What present did Cholas and Pandyas made? | Sabha Parva - Section 51 | Mahabharata In Tamil
(தியூத பர்வம் - 07)
பதிவின் சுருக்கம் : ராஜசூய வேள்விக்காக
யுதிஷ்டிரனுக்கு காணிக்கையாக வந்த விலை உயர்ந்த பொருட்களைக் குறித்து துரியோதனன் விரிவாக திருதராஷ்டிரனுக்கு
உரைத்தது...
துரியோதனன் சொன்னான், "ஓ பாவமற்றவரே, யுதிஷ்டிரனுக்கு பூமியின் மன்னர்கள் கொடுத்த பல்வேறு காணிக்கைகளான பெரும் செல்வத்தை நான் சொல்கிறேன் கேட்பீராக.(1) மேருவுக்கும், மந்தர மலைக்கும் நடுவில் பாயும் சைலோதை ஆற்றுக்கு அருகில் கீசகம் என்ற மூங்கில்களின் நிழலில் வசிக்கும்(2) கஷர்கள், ஏகாஸனாத்யர்கள், அர்ஹர்கள், பிரதரர்கள், தீர்க்கவேணுக்கள், பாரடாக்கள், குலிந்தர்கள், தங்கணர்கள் {பரதங்கணர்கள்} ஆகியோர்(3) எறும்புப்புற்றிலிருந்து வெளிக்கொணரப்படும் {பிபீலிகம் என்ற பெயரில் அழைக்கப்படும்} சிறந்த தங்கத்தைக் காணிக்கையாகக் குவியல் குவியல்களாகக் கொண்டு வந்தனர். அவை துரோணங்களில் (பாத்திரங்களில்) அளக்கப்பட்டன.(4)
பெரும் பலம் வாய்ந்த மலைவாழ் பழங்குடிகள் எண்ணிலடங்கா மென்மையான சாமரங்களைக் (நீண்ட தூரிகைகள்) கொண்டு வந்தனர். அவை கருப்பாகவும், சில சந்திரபிம்பத்தைப் போன்று வெள்ளையாகவும் இருந்தன. மேலும் அவர்கள் இமயத்தில் விளையும் பூக்களிலிலும், மிசேலிய சம்பகம் என்ற பூக்களிலும் {சண்பக மலர்களிலும்} எடுக்கப்பட்ட இனிமையான தேனையும், வடகுருக்கள் பகுதியிலிருந்து மலர் மாலைகளையும், இன்னும் வடக்கே கைலாசத்தில் இருந்து வித்தியாசமான செடிவகைகளையும் கொண்டு வந்து உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், மன்னன் யுதிஷ்டிரனின் மாளிகை வாசலில் தலையைக் கவிழ்ந்தவாறு காத்திருந்தனர்.(5-7)
இமய மலைக்குப் பின்புறத்திலும், சூரியன் உதயமாகிற மலைச்சாரலிலும், கடற்கரையிலும், லௌஹித்ய மலைகளின் இருபுறத்தில் இருந்தும் வந்திருந்தவர்களும், கொடும் ஆயுதங்களைத் தாங்கியவர்களும், கொடுஞ்செயல்களைச் செய்பவர்களும், கனிகளும் கிழங்குகளும் உண்பவர்களும், தோலாடை உடுத்துபவர்களுமான எண்ணிலடங்காத கிராதர்களின் தலைவர்களையும் நான் அங்கு கண்டேன்.(8,9)
ஓ மன்னா, பெரும் அளவிலான {உயர்ரக} சந்தனத்தையும், பல வகை கற்றாழைகளுடன், கருப்பு கற்றாழையும், {அகில்களையும்} குவியல் குவியலாக மதிப்பு மிக்க தோல்களும், தங்கங்களும், நறுமணப்பொருட்களும், தங்கள் குலத்தைச் சார்ந்த பத்தாயிரம் பணிப்பெண்களையும், பல தொலைதூர நாடுகளில் உள்ள பல அழகான விலங்குகள் மற்றும் பறவைகளையும், மலைகளில் இருந்து கொணரப்பட்ட பெரும் பிரகாசமுள்ள தங்கத்தையும் கொண்டு வந்த அந்த கிராதர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வாயிலிலேயே காத்திருந்தனர்.(10-12)
