Proverb of Duryodhana | Sabha Parva - Section 54 | Mahabharata In Tamil
(தியூத பர்வம் - 10)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனுக்கு துரியோதனன் சொல்லும் நீதிகள்...
துரியோதனன் சொன்னான், "கறியைத் தீண்டும் அகப்பையானது அந்தக் கறிச்சுவையை அறியாததைப் போலவே அறிவாற்றல் இல்லாதவனும், பல பொருட்களைப் பற்றி கேள்வியறிவு மட்டுமே கொண்டிருப்பவனுமான ஒருவன், சாத்திரங்களின் கருத்தை அறியமாட்டான்.(1) நீர் அனைத்தையும் அறிந்தும் என்னைக் குழப்புகிறீர் {திகைக்க வைக்கிறீர்}. ஒரு படகில் கட்டப்பட்ட மற்றொரு படகு போல, நானும் நீரும் கட்டப்பட்டிருக்கிறோம். உம் சொந்த காரியத்தில் உமக்கு ஊக்கமில்லையா? அல்லது என்னிடம் பகையை வளர்க்கிறீரா?(2) உடனே செய்ய வேண்டியதை, எதிர்காலத்தில் செய்யலாம் என்று சொல்லும் உம்மை ஆட்சியாளராகப் பெற்ற உமது மகன்களும், கூட்டாளிகளும் அழிந்து போய் விடுவார்கள்.(3)
பிறர் சொல் கேட்கும் ஒருவனை வழிகாட்டியாகக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி வழி தவறுவார்கள். அவனைப் பின் தொடர்பவர்கள் சரியான பாதையை அடைவார்கள் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?(4) ஓ மன்னா, நீர் முதிர்ந்த ஞானம் உடையவர்; முதிர்ந்தவர்களின் வார்த்தைகளைக் கேட்கும் சந்தர்ப்பம் வாயக்கப் பெற்றவராகவும், உணர்வுகளை உமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவராகவும் இருக்கிறீர். நமக்கு வேண்டிய காரியங்களைச் செய்யத் தயாராக இருக்கும் எங்களைக் குழப்பாதீர்.(5) மன்னர்களின் நடத்தை சாதாரண மக்களிலிருந்து வேறுபட்டது என்று பிருஹஸ்பதி {தேவ குரு} சொல்லியிருக்கிறார். எனவே மன்னர்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் தங்கள் சொந்த நலனை கவனத்தில் கொள்ள வேண்டும்.(6)
வெற்றி அடைதலே க்ஷத்திரியர்களின் ஒழுக்கத்துக்கு வழிகாட்டும் ஒரே பிரமாணமாக இருக்க வேண்டும். எனவே, அறம் சார்ந்தவையாகவோ, அல்லாதவையாகவோ இருப்பினும், தனது சொந்த ஒழுங்குக்கு {தனது வகைக்கு} ஏற்ற கடமைகளில் ஐயம் என்ன இருக்கமுடியும்?(7) தன் பகைவனின் ஒளிமிக்க செல்வத்தைப் பறிக்க விரும்பும் ஒருவன், ஓ பாரத குலத்தின் காளையே, சாட்டையைச் சுழற்றித் தன் குதிரைகளை அடக்கும் தேரோட்டி போல, அனைத்து திசைகளையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும்.(8) வெறுமனே வெட்டும் கருவி மட்டுமல்ல; வெளிப்படையாகவோ, மறைமுகமாவோ பகைவனை வீழ்த்தும் வழிமுறையும் ஆயுதமேயாகும் என ஆயுதங்கள் கையாள்வதை வழக்கமாகக் கொண்டோர் சொல்கின்றனர்.(9)
