Sakuni won, adopting unfair means | Sabha Parva - Section 60 | Mahabharata In Tamil
(தியூத பர்வம் - 16)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் செல்வங்களை சகுனி ஏமாற்றி வெல்லுதல்...
யுதிஷ்டிரன் சொன்னான், "இந்தப் பந்தயப் பொருளை நியாயமற்ற முறையில் வென்று விட்டாய். ஆனால், அதற்காக பெருமைப்படாதே, ஓ சகுனி. ஆயிரம் ஆயிரமாகப் பந்தயம் வைத்து நாம் விளையாடலாம்.(1) என்னிடம் ஆயிரம் நிஷ்கங்கள்[1] நிரம்பிய பல அழகான பெட்டிகளும் {ஜாடிகள்} எனது கருவூலத்தில் உள்ளன. மேலும் வற்றாத தங்கமும், அதிகமான வெள்ளியும், மற்ற தாதுப்பொருட்களும் உள்ளன. ஓ மன்னா, இதுவே நான் உன்னிடம் வைக்கும் பந்தயப் பொருளாகும்" என்றான்".(2)
[1] கும்பகோணம் பதிப்பில் "நூற்றெட்டு பலம் கொண்ட பொன் நாணயம்" என்ற அடிக்குறிப்பு இருக்கிறது.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிச் சொல்லப்பட்ட சகுனி, குரு குலத்தைத் தழைக்க வைப்பவர்களில் தலைவனும், பாண்டு மகன்களின் மூத்தவனும், மங்காத புகழ் கொண்டவனுமான மன்னன் யுதிஷ்டிரனிடம், "பார், நான் வென்றுவிட்டேன்!" என்றான்.(3)
யுதிஷ்டிரன், "எப்போதும் வெற்றியைத் தருவதும், சரியான அளவுகள் கொண்டதும், புலித்தோலால் மூடப்பட்டதும், அற்புதமான சக்கரங்களும் கொடிமரங்களும் பூட்டப்பட்டதும், சிறு மணிகளால் அலங்கரிக்கப்பட்டதும், ஆயிரம் தேர்களுக்குச் சமமாக சுமக்கப்படுபவரின் இதயத்தை மகிழ்ச்சியால் நிறைப்பதுமாக இருக்கிறது எனது அரசத்தேர் {ராஜரதம்}. அந்த அழகான புனிதமான தேரின் சக்கரங்கள் எழுப்பும் ஒலியானது மேகக்கூட்டங்களின் உறுமல் போலவும், கடலின் முழக்கம் போலவும் இருக்கும். அந்த தேரில் சந்திர பிம்பம் போன்றவையும் வெண்மையானவையுமான உயர்ந்த சாதி குதிரைகள் எட்டு பூட்டப்பட்டிருக்கின்றன. அவற்றின் குளம்படிகளில் இருந்து எந்த புவிசார்ந்த உயிரினமும் தப்ப முடியாது. ஓ மன்னா, இதுவே நான் பந்தயப் பொருளாக வைக்கும் எனது செல்வமாகும்" என்றான் {யுதிஷ்டிரன்}.(4-6)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைக் கேட்டு, பகடை பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி, நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு யுதிஷ்டிரனிடம், "பார், நான் வென்றுவிட்டேன்!" என்றான்.(7)
யுதிஷ்டிரன், "கைகளிலும், தோள்களிலும் தங்க ஆபரணங்கள் பூண்டவர்களும், கழுத்தைச் சுற்றி நிஷ்கங்களும் மற்ற ஆபரணங்களும் பூண்டவர்களும்,(8) விலையுயர்ந்த மாலைகள் பூண்டவர்களும், ஆடம்பர ஆடைகள் உடுத்தியவர்களும், மேனியில் சந்தனம் பூசிக் கொண்டவர்களும், நகைகளும், தங்கமும் அணிந்தவர்களும், ஆய கலைகள் அறுபத்து நான்கில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களும், பாடுவதில் ஆடுவதில் சிறந்து விளங்குபவர்களும், எனக்காகக் காத்திருந்து எனது கட்டளையின் பேரில் தேவர்களுக்கும், ஸ்நாதக பிராமணர்களுக்கும், மன்னர்களுக்கும் சேவை செய்பவர்களும், இளமையானவர்களுமான ஆயிரம் பணிப்பெண்கள் என்னிடம் உண்டு. ஓ மன்னா, இந்தச் செல்வத்தை நான் பந்தயமாக வைக்கிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}".(9,10)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைக் கேட்டு, பகடை பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி, நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு யுதிஷ்டிரனிடம், "பார், நான் வென்றுவிட்டேன்!" என்றான்.(11)
யுதிஷ்டிரன், "பட்டாடை உடுத்தியவர்களும், ஞானமும் புத்திசாலித்தனமும் கொண்டவர்களும், தாங்கள் இளமையாக இருப்பினும் தங்கள் புலன்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களும், காதுகளில் வளையங்கள் பூண்டவர்களும், இரவும் பகலும் தங்கள் கரங்களில் தட்டுகளுடனும் உணவுடனும் விருந்தினர்களை உபசரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களுமான பணியாட்கள் ஆயிரம் பேர் என்னிடம் உண்டு. ஓ மன்னா {துரியோதனா}, இந்த செல்லவத்தை நான் உன்னிடம் பந்தயமாக வைக்கிறேன்" என்றான்".(12,13)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைக் கேட்டு, பகடை பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி, நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு யுதிஷ்டிரனிடம், "பார், நான் வென்றுவிட்டேன்!" என்றான்.(14)