ஆயுதங்களில் நல்ல பயிற்சியுடையவர்களும், நற்குடியில் பிறந்த க்ஷத்திரியர்களுமான கைராதர்கள் {காபவ்யர்கள்}, தரதர்கள், தர்வர்கள், சூரர்கள், வையமகர்கள், ஔதும்பரர்கள், துர்விபாகர்கள், குமாரர்கள், பாரடர்களுடன் கூடிய பாஹ்லீகர்கள்,(13) காச்மீரர்கள், கௌரகர்கள், ஹம்சகயணர்கள், சிபிக்கள், திரிகர்த்தர்கள், யௌதேயர்கள், மத்ர நாட்டு ஆட்சியாளர்கள், கைகேயர்கள்,(14) அம்பஷ்டர்கள், கௌகுரர்கள் {கௌரகர்கள்}, தார்க்ஷியர்கள், வஸ்திரபர்கள், பஹ்லவர்கள், வஸாதயர்கள் {வஸுதேயர்கள்}, மௌலேயர்கள் க்ஷுத்ரகர்கள், மாலவர்கள்,(15) பௌண்ட்ரயர்கள் {ஸௌண்டிகர்கள்}, குக்குரர்கள், சகர்கள், அங்கர்கள், வங்கர்கள், புண்ட்ரர்கள், சஸானவத்யர்கள், கயர்கள் ஆகியோர் மன்னன் யுதிஷ்டிரனுக்கு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான காணிக்கைகளைக் கொண்டு வந்தனர்.(16,17)
வங்கர்கள், கலிங்கர்கள், மகதர்கள், தாம்ரலிப்தர்கள், புண்ட்ரகர்கள், தௌவாலிகர்கள் {துகூலர்கள்}, சகரகர்கள், பத்ரோர்டர்கள், சைசவர்கள்,(18) எண்ணிலடங்கா கர்ணபிராவரானர்கள் ஆகியோர் வாயில் முன் திரண்டனர். மன்னனின் {யுதிஷ்டிரனின்} உத்தரவின் பேரில், அவர்களிடம், ’காக்க முடிந்தவர்களும், நல்ல காணிக்கை கொண்டு வருபவர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவர்’ என்று வாயில் காப்போர் கூறினர்.(19) பிறகு அந்த நாடுகளின் மன்னர்கள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், உயர்ந்த விரிப்புகளால் போர்த்தப்பட்டவையும், ஏர் போன்ற தந்தங்களை உடையவையுமான யானைகளைக் ஆளுக்கு ஆயிரம் என கொடுத்தனர். அவை தாமரையின் வண்ணத்தில் இருந்தன. பாறைகள் போன்று கருமையாகவும், எப்போதும் மந்தமாகவும் இருக்கும் அவை, காம்யக தடாகத்தின் அருகிலிருந்து பெறப்பட்டு கவசங்கள் பூட்டப்பட்டவை ஆகும். அந்த யானைகள் அதிக பொறுமை உடையனவாகவும், உயர்ந்த வகையைச் சேர்ந்தவையாகவும் இருந்தன. இந்தக் காணிக்கைகளைக் கொடுத்த பிறகு, அந்த மன்னர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டனர்.(20,21) ஓ மன்னா, இவர்களும், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த இன்னும் பலரும், இன்னும் எண்ணிலடங்கா சிறப்பு மிகுந்த மன்னர்களும், வேள்விக்காக நகைகளையும், ரத்தினங்களையும் கொண்டு வந்தனர்.(22]
இந்திரனின் நண்பனும் கந்தர்வர்களின் மன்னனுமான சித்திரரதன்[1] காற்றின் வேகம் கொண்ட நானூறு குதிரைகளைக் காணிக்கையாகக் கொடுத்தான்.(23) தும்புரு என்ற கந்தர்வன், மாவிலையின் நிறம் கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான நூறு குதிரைகளை மகிழ்ச்சியாக கொடுத்தான்.(24) ஓ குரு குலத்தவரே, மிலேச்ச பழங்குடிகளால் கொண்டாடப்படும் மன்னன் சூகரன், பல நூற்றுக் கணக்கான அற்புதமான யானைகளைக் கொடுத்தான்.(25) மத்ஸ்ய நாட்டு மன்னன் விராடன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இரண்டாயிரம் யானைகளைக் காணிக்கையாகக் கொடுத்தான்.(26) பாம்சு நாட்டைச் சேர்ந்த மன்னன் வஸுதானன், பாண்டுவின் மகனுக்கு இருபத்தாறு யானைகளையும், இருநூறு குதிரைகளையும் காணிக்கையாகக் கொடுத்தான்.(27) அவை அனைத்தும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, இளமையுடன் பெரும் வேகம் செல்லக்கூடியதாகவும் இருந்தது. அவன் இவற்றையும் இன்னும் பல செல்வங்களையும் கொடுத்தான்.(28)
