Pandavas came to Hastinapore | Sabha Parva - Section 57 | Mahabharata In Tamil
(தியூத பர்வத் தொடர்ச்சி)
விதுரன் இந்திரப்பிரஸ்தம் சென்று யுதிஷ்டிரனை அழைப்பது; யுதிஷ்டிரன் சூதின் தீமையை விளக்குவது; விதுரன் அதை ஆமோதிப்பது; திருதராஷ்டிரன் கட்டளையை இருவரும் ஏற்று ஹஸ்தினாபுரம் வருவது; ஹஸ்தினாபுரம் வந்த பாண்டவர்கள் உறவினர்கள் அனைவரையும் சந்திப்பது...
வைசம்பாணர் சொன்னார், "தனது விருப்பத்திற்கு மாறா மன்னன் திருதராஷ்டிரனால் உத்தரவிடப்பட்ட விதுரன், அதிக உறுதியும், பெரும் வேகமும், பலமும் கொண்ட குதிரைகள் உதவியுடன் அமைதியாகவும் பொறுமையாகவும், பாண்டுவின் ஞானமுள்ள மகன்கள் வசிப்பிடத்திற்குப் புறப்பட்டான். பெரும் புத்திசாலித்தனம் கொண்ட விதுரன் பாண்டவர்த் தலைநகரம் போகும் பாதையில் முன்னேறினான். மன்னன் யுதிஷ்டிரனின் நகரத்தை அடைந்து, அதற்குள் நுழைந்து, எண்ணிலடங்கா அந்தணர்களால் வணங்கப்படும் அரண்மனையை நோக்கி முன்னேறினான். குபேரனின் மாளிகை போல இருந்த அந்த அரண்மனைக்கு வந்த அறம்சார்ந்த விதுரன், தர்மனின் மகனான யுதிஷ்டிரனை அணுகினான். பூமியில் எந்த எதிரியும் இன்றி உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அந்த சிறப்புவாய்ந்த அஜமீடன் {யுதிஷ்டிரன்}, விதுரனை வணங்கி, திருதராஷ்டிரன் மற்றும் அவனது மகன்கள் குறித்து விசாரித்தான். யுதிஷ்டிரன், "ஓ க்ஷத்தரே {சித்தப்பா விதுரரே} மகிழ்ச்சியற்ற மனதுடையவராக இருக்கிறீரே. அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் தானே இங்கு வந்திருக்கிறீர்? திருதராஷ்டிரரின் மகன்கள், அவர்களது முதிர்ந்த தந்தைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்கள் என்று நம்புகிறேன். திருதராஷ்டிரரின் ஆட்சிக்கு கட்டுப்பட்டு மக்களும் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்" என்றான்.
விதுரன், "அந்தச் சிறப்புவாய்ந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, தனது மகன்களுடனும், உறவினர் சூழவும், தனது பகுதியை இந்திரனைப் போல ஆண்டு கொண்டு மகிழ்ச்சியுடன் நன்றாக இருக்கிறார். மன்னன், தனது மகன்களிடம் மகிழ்ச்சியாக இருக்கிறார். அந்த மகன்களும் அவருக்கு கீழ்ப்படிந்து நடப்பதால் அவருக்கு {திருதராஷ்டிரருக்கு} எந்தத் துயரும் இல்லை. அந்தச் சிறப்புமிக்க ஏகாதிபதி {திருதராஷ்டிரர்}, தனது செல்வாக்கை அதிகரிப்பதில் அக்கறையுடன் இருக்கிறார். குருக்களின் மன்னர் {திருதராஷ்டிரன்} உங்களுடைய அமைதியையும் செழிப்பையும் என்னிடம் விசாரிக்கவும், உன்னையும் உனது தம்பிகளையும் ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்து வந்து புதிதாக அவர் கட்டியிருக்கும் அரண்மனையைக் காட்டி, அது உனது {யுதிஷ்டிரனின்} மாளிகையைப் போல் இருக்கிறதா என்று கேட்கவும் சொன்னார். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே, உனது தம்பிகளுடன் அங்கே வந்து, அந்த மாளிகையில் மகிழ்ந்திருந்து, ஒரு நட்பு ரீதியான பகடை ஆட்டம் ஆட வேண்டும். ஏற்கனவே குருக்கள் அங்கு வந்து விட்டதால், அங்கு நீ வந்தால் நாங்கள் மகிழ்வோம். மேலும் அங்கு மன்னன் திருதராஷ்டிரன் அழைத்து வந்திருக்கும் சூதாடிகளையும் ஏமாற்றுக்காரர்களையும் நீ காணலாம். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன். மன்னனின் {திருதராஷ்டிரனின்} உத்தரவு உன்னால் அங்கீகரிக்கப்படட்டும்" என்றான் {விதுரன்}.
