Never enrage adders having venom in their very glances | Sabha Parva - Section 46 | Mahabharata In Tamil
(தியூத பர்வத் தொடர்ச்சி)
துரியோதனை விதுரனைக் கண்டித்து, அவமானப்படுத்துவது; விதுரன் திருதராஷ்டிரனிடம் தனது உள்ளத்தைத் தெரியப்படுத்துதல்...
துரியோதனன் சொன்னான், "ஓ க்ஷத்தரே {விதுரரே}, நீர் எப்போதும் நமது எதிரிகளின் புகழைப் பெருமையாகவும், திருதராஷ்டிரர் மகன்களை தாழ்த்தியுமே பேசி வருகிறீர். ஓ விதுரரே, உமக்கு யாரைப் பிடிக்கும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். நீர் எப்போதும் எங்களை சிறுவர்களாகவே தாழ்த்திக் கருதி, உமக்கு நெருக்கமானவர்களின் வெற்றியை விரும்பி, உமக்கு விருப்பமில்லாவதவர்களின் தோல்வியையும் விரும்பி வருபவர் ஆவீர். உமது நாவும் மனமும் உமது இதயத்தைக் காட்டிக் கொடுக்கின்றன. உமது பேச்சில் நீர் காட்டும் பகைமை, உமது இதயத்தில் இருப்பதைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. பாம்பைப் போன்ற உம்மை எங்கள் மடியில் வைத்துப் பேணி வளர்த்திருக்கிறோம். வளர்ப்பவருக்கு தீமையை விரும்பும் பூனையைப் போன்றவர் நீர். முதலாளியைக் {எஜமானைக்} காயப்படுத்துவதைவிட கொடும்பாவம் ஏதுமில்லை என்பது ஞானமுள்ளோர் வாக்காகும்.
ஓ க்ஷத்தரே, எப்படி இந்தப் பாவத்திற்கு நீர் அஞ்சாமல் இருக்கிறீர்? எங்கள் எதிரிகளை வீழ்த்தியதால் நாங்கள் பெரும் நன்மைகளை அடைந்துள்ளோம். எங்களைக் குறித்து கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர். நீர் எப்போதும் எதிரியுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்வதிலேயே விருப்பமாக இருக்கிறீர். இந்த காரணத்திற்காகவே நீர் எங்களை எப்போதும் வெறுக்கிறீர். மன்னிக்க முடியாத வார்த்தைகளைப் பேசுவதால் ஒரு மனிதன் எதிரியாகிறான். மேலும் எதிரியைப் புகழ்ந்து, ஒருவனது சொந்த அணியின் ரகசியங்களைப் பகிரங்கப்படுத்தக்கூடாது. (எப்படியிருந்தாலும் நீர், இந்த விதியை மீறிவிட்டீர்).
ஆகையால், ஓ ஒட்டுண்ணியே {விதுரரே}, நீர் ஏன் இப்படி எங்களைத் தடுக்கிறீர்? நீர் விரும்பியதை எல்லாம் சொல்கிறீர். எங்களை அவமதிக்காதீர். உமது மனதை நாங்கள் அறிவோம். சென்று முதியவர்களின் பாதங்கள் அருகே அமர்ந்து கற்றுக்கொள்ளும். நீர் அடைந்திருக்கும் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளும். மற்றவர்கள் காரியங்களில் கூப்பிடாமலே தலையிடாதீர். எங்களின் தலைவராக உம்மை நீரே நினைத்துக் கொள்ளாதீர்.
ஓ விதுரரே, எங்களிடம் எப்போதும் கடுமையான வார்த்தைகளைச் சொல்லாதீர். எங்களுக்கு எது நன்மை என்று நாங்கள் உம்மிடம் கேட்கவில்லை. உமது கரங்களில் நிறைய அனுபவித்த எங்களை எரிச்சல்படுத்தாமல் பேசுவதை நிறுத்தும். ஒரு கட்டுப்பாட்டாளனே உண்டு. இரண்டாமவன் கிடையாது. அவன் தாயின் கருவறையில் இருக்கும் சிசுவையும் கட்டுப்படுத்துவான். நானும் அவனாலேயே கட்டுப்படுத்தப்படுகிறேன். தாழ்ந்த நிலைகளை நோக்கிப் பாயும் நீரைப் போல, அவன் என்னை இயக்கும் வழியில் நான் துல்லியமாகச் செயல்படுகிறேன்.
கற்சுவற்றில் தனது தலையை மோதி உடைத்துக் கொள்பவரும், பாம்புக்கு தீனி கொடுப்பவரும், தங்கள் சொந்த அறிவின் வழிகாட்டுதல்படி அந்தச் செயல்களில் ஈடுபடுகின்றனர். (ஆகையல், இந்தக் காரியத்தில் எனது அறிவாலேயே நான் வழிகாட்டப்படுகிறேன்). அடுத்தவரை பலவந்தமாகக் கட்டுப்படுத்த முயலும் ஒருவன் எதிரியாகிறான். நட்பு ரீதியாகக் கொடுக்கப்படும் ஆலோசனையாக இருப்பின், கற்றவர்களை அதைத் தாங்கிக் கொள்வர். எளிதில் தீப்பற்றிக்கொள்ளக் கூடிய கற்பூரம் போன்ற பொருளுக்குத் தீயிடுபவன், அதை அணைக்க விரைவாக ஓடினாலும், அதன் சாம்பலைக்கூடக் காண்பதில்லை.
