"Eight men laughed" said Duryodhana | Sabha Parva - Section 52 | Mahabharata In Tamil
(தியூத பர்வத் தொடர்ச்சி)
துரியோதனன் திருதராஷ்டிரனிடம் எதிரியின் செல்வச் செழிப்பையும், தனது துயரத்தையும் விவரித்தல்;
துரியோதனன் சொன்னான், "அனைத்துலகாலும் மதிப்பிற்குரிய மன்னர்களாகக் கருதப்படும் அவர்கள், உண்மைக்குத் தங்களை அர்ப்பணித்து, கடும் நோன்புகள் நோற்று, பெரும் கல்வியும், சொல்திறமும் பெற்று, வேதங்களையும் அதன் கிளைகளையும் அறிந்து, வேள்விகள் செய்து, பக்தியும் அடக்கமும் கொண்டு, தங்கள் ஆன்மாவை அறத்திற்கு அர்ப்பணித்து, பெரும் புகழ் படைத்து, முடிதரிக்க பல பெரும் சடங்குகளைக் கண்டு இருந்த அவர்கள் {மன்னர்கள்} அனைவரும் யுதிஷ்டிரனுக்காகக் காத்திருந்து அவனை {யுதிஷ்டிரனை} வழிபட்டார்கள். வேள்வியில் யுதிஷ்டிரன் அந்தணர்களுக்கு தானம் செய்ய, பல காட்டுப்பசுக்களையும், மேலும் அவற்றில் இருந்த பால் கறக்க வெண்தாமிரத்தாலான {வெண்கலத்தால் ஆன} பல பாத்திரங்களையும் அம்மன்னர்கள் கொண்டு வந்ததைக் கண்டேன்.
ஓ பாரதரே {தந்தை திருதராஷ்டிரரே}, வேள்வியின் முடிவில் யுதிஷ்டிரன் குளிப்பதற்காக, பெரும் ஆயத்தத்துடன் பல மன்னர்கள், தங்கள் நாட்டிலிருந்தே, பல அற்புதமான பாத்திரங்களில் சுத்தமான நீரைக் கொண்டு வந்தனர். பால்ஹீக மன்னன், சுத்தமான தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேரைக் கொண்டு வந்தான். மன்னன் சுதக்ஷினன் காம்போஜ நாட்டு நான்கு உயர்ரக வெள்ளைக்குதிரைகளை அந்தத் தேரில் தானே பூட்டினான், பெரும் பலம் வாய்ந்த சேதி நாட்டு ஆட்சியாளன் சுனிதன் {சிசுபாலன்}, தேர் அச்சையும், கொடிமரத்தையும், தன் கரத்தால் தானே அந்தத் தேரில் பூட்டினான். தென்னாட்ட மன்னன், கவசத்துடன் தயாராக நின்றான்; மகத ஆட்சியாளன் மலர் மாலையுடனும், கிரீடத்துடனும் நின்றான்; பெரும் போர்வீரனான வசுதனன் அறுபது வயது யானையுடனும், மத்ஸ்ய நாட்டு மன்னன் தேருக்கு தங்கத்தாலான பக்க இணைப்புகளையும்; மன்னன் ஏகலவ்யன் காலணிகளுடனும்; அவந்த நாட்டு மன்னன், இறுதிக் குளியலுக்கான பலவகைப்பட்ட நீர்களுடனும்; மன்னன் சேக்கிதனன் அம்பறாத்தூணியுடனும்; காசி மன்னன் வில்லுடனும், சல்லியன் தங்கக் கைப்பிடி கொண்ட வாளையும் கொண்டு வந்தனர்.
பிறகு, பெரும் ஆன்மத்தகுதி படைத்த தௌமியரும், வியாசரும், நாரதரும், அசிதரின் மகன் தேவலனும், சடங்கு நடக்கும் இடத்தில் நின்று, தவசி நீரை மன்னன் {யுதிஷ்டிரன்} தலையில் தெளித்தனர். அந்தப் பெரும் முனிவர்கள் அந்தச் சடங்கு நடக்கும் இடத்திலேயே மகிழ்சியுடன் அமர்ந்தனர். வேதமறிந்த மற்ற சிறப்புவாய்ந்த முனிவர்கள், ஜமதக்னியின் மகனுடன் {பரசுராமனுடன்} சேர்ந்து, ஏழு முனிவர்கள் சேர்ந்து சொர்க்கத்தின் இந்திரனை அணுகுவதைப் போல பெரும் வேள்விப் பரிசுகள் கொடுப்பவனான யுதிஷ்டிரனை அணுகி, மந்திரங்களை உச்சரித்தனர். தடுக்க முடியாத வீரம் கொண்ட சாத்யகி (மன்னன் {யுதிஷ்டிரன்} தலைக்கு மேல்) குடை பிடித்தான். தனஞ்செயனும் {அர்ஜுனனும்}, பீமனும் மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} விசிறியால் வீசினர்; இரட்டையர்கள் {நகுல சகாதேவர்கள்} தங்கள் கரங்களில் சாமரங்களை ஏந்தியிருந்தனர். முந்தைய கல்பத்தில் பிரஜாபதி {பிரம்மன் என்கிறது ம.வீ.ரா. பதிப்பு} இந்திரனுக்குக் கொடுத்த, ஆயிரம் நிஷ்க தங்கம் கொண்டு தேவதச்சன் விஸ்வகர்மனால் செய்யப்பட்ட, வருணின் பெரும் சங்கை {சங்கு}, கடலரசன் கொண்டு வந்தான். அந்தச் சங்கைக் கொண்டுதான் வேள்வியின் முடிவில் கிருஷ்ணன் யுதிஷ்டிரனைக் குளிப்பாட்டினான். அதைக் கண்ட நான் {துரியோதனன்} மூர்ச்சையடைந்தேன்.
