Don't lop off your arms | Sabha Parva - Section 53| Mahabharata In Tamil
(தியூத பர்வத் தொடர்ச்சி)
திருதராஷ்டிரன் துதியோதனனுக்கு புத்தி கூறல்.
திருதராஷ்டிரன் சொன்னான், "நீ எனது மூத்த மகன், எனது மூத்த மனைவிக்குப் {காந்தாரிக்கு} பிறந்தவனுமாவாய். ஆகையால், ஓ மகனே {துரியோதனனே}, நீ பாண்டவர்களைக் குறித்து பொறாமைப்படாதே. பொறாமையுள்ளவன் எப்போதும் மகிழ்ச்சியற்றவனாக இருந்து மரண வேதனையை அனுபவிப்பான். ஓ பாரத குலத்தின் காளையே {துரியோதனனே}, யுதிஷ்டிரனுக்கு ஏமாற்றத் தெரியாது. அவனும் உனக்குச் சமமாக செல்வம் படைத்திருக்கிறான். உனது நண்பர்களை அவனது நண்பனாகக் கொண்டிருக்கிறான். அவன் {யுதிஷ்டிரன்} உன்னிடத்தில் பொறாமை கொள்ளவில்லை. ஆகையால், நீ ஏன் அவன் மீது பொறாமை கொண்டிருக்க வேண்டும்?
ஓ மன்னா {துரியோதனா}, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளைப் பொறுத்தவரையில் நீ யுதிஷ்டிரனுக்கு நிகராகவே இருக்கிறாய். ஆகையால், நீ ஏன் உனது மடமையால் {அறியாமையால்} உனது சகோதரனின் {யுதிஷ்டிரனின்} செல்வத்தை விரும்புகிறாய்? அப்படி இருக்காதே. பொறாமைப்படுவதை நிறுத்து. துக்கப்படாதே. ஓ பாரத குலத்தின் காளையே {துரியோதனா}, வேள்வி செய்ததால் கிடைத்த மதிப்பை நீ விரும்புகிறாய் என்றால், உனது புரோகிதர்களை அழைத்து பெரும் வேள்வியான சப்ததந்து என்ற வேள்வியைச் செய். பிறகு இந்தப் பூமியின் மன்னர்கள், மகிழ்ச்சியுடனும், பெரும் மரியாதையுடனும், உனக்கும் அபரிமிதமான செல்வத்தையும், ரத்தினங்களையும், ஆபரணங்களையும் கொண்டு வருவார்கள். ஓ குழந்தாய் {துரியோதனா}, அடுத்தவர் உடைமைகளை விரும்புவது அளவுக்கதிகமான காரியவாதமாகும். மறுபுறம், தனது உடைமைகளில் திருப்தியுடனும், தனது வகைக்கு உரிய செயல்களையும் செய்து வருபவன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பான்.
அடுத்தவர் செல்வத்தை அடைய விரும்பாது, தனது காரியங்களை மட்டும் செய்து, தான் சம்பாதித்ததைக் காப்பது உண்மையான பெருமையின் குறியீடுகளாகும். பாண்டுவின் மகன்கள் உனது கரங்களைப் போன்றவர்களாவர். உனது கரங்களை நீயே வெட்டிக் கொள்ளாதே! உனது சகோதரர்களின் செல்வத்துக்காக அக வேற்றுமையில் {உள் வேற்றுமை} மூழ்காதே. ஓ மன்னா {துரியோதனா}, பாண்டுவின் மகன்களிடம் பொறாமை கொள்ளாதே. உனது சகோதரர்களின் {பாண்டவர்களின்} மொத்த செல்வமும் உனது செல்வமும் சமமாகவே இருக்கின்றன. நண்பர்களுடன் சண்டையிடுவது மிகப் பாவகரமானது. உனது பாட்டன்களே அவர்களுக்கும் {பாண்டவர்களுக்கும்} பாட்டன்கள். வேள்வி நேரத்தில் தானம் செய், உனக்கு விருப்பமான அனைத்து பொருட்களையும் அடைந்து திருப்தியடை. பெண்களுடன் களிப்பில் ஈடுபட்டு ஆனந்தமாக இரு. அமைதியை அனுபவி" என்றான் {திருதராஷ்டிரன்}.
![]() |
![]() |
![]() |