The game started | Sabha Parva - Section 58 | Mahabharata In Tamil
(தியூத பர்வத் தொடர்ச்சி)
பகடைக்காக உண்டாக்கப்பட்ட சபாமண்டபத்துக்குள் பாண்டவர்கள் நுழைவது; யுதிஷ்டிரன் சூதின் தீமையை விளக்குவது; சகுனி சமாதானம் கூறுவது; யாருடன் தான் விளையாட வேண்டும் என்று யுதிஷ்டிரன் கேட்பது; விளையாட்டு ஆரம்பமாவது...
வைசம்பாணர் சொன்னார், "யுதிஷ்டிரனைத் தலைமையாகக் கொண்ட பிருதையின் {Pritha=குந்தின்}மகன்கள் அந்தச் சபா மண்டபத்துக்குள் நுழைந்து அங்கே இருந்த அனைத்து மன்னர்களையும் அணுகினர். வழிபடத்தகுந்தவர்களை வழிபடும், வயதுக்குத் தகுந்தபடி ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டும், விலையுயர்ந்த விரிப்புகள் விரிக்கப்பட்ட தங்கள் தங்கள் சுத்தமான இருக்கைகளில் அமர்ந்தனர். அவர்களும் {பாண்டவர்களும்}மற்ற மன்னர்களும் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, சுபலனின் மகனான சகுனி யுதிஷ்டிரனிடம், "ஓ மன்னா, இந்த சபா மண்டபம் நிறைந்திருக்கிறது. இவர்கள் அனைவரும் உனக்காகவே காத்திருக்கின்றனர். ஆகையால், பகடை விரிக்கப்படட்டும், ஓ யுதிஷ்டிரா, விளையாட்டுக்கான விதிகளும் நிர்ணயிக்கப்படட்டும்" என்றான்.
யுதிஷ்டிரன், "ஏமாற்று நிறைந்த சூதாட்டம் பாவகரமானது. அதில் எந்த க்ஷத்திரிய வீரமும் கிடையாது. நிச்சயமாக அதில் எந்த நீதிநெறியும் கிடையாது. ஓ மன்னா {சகுனி}, பிறகு நீ ஏன் சூதை இப்படிப் புகழ்கிறாய்? ஏமாற்று விளையாட்டில் பெருமைப்படும் சூதாடிகளை ஞானமுள்ளோர் பாராட்டுவதில்லை. ஓ சகுனி, இழிந்தவனைப் போல ஏமாற்றுகரமான வழிகளில் எங்களை வீழ்த்தாதே" என்றான்.
சகுனி, "வெல்வதிலும், வீழ்வதிலும் உள்ள ரகசியங்களை அறிந்த அந்த உயர் ஆன்ம விளையாட்டு வீரன், எதிரியின் ஏமாற்றும் கலைகளை சூனியமாக்கும் நிபுணத்துவம் வாய்ந்த, சூதின் மாறுதல்களை உன்னிப்பாகக் கவனிப்பதில் ஒருமுகம் கொண்ட, விளையாடத் தெரிந்தவன் பாதிப்படைவதில்லை. ஓ பிருதையின் {குந்தியின்} மகனே, பகடையில் பந்தயம் வைக்கும்போது, வெற்றி தோல்வியால் நமக்குக் காயம் ஏற்படுகிறது. அதன் காரணமாகவே சூது குற்றமாகக் கருதப்படுகிறது. ஆகையால், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, விளையாட்டை ஆரம்பிக்கலாம். அஞ்சாதே. பந்தயம் நிச்சயிக்கப்படட்டும், தாமதம் செய்யாதே!" என்றான்.