பகைவனாகவோ, நண்பனாகவோ அறியப்பட்ட ஒருவனது வடிவமோ, உறுப்பிலக்கணமோ {அங்க லட்சணமோ} அவசியமல்ல. ஒருவனுக்கு வலியை {துன்பத்தை} உண்டாக்கும் மற்றொருவன், ஓ மன்னா, வலியை உணர்பவனுக்கு பகைவனாவான்.(10) நிறைவின்மையே செழிப்பின் வேராகும். எனவே, ஓ மன்னா, நான் நிறைவின்மையுடன் இருக்கவே விரும்புகிறேன். செழுமை கையகப் படுத்தப்பட்ட பிறகும், கடுமையாக முயற்சிப்பவனே உண்மையான கொள்கை கொண்ட மனிதனாவான்.(11) ஈட்டப்பட்ட செல்வம் பதுக்கப்படும்போதும் கொள்ளையடிக்கப்படலாம். எனவே, எவனும் செல்வத்திலும் செழுப்பிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது. இதுவே {இத்தகைய கொள்ளைகளே} மன்னர்களின் {வழக்கமான} நடத்தையாக இருக்கிறது.(12) இந்திரன், அமைதிக்கு உடன்பட்டு உறுதிமொழி கொடுத்த பிறகு நமுசியின் தலையைத் துண்டித்தான். பகைவனுக்கு எதிரான இந்த நிலையான ஒழுக்கத்தை அவனும் {இந்திரனும்} அங்கீகரிப்பதாகவே இச்செயல் உள்ளது.(13)
தவளைகளையும், வளையில் வாழும் விலங்குகளையும் விழுங்கும் பாம்பைப் போல, அமைதியுடன் இருக்கும் மன்னனையும், வீட்டை விட்டு வெளியே வராத பிராமணனையும் இந்தப் பூமி விழுங்கிவிடுகிறது.(14) ஓ மன்னா, இயற்கையிலேயே எவனும் எவனுக்கும் பகைவனாக முடியாது. பொதுவான நாட்டங்களைக் கொண்டவனே {அதே நாட்டங்களைக் கொண்ட} மற்றொருவனுக்கு பகைவனாகிறான்.(15) அவனே வேறு நாட்டம் கொண்டவனுக்குப் பகைவனாவதில்லை. வளரும் பகைவனை தன் மூடத்தனத்தால் {அறியாமையால்} கவனிக்காதவன், சிகிச்சையற்ற நோயினால் உயிர்ப் பறிக்கப்படும் நோயாளியைப் போல அழிந்து போவான்.(16)
அதிக முக்கியத்துவம் இல்லாத பகைவனாக இருப்பினும், அவனே ஆற்றலில் வளர்ந்து வந்தால், மரத்தின் வேரருகே இருக்கும் வெள்ளை எறும்புகள் மரத்தை விழுங்குவதைப் போல அவனை விழுங்கிவிடுவான்.(17) ஓ பாரதரே, ஓ அஜமீடரே {அஜமீட வம்சத்தவரே}, பகைவனின் செழிப்பு உமக்கு ஏற்பில்லாததாகவே இருக்கட்டும். ஞானமுள்ளோர், சுமையைப் போல இந்தக் கொள்கையை எப்போதும் தங்கள் தலையில் சுமக்க வேண்டும்.(18) தனது செல்வ வளர்ச்சியை எப்போதும் விரும்பும் ஒருவன், பிறப்பிலிருந்தே இயல்பாக வளரும் உடலைப் போலவே, தனது உறவினர்கள் மத்தியில் வளர்ந்து வருவான். ஆற்றல் விரைவான வளர்ச்சியைக் கொடுக்கும்.(19)
பாண்டவர்களின் செல்வத்தை நான் விரும்பினாலும், இன்னும் அஃதை எனது சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. தற்சமயம், நான் எனது திறமையில் இருக்கும் ஐயங்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறேன். அவ்வையங்களைத் தீர்த்துக் கொள்ள நான் உறுதியான தீர்மானத்துடன் இருக்கிறேன். ஒன்று நான் அவர்களது {பாண்டவர்களது} செல்வத்தை அடைவேன், அல்லது போரில் மடிந்து வீழ்வேன்.(20) ஓ மன்னா, மனத்தின் நிலை இவ்வாறு உள்ள போதும், நாள்தோறும் பாண்டவர்கள் செல்வ நிலையில் வளரவும், நாம் வளராமலும் இருக்கும் போதும், நான் என் உயிருக்காக ஏன் கவலைப்படப் போகிறேன்?" என்றான் {துரியோதனன்}.(21)
ஆங்கிலத்தில் | In English |