யுதிஷ்டிரன், "ஓ க்ஷத்தரே {சித்தப்பா விதுரரே}, நாம் பகடையாட அமர்ந்தால், நமக்குள் சண்டை வரலாம். இதையெல்லாம் அறிந்த எந்த மனிதன்தான் சூதாட சம்மதிப்பான்? எங்களுக்கு எது சரியாக இருக்கும் என்று நீர் நினைக்கிறீர்? நாங்கள் அனைவரும் உமது ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்து இருக்கிறோம்" என்றான்.
விதுரன், "துயரங்களுக்கு வேர் சூது என்பதை நான் அறிவேன். அந்த எண்ணத்தை மன்னன் {திருதராஷ்டிரன்} கைவிட நான் முடிந்த வரை போராடினேன். இருப்பினும், மன்னன் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார். இதையெல்லாம் அறிந்து கொண்டு, ஓ கற்றவனே, எது நன்மையோ அதைச் செய்" என்றான்.
யுதிஷ்டிரன், "திருதராஷ்டிரரின் மகன்கள் தவிர, விளையாடத் தயாராக இருக்கும் வேறு நேர்மையற்ற சூதாடிகள் யார் யார்? ஓ விதுரரே, அவர்கள் யார்? எங்கள் நூற்றுக்கணக்கான உடைமைகளைப் பந்தையப் பொருளாக வைத்து நாங்கள் யாருடன் விளையாட வேண்டி வரும் என்று எங்களுக்குச் சொல்லும்" என்றான்.
விதுரன், "ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, பகடையில் நிபுணனான காந்தார மன்னன் சகுனி, தனது கைகளின் நிபுணத்துவத்தால் பந்தயப் பொருளை அடைவதில் உறுதியாக இருக்கிறான். மேலும், விவின்கதி, மன்னன் சித்திரசேனன், சத்தியவிரதன், பூரிமித்திரன், ஜெயன் ஆகியோரும் அங்கே இருக்கின்றனர்" என்றான்.
