War not, with the sons of Pandu | Sabha Parva - Section 62 | Mahabharata In Tamil
(தியூத பர்வம் - 18)
பதிவின் சுருக்கம் : விதுரன், திருதராஷ்டிரனிடத்தில் சூதாட்டத்தை நிறுத்தச் சொல்லல்...
விதுரன், "சூதாட்டமே வேற்றுமைகளின் வேராகும். அது ஒற்றுமையின்மையைக் கொண்டு வருகிறது. விளைவுகளால் அது பயங்கரமானது. இருப்பினும், இந்த வழியைக் கொண்டு, திருதராஷ்டிரனின் மகன் துரியோதனன் தனக்கு பயங்கரமான பகையை உண்டாக்கிக் கொள்கிறான்.(1) பிரதீபன் மற்றும் சந்தனுவின் சந்ததியினர் தங்கள் பயங்கரமான துருப்புகளுடனும், பாஹ்லீகர்களான தங்கள் கூட்டாளிகளுடனும், துரியோதனனின் பாவங்களுக்காக அழிவைச் சந்திக்கப் போகின்றனர்.(2)
துரியோதனன் கொண்டிருக்கும் இந்த போதையின் விளைவு, கோபம் கொண்ட காளை, தனது கொம்புகளையே உடைத்துக் கொள்வது போல, நாட்டை விட்டு வலுக்கட்டாயமாக அதிஷ்டத்தையும் செழிப்பையும் விரட்டும்.(3) கற்ற துணிச்சலுள்ள ஒரு மனிதர், தனது முன்னுணர்தலைக் {தீர்க்கதரிசனத்தை - பின் வருவதை முன்பே அறிதலைக்} கருதாமல், இன்னொரு மனிதனின் இதயத்தைத் {சிந்தனையைத்} தொடர்ந்தானானால், சிறுவனால் வழிநடத்தப்பட்ட படகில் கடலில் சஞ்சரித்து மூழ்குவது போல துயரத்தில் மூழ்குவான்.(4)
துரியோதனன், பாண்டுவின் மகனோடு {யுதிஷ்டிரனோடு} சூதாடுகிறான், நீரோ! அவன் வெல்கிறான் என்று பேரானந்தத்தில் இருக்கிறீர். இது போரை உண்டாக்கும் வெற்றி, இதன் முடிவு மனிதர்களின் அழிவாக இருக்கும்.(5) உங்களால் நன்கு திட்டமிடப்பட்ட இந்தக் கவர்ச்சி விளையாட்டு, கொடிய முடிவுகளையே கொடுக்கும். நீர் செய்த இந்த ஆலோசனைகளால் பெரும் துயரத்தையே நீர் கொண்டு வந்திருக்கிறீர். உம்முடன் நெருக்கமான உறவு கொண்டுள்ள யுதிஷ்டிரனுடனான உமது இந்த சண்டையை நீர் முன்னுணரவில்லை என்றாலும், அது உமக்கு ஏற்புடையதாகவே இருக்கிறது.(6)
சந்தனுவின் மகன்களே, பிரதீபனின் சந்ததியினரே கேளுங்கள், கௌரவர்களின் இந்தச் சபையில் இருப்பவர்களே, விவேகத்தின் வார்த்தைகளைக் கேளுங்கள். இந்தப் பாவியைத் தொடர்ந்து சென்று சுடர்விட்டு எரியும் நெருப்புக்குள் நுழையாதீர்கள்.(7) பகடையில் போதையுண்டிருக்கும் பாண்டுவின் மகனான அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, எப்போது கோபத்துக்கு ஆட்படுவானோ, விருகோதரனும் {பீமனும்}, அர்ஜுனனும், இரட்டையர்களும் {நகுல சகாதேவர்களும்} எப்போது கோபத்துக்கு ஆட்படுவார்களோ, அந்த குழப்பமான சூழ்நிலையில், உங்களுக்குப் புகலிடமாக இருப்பவன் எவன்?(8)
ஒ பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, நீரே ஒரு செல்வச் சுரங்கம். சூதாட்டத்தில் கிடைப்பது போல, நீர் விரும்பிய அளவு பெரும் செல்வத்தை (வேறு வழிகளில்) உம்மால் அடைய முடியும். பாண்டவர்களின் பெரும் செல்வத்தை வெல்வதனால் உமக்கு என்ன லாபம்? பாண்டவர்களையே செல்வமாக அடைந்தால், அது இந்தச் செல்வங்களைவிட எல்லாம் பெரிதாகும்.(9) நாம் அனைவரும் இந்த விளையாட்டில் சுபலனுக்கு {சகுனி} இருக்கும் நிபுணத்துவத்தை அறிவோம். இந்த மலை நாட்டு மன்னன் {காந்தார மன்னன் சகுனி}[1], சூதாடுவதில் கொடிய வழிகளை அறிந்தவன். சகுனி எங்கிருந்து வந்தானோ அங்கேயே செல்லட்டும். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகன்களோடு போரிடாதீர்!" என்றான் {விதுரன்}.(10)
[1] மலை நாட்டு {காந்தர நாட்டு} மன்னன் {சகுனி}, மகாபாரத காலத்திய காந்தார நாடு என்பது இன்றைய 20ம் நூற்றாண்டின் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காந்தகார் நகரத்தினையும் அதைச் சுற்றியுள்ள பெரும் மலைப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரும் நாடாகும். அந்த காந்தார நாட்டினை மகாபாரத காலத்தில் சுபலன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். மன்னன் சுபலனின் மகன் சகுனி {Sakuni}. சுபலனின் மகளும் சகுனியின் சகோதரியுமானவள் காந்தாரி. திருதராஷ்டிரனின் மனைவியும், துரியோதனன் முதலான 100 பேரின் தாயுமானவள் இந்த காந்தார நாட்டு மன்னன் சுபலனின் மகளான காந்தாரி ஆவாள். இவ்வாறே துரியோதனனுக்கு சகுனி தாய் மாமன் ஆகிறான். மேலும் விபரங்களுக்கு பார்க்க: கற்புக்கரசி காந்தாரி - ஆதிபர்வம் பகுதி 110
ஆங்கிலத்தில் | In English |