மக்கள் கிழக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் உள்ள கடல்களுக்குச் செல்கின்றனர். ஆனால், ஓ தந்தையே {திருதராஷ்டிரரே}, பறவைகளைத் தவிர வேறு எவராலும் வடக்கு கடலை அடைய முடியாது. ஆனால் பாண்டவர்கள் தங்கள் ஆளுகையை அங்கு வரை விரிவடையச் செய்திருக்கிறார்கள். ஏனென்றால், மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஊதிய, அங்கிருந்து {வடக்கு கடலில் இருந்து} கொண்டு வரப்பட்ட நூற்றுக்கணக்கான சங்குகளின் நாதங்களைக் {வேள்வி மண்டபத்தில்} கேட்டேன். அந்த சங்குகள் தொடர்ச்சியாக ஊதப்பட்ட போது, எனது உடலில் இருந்த ரோமங்கள் சிலிர்த்து நின்றன. பலத்தில் தாழ்ந்த மன்னர்கள் வீழ்ந்தனர். திருஷ்டத்யும்னன், சாத்யகி, பாண்டுவின் மகன்கள், கேசவன் {கிருஷ்ணன்} ஆகிய பலம் பொருந்திய வீரம் கொண்ட அழகான எட்டு பேரும், மதியிழந்து போயிருந்த மன்னர்களையும் என்னையும் கண்டு வெளிப்படையாகச் சிரித்தனர்.
பிறகு மகிழ்ச்சி நிறைந்த இதயம் கொண்ட பீபத்சு {பீபத்சு} (அர்ஜுனன்), ஓ பாரதா {தந்தை திருதராஷ்டிரரே}, முக்கியமான அந்தணர்களுக்கு, கொம்புகளில் தங்கத் தகடு பொருத்தப்பட்ட ஐநூறு {500} எருதுகளைக் கொடுத்தான். பிறகு குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன் ராஜசூய வேள்வியை முடித்த பிறகு, மேன்மையான ஹரிச்சந்திரன் அடைந்த பெரும் செழிப்பை அடைந்தான். அச்செழிப்பை ரந்திதேவனோ, நாபாகனோ, ஜௌவனஸ்வாவோ, மனுவோ, வேணுவின் மகன் மன்னன் பிருதுவோ, பகீரதனோ, யயாதியோ, நகுஷனோ கூட அடைந்ததில்லை. ஓ மேன்மையானவரே {தந்தை திருதராஷ்டிரரே}, ஹரிச்சந்திரன் பெற்ற செழிப்பை பிருதையின் {குந்தியின்} மகன் அடைந்ததைக் கண்ட பிறகு, நான் வாழ்வதில் எந்த நன்மையையும் நான் காணவில்லை.
ஓ பாரதரே! ஓ மனிதர்களின் ஆட்சியாளரே, எருதின் தோள்களில் குருட்டு மனிதனால் சுமத்தப்படும் நுகத்தடி விரைவில் தளர்வுறும். அந்த நிலையே நமது நிலையும் கூட. மூத்தவர்கள் தேய்ந்து கொண்டிருக்கும்போது இளையவர்கள் வளர்கிறார்கள். ஓ குருக்களின் தலைவரே {தந்தை திருதராஷ்டிரரே}, இதையெல்லாம் கண்ட பிறகு, மனத்தளவில் கூட என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. ஓ மன்னா {தந்தை திருதராஷ்டிரரே}, இதன் காரணமாகவே நான் துயரத்தில் மூழ்கி, நிறம் மங்கி, உடல் மெலிந்திருக்கிறேன்" என்றான் {துரியோதனன்}.
![]() |
![]() |
![]() |