யுதிஷ்டிரன், "எப்போதும் ஏமாற்றையே நம்பியிருக்கும் உறுதியான கொடும் சூதாடிகள் அங்கிருப்பது தெரிகிறது. இருப்பினும், இந்த முழு அண்ட மும், படைத்தவனின் விருப்பத்தின்படியும், விதியின் கட்டுப்பாட்டிற்குள்ளும் நடக்கிறது. அது சுதந்திரமானதல்ல. ஓ கற்றவரே {விதுரரே}, மன்னன் திருதராஷ்டிரரின் உத்தரவின் பேரில் நான் சூதாட்டத்தில் ஈடுபட விரும்பவில்லை. ஒரு தந்தை தனது மகனுக்கு நன்மையையே செய்வான். நீர் எங்கள் குரு, ஓ விதுரரே, எங்களுக்கு எது நன்மையானது என்பதை எனக்குச் சொல்லும். சூதாட எனக்கு விருப்பமில்லை, ஆகையால் நான் விளையாட மாட்டேன். ஆனால் அந்தச்சபையில் தீய சகுனி என்னை அழைத்தால்? அப்படி அவன் அழைத்தால், என்னால் மறுக்க முடியாது. அது தீர்மானிக்கப்பட்ட எனது நிலைத்த நோன்பாகும்" என்றான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "மன்னன் யுதிஷ்டிரன் விதுரனிடம் இப்படிச் சொல்லிவிட்டு, காலந்தாழ்த்தாமல் தனது பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய கட்டளையிட்டான். மறுநாள், மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது உறவினர்களுடனும், பணியாட்களுடனும், திரௌபதியை மையமாகக் கொண்டிருக்கும் வீட்டிலிருக்கும் மங்கையரையும் அழைத்துக் கொண்டு குருக்களின் தலைநகரத்திற்குப் {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டான். 'கண்ணுக்கு முன்னால் ஒளிரும் பொருட்கள் விழுவதைப் போல, ஏதோ மனிதன் கயிற்றால் கட்டப்பட்டு ஆடுவதைப் போல, விதி நமது மதியை மயக்கி இயற்கையின் ஆளுகைக்குள் நம்மைத் தள்ளுகிறது' என்று தனக்குள்ளேயே சொன்ன எதிரிகளைத் தண்டிக்கும் மன்னன் யுதிஷ்டிரன், திருதராஷ்டிரனின் உத்தரவு குறித்து மேலும் ஆராயாமல், க்ஷத்தனுடன் {விதுரனுடன்} கிளம்பினான். பகை வீரர்களைக் கொல்லும் பாண்டு மற்றும் பிருதையின் {குந்தியின்} மகன் {யுதிஷ்டிரன்}, பால்ஹீக நாட்டு மன்னன் கொடுத்த ரதத்தில் ஏறி, அரச அங்கிகள் பூட்டிக் கொண்டு தனது தம்பிகளுடன் கிளம்பினான். அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} அரச பிரகாசத்துடன், அந்தணர்கள் தனக்கு முன்பு நடக்க, தனது நகரத்தில் இருந்து கிளம்பி, திருதராஷ்டிரனின் உத்தரவாலும் காலத்தின் உந்துதலாலும் சென்றான். ஹஸ்தினாபுரத்தை அடைந்து, திருதராஷ்டிரனின் அரண்மனைக்குச் சென்றான். அங்கே சென்ற பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மன்னனை {திருதராஷ்டிரனை} அணுகினான். பிறகு அந்த மேன்மையானவன் {யுதிஷ்டிரன்} பீஷ்மரையும், துரோணரையும், கர்ணனையும், கிருபரையும், துரோணரின் மகனையும் {அஸ்வத்தாமனையும்} அணுகி கட்டித்தழுவினான். பதிலுக்கு அவர்களாலும் தழுவிக் கொள்ளப்பட்டான்.
பிறகு அந்தப் பெரும் பலம் வாய்ந்த கரம் கொண்ட பெரும் வீரம் கொண்டவன் {யுதிஷ்டிரன்}, சோமதத்தனை அணுகினான், பிறகு துரியோதனன், சல்லியன், சுபலனின் மகன் {சகுனி}, மேலும் தனக்கு முன்பே அங்கு வந்திருந்த மன்னர்கள் அனைவரையும் அணுகினான். பிறகு அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} வீரனான துட்சாசனனையும், பிறகு தனது (மற்ற) தம்பிகளையும், பிறகு ஜெயத்ரதனையும், பிறகு குருக்கள் அனைவரையும் ஒருவர் பின் ஒருவராக அணுகினான். அந்தப் பெரும் பலம் வாய்ந்த கரம் கொண்டவன், தனது தம்பிகளால் சூழப்பட்டு, ஞானமுள்ள மன்னன் திருதராஷ்டிரனின் அறைக்குள் நுழைந்தான்.