[1] சித்திரரதன் என்பவன் அர்ஜுனனுடன் போரிட்ட கந்தர்வனாவான் - மேலும் விபரங்களுக்கு : அங்காரபர்ணனும் {சித்திரரதனும்} அர்ஜுனனும் - ஆதிபர்வம் பகுதி 172 காண்க
யக்ஞசேனன் {துருபதன்}, அந்த வேள்வியில் பாண்டுவின் மகன்களுக்கு, பதினாலாயிரம் பணிப்பெண்களையும், அவரவர் மனைவிகளுடன் பத்தாயிரம் ஆண் பணியாட்களையும், பல நூறு அற்புதமான யானைகளையும், யானைகளால் இழுக்கப்பட்ட இருபத்தாறு தேர்களையும், மேலும் தனது முழு நாட்டையும் கொடுத்தான். பிறகு விருஷ்ணி குலத்தின் வாசுதேவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனின் பெருமையை உயர்த்த, பதினாலாயிரம் அற்புதமான யானைகளைக் கொடுத்தான். உண்மையில், கிருஷ்ணனின் ஆன்மாவாகவே அர்ஜுனன் இருக்கிறான். அர்ஜுனனின் ஆன்மாவாகவே கிருஷ்ணனும் இருக்கிறான். அர்ஜுனன் சொல்லும் எதையும் கிருஷ்ணன் சாதிப்பான். கிருஷ்ணன், அர்ஜுனனுக்காக சொர்க்கத்தையே கூட புறக்கணிக்கும் தகுதி படைத்தவனாவான்.(29-32) அர்ஜுனனும், கிருஷ்ணனுக்காகத் தனது உயிரையே கொடுப்பான்.
தங்கப்பாத்திரங்களில் நிரப்பப்பட்டதும், மலைய மலைகளில் மட்டுமே விளைக்கூடியதுமான சந்தனச் சாற்றையும், பெரும் அளவிலான சந்தனக் கட்டைகளையும், தர்ததுரா மலைகளிலிருந்து அகிற்கட்டைகளையும், அதிக பிரகாசமுடைய ரத்தினங்களையும், தங்கத்தால் பிண்ணபட்ட அற்புதமான ஆடைகளையும் கொண்டு வந்தும் கூட, சோழ மற்றும் பாண்டிய மன்னர்களுக்கு உள்ளே நுழைய அனுமதி கிடைக்கவில்லை[2]. கடலில் விளையும் சிறந்த ரத்தினங்களையும், கூடவே குவியல் குவியலாக முத்துகளையும், (33-35) யானைகளுக்கான நூற்றுக்கணக்கான விரிப்புகளையும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடைகள் உடுத்தியவர்களும், கண்களின் ஓரம் தாமிரம் போலச் சிவந்தவர்களுமான எண்ணிலடங்கா கருநிற மனிதர்களையும் {சிங்களர்களையும்}(36) கொண்டு வந்தும் அந்தக் காணிக்கைகளுடன் சிம்ஹள {சிங்கள} மன்னன் வாயிலில் காத்திருந்தான்.
[2] பாண்டிய, சோழ, சேர அரசர்கள் என்ன கொடுத்தனர் எனக் கும்பகோணம் பதிப்பின் ஓரிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது பின்வருமாறு, "பாண்டியராஜன் தர்ததுர மலையிலுண்டான தொண்ணாற்றாறு பாரம் நிறையுள்ள முதல் தரமான சந்தனக் கட்டளைகளையும், தொண்ணூற்றாறு சங்கங்களையும் தர்மராஜாவுக்கு விரைந்து கொடுத்தான். சோள{ழ}ராஜன், கேரளராஜன் இருவரும் கணக்கில்லாத சந்தனங்களையும், அகில்களையும், பலவகையான முத்துக்களையும், வைடூரியங்களையும் பாண்டுபுத்ரனுக்குக் கொடுத்தனர்" என்றிருக்கிறது.