யுதிஷ்டிரன், "சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் நாம் செல்ல வழி வகுக்கும் செயல்களைக் குறித்து நமக்கு எப்போதும் சொல்லும் அசிதனின் மகனான முனிவர்களில் சிறந்த தேவலன், சூதாடிகளைக் கொண்டு ஏமாற்றுகரமாக விளையாடுவது மிகப்பாவகரமானது என்று சொல்கிறார். தந்திரமில்லா போர் செய்து பெரும் வெற்றியே சிறந்த விளையாட்டாகும். இருப்பினும், விளையாட்டின் ஒரு வகையாகக் கருதப்படும் சூதாட்டம் அப்படிப்பட்டதல்ல. மரியாதைக்குரியவர்கள் ஒரு போதும் மிலேச்ச மொழியைப் பேசவோ, அல்லது தங்கள் நடத்தையில் ஏமாற்றுத்தனத்தையோ கொள்ள மாட்டார்கள். தந்திரமும் குறுக்கு புத்தியும் இல்லாத போர் செய்வதே நேர்மையான மனிதர்களின் செயல்பாடாகும். ஓ சகுனி, எங்கள் தகுதிக்கேற்ப அந்தணர்களுக்கு நன்மை செய்வது எவ்வாறு என்று கற்க நாங்கள் சேகரித்து வைத்திருக்கும் செல்வத்தை, வேண்டுமென்ற விளையாடி எங்களிடம் இருந்து வெற்றி கொள்ளாதே. எதிரிகள் கூட பந்தயம் வைத்து ஏமாற்றி விளையாடி இவ்வகையில் வீழ்த்தப்படக்கூடாது. நான் தந்திரத்தின் மூலமாக மகிழ்ச்சியையோ செல்வத்தையோ அடைய விரும்பவில்லை. சூதாடியின் நடத்தை, ஏமாற்றுத்தனம் இல்லாத நடத்தையாக இருந்தாலும் பாராட்டத்தகுந்தது அல்ல" என்றான்.
சகுனி, "ஓ யுதிஷ்டிரா, நேர்மையற்ற நோக்கமான வெற்றியடைவதில் இருக்கும் விருப்பத்தால், உயர் பிறப்பு பிறந்த ஒருவன் மற்றவனை நாடுகிறான் (போட்டி, மேன்மைக்கான பந்தயம்). அதே போல மற்றொரு நேர்மையற்ற நோக்கமான வீழ்த்துவதில் உள்ள விருப்பத்தால், ஒரு கற்ற மனிதன் மற்றவனை அணுகுகிறான் (கல்விப் போட்டியில்). இருப்பினும், இது போன்ற நோக்கங்கள் உண்மையில் நேர்மையற்றதாக மதிக்கப்படவில்லையே. ஓ யுதிஷ்டிரா, ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்டவன், நிபுணத்துவம் இல்லாதவனை அணுகுகிறான்; வலுத்தவன் பலவீனனை அணுகுகிறான். இது தான் எல்லா போட்டிகளிலும் உள்ள நடைமுறையாகும். ஓ யுதிஷ்டிரா, நோக்கம் என்பது வெற்றியே. ஆகையால், நீ கொண்டிருக்கும் பயத்தால், நான் நேர்மையற்ற முறையில் உன்னை அணுகுவதாக நீ கருதினால், ஆட்டத்தில் இருந்து விலகு" என்றான்.
யுதிஷ்டிரன், "அழைக்கப்பட்ட பிறகு, நான் பின்வாங்குவதில்லை. இது எனக்கு நானே நிறுவிக் கொண்ட நோன்பாகும். மேலும், ஓ மன்னா {சகுனி}, விதி மிக வலியது. விதியின் கட்டுப்பாட்டிலேயே நான் அனைவரும் இருக்கிறோம். இந்தச் சபையில் இருக்கும் யாருடன் நான் விளையாட வேண்டும்? என்னுடன் சமமாக பந்தயம் வைக்கத்தகுந்த நபர் யார் இருக்கிறார்? ஆட்டம் ஆரம்பிக்கட்டும்" என்றான்.
அதற்கு துரியோதனன், "ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நான் அனைத்து நகைகளையும் ரத்தினங்களையும், எல்லாவிதமான செல்வத்தையும் அளிக்கிறேன். எனக்காக, எனது மாமாவான இந்தச் சகுனி விளையாடுவார்" என்றான்.
யுதிஷ்டிரன், "ஒருவருக்காக மற்றவர் விளையாடுவது என்பது விதிக்கு முரணாக எனக்குத் தெரிகிறது. ஓ கற்றவனே, நீயே இதை ஏற்றுக் கொள்வாய். இருப்பினும், இதை நீ முனைகிறாயானால் விளையாட்டு ஆரம்பிக்கட்டும்" என்றான்.
![]() |
![]() |
![]() |