்த வித்தியாசமான ஆட்சியாளர்கள் தங்களுடன் வித்தியாசமான நிறங்களிலும், கருப்பு கழுத்து கொண்டவையும், பெரும் உடல் கொண்டவையும், காற்றின் வேகம் கொண்டவையும், மிகவும் சாந்தமானவையாகவும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிற வகையில் உள்ள பத்தாயிரம் கழுதைகளைக் கொண்டு வந்திருந்தனர். அந்தக் கழுதைகள் பெரும் வடிவத்துடனும், காண்பதற்கினிய வண்ணங்களுடனும் இருந்தன.(18,19) அவை அனைத்தும் வங்குவின் கரையில் பிறந்தனவாகும். அங்கே வந்திருந்த பல மன்னர்கள் யுதிஷ்டிரனுக்கு தங்கமும் வெள்ளியும் பெரும் அளவில் கொடுத்தனர்.(20) பெரும் செல்வம் கொடுத்த அவர்களுக்கு யுதிஷ்டிரனின் அரண்மனைக்குள் நுழையும் அனுமதி கிடைத்தது. ஒரு கால் மட்டுமே உள்ள மக்கள் யுதிஷ்டிரனுக்கு இறந்த பூச்சிகளில் இருந்து எடுக்கப்பட்டும் சிவந்த நிறம் கொண்ட காட்டுக் குதிரைகளையும், சில வெள்ளை மற்றும் வானவில் நிறம் மேக நிறம் கொண்டவையும், கலந்த நிறங்கள் கொண்டவையுமாக பல வகை குதிரைகளைக் கொடுத்தனர். அவை அனைத்தும் மனோ வேகம் கொண்ட குதிரைகளாக இருந்தன. அவர்கள் அனைவரும் மேன்மையான தரம் கொண்ட தங்கத்தை போதுமென்ற அளவுக்கு அந்த மன்னனுக்குக் {யுதிஷ்டிரனுக்குக்} கொடுத்தனர். எண்ணிலடங்கா சின்களும் {சீனர்களில் ஒரு இனம்}, க்ஷகர்களும், உத்திரர்களும்,கானகத்தில் வாழும் பல காட்டுமிராண்டி இனங்களும்,(21-23) பல விருஷ்ணிகளும், ஹரஹூணர்களும், இமயத்தில் உள்ள மங்கலான நிறம் கொண்ட இனங்களும், நீபர்களும், கடற்கரை வாசிகளும், வாயிலில் அனுமதி கிடைக்காமல் காத்திருந்தனர்.(24)
பாஹ்லீக மக்கள், நல்ல வடிவம் கொண்டவையும், கருப்பு கழுத்து கொண்டவையும், தினமும் இருநூறு மைலகள் ஓடக்கூடியவையும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவையும், நன்கு பழக்கப்பட்டவையும், உலகத்தால் கொண்டாடப்படுபவையுமான பத்தாயிரம் கழுதைகளையும் கொடுத்தனர். தகுந்த லட்சணங்கள் கொண்டு, அற்புதமான நிறங்களில் இருந்த அவற்றின் தோல் தொடுவதற்கு இனிமையாக இருந்தது. மேலும் பாஹ்லீகர்கள் கணக்கிலடங்காவையும், சீனத்தில் தயாரானவையுமான கம்பளிகளையும், ரங்கு வகை மான்களின் தோல்களையும், சணல் ஆடைகளையும், பூச்சிகளில் உற்பத்தியாகும் இழைகளைக் கொண்டு பிண்ணப்பட்ட ஆடைகளையும் கொண்டு வந்தனர். மேலும் தாமரை நிறம் கொண்ட ஆயிரக்கணக்கான பருத்தி ஆடைகளையும் கொண்டு வந்தனர். அவை அனைத்தும் மென்மையான அமைப்புடன் இருந்தன. மேலும் அவர்கள், ஆயிரக்கணக்கான ஆட்டுத் தோல்களையும், மேற்கு நாடுகளில் தயாராகும் கூர்மையான நீண்ட வாட்களையும், வளைந்த பட்டா கத்திகளையும், கைக்கோடரிகளையும், கூர்முனை கொண்ட போர்க் கோடரிகளையும் கொடுத்தனர். பல நறுமணப் பொருட்களையும், நகைகளுயும், பல்வேறு ரத்தினங்களையும் ஆயிரக்கணக்கில் கொண்டு வந்தும், அரண்மனைக்குள் நுழைய மறுக்கப்பட்டு வாயிலிலேயே காத்திருந்தனர்.(25-29)
சகர்கள், துஹுதர்கள், கங்கர்கள், ரோமகர்கள், தலையில் கொம்பு முளைத்த மனிதர்கள் ஆகியோர் கணக்கிலடங்கா யானைகளுடனும், பத்தாயிரம் குதிரைகளுடனும், நூறாயிரம் கோடி தங்கத்துடனும் அரண்மனைக்குள் நுழைய மறுக்கப்பட்டு வாயிலிலேயே காத்திருந்தனர்.(30,31) பல மதிப்புமிக்க பொருட்களையும், விலையுயர்ந்த தரைவிரிப்புகளையும், வாகனங்களையும், படுக்கைகளையும், தங்கத்தாலும் தந்தத்தாலும் அலங்கரிக்கப்பட்ட பல நிறங்களில் உள்ள கவசங்களையும், பல்வேறு ஆயுதங்களையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வகைப்பட்ட வடிவங்களில் உள்ள தேர்களையும், புலித்தோல் போர்த்தப்பட்ட நன்கு பழக்கப்பட்ட குதிரைகளையும், யானைகளைப் போர்த்தும் போர்வைகளையும், பல்வேறு நகைகள், ரத்தினங்கள், நீண்ட மற்றும் குறுகிய கணைகள் {அம்புகள்}, மேலும் பல வகைப்பட்ட ஆயுதங்களுடனும் வந்திருந்த கிழக்கு நாடுகளின் மன்னர்கள், வேள்வி நடத்தப்படும் சிறப்புமிகுந்த பாண்டவர்களின் அரண்மனைக்குள் நுழையும் அனுமதியைப் பெற்றனர்" {என்றான் துரியோதனன்}.(32-35)
ஆங்கிலத்தில் | In English |