Give the crow and buy peacocks| Sabha Parva - Section 61 | Mahabharata In Tamil
(தியூத பர்வம் - 17)
பதிவின் சுருக்கம் : விதுரன், திருதராஷ்டிரனிடத்தில் சூதாட்டத்தை நிறுத்தச் சொல்லல்...
மலைத்தேன் எடுப்பவன் |
வைசம்பாயனர் சொன்னார், "நிச்சயம் (யுதிஷ்டிரனுக்கு) முழு நாசத்தைக் கொண்டு வரப்போகும் சூதாட்டம் நடந்து கொண்டிருந்தபோது, அனைத்து ஐயங்களையும் சிதறடிப்பவனான விதுரன், திருதராஷ்டிரனிடம்,(1) "ஓ பெரும் மன்னா, ஓ பாரத குலத்தவரே, நோய்வாய்ப்பட்டுத் தனது இறுதி மூச்சை சுவாசிக்கும் ஒருவனுக்கு மருந்தைப் போன்ற என் வார்த்தைகளில் உமக்கு ஏற்பில்லை என்றாலும், நான் சொல்வதைக் கவனிப்பீராக.(2) எப்போது தீய எண்ணம் கொண்ட இந்தத் துரியோதனன் தான் பிறந்த உடனேயே, பொருந்தாத குள்ளநரி போல ஊளையிட்டானோ[1] அப்போதே பாரத குலத்தின் அழிவுக்காக இவன் {துரியோதனன்} விதிக்கப்பட்டிருக்கிறான் என்று அனைவராலும் அறியப்பட்டது.(3) ஓ மன்னா {திருதராஷ்டிரா}, உங்கள் அனைவரின் மரணத்திற்கும் இவன் {துரியோதனன்} காரணமாவான் என்பதை அறிந்து கொள்வீராக. ஓ மன்னா {திருதராஷ்டிரா}, துரியோதனன் என்ற வடிவத்தில், உமது வீட்டில் ஒரு குள்ளநரி வாழ்ந்து வருகிறது. உமது அறியாமையின் {மடமையின்} காரணமாக நீர் அதை அறியவில்லை. நான் சொல்லப்போகும் கவிஞனின் (சுக்கிரனின்) வார்த்தைகளை இப்போது கேட்பீராக.(4)
[1] பார்க்க: அரசனே! துரியோதனனைக் கைவிடு! - ஆதிபர்வம் பகுதி 115
(மலைகளில்) தேனைச் சேகரிப்போர், தாங்கள் தேடியது {தேன்} கிடைத்ததும், தாங்கள் கீழே விழப்போவதை கவனிப்பதில்லை. அபாயகரமான உயரங்களை ஏறி, தாங்கள் தேடும் பொருளிலேயே எண்ணத்தையும் நோக்கத்தையும் கொண்டு, கீழே விழுந்து, அழிவைச் சந்திக்கின்றனர்.(5) இந்தத் துரியோதனன், பகடையாட்ட வெறியில், தேன் சேகரிப்போர் போல, விளைவுகளைக் கருதாமல் தான் தேடுவதை அடைவதிலேயே நோக்கமாக இருக்கிறான். பெரும் போர்வீரர்களை எதிரிகளாக்கிக் கொண்டு, தன் முன் இருக்கும் வீழ்ச்சியைக் காண்கிறான் இல்லை.(6)
ஓ பெரும் ஞானம் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, போஜர்களில், தங்கள் குடிமக்களின் நன்மைக்காக, தங்கள் குலத்துக்குப் பொருந்தாத தகுதியற்ற மகனை {அஸமஞ்சனைக்} கைவிட்டனர் என்பதை நீர் அறிவீர்.(7) அந்தகர்களும், யாதவர்களும், போஜர்களும் ஒன்றுகூடி, கம்சனைக் கைவிட்டனர். அதன் பிறகு, அந்த முழு குலத்தாலும் கட்டளையிடப்பட்டு, அதே கம்சன் எதிரிகளைக் கொல்லும் கிருஷ்ணனால் கொல்லப்பட்டதால்,(8) அந்த குலத்தைச் சார்ந்த மக்கள் அனைவரும் நூறு வருடங்களுக்கு மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். எனவே உமது கட்டளையின் பேரில், அர்ஜுனன் இந்த சுயோதனனைக் {துரியோதனனைக்} கொல்லட்டும்.(9)