தனது எதிரியின் நண்பனுக்கோ, தனது காப்பாளன் குறித்து எப்போதும் பொறாமையுடன் இருப்பவனுக்கோ, அல்லது தீய மனமுடையவனுக்கோ ஒருவன் அடைக்கலம் கொடுக்கக்கூடாது. ஆகையால், ஓ விதுரரே, நீங்கள் எங்கு விரும்புகிறீரோ அங்கு செல்லும். கற்பற்ற மனைவியை, என்னதான் நன்றாக நடத்தினாலும், அவள் தனது கணவனை கைவிட்டுவிடுவாள்" என்றான் {துரியோதனன்}.
விதுரர் திருதராஷ்டிரனிடம், " ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனக்கு அறிவுறுத்தியதால், தனது சேவகர்களைக் கைவிடும் மனிதர்களின் நடத்தை குறித்து நீர் என்ன நினைக்கிறீர் என்று (பாகுபாடில்லாமல்) சாட்சி போல இருந்து எங்களுக்குச் சொல்லும். உண்மையில், மன்னர்களின் இதயங்கள் மிக நிலையற்றன ஆகும். முதலில் பாதுகாப்பைக் கொடுத்து, கடைசியாகத் தங்கள் கதைகளால் அடிப்பார்கள்.
ஓ இளவரசனே (துரியோதனா}, அறிவாற்றலில் முதிர்ச்சியுடையவனாக உன்னை நீ கருதிக் கொள்கிறாய், மேலும், ஓ தீய இதயம் கொண்டவனே, என்னை நீ சிறுபிள்ளையாகக் கருதுகிறாய். ஆனால், முதலில் ஒருவனை நண்பனாக ஏற்றுக் கொண்டு பிறகு அவனிடம் தொடர்ந்து குறை கண்டு கொண்டிருப்பவனையே சிறுவனாகக் கருத வேண்டும். நற்குலத்தில் பிறந்த மனிதனின் வீட்டில் இருக்கும் கற்பற்ற மனைவி போல, தீய இதயம் கொண்ட மனிதனை நேர்மையான பாதைக்குக் கொண்டு வர முடியாது. இளம் மங்கையின் அறுபது வயது கணவனுக்கு எப்படி அறிவுரைகள் ஏற்புடையதாக இருக்காதோ அப்படி இந்த பாரதகுலத்தின் காளைக்கும் {துரியோதனனுக்கு} நிச்சயம் ஏற்புடையதாக இருக்காது.
ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இதன்பிறகும், செயல்களின் நன்மை தீமை குறித்து, நீர் உமக்கு ஏற்புடைய சொற்களைக் கேட்க விரும்பினால், பெண்களிடமும், முட்டாள்களிடமும், முடவர்களிடமும், மேலும் இது போன்ற விளக்கங்களுக்குப் பொருந்தும் மனிதர்களிடமும் கேட்டுக் கொள்ளும். ஏற்றுக் கொள்ளும் வார்த்தைகளைப் பேசும் பாவியை இந்த உலகம் பெற்றிருக்கலாம். ஆனால், ஏற்பில்லா வார்த்தைகள் மருந்துகள் போல இருந்தாலும், அதைப் பேசுபவனும், அதைக் கேட்பவனும் அரிதாகவே உள்ளனர்.
உண்மையில், தனது முதலாளிக்கு ஏற்போ, ஏற்பில்லையோ, அதைக் கருதாமல், அறம்சார்ந்து நின்று மருந்து போல இருக்கும் ஏற்பில்லாத கருத்தைச் சொல்பவனே ஒரு மன்னனின் உண்மையான கூட்டாளி. ஓ பெரும் மன்னா, நேர்மையாளர்கள் குடிக்கும், நேர்மையற்றவர்கள் தவிர்க்கும் கசப்பான, காரமான, எரிச்சலுள்ள, போதையற்ற, ஏற்பில்லாத, கலகம் செய்யும் மருந்தான அடக்கம் என்ற பானத்தைக் குடி. அதைக் குடித்து, ஓ மன்னா {திருதராஷ்டிரா}, நீர் உமது புகழை மீட்டெடும்.
நான் எப்போதும் திருதராஷ்டிரருக்கும் அவரது மகன்களும் செல்வாக்கையும் புகழையுமே விரும்புபவன். இவை உமக்கு நடக்கட்டும், நான் உமக்குப் பணிகிறேன் (நான் விடைபெறுகிறேன்). அந்தணர்கள் எனக்கு நன்மையை வாழ்த்தட்டும். ஓ குருவின் மகனே {திருதராஷ்டிரரே}, ஞானமுள்ள ஒருவன், பார்வையிலேயே விஷம் கொண்ட பாம்புகளை கோபப்படுத்தக்கூடாது. இதுவே நான் என் மனதில் ஆழமாகப் பதிய வைக்கும் பாடம்" என்றான் {விதுரன்}.
![]() |
![]() |
![]() |