Assembly house was constructed for dice play | Sabha Parva - Section 55 | Mahabharata In Tamil
(தியூத பர்வத் தொடர்ச்சி)
சகுனி துரியோதனனுக்கு உற்சாகம் கொடுப்பது; துரியோதனன் மீண்டும் தனது தந்தை திருதராஷ்டிரனிடம் வேண்டுவது; திருதராஷ்டிரன் மறுப்பது; மீண்டும் துரியோதனன் வலியுறுத்துவது; விதுரனைக் கேட்க வேண்டும் என்று திருதராஷ்டிரன் சொல்வது; துரியோதன் அதை ஏற்காதது; சபா மண்டபம் தயாராவது...
சகுனி சொன்னான், "ஓ வெற்றியாளர்களில் சிறந்தவனே {துரியோதனனே}, நீ எதைக் கண்டு துயர் அடைகிறாயோ அந்தப் பாண்டுவின் மகன் யுதிஷ்டிரனின் செழிப்பை நான் (உனக்காகக்) பறிப்பேன். ஆகையால், ஓ மன்னா {துரியோதனா}, குந்தியின் மகனான யுதிஷ்டிரனை இங்கே அழை. பகடைவீச்சில் நிபுணன், தனக்கு எந்தக் காயமும் இல்லாமல் நிபுணத்துவம் இல்லாதவனை வீழ்த்திவிடலாம். ஓ பாரதா {துரியோதனா}, பந்தையமே எனது வில், பகடை எனது கணைகள், அந்தப் பகடையில் இருக்கும் குறிகளே எனது வில் நாண், பகடைப் பலகையே எனது ரதமுமாகும்", என்றான் {சகுனி}.
துரியோதனன், "பகடையில் நிபுணனான இந்தச் சகுனி, ஓ மன்னா {தந்தை திருதராஷ்டிரரே}, பகடை விளையாட்டில் பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} செல்வத்தைப் பறிக்கத் தாயாராக இருக்கிறார். அவருக்கு {சகுனிக்கு} நீர் அனுமதி அளிக்க வேண்டும்" என்றான்.
திருதராஷ்டிரன், "எனது தம்பியான சிறப்பு மிகுந்த விதுரனின் ஆலோசனைகளுக்கு நான் கீழ்ப்படிந்தவன். அவனுடன் நான் கலந்தாலோசித்த பிறகு, இவ்விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறேன்" என்றான்.
துரியோதனன், "விதுரர் எப்போதும் பாண்டு மகன்களுக்கு நன்மை செய்வதிலேயே ஈடுபடுகிறார். ஓ கௌரவரே {தந்தை திருதராஷ்டிரரே}, நம்மைப் பொறுத்தவரை அவரது {விதுரரது} உணர்ச்சிகள் வேறு மாதிரியாக இருக்கிறது. ஆகையால், சந்தேகத்திற்கு இடமில்லாமல் அவர் {விதுரர்}, இப்போது முன்மொழியப்பட்ட செயலை உமது இதயத்திலிருந்து விலக்கி விடுவார். எந்தக் காரியத்தையும் அடுத்தவர் ஆலோசனையின் பேரில் செய்யும் நிலையை எந்த மனிதனும் அடையக்கூடாது. ஓ குரு குலத்தின் மகனே {தந்தை திருதராஷ்டிரரே}, இரு மனிதர்களின் மனது ஒரு குறிப்பிட்ட செயலில் ஒரே மாதிரியாக இருக்காது. ஆபத்திற்கான அனைத்துக் காரணங்களையும் காணாது இருக்கும் முட்டாள், மழைக்காலத்தில் அழியும் பூச்சி போல அழிவான். நோயோ யமனோ ஒருவன் செழிப்படையும் வரை காத்திருப்பதில்லை. ஆகையால், வாழ்வும் ஆரோக்கியமும் இருக்கும் இதுவரை, ஒருவன், (செழிப்புக்காக காத்திராமல்) தனது காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும்" என்றான் {துரியோதனன்}.
திருதராஷ்டிரன், "ஓ மகனே {துரியோதனா}, பலசாலிகளிடம் பகைமை என்பதை நான் ஒருபோதும் பரிந்துரைக்க மாட்டேன். பகைமை நமது உணர்வுகளில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது. அது இரும்பால் செய்யப்படாதது எனினும், அதுவும் {பகைமை} ஒரு ஆயுதமே. ஓ இளவரசனே {துரியோதனா}, கொடுமையான பெரும் போருக்கு வழிவகுக்கும் ஒரு காரியத்தை நீ நற்பேறு என்று கருதுகிறாய். அது தொந்தரவு நிறைந்தது. தொடங்கியதும், அது கூரிய வாட்களையும், கூர்முனைக் கணைகளையும் உற்பத்தி செய்யும்" என்றான்.
துரியோதனன், "மிகப் பழங்காலத்தின் மனிதர்கள் பகடையைக் கண்டுபிடித்தனர். அதனால் எந்த அழிவும் இல்லை. அல்லது ஆயுதங்களால் மோதிக்கொள்வதும் ஏற்படவில்லை. ஆகையால், சகுனியின் வார்த்தைகள் உமக்கு ஏற்புடையதாகி, சபா மண்டபத்தை விரைவாகக் கட்ட ஆணையிடும். நமது மகிழ்ச்சிக்கு வழிகாட்டும் சொர்க்கத்தின் கதவு, நமக்குச் சூதின் மூலம் திறக்கப்படும். உண்மையில், (இத்தகு துணையுடன்) சூதாட்டத்தை மேற்கொள்பவர்கள், நற்பேறு பெற தகுதிபடைத்தவர்களே. பிறகு பாண்டவர்கள், (உமக்கு மேன்மையானவர்களாக இல்லாமல்) உமக்கு சரி சமமாக ஆவார்கள். ஆகையால் பாண்டவர்களுடன் சூதாடும்" என்றான்.