இந்தப் பாவியைக் கொல்வதன் விளைவால், குருக்கள் மகிழ்ந்து, தங்கள் நாட்களை மகிழ்ச்சியில் களிப்பார்கள். ஓ பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு காக்கையைக் கொடுத்து, அதற்கு மாற்றாக பாண்டவர்களான இந்த மயில்களை வாங்கிக் கொள்வீராக. ஒரு குள்ளநரியைக் கொடுத்து, அதற்கு மாற்றாக இந்த புலிகளை வாங்கிக் கொள்வீராக. துன்பக்கடலில் மூழ்காதீர்.(10) ஒரு குடும்பத்திற்காக ஒரு {குடும்ப} உறுப்பினரைத் தியாகம் செய்யலாம்; ஒரு கிராமத்திற்காக ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்யலாம்; ஒரு மாநிலத்துக்காக ஒரு கிராமத்தைத் தியாகம் செய்யலாம். ஒருவனின் ஆன்மாவுக்காக இந்த மொத்த பூமியையும் தியாகம் செய்யலாம்.(11) இப்படிச் சொல்லித்தான், அனைத்து உயிர்களின் எண்ணங்களையும், எதிரிகள் அனைவருடைய பயங்கரத்தின் மூலங்களையும் அறிந்த, எங்கும் உள்ள காவியர் {சுக்கிரன்}, ஜம்பன் {அசுரன்} பிறந்தபோது பெரும் அசுரர்களிடம், அவனை {அசுரன் ஜம்பனை} கைவிடுமாறு தூண்டினார்.(12)
ஒரு குறிப்பிட்ட மன்னன், தங்கம் கக்கிய சில காட்டுப்பறவைகளை, தனது வசிப்பிடத்திற்கு எடுத்துச் சென்று, பிறகு சபலத்தால் {பேராசையால்} அவற்றைக் கொன்றான். ஓ எதிரிகளைக் கொல்பவரே,(13) சபலத்தால் குருடாகி, மகிழ்ச்சியை விரும்பி, தங்கத்துக்காக, ஒரே நேரத்தில், தனது தற்கால மற்றும் எதிர்கால லாபங்களை அந்த மன்னன் அழித்துக் கொண்டான். எனவே, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கதையில் வரும் மன்னனைப் போல லாபத்தில் விருப்பம் கொண்டு பாண்டவர்களைத் தண்டிக்காதீர்.(14) பிறகு, ஓ பரதனின் வழித்தோன்றலே, அறியாமையால் குருடாகி, அந்தப் பறவைகளைக் கொன்ற மனிதன் போலவே பின்பு வருத்தப்பட வேண்டியிருக்கும். தான் தினமும் பாசத்துடன் பராமரிக்கும் தோட்டத்தில் இருக்கும் மரங்களில் இருந்து (நிறைய பூக்களைப்) பறிக்கும் பூ வியாபாரி போல, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, தினம் தினம் பாண்டவர்களிடம் இருந்து பூக்களைப் பறிக்கலாம். அனைத்தையும் கரித்துண்டாக்கிவிடும் நெருப்பை உற்பத்தி செய்யும் தென்றல் போல அவர்களை வேர் வரை எரித்துவிடாதீர். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, உமது மகன்களுடனும் உமது துருப்புகளுடனும் யமனின் உலகத்துக்குச் செல்லாதீர்.(15,16) ஒன்றாக இருக்கும் பிருதையின் {குந்தியின்} மகன்களை அங்கே எதிர்க்கும் வல்லமை யாருக்கு இருக்கிறது? மற்றவர்களைக் குறித்துப் பேசாதீர், தேவர்களின் தலைவனால் கூட அதைச் செய்ய முடியுமா?" என்றான் {விதுரன்}.(17)
ஆங்கிலத்தில் | In English |