எண்ணிலடங்கா பிராமணர்களும், வீழ்த்தப்பட்ட க்ஷத்திரியர்களும், வைசியர்களும், தொண்டுபுரியும் சூத்திரர்களும், யுதிஷ்டிரன் மீதிருந்த அன்பால் அந்தப் பாண்டுவின் மகனுக்காகக் காணிக்கைகளைக் கொண்டு வந்தனர். பல்வேறு நிலங்களில் இருந்து வந்திருந்தவர்களும் சிறந்த, மத்திம, தாழ்ந்த என அனைத்துத் தரப்பு மக்களும்,(37,38) யுதிஷ்டிரனின் வசிப்பிடத்தையே மற்றொரு உலகமாக மாற்றினர். பூமியின் மன்னர்கள் இப்படி அற்புதமான மற்றும் மதிப்புமிக்க காணிக்கைகளைக் கொடுப்பதைக் கண்ட நான் துக்கத்தால் மரணத்தை விரும்பினேன்.
ஓ மன்னா, நான் இனி யுதிஷ்டிரன் எவருக்குச் சமைத்த மற்றும் சமைக்காத உணவு கொடுப்பானோ அந்தப் பாண்டவப் பணியாட்களைப் பற்றிச் சொல்கிறேன் கேட்பீராக. அங்கே நூறு லட்சம் கோடி {மூன்று கோடியே பதினாயிரவர் என்று சொல்கிறது கும்பகோணம் பதிப்பு} யானையும், குதிரைகளும்,(39-42) பத்து கோடி தேர்களும், எண்ணிலடங்கா காலாட்படை வீரர்களும் இருந்தனர். சமைக்கப்படாத மூலப்பொருட்கள் ஓர் இடத்தில் அளக்கப்பட்டன; மற்றோர் இடத்தில் அவை சமைக்கப்பட்டன;(43) வேறோர் இடத்தில் அவை பரிமாறப்பட்டன. அந்தக் கோலாகல விழாவின் இசை எல்லா இடங்களிலும் கேட்கப்பட்டது. யுதிஷ்டிரனின் மாளிகையில் இருந்த அனைத்து வகை மனிதர்களில் உணவில்லை என்றோ ஆபரணங்கள் இல்லை என்றோ ஒருவரையும் நான் காணவில்லை.
இல்லற வாழ்வு வாழும் எண்பத்தெட்டாயிரம் ஸ்நாதக பிராமணர்கள்(44,45) யுதிஷ்டிரனால் ஆதரிக்கப்படுகின்றனர். அவன் {யுதிஷ்டிரன்} அவர்கள் ஒவ்வொருக்கும் முப்பது பணிப்பெண்களைக் கொடுத்து நிறைவடையச் செய்தான். அப்படி நிறைவடைந்த அவர்கள் {அந்தப் பிராமணர்கள்}, அவனது பகைவர்களின் அழிவுக்கு இதயத்தால் வேண்டுகிறார்கள்.(46)
உணர்வுகளை முழுக்கட்டுப்பாட்டில் கொண்ட வேறு பத்தாயிரம் தவசிகள் நாள்தோறும் யுதிஷ்டிரனின் அரண்மனையில் தங்கத் தட்டுங்களில் உணவுண்கின்றனர்.(47) ஓ மன்னா யக்ஞசேனி {திரௌபதி}, தான் உண்ணவில்லை என்றாலும், பழுதுள்ள உறுப்புகள் கொண்டவர்களும், குள்ளர்களும் உள்ளிட்ட மற்ற அனைவரும் உண்டுவிட்டார்களா என்பதை நாள்தோறும் கவனிக்கிறாள்.(48)
ஓ பாரதரே, திருமணத்தாலான உறவு நிலையால் பாஞ்சாலர்களும், நட்பு நிலையால் அந்தக விருஷ்ணிக்களும் {யாதவர்களும்} என அவ்விரு குலங்கள் மட்டுமே எதையும் கப்பமாகக் கொடுக்கவில்லை[3]" {என்றான் துரியோதனன்}.(49)
[3] இதற்கு முன்பு 29-33 ஸ்லோகங்களில் இவர்கள் இருவரும் பெரும் செல்வத்தைக் கொடையாகக் கொடுத்ததாக குறிப்பிருக்கிறது. என்றாலும், அவர்கள் அவற்றைக் கப்பமாக அல்லாமல் அன்பால் கொடுத்தனர் எனக் கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் | In English |