திருதராஷ்டிரன், "உன்னால் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் எனக்கு எந்தப் பரிந்துரையும் செய்யவில்லை. ஓ மனிதர்களின் ஆட்சியாளனே {துரியோதனா}, உனக்கு ஏற்புடையதை நீ செய்து கொள். ஆனால், இந்த வார்த்தைகளின் படி நீ செயல்பட்டால் நீ வருந்த வேண்டியிருக்கும்; நீதியற்ற இத்தகு வார்த்தைகளால், பிற்காலத்தின் செழிப்பைக் கொண்டு வர முடியாது. உண்மை மற்றும் ஞானத்தின் பாதையில் நடக்கு விதுரன் இதை முன்பே அறிந்திருந்தான். பெரும் துயரங்களையும், க்ஷத்திரியர்களின் உயிர் நாசத்தையும் விதியே தீர்மானிக்கிறது" என்றான் {திருதராஷ்டிரன்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைச்சொன்ன பலவீன மனது படைத்த திருதராஷ்டிரன், பிறகு, விதியைத் தவிர்க்க முடியாதது எனவும் தலைமையானதும் எனவும் கருதினான். விதியால் இப்படி மதியிழந்த மன்னன், தனது மகனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்து, உரத்த குரலில், "நேரந்தாழ்த்தாமல், சபாமண்டபத்தை மிகவும் அழகாகவும் கவனமாகவும் கட்டுங்கள். தங்கத்தாலும் மாணிக்கங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, நூறு வாயில்களுடனும், முழுவதுமாக இரண்டு மைல் {ஒரு குரோசம் என்கிறது ம.வீ.ரா. பதிப்பு} நீள அகலத்திற்கு இருக்கும் அது, அழகான வர்ணனையுடன் ஆயிரம் தூண்களும் பளிங்கு வளைவும் கொண்ட அரண்மனை {to be called the crystal-arched palace with a thousand columns} என்று அழைக்கப்படட்டும்" என்றான்.
அவனின் {திருதராஷ்டிரனின்} வார்த்தைகளைக் கேட்டு, புத்திசாலித்தனமும் நிபுணத்துவமும் கொண்டு ஆயிரக்கணக்கான கலைஞர்கள், மிக விரைவாக அந்த அரண்மனையைக் கட்டி, அதில் அனைத்துப் பொருட்களையும் நிரப்பினர். விரைவில் மன்னனிடம் வந்து அரண்மனை கட்டும் வேலை முடிந்தது என்றும், அது காண்பதற்கினியதாகவும், அழகாகவும், அனைத்து வகை ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதாகவும், தங்கத்தால் ஊடு இழை பொருத்தப்பட்ட பல வண்ணங்களில் ஆன தரைவிரிப்புகள் கொண்டதாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்கள். பெரும் கல்வி பெற்ற மன்னன் திருதராஷ்டிரன், பிறகு, முதல் அமைச்சர் விதுரனை அழைத்து, "நீ {காண்டவப்பிரஸ்தம்} சென்று, நேரத்தைக் கடத்தாமல் இளவரசன் யுதிஷ்டிரனை இங்கே அழைத்து வா. அவன் {யுதிஷ்டிரன்} தனது தம்பிகளுடன் இங்கே வந்து, இந்த எனது அழகான சபா மண்டபத்தையும், கணக்கற்ற நகைகளையும், ரத்தினங்களையும், விலையுயர்ந்த படுக்கைகள் மற்றும் தரைவிரிப்புகளையும் கண்டு, ஒரு நட்பு ரீதியான பகடை ஆட்டத்தில் கலந்து கொள்ளட்டும்" என்றான்.
அவனின் {திருதராஷ்டிரனின்} வார்த்தைகளைக் கேட்டு, புத்திசாலித்தனமும் நிபுணத்துவமும் கொண்டு ஆயிரக்கணக்கான கலைஞர்கள், மிக விரைவாக அந்த அரண்மனையைக் கட்டி, அதில் அனைத்துப் பொருட்களையும் நிரப்பினர். விரைவில் மன்னனிடம் வந்து அரண்மனை கட்டும் வேலை முடிந்தது என்றும், அது காண்பதற்கினியதாகவும், அழகாகவும், அனைத்து வகை ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதாகவும், தங்கத்தால் ஊடு இழை பொருத்தப்பட்ட பல வண்ணங்களில் ஆன தரைவிரிப்புகள் கொண்டதாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்கள். பெரும் கல்வி பெற்ற மன்னன் திருதராஷ்டிரன், பிறகு, முதல் அமைச்சர் விதுரனை அழைத்து, "நீ {காண்டவப்பிரஸ்தம்} சென்று, நேரத்தைக் கடத்தாமல் இளவரசன் யுதிஷ்டிரனை இங்கே அழைத்து வா. அவன் {யுதிஷ்டிரன்} தனது தம்பிகளுடன் இங்கே வந்து, இந்த எனது அழகான சபா மண்டபத்தையும், கணக்கற்ற நகைகளையும், ரத்தினங்களையும், விலையுயர்ந்த படுக்கைகள் மற்றும் தரைவிரிப்புகளையும் கண்டு, ஒரு நட்பு ரீதியான பகடை ஆட்டத்தில் கலந்து கொள்ளட்டும்" என்றான்.
![]() |
![]() |
![]() |