யுதிஷ்டிரன், "ஓ சுபலனின் மகனே {சகுனியே}, பொற்கச்சைகளுடன் கூடியவையும், ஆபரணங்கள் பூண்டவையும், நெற்றிப் பொட்டிலும், கழுத்திலும் மற்ற பகுதிகளிலும் தாமரைக் குறியுடன் இருப்பவையும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பவையும்,(15) அழகான நீண்ட ஏர் போன்ற தடித்த வெள்ளை தந்தங்களுடன் கூடியவையும், மன்னர்களைத் தங்கள் முதுகில் சுமந்து செல்லத் தகுதி வாய்ந்தவையும், போர்க்களத்தில் அனைத்துவிதமான ஒலிகளையும் தாங்கிக் கொள்ளக்கூடியவையும், பேருடல் படைத்தவையும், எதிரி நகரின் சுவர்களைச் சாய்க்கவல்லவையும், புதிய மேகங்கள் போன்ற நிறத்தில் உள்ளவையுமான ஆயிரம் யானைகளும், அவை ஒவ்வொன்றுக்குக் எட்டு பெண் யானைகள் என ஒரு யானைக் கூட்டம் என்னிடம் இருக்கிறது. ஓ மன்னா, இந்த செல்வத்தை நான் பந்தயமாக வைக்கிறேன்" என்றான்".(16,17)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிச் சொன்ன யுதிஷ்டிரனிடம், சுபலனின் மகனான சகுனி சிரித்துக் கொண்டே, "பார், நான் அதை வென்றுவிட்டேன்!" என்றான்.(18)
யுதிஷ்டிரன், "என்னிடம் எவ்வளவு யானைகள் உண்டோ, அவ்வளவு தேர்கள் இருக்கின்றன. அத்தேர்கள் அனைத்திலும் தங்கத் தூண் மற்றும் கொடிக்கம்பம் நாட்டப்பட்டு நன்கு பழக்கப்பட்ட குதிரைகள் பூட்டப்பட்டு, போரிட்டாலும் போரிடாவிட்டாலும், ஒரு மாத ஊதியமாக ஆயிரம் நாணயங்களைப் பெறுபவர்களும், அற்புதமாகப் போரிடுபவர்களுமான போர்வீரர்களைக் கொண்டிருக்கின்றன. ஓ மன்னா, இந்த செல்வத்தை நான் உன்னிடம் பந்தயமாக வைக்கிறேன்" என்றான்".(19,20)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகள் பேசப்பட்ட போது, பகையில் உறுதி கொண்ட அந்தத் தீய சகுனி, யுதிஷ்டிரனிடம், "பார், நான் அதை வென்றுவிட்டேன்!" என்றான்.(21)
யுதிஷ்டிரன், "ஆபரணங்கள் பூண்டிருக்கும் இந்த தித்திரி, கல்மாஷம் என்ற கந்தர்வ வகை குதிரைகள், காண்டீபம் தாங்கும் அர்ஜுனனிடம் போரில் வீழ்ந்த சித்திரரதனால் மகிழ்ச்சியுடன் கொடுக்கப்பட்டவையாகும். ஓ மன்னா, இந்த செல்வத்தை, நான் உன்னிடம் பந்தயப் பொருளாக வைக்கிறேன்" என்றான்.(22,23)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைக் கேட்டு, பகடை பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி, நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு யுதிஷ்டிரனிடம், "பார், நான் வென்றுவிட்டேன்!" என்றான்.(24)
யுதிஷ்டிரன், "சுமைகளை இழுக்கப் பயன்படும் முதன்மையான உயர்வகை இழுவை விலங்குகள் {வண்டிமாடுகள்} பூட்டப்பட்ட பத்தாயிரம் தேர்களும் வாகனங்களும் என்னிடம் இருக்கின்றன.(25) பால் குடித்து, அரிசி {சோறு} உண்டு, துணிச்சலும் வலிவும் கொண்டு, அகலமான மார்புகளுடன் கூடியவர்களும், ஒவ்வொரு வகையில் {வர்ணத்தில்} இருந்தும் ஆயிரம் ஆயிரமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுமான அறுபதாயிரம் வீரர்கள் என்னிடம் இருக்கிறார்கள். ஓ மன்னா {துரியோதனா}, இந்த எனது செல்வத்தை நான் உன்னிடம் பணயமாக வைக்கிறேன்" என்றான்".(26,27)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைக் கேட்டு, பகடை பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி, நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு யுதிஷ்டிரனிடம், "பார், நான் வென்றுவிட்டேன்!" என்றான்.(28)
யுதிஷ்டிரன், "என்னிடம் நானூறு நிதிகள் (பெரும் மதிப்பிலான நகைகள்) தாமிரம் மற்றும் இரும்பு தகடுகளால் உறையிடப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் விலையுயர்ந்த சுத்தமான ஜதரூப வகை {ஆணிப்பொன்} தங்க இலைகள் அளவில் ஐந்து துரோணங்கள் கொண்டவை ஆகும். ஓ மன்னா {துரியோதனா}, இந்த எனது செல்வத்தை நான் உன்னிடம் பணயமாக வைக்கிறேன்" என்றான்".(29-30)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைக் கேட்டு, பகடை பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி, நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு யுதிஷ்டிரனிடம், "பார், நான் அதை வென்றுவிட்டேன்!" என்றான்".(31)
ஆங்கிலத்தில் | In English |