பிறகு யுதிஷ்டிரன், எப்போதும் தனது தலைவனுக்குக் கீழ்ப்படிந்திருக்கும் மரியாதைக்குரிய காந்தாரி, தனது மருமகள்களால் சூழப்பட்டு ரோகிணி நட்சத்திரம் போல வீற்றிருப்பதைக் கண்டான். பிறகு காந்தாரியை வணங்கி, அவளால் ஆசி வழங்கப்பட்டு, தனது கண்ணைப் போன்ற ஞானம் கொண்ட சிறப்பு வாய்ந்த ஏகாதிபதியான, முதிர்ந்த பெரியப்பாவை {திருதராஷ்டிரனை} மன்னன் {யுதிஷ்டிரன்} கண்டான். பிறகு மன்னன் திருதராஷ்டிரன், ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அவனது {யுதிஷ்டிரனது} தலையை முகர்ந்து பார்த்து, பீமசேனனை மூத்தவனாகக் கொண்ட, பாண்டுவின் மகன்களான மற்ற நான்கு இளவரசர்களின் தலைகளையும் முகர்ந்தான். மனிதர்களில் புலிகளான அழகான பாண்டவர்களைக் கொண்ட குருக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ந்தனர். பிறகு மன்னனால் உத்தரவிடப்பட்டு, பாண்டவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரத்திரனங்களும் நகைகளும் நிறைந்த அறைக்குச் சென்றனர். அவர்கள் அறைகளுக்குள் சென்றதும், திருதராஷ்டிரனின் வீட்டுப் பெண்மணிகள் துச்சலையுடன் {திருதராஷ்டிரனின் ஒரே மகளுடன்} சென்று அவர்களைப் {பாண்டவர்களைப்} பார்த்து வந்தனர். பிரகாசமிக்க அழகான செழிப்பான யக்ஞசேனியைக் {திரௌபதியைக்} கண்ட திருதராஷ்டிரனின் மருமகள்கள் மகிழ்ச்சியற்றுப் போய் பொறாமையால் நிறைந்தனர்.
அந்தப் பெண்மணிகளுடன் உரையாடிய அந்த மனிதர்களில் புலிகள் பிறகு தங்கள் தினசரி உடற்பயிற்சிகளையும் {Physical Excercises}, அந்த நாளுக்குரிய தங்கள் சடங்குகளையும் செய்தனர். தங்கள் தினசரி வழிபாடுகளை முடித்து, வாசனை மிகுந்த சந்தனக் குழம்பைத் தங்கள் மேனியில் பூசிக் கொண்டு, நற்பேறு பெற எண்ணி, அந்தணர்களுக்குப் பரிசுகள் கொடுத்து அவர்களது வாழ்த்துகளைப் பெற்றனர். பிறகு சிறந்த சுவையுள்ள உணவை உண்டு இரவு ஓய்வுக்காகத் தங்கள் அறைகளுக்குள் சென்றனர். பிறகு அந்த குருக்களின் காளைகள், அழகான பெண்களின் இசையால் உறங்க வைக்கப்பட்டனர். அந்த எதிரிகளின் நகரங்களை அடக்கும் வீரர்கள், அந்தப் பெண்களின் சுகத்தால அந்த இரவை இனிமையாகக் கழித்தனர். இரவை இன்பமாகக் கழித்த அவர்கள், காலையில் பாடகர்களால் இனிமையான இசை இசைத்து எழுப்பப்பட்டு, தங்கள் படுக்கைகளில் இருந்து விடியலிலேயே எழுந்தனர். பிறகு தங்கள் தினசரி சடங்குகளை முடித்துக் கொண்டு சபா மண்டபத்துக்குள் நுழைந்தனர். அங்கே அவர்கள் {பாண்டவர்கள்}, சூதாடத் தயாராக இருந்தவர்களால் வணங்கப்பட்டனர்.
![]() |
![]